Thursday 12 September 2024

உலகத் தொண்டு நாளும் தீர்வுகளும்-முனைவர் வா.நேரு


 


அன்னை தெரசாவை நாம் அறிவோம். தெருவில் குளிரில் நடுங்கிக் கொண்டு கிடந்த தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி, அவர்கள் புண்களுக்கு மருந்திட்டு, அவர்களுக்கு உணவளித்து, அவர்களுக்கான பாதுகாப்பை அளித்தவர். 1910இல் வெளி நாட்டில் (அல்பேனியா) பிறந்த அவர் 1928இல் இந்தியாவிற்கு வருகின்றார். 1948இல் இந்தியக் குடியரிமையைப் பெறுகின்றார். 1950ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ‘மிசனரிஸ் ஆஃப் சேரிட்டி’ என்னும் நிறுவனத்தை நிறுவுகிறார்.அதன் மூலம் ஏறத்தாழ ஓர் அரை நூற்றாண்டு காலம் ஏழைகளுக்காகவும்,கைவிடப்பட்டவர்களுக்காகவும் இறக்கும் தறுவாயில் இருப்பவர்களுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்தார். அவருடைய பணி உலகம்ஹ முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகத்தான் அவருக்கு நோபல் பரிசு 1979இல் கிடைத்தது. நோபல் பரிசு தவிர இந்தியாவின் பாரத ரத்னா உள்ளிட்ட பல உயர் விருதுகளைப் பெற்றவர் அவர். தன்னுடைய உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், மற்ற மனிதர்களின் உயிர்களைக் காப்பாற்றப் பாடுபட்டவர். அவர் 1997ஆம் ஆண்டு செம்டம்பர் 5ஆம் நாள், தன்னுடைய 87வயதில் இயற்கை எய்தினார்.

2012ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாள் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக அன்னை தெரசாவின் நினைவு நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை சர்வதேசத் தொண்டு நாளாக அய்க்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. மனித நேய நெருக்கடிகள், உலக அளவில் மனிதர்களின் துன்பங்களைத் தணிப்பதில் தொண்டின் பங்கினை அங்கீகரிக்கின்ற வகையில் அன்னை தெரசா அவர்களின் பணி உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அய்க்கிய நாடுகள் சபை அறிவித்தது. (ஏ/RES/67/105). 2013ஆம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 5ஆம் நாள் உலகத் தொண்டு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இல்லறம், துறவறம் என்னும் இரண்டு சொற்கள் மட்டுமே புழங்கிக் கொண்டிருந்த உலகில் தொண்டறம் என்னும் சொல்லைத் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கினார். ‘மனிதன் தானாகப் பிறக்கவில்லை, எனவே, தனக்காக மட்டுமே வாழக்கூடாது என்றார்.

உனக்குப் புகழ் வேண்டும், பெருமை வேண்டும் என்றால் மற்றவர்களுக்குத் தொண்டு செய்து அதன் மூலம் பெற்றுக்கொள் என்றார்.
“நீங்கள் எவ்வளவு பெரிய இடத்திற்குச் சென்றாலும், யார் யார் உங்களுக்கு உதவினார்களோ வாழ்க்கையில், அவர்களுக்கெல்லாம் உதவுங்கள். அதற்கு அப்பாற்பட்டு, நீங்கள் யாருக்கெல்லாம் உதவவேண்டுமோ, அவர்களுக்கெல்லாம் உதவுங்கள். உதவி செய்வதில் ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே – மனநிறைவு இருக்கிறதே, அது வேறு எதிலும் கிடையாது. அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள், தொண்டறம் என்று சொன்னார்கள்.” என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (விடுதலை 2.10.2014) அவர்கள் ஒரு திருமண விழாவிலே குறிப்பிடுகின்றார். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதே தொண்டறம்.அது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படுகிறபோது மிக உயர்ந்த அறமாக உயர்ந்து நிற்கிறது.

உலகத்தொண்டு நாள் ஏன் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது பற்றி அய்க்கிய நாடுகள் சபை தன்னுடைய இணையதளத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறது. சர்வதேச நாள் என்பது ஒரு சக்திவாய்ந்த வாதிடக்கூடிய ஒரு கருவி என்று குறிப்பிடுகிறது.உலகில் நிலவும் கவலைக்குரிய பிரச்சனைகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெரிவித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து
வதற்கும் ,அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் தீர்வுகளையும் இருக்கும் வளங்களைப் பற்றிய தகவல்களையும் திரட்டுவதற்கும் ,மனித குலத்தின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் சர்வதேச நாள்கள் கடைப்பிடிக்கப்பிடிக்கப்படுகின்றன என்று குறிப்பிடுகிறது.அந்த வகையில் சர்வதேச தொண்டு நாள் என்பது உலகில் இன்னும் வறுமையாலும், கல்வி இன்மையாலும் அவதிப்படும் மக்களைப் பற்றியும் ,அவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஒரு நாளாக செப்டம்பர் 5 அமைகிறது.

மக்களுக்குத் தொண்டு செய்யும் மத நிறுவனங்கள் அவர்களுக்குத் தொண்டு செய்வதோடு நிறுத்திக்கொள்கின்றன. அதனைச் சிலர் கடவுளுக்குச் செய்யும் சேவை என்று கூறுகின்றனர்- அன்னை தெரசா அவர்களைப் போல. ஆனால், ஏன் அவர்கள் இப்படி இருக்கிறார்கள், அவர்கள் ஏழைகளாக இருப்பதற்குக் காரணமென்ன? அவர்கள் படிப்பு இல்லாமல் இருப்பதற்குக் காரணமென்ன? பெண்கள் ஏன் படிக்கக்கூடாது என்று சில மதவாதிகள் சொல்கிறார்கள், அதனை மிகக் கடுமையாகக் கடைப்பிடித்து,அதனை மீறுகிறவர்களைத் தண்டிக்கிறார்கள் என்பதைப் பற்றி யோசிப்பதில்லை .மனிதர்கள் ஏன் ஆடு மாடுகளைப் போல உணவும் இன்றி, முறையான உடையும் இன்றித் தெருக்களிலே கிடக்கிறார்கள்? இதற்கான காரணம் என்ன? இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நிரந்தரமான தீர்வு என்ன என்பது பற்றியும் தொண்டு நிறுவனங்கள் யோசிப்பதில்லை; யோசிக்கத் தூண்டுவதுமில்லை.

மற்றவர்களுக்குத் தொண்டறம் செய்யவேண்டும் என்பதைத் தன் வாழ்நாள் செய்தியாக ,ஒவ்வொரு செயலிலும் நிரூபித்த தந்தை பெரியார் அவர்கள்,உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் துன்பப்படுவது ஏன், அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களும், பெண்களும் கடுமையான உழைப்பாளிகளாக இருந்தும் பெரும் துயரம் அடைவது ஏன் என்பதை மிக ஆழமாக யோசித்தார். இனிவரும் உலகம் எப்படி எப்படியெல்லாம் அமையவேண்டும் என்பதற்கு அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை முன்வைத்தார்.அந்தத் தீர்வுகளுக்கு முன் நிபந்தனையாகப் பொது உரிமையும்,பொது உடைமையும் அமைந்தன. இவற்றின் மூலமே துன்பப்படும் எளிய மனிதர்களின் துயரங்கள் துடைக்கப்படும் என்று தந்தை பெரியார் அவர்கள் நம்பினார்.அதனையே தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்துப் பரப்பினார்.

இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு உதவுதன் மூலம் ஏழை-பணக்காரன் பிரச்சனையைத் தீர்த்துவிடலாம் என்று காந்தியடிகள் நினைத்தார்; செயல்பட்டார். அவருடைய சீடரான வினோபா ‘பூமிதான இயக்கம்’ என்று ஒரு பெரிய இயக்கத்தையே நடத்தினார்.தற்காலிமாகச் சிலருக்கு இவை நன்மை பயத்ததே தவிர நிரந்தமான தீர்வைத் தரவில்லை. எனவே தொண்டறத்தை ஊக்குவிக்கக் கூடிய அதே நிலையில் நிரந்தரமான தீர்வினைப் பற்றியும் உலகம் யோசிக்கவேண்டும். அதற்குத் தோழர் காரல்மார்க்ஸ் மற்றும் தந்தை பெரியாரின் சிந்தனைகளே தீர்வைத் தரும்.

மதத்தின் அடிப்படையில் தாங்கள் உயர்ந்த ஜாதி, உயர்ந்த இனம் என்னும் மனப்பான்மை ஒழிய வேண்டும் .மனிதர்கள் துன்பப்படுவதற்கு அவர்கள் முற்பிறவியில் செய்த பாவம்தான் காரணம் என்னும் விதிக்கோட்பாடு அழியவேண்டும். மனிதர்களின் மனங்களில் இருந்து அப்படிப்பட்ட கோட்பாடுகள் அடியோடு அகலவேண்டும். அப்படி அவை ஒழிந்த நிலையில்தான் மனித இனம் முழுமையாகத் துன்ப நிலையிலிருந்து விடுபடமுடியும். ஆண்களும் பெண்களும் சம உரிமை படைத்தவர்களாக உலகில் வாழமுடியும். எனவே, அப்படிப்பட்ட ஒரு நிலையை நோக்கி உலகம் செல்லும் நாளைப் பற்றியும் சிந்தனை செய்யும் நாளாகவும் உலகத்தொண்டற நாள் செப்டம்பர் 5 அமையட்டும். அனைவருக்கும் உலகத் தொண்டற நாள் வாழ்த்துகள்.

நன்றி ; உண்மை மாதம் இருமுறை இதழ் செப் -1-15 ,2024