செம்மொழித் தமிழ் நிறுவனமும் அகத்தியரும்...
(முனைவர் வா.நேரு)
புராணக் குப்பைகளைப் புறந்தள்ளி,கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு ஸனாதானிகளுக்கு உறுத்திக்கொண்டே இருக்கிறது.’அனைவர்க்கும் அனைத்தும்’ என்னும் இலட்சிய நோக்கோடு பீடு நடை போடும் நூற்றாண்டு விழாக்காணும் சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாம் திராவிட மாடல் ஆட்சியும் அதன் கல்வி பரப்பும் விதமும் வர்ணாசிரமத்தை நம்பும் இந்துத்துவவாதிகளுக்கு எரிச்சலாக இருக்கிறது.தனித்துவமாய்த் திகழும் தமிழ்நாட்டின் திராவிட இனம் சிந்து சமவெளி நாகரித்திற்கு சொந்தக்காரர்கள் என்பதும் உலக நாகரிகத்தின் தொட்டிலாகத் திகழும் கீழடி போன்ற அகழ்வாராய்ச்சி தரும் உண்மைகளும் அவர்களின் அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டுவது போல் இருக்கிறது..ஏதாவது செய்து இவற்றை எல்லாம் இல்லாமல் ஆக்கவேண்டுமே என்னும் நினைப்போடு பல தகிடுதத்தங்களை தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பண்பாட்டுப் படையெடுப்பு
காசித் தமிழ்ச்சங்கமம் என்ற அமைப்பை வைத்து அதன் மூலம் பண்பாட்டுப் படையெடுப்பை நடத்த திட்டமிட்டு ,நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் தமிழ் செம்மொழி மத்திய நிறுவனமும் ,சாஸ்த்ரா நிகர் நிலைப் பல்கலைக் கழகமும் இணைந்து ஓர் ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள்.என்ன ஊர்வலம் என்றால் 100 மாணவர்களை அகத்திய முனிவர் போல வேடம் அணியச்செய்து ஊர்வலம் நடத்தி இருக்கிறார்கள்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அகத்தியருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்?’கல்வியை காவி மயமாக்க பாஜக சதி ‘அகத்தியர் வேடம் நிகழ்வுக்கு தி.மு.க. கண்டனம் என்று தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது(12.2.2025).இந்தக் கண்டன அறிக்கையை திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கொடுத்துள்ளார். பாராட்டத்தக்க அறிக்கை. சென்னையில் நடைபெற்ற ஊர்வலத்தில் அகத்தியர் வேடம் பூண்டு கையில் கமண்டங்களோடு மாணவர்கள் ஊர்வலம்.இந்த தமிழ் செம்மொழி மத்திய நிறுவனம் என்ன சொல்ல வருகிறது.?
செம்மொழி நிறுவனத்தின் வேலை என்ன? எத்தனை கனவுகளோடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் செம்மொழி தமிழ் நிறுவனத்தை உருவாக்க முயற்சி செய்தார்?.ஏன் இப்படி இந்த நிறுவனத்தை குட்டிச்சுவராக ஆக்குகிறார்கள்.தமிழ் இந்து செய்தியின் பின்னோட்ட பகுதியில் இளங்கோ என்பவர் பின்னோட்டம் இட்டுள்ளார்.
நிதி இல்லை
அந்தப் பின்னோட்டம் “ஆட்சிக்குழு உறுப்பினர்களில் ஒருவராக , சமஸ்க்ரித மொழி வளர்ச்சிக்கு Nodal நிறுவனமாக செயல்படும் புதுடில்லியில் உள்ள ராஷ்ட்ரிய சமஸ்க்ரித சன்ஸ்தானின் துணைவேந்தர் இடம்பெற்றிருப்பது ஏன்? 2017-18 முதல் 2019-20 வரை,மேற்கண்ட நிறுவனத்தின் மூலமாகத்தான் ஒன்றிய அரசு,சமஸ்க்ரித வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதியான ரூபாய் 640 கோடியை செலவிட்டிருக்கிறது.சமஸ்க்ரிதத்துக்கு முன்னரே,செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ்மொழிக்கு,மேற்கண்ட மூன்று ஆண்டுகளில்,ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி வெறும் 24 கோடி மட்டுமே.மற்ற செம்மொழிகளான தெலுங்கு மற்றும் கன்னட மொழி வளர்ச்சிக்கு செலவிட்ட தொகை ரூபாய் 3 கோடி மட்டுமே.செம்மொழிகளான மலையாளம் மற்றும் ஓடியா மொழிகளின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.இந்த தகவல் எல்லாம் நாடாளுமன்றத்தில் ,3-2-2020 அன்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி செம்மொழி தமிழாய்வு மையத்திடம்தான் வழங்கப்படுகிறது.அண்மையில் ,செம்மொழி தமிழாய்வு மையத்தின் துணைத்தலைவராக ,தமிழறிஞர் அல்லாத,புராண சொற்பொழிவுகள் செய்து வரும் பெண்மணி ஒருவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டார்.அவர்தான் முன்பு நடந்த காசி சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றினார்.விரைவில் நடக்கவிருக்கும் காசி சங்கமம் நிகழ்ச்சியில் ,புராண பாத்திரமான அகத்தியரை முன்னிலைப்படுத்துவதற்கு ,இவர்தான் ஆலோசனை கூறினார் என்று தெரிகிறது.செம்மொழி தமிழாய்வு மையத்தின் தலைவரான தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தமிழை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்த பெண்மணியை துணைத்தலைவர் பதவியிலிருந்தும் மேற்கண்ட சமஸ்க்ரித பல்கலைக்கழக துணைவேந்தரை ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.” என்று கூறுகின்றது.
சமஸ்கிருதத்திற்கு 640 கோடி ரூபாய் ஒன்றிய அரசு ஒதுக்கி செலவழிக்கிறது.செம்மொழியான தமிழுக்கு வெறும் 8 கோடி ரூபாய் ஒரு ஆண்டுக்கு.அந்த நிதியும் செம்மொழி தமிழாய்வு மையத்திடம்தான் கொடுக்கப்படுகின்றது.அந்த நிதியை வைத்து அந்த நிறுவனம் இந்துத்துவாவாதிகள் நடத்தும் கல்வி நிறுவனங்களோடு சேர்ந்து அகத்தியர் புகழ் பரப்ப செலவழிக்கிறார்கள்.செம்மொழி தமிழ் வளர்ச்சிக்கு செலவழிக்க வேறு துறையில்லையா?செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் மொழி வளர்ச்சி போன்ற பொருண்மைகளில் நிகழ்வுகள்,கருத்தரங்குகள் நடத்தாமல் அகத்தியர் பெயரில் நடத்துவது ஏன்?
சரி,அந்த அகத்தியர் யார்? செம்மொழி தமிழ் நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கும் செய்தியின் ஒரு பகுதியை அப்படியே தருகின்றேன்.
“அகத்தியரின் பிறப்பே மனிதப்பிறப்பில் இருந்து வேறுபட்டது.தாரகன் என்னும் அசுரன் கடுந்தவம் புரிந்ததன் மூலம், கடலுக்குள் சென்று ஒளிந்து வாழும் வரத்தினையும் ,ஒரு குடம் அளவு உள்ளோரோல்தான் தனக்கு மரணம் அமையவேண்டும் என்னும் வரத்தினையும் பிரம்மனிடம் இருந்து பெற்றுக்கொண்டான்.பிற அரக்கர்களுடன் சேர்ந்து வரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உலகத்தையே அச்சுறுத்தி வந்தான்.உலக மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தேவலோகத்திலிருந்து இந்திரன் கோபத்துடன் பூலோகத்தை வந்தடைந்தார்.இதனைக் கேள்வியுற்ற தாரகனோ கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான்.
புராணக்குப்பை
தாரகனைப் பின் தொடர முடியாத இந்திரன் முதலில் அக்கினி வகவானை அழைத்து ,”உன் வெப்பத்தால் இந்தக் கடலை ஆவியாக்கிவிடு “ என்று கூறினார்.ஆனால் அக்கின்பகவானோ.’கடல் நீர் இருந்தால்தான் மழை பெய்யும்.தண்ணீர் இல்லாமல் எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது.இந்தப் பாவத்தை நான் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டார்.இரண்டாவதாக இந்திரன் வாயு பகவானை அழைத்து வறண்ட காற்றினால் கடலை ஆவியாக்கும்படி கூறினார்.ஆனால் வாயுபகவானும் அக்னிதேவன் கூறிய அதே காரணமதைக் கூறித் தன்னாலும் முடியாது என்று கூறிவிட்டார். இதனால் கோபமடைந்த இந்திரன்,வாயு பகவானுக்கும்,அக்னிபகவானுக்கும் பூமியில் மனிதனாகப் பிறந்து துயரப்படவேண்டும் என்னும் சாபத்தினை அளித்தார்.
அக்கினி பகவான் மித்திரா என்ற பெயரிலும் வாயு பகவான் வர்ணன் என்ற பெயரிலும் பூமியில் மனிதனாகப் பிறந்தனர்.ஒரு நாள் குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும்போது மித்திரனும் வர்ணனும் ஊர்வசி என்னும் தேவலோகக் கன்னிகையைக் கண்டனர்.இப்படிப்பட்ட பேரழகியை அவர்கள் கணடதில்லை.அப்போது அவர்களிடம் இருந்து வீரியம்(விந்து) வெளிப்பட்டது.மித்திரர் தன் கையில் இருந்த கும்பத்தில் வீரியத்தை வெளியிட்டார்.(விட்டார்).வர்ணன் தன் வீரியத்தை தண்ணீரில் விட்டார்.கும்பத்தில் இருந்து அவதரித்தவர்தான் அகத்தியர்.அகத்தியர் குடத்தின் அளவே இருந்தார்.குடத்தின் அளவு உள்ள அகத்தியரிடம் தேவர்கள் சென்று தாராகன் செய்து வரும் கொடுமைகளைப் பற்றிக் கூறினார்கள்.தாரகனை அழித்து தங்கள் அனைவரையும் காக்கவேண்டும் என்று தேவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அகத்தியர் தேவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.தாரகனை அழிக்க அகத்தியர் 12 ஆண்டுகள் தண்ணீரின் மேல் தவம் செய்தார்.கடும் தவத்தினால் பல அரிய வரங்களை அகத்தியரால் பெற முடிந்தது.அகத்தியரும் இந்திரனும் தாரகனையும் அவனது அசுரக் கூட்டத்தையும் அழிக்கச்சென்றார்கள்.இதை அறிந்த தாரகன் மறுபடியும் கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான்.அகத்தியர் தன் தவ வலிமையினால் பெற்ற சக்தியின் காரணமாக கடல் நீர் அனைத்தையும் குடித்துவிட்டார்.அதன் பின்னர் இந்திரன் கடலுக்குள் சென்று தாரகனை வதம் செய்தார்.தாரகனை வதம் செய்த பிறகு அனைத்து கடல் நீரையும் கடலிலியே விட்டுவிட்டார் அகத்தியர்”
( நன்றி: செம்மொழி தமிழ் நிறுவனம் –இணையதளம்)
வெட்கமாக இல்லையா?
பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்கள் 5 பக்க கட்டுரை எழுத வேண்டும்.அதற்கு முதல் பரிசு ரூ 30,000,இரண்டாவது பரிசு ரூ 20,000 மூன்றாவது பரிசு ரூ 10,000.அந்தக் கட்டுரை எழுதுவதற்கான குறிப்புகளாக செம்மொழி நிறுவனம் கொடுத்திருப்பதில் ஒரு பகுதிதான் மேலே குறிப்பிட்டிருப்பது.
இந்தக் கதை பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் மத்தியில் பரப்பப்படவேண்டிய கதையா?வெட்கமாக இல்லையா? வாயு பகவான்,அக்னி பகவான் இருவரும் மனிதப்பிறவிகளாகப் பிறந்தார்களாம்.அவர்கள் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது வந்த அழகியைப் பார்த்து ஒழுக விட்டார்களாம்.குடத்தில் ஒருவர் ஒழுகவிட்டாராம்.குடத்து அளவே உள்ள அகத்தியர் பிறந்தாராம்.தண்ணீரில் ஒருவர் ஒழுகவிட்டாராம்.அதில் இருந்து பிறந்தவர் வசிஷ்டராம்.சங்க இலக்கியம்,நீதி நூல்கள் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் இத்தனை உள்ளதே?எதிலாவது ஒருவன் அழகியைப் பார்த்தான்,அடக்க முடியவில்லை,விந்தைக் குடத்தில் விட்டான் என்று கதை உள்ளதா? அந்தக் குடத்தில் குழந்தை பிறந்தது என்றால் குடத்திற்குள் வீரியத்தை விட்டால் எப்படிடா குழந்தை பிறக்கும் என்ற கேள்வி எழாதா?
அகத்தியர் தன்னுடைய தவவலிமையால் கடல் நீரை எல்லாம் குடித்து விட்டாராம்.கடல் நீர் உப்புத் தண்ணீர். ஒரு தம்ளர் உப்பு நீரைக் குடிப்பதே கடினம். இதில் பூமியின் 4-ல் 3 பங்கு இருக்கும் கடல் நீரை எல்லாம் அகத்தியர் குடித்துவிட்டாராம்.அதனால் கடல் வற்றியதாம். கடலுக்குள் ஒளிந்து இருந்த தாரகன் என்னும் அரக்கன் கட்டாந்தரையான கடலில் இருந்தானாம்.அவனை இந்திரன் வதம் செய்தானாம். அவன் இறந்தவுடன் மீண்டும் அகத்தியன் தான் குடித்திருந்த கடல் நீரை எல்லாம் உமிழ்ந்தானாம். மீண்டும் உலகில் உள்ள கடல் எல்லாம் கடல் நீரால் நிரம்பி விட்டதாம்.?அண்டப்புளுகு,ஆகாசப்புளுகு என்று சொல்வதற்கெல்லாம் மேலான புளுகாக இது இல்லையா?ந்தப் புளுகைத்தான் மாணவர்கள் மத்தியில் பரப்ப வேண்டுமா? இதுதான் செம்மொழித் தமிழ் மத்திய அரசு நிறுவனத்தின் வேலையா?
சீரழியலாமா?
21-ஆம் நூற்றாண்டில் எதைச்சொன்னாலும் மக்கள் நம்பிக்கை என்னும் பெயரில் ஏற்றுக்கொள்வார்கள் என்னும் எண்ணமா? என்ன கொடுமை இது? மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய,’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ‘ என்று எல்லா உயிரையும் போற்றிய தமிழ் இலக்கியங்களைப் பற்றிப் பேசுவதற்காக அமைக்கப்பட்ட இந்த செம்மொழித் தமிழ் நிறுவனம் இப்படிச் சீரழியலாமா?.தமிழர்கள் நாம் இப்படி சீரழிக்கவிடலாமா?
இதை உண்மை என்று சொல்லி பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் கட்டுரை எழுதவேண்டும்.இந்த அகத்தியரைப் பற்றி நடத்தப்படும் கருத்தரங்கம் என்ற பெயரில் நடக்கும் கூத்துகளில் பங்கு பெறும் தமிழ் பேராசிரியர்களே,உங்களுக்கு எல்லாம் மனச்சாட்சி இல்லையா?எதைப் பற்றி வேண்டுமானாலும்,எவர் அழைத்தாலும் பேசப்போய் விடுவீர்களா?
ஆசிரியரின் கண்டனம்
செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனமா? அல்லது புராணக் கதைகளை வரலாறு என்று சொல்லி மாணவ மாணவிகள் மத்தியில் பரப்பும் பஜனை மடமா? எவருக்கு கோபம் வந்தது?திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தானே இதனைக் கண்டித்துப் பேசினார்.அறிக்கை விடுத்தார்.
”அகத்தியர் குறித்த புராணச் செய்திகளை, ஆராய்ச்சி செய்கின்றோம் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். கருத்துகளைக் காவிக் கும்பல் கல்விப்புலங்களில் விதைத்து வருவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். கடந்த ஒரு வாரமாக இந்திய அளவில் உள்ள பார்ப்பனர்களும், பார்ப்பன ஆதரவாளர்களும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கல்வி நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, அகத்தியரைப் பற்றிய கருத்தரங்குகள் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள், சொற்பொழிவுகளை நடத்துமாறும் அதற்கு ஒன்றிய அரசு நிறுவனங்களின் வழியாக செலவுக்குரிய தொகையை அளிக்கின்றோம் என்றும் கூறி, பொம்மை (டம்மி) துணைவேந்தர்களைத் துணைகொண்டு, அகத்தியர் குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.” என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் (9.2.2025) விடுதலையில் அறிக்கை கொடுத்தார்.
செம்மொழி தமிழ் நிறுவனத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டிய நேரம் இது.உண்மையை உறக்கச்சொல்லவேண்டிய நேரம் இது.தெருக்கள் தோறும் கல்வி நிறுவன்ங்கள் தோறும் இந்தச்செய்தியைக் கொண்டு போக வேண்டிய நேரம் இது.ஒன்றிணைவோம்.போராடுவோம்.இந்த அகத்தியர் என்னும் பொய்ப்பிம்பத்தைத் தகர்ப்போம்.