Tuesday, 13 May 2025

படாதபாடுபடும் முனைப்பில்...

 பக்திப்பழம் அவன்…

பக்தியைக் காப்பாற்ற

படாத பாடுபடுகிறான்…


‘எல்லாம் வல்ல’ கடவுளைக்

காப்பாற்ற மனிதன் எதற்கு

இத்தனை சண்டை போடுகிறான்..

இளம்வயது முதல் எனக்கு

இது புரியவேயில்லை..


ஆளுக்கொரு கடவுள்

ஆளுக்கொரு ஆயுதமென

இவர்களின் சண்டையே

ஆகப்பெரும் சண்டை

வரலாறு முழுவதும்…


பக்தியைக் காப்பாற்ற

படாதபாடுபடும் முனைப்பில்

ஒழுக்கத்தைக் காப்பாற்றத்

தவறுகிறான் என்பது

செவி வழிச்செய்தி…

பக்தி போனால் நட்டமில்லை..

ஒழுக்கம் போனால்…?

                              வா.நேரு,
                              13.05.2025

Wednesday, 7 May 2025

காத்திருக்கும் நேரத்தில் கைகொடுக்கும் நூல்கள் !-..

காத்திருக்கும் நேரத்தில் கைகொடுக்கும் நூல்கள் !-

முனைவர் வா.நேரு


 கையில் ஒரு புத்தகம் இருந்தால் காத்திருக்கும் நேரம் கூட மகிழ்ச்சியாக மாறி விடுகின்றது. எந்த இடத்தில் என்றாலும் வாசிக்கும் மனநிலை இருந்துவிட்டால், இருக்கும் சூழலை மறந்து வாசித்துக்கொண்டு இருக்க முடிகிறது. சில நாட்களுக்கு முன்னால் திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வரும்போது இரவு இரண்டு மணி. டூவீலரில் சென்றால், தெரு நாய்களின் தொல்லை. மேலும் இந்த நேரத்தில் சென்று வீட்டில் இருப்பவர்களைத் தொந்தரவு படுத்தவேண்டாமே, ஒரு 6 மணி போல, விடியும் நேரத்தில்  வீட்டுக்குப் போனால் போதும் என்று நினைத்து எனது பைக்குள் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கொசுக்கடி அதிகமாகவே வீட்டுக்குச் சென்ற எனக்கு ஒரு செய்தியைப் படித்தபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அந்தச் செய்தி – மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகள், அந்த நேரத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த, மாநகராட்சி நிருவாகம் சார்பில் முதல் முறையாக நூலகம் அமைக்கப்பட உள்ளது என்பதுதான்!



பேருந்து நிலையத்தில் ஓர் அறை உருவாக்கி அதில் பயணிகள் அமர்ந்து படிக்க இருக்கைகள் போட்டு, நாளிதழ்கள், புத்தகங்கள், வாங்கிப் போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாநகராட்சி நிருவாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

“வீட்டுக்கோர் புத்தகசாலை அவசியம் வேண்டும். வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், புத்தக சாலைக்குத் தரப்படவேண்டும்.” என்று சொன்ன அறிஞர் அண்ணா மேலும் “புத்தக சாலை அமைக்கும்போது  அர்த்தமற்ற, அவசியமற்ற எண்ணங்களை நிலைநிறுத்தக்கூடிய நூல்களைச் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் மனவளம் ஏற்படாது. உலக அறிவையும் உருப்படியான காரியத்துக்குப் பயன்படுத்தும் அறிவையும் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்” என்றார். வீடுதோறும் புத்தகசாலை அமைக்கவேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும், எங்கெல்லாம் முடிகிறதோ அங்கு ஒரு நூலகம் அமைக்கவேண்டும்.

மதுரையின் மிகப்பெரிய சொத்தாக இன்றைக்கு ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம் ‘திகழ்கிறது. ஒருபக்கம் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவ மாணவிகள் வளாகம் முழுவதும் மற்றும் உள் அரங்குகளில். ஓய்வுபெற்ற ஆண்கள், பெண்கள் எனப் பலரும்  குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்  அமர்ந்து படிப்பது நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. புரட்சிக்கவிஞரைப் பற்றிப் பேசவேண்டுமா? கலைஞர் நூற்றாண்டு நூலக உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்தி நான்கு நூல்களை எடுத்துக்கொண்டு வரமுடிகிறது. இப்படி எந்தத் தலைப்பில் பேசுவது என்றாலும் எழுதுவது என்றாலும் மிகப்பெரிய வாய்ப்பாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் அமைந்துள்ளது. கல்லூரியில் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திட்ட வேலைகளை முடிப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது.

அதைப்போல மதுரையில் சிம்மக்கல் பகுதியில் மதுரை மத்திய நூலகம் உள்ளது. பல ஆயிரம் புத்தகங்கள் உள்ள நூலகம். இப்போது மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நாம் தேடும் ஒரு நூல் இருக்கிறதா என்பதை அந்த நூலகத்தின் இணைய இணைப்பு வழியாக வீட்டில் இருந்தே உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. அதைப்போல மற்ற நூலகங்களிலும் இருக்கிறதா  என்பதை இணையத்தின் மூலமாக அறிந்துகொள்ளும் வசதி வேண்டும்.

வாசிப்போர் கழகம் அமைத்து ஒவ்வொரு வகுப்பிலும், ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் தாங்கள் படித்த நூல்களை நூல் மதிப்புரை செய்ய அனுமதிக்கவேண்டும்.எத்தனை யூ டியூப் சேனல்கள் வந்தாலும் அதனை விட வாசிப்பு என்பது மிகச் சிறந்தது.அதனை மாணவ, மாணவர்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “மனிதர்களைப் பீடித்த மிகப்பெரிய கொடிய நோய் அறியாமைதான்” என்றார்.

அறியாமை – அறிவுப் போதாமை ஆகிய இருட்டைப் போக்கும் அறிவொளி – அறிவியல் அடிப்படையில், ஏன், எதற்கு, எப்படி, எங்கு என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அறிவை விரிவு செய்து,

நமது எதிரிகள் அறியாமையைப் பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள்.நமது பரம்பரை எதிரிகள் ஒன்றிய அரசால் நடத்தப்படும்  தேஜஸ், வந்தே பாரத் போன்ற இரயில்களில்  நம் இனத்திற்கு எதிரான பத்திரிகைகளை நாம் கேட்கமாலேயே நமது இருக்கைகளில் வைத்துவிடுகின்றனர்.  நாம் கட்டும் பயணக் கட்டணத்தில் அதற்குரிய பணத்தை எடுத்துக்கொண்டு விடுகின்றனர்.மிகப்பெரிய விற்பனையைப் பார்ப்பனப் பத்திரிகைக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். 5 மணி நேரம் 4 மணி நேரம் என இரயிலில் பயணம் செய்யும் அனைவரும் அவர்களின் பத்திரிகையைப் படிக்கும் நிலைமையை வலிந்து ஏற்படுத்துகின்றனர். நமது விரலை வைத்தே நம் கண்ணைக் குத்திட வைக்கும் வேலையைச் செய்கின்றனர்.

இவர்களுக்கு மாற்றாக பொதுத்தன்மையில் உள்ள பத்திரிகைகள், நூல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். சிந்திக்க வைக்கும் நூல்கள் எளிதில் கிடைக்க வேண்டும். 2023இல் நூலகங்களின் எண்ணிக்கை என்று ஒன்றிய அரசு ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை 4622 என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கூடியிருக்கும். 100 நூலகங்கள் மேலும் திறக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்திருக்கிறார்.வரவேற்கின்றோம்!

இந்த ஏடுகளும் புத்தகங்களும் தமிழ் நாட்டின் தெருக்கள் தோறும் பெருகவேண்டும். பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மதிய உணவுத் திட்டத்திற்காக  மக்களிடம் இறங்கி வசூல் செய்து அதனை நடத்தியதுபோல, மக்களின் பங்களிப்போடு இந்த நூலகங்கள் மேலும் வலுவாக்கப்படவேண்டும். தன்னை வரவேற்பவர்கள் சால்வைக்குப் பதிலாக புத்தகங்கள் கொடுக்கலாம் என்ற தமிழ்நாட்டு முதல்வர் அவர்களின் அறிவுரையைக் கேட்டு அவரின் தொண்டர்கள், நலம் விரும்பிகள் எல்லாம் நல்ல நல்ல புத்தகங்களைத் திராவிட மாடல் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.அவையெல்லாம் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் முதல்வருக்குக் கொடுக்கப்பட்டவை என்னும் பதிவோடு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் மற்ற அமைச்சர்களும், இதே வழிமுறையைப் பின்பற்றினால் இன்னும் அதிகமான புத்தகங்கள் நூலகங்களுக்கு கிடைக்கும். புதிது புதிதாய் அமையும் நூலகங்களுக்கு எல்லாம் சென்று சேரும்.

அரசு ஆரம்பிக்கும் புதிய நூலகங்கள் மட்டுமல்ல, தனி மனிதர்கள், நிறுவனங்கள் ஆரம்பிக்கும் நூலகங்களும்   நிறையத் தோன்றவேண்டும். வாசிப்பில் ஈர்ப்பு உள்ள பலர் தங்கள் தங்கள் பகுதிகளில், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் நூலகங்கள் அமைப்பதை அரசு ஆதரிக்கவேண்டும். அவர்களுக்கு உதவிட வேண்டும். கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் இப்படித் தனியார் நூலகங்கள் அமைத்தால் அவர்கள் பெயர் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு, பாராட்டப்படல் வேண்டும்.

எத்தனை மின்னணுச் சாதனங்கள் வந்தாலும் புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிப்பதென்பது சுகமானது. கண்களுக்கும் பாதுகாப்பானது. பல நூறு கோடி செலவழித்து, கோயில்களைக் கட்டி, அதற்கு விழாக்களை நமது பரம்பரை எதிரிகள் முன்னெடுக்கிறார்கள். எப்போதும் அறியாமையில்  மக்களை மூழ்க வைத்திருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும் என்பதைப் புரிந்துகொண்ட அவர்கள் அடித்தட்டு மக்களை ஏமாற்ற கோயில்களுக்குச் செலவழிக்கிறார்கள். அறியாமையிலிருந்து விடுபட்டு, அறிவு வயப்பட்டால்தான் நமது மக்கள் உழைக்கும் மக்கள் முன்னேற முடியும் என்பதை உணர்ந்த திராவிட மாடல் அரசு நூலகங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். கல்விதான் நம்மை விடுதலை செய்யும். கல்விதான் உழைக்கும் மக்களை உயர்த்தும்.அதற்கு வழிவகுக்கும் நூலகங்களுக்கு நாம் முழு ஆதரவை அளிப்போம். அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் மே 1-15,2025

Tuesday, 6 May 2025

கனவு போலத்தான் நடந்தது நூல் பற்றி திரு.இறையன்பு சார் அவர்கள்...












இன்றைக்கு வெளி வந்த ராணி இதழில் ,தமிழ் நாட்டின் மேனாள் தலைமைச்செயலாளர் திருமிகு.வெ.இறையன்பு அவர்கள் எனது நூலான 'கனவு போலத்தான் நடந்தது ' என்னும் நூல் பற்றியும் ,எனது பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.வீரிசெட்டி சார் அவர்களைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். மிகவும் நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.மிகப்பெரிய விருது பெற்ற உணர்வும் , நிறைவும் எனக்கு ஏற்பட்டது. திரு வீரிசெட்டி சாரின் மகள் திருமதி மணிமொழி ஆசிரியர் அவர்கள் இன்று(06.05.2025)  பெரியகுளத்தில் இருந்து   செல்போனில் அழைத்து அழுவது  போல உருக்கமாக அவரது அப்பாவைப் பற்றிப் பேசினார்.
 நன்றி தெரிவித்தார்.பலரும் தொலைபேசியில் அழைத்துப்பாராட்டினர்.இந்த நூலை அழகாக அச்சடித்துக்கொடுத்த கீழடி வெளியீட்டகத்திற்கும்,அதன் உரிமையாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும்,ஓர் அருமையான அணிந்துரையை அளித்த திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் மேனாள் ஆங்கிலத்துறைத் தலைவர் பேரா.கி.ஆழ்வார் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை இந்த  நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.