Wednesday, 1 October 2025

பயிர் எது? களை எது?

 பயிர் எது? களை எது?

 

கதர்ச் சட்டைக்குள்

ஒரு கறுப்புச்சட்டை

என விகடன் வேர்த்து

விறுவிறுத்து ஒரு

கார்ட்டூன் போட்டது…


பிரதமர் நேரு,அவரிடம்

‘நீங்கள் சொன்னால் பெரியார்

கேட்பார் எனச் சொல்கிறார்கள்…’

என்றபோது

‘ஆமாம், கேட்பார்  தமிழ்நாட்டுக்கு

நல்லது என நினைத்தால் கேட்பார்

நீங்கள் இந்தியைப் படி

எனச்சொன்னால் எப்படிக்கேட்பார்?’

என எதிர்க் கேள்வி கேட்டவர்…


உங்கள் அப்பாவும் என் அப்பாவும்

படிப்பதற்கு பள்ளிக்கூடம் அமைத்தவர்

தமிழ் நாட்டின் இரட்சகர் இவர்

எனப் பெரியாரால் பாராட்டப்பட்டவர்..

அரசியலில் எதிர் எதிர் என்றாலும்

அண்ணாவைப் பெரிதும் மதித்தவர்…


இன்றைக்கு அவர் பிறந்த ஜாதியில்

நானும் பிறந்தேன் என்று

காவிக்கொடியை சட்டைக்குள்

மறைத்து வைத்து

‘காமராசர் வாழ்க! என ‘

முழக்கம் இடுகிறார் சிலர்…

தமிழ்நாட்டு மக்கள் அறிவர்

பயிர் எது? களை எது என..

வளர்க்கப்படவேண்டியது எது?..

களைய வேண்டியது எது என..

அடப்போங்கடா ! ஒரு ஜாதி

மட்டும் கொண்டாடும் தலைவரா அவர்?

தமிழ்நாட்டு மக்கள் அனைவரும்

உரத்துச்சொல்வோம்!

‘பெருந்தலைவர் காமராசர்

புகழ் ஓங்குக !’

                          வா.நேரு,

                           02.10.2025