காட்டாற்று வெள்ளத்தில்
அழுக்குகள் எல்லாம்
அடித்துச் செல்வதுபோலவே
காலம் காலமாய்
சொல்லப்பட்ட கருத்துக்கள்
எல்லாம்
அறிவியல் வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்படும்
நீங்களும் நானும்
விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் !
சொர்க்கமும் நரகமும்
மட்டுமல்ல
அதற்காகச் சொல்லப்பட்ட
சொர்க்க இன்பங்களும்
நரகச்
சித்ரவதைகளும்
சிறுவர்களுக்குச்
சொல்லப்படும் கதைகளாய்
மாறக்கூடும் !
அனைத்து மனிதர்களும்
ஆப்பிரிக்காவில் தோன்றியவர்களே !
சிவப்பும் வெளுப்பும்
நம் மூதாதையர் தோலின் நிறமல்ல
கருப்பு மட்டுமே நமது
மூதாதையர் நிறம் !
எங்கோ தோன்றி உலகெங்கும்
பரவி நிற்கும் உருளைக்கிழங்கு போலவே
ஆப்பிரிக்காவில் தோன்றி
உலகெங்கும் விரவி நிற்கிறது
மனித இனம் என்பது
அறிவியலின் வழியே
நிருபிக்கப்படும்பொழுது
இன்றைய பக்தர்களும்கூட
அன்றைக்கு
ஒப்புக்கொள்ளக்கூடும்
மனிதர்கள் கடவுள்
என்பவரால் படைக்கப்பட்டவர்களல்ல!
பரிணாம வளர்ச்சியால்
வளர்ச்சி பெற்றவர்கள் என்பதை !
தேவைக்கேற்ற வகையில்
மனிதர்கள் செயற்கையாய்
உருவாக்கப்படும்பொழுது
பக்தர்களும் கூட
நம்பக்கூடும்
மாற்றுத்திறனாளிகளாய்
பிறப்பது முன் ஜென்மப்
பாவமல்ல -
மாற்றி அமைந்திட்ட
சில ஜீன்களின் செயல் என்று !
உலகில் உள்ள மக்களெல்லாம்
என்னுடன் பிறந்த பட்டாளம்
என்று அறிவியல் நிருபிக்கும்
நேரத்தில்
செயற்கையாய் மனிதர்கள்
உருவாக்கிய ஜாதிகளும்
மதங்களும் ஏன்
நாடுகள் எனும் சுவர்களும்கூட
சுக்கு நூறாய் உடையக்கூடும்
மனிதர்கள் அனைவரும் உலகில்
ஒரு தாய் மக்கள் எனும்
உணர்வில் வாழக்கூடும்.
வா. நேரு
- வெளியிட்ட eluthu.com-ற்கு(28.05.2012)க்கு நன்றி
No comments:
Post a Comment