Monday 16 July 2012

நட்பால் ஜெயிக்கலாம்


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.- குறள் 789.

நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.- இது மு.வ். அவர்களின் உரை.
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.- இது இந்தக் குறளுக்கு டாக்டர் கலைஞர் அவர்களின் உரை.

இந்த திருக்குறளின் உரையினை செயல்வடிவமாகக் காணும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு மதுரையில் எனக்குக் கிடைத்தது. மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக பணியாற்றும் திரு. R. சந்திரன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழா அது. Ph.D. கணிதத்தில் பெற்றமைக்காக மதுரை விக்டரி லயன்ஸ் சங்கமும், சந்திரன் அவர்களின் நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழா  அது.  பள்ளிக் காலம் முதல் ஒன்றாய்ப் பழகிய நண்பர்கள் தனது நண்பனின் உழைப்புக்காக, அவரது உழைப்பினால் கிடைத்த உயர்வுக்காக எடுத்த பாராட்டு விழா அது. தினம் அடுத்த வேளை சாப்பாடு என்பது உழைத்தால்தான் கிடைக்கும் என்னும் நிலையில் இருந்த குடும்பத்தில் இருந்து  படித்தால் உயர முடியும் என்பதனை நிருபித்ததிற்காக அமைந்த பாராட்டு விழாவாக அது அமைந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
சுப.முருகானந்தம், மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், திரு.C. கிருஷ்ணன்,எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி, திரு. A.மோகன சுந்தரம்,  R.பழனிவேல்ராசன் மதுரை IOC துணை மேலாளர் , திரு R.சந்திரன், திரு.க. மணிமாறன் , ப.இராஜசேகரன்  ஆகிய எட்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் இளமைக் காலம் முதல். இன்று 50 வயதைத் தாண்டி நிற்கும் இந்த நண்பர்களின்  40 ஆண்டுகளுக்கும் மேலான  நட்பு மேலே சொன்ன குறளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
                           இவர்களின் நட்பினை அறிந்த யாதவர் கலைக் கல்லூரியின் செயலாளர் திரு. K.P. நவநீதகிருஷ்ணன் அவர்களும்,  யாதவர் கலைக் கல்லூரியின் தலைவர் திரு A. தங்கவேலு அவர்களும் இவர்களின் நட்பின் சிறப்பினை பேசினர். வரவேற்புரை ஆற்றிய திரு.C.கிருஷ்ணன் தங்களின் இளமைக் காலங்களை நினைவு கூர்ந்தார். உரையாற்றியார் அனைவரும் கல்வியின் சிறப்பினை எடுத்துரைத்தனர். ஸ்டீபன் கவே தன்னுடைய " The seven habits of highly effective people" புத்தகத்தில் இருவர் வெற்றி பெற  " Win -Win " என்னும் வழிமுறையை எடுத்துக்காட்டியிருப்பார். இங்கு எட்டு  நண்பர்கள் வின்-வின் தத்துவத்தின் மூலம் தாங்களும் வெற்றி பெற்று, தங்கள் நண்பர்களும் வெற்றி பெற உதவியிருக்கிறார்கள் . இன்றைக்கும் ஒருவர் வீட்டில் ஒரு நிகழ்வு என்றால் அனைவரும் ஒன்றாக வந்து நின்று செயல்படுகிறார்கள். உடன் பிறந்தோரிடம் கூட காணாத ஒரு ஒற்றுமை, ஒரு உண்மையான உள்ளன்பு இவர்களிடம் இருக்கிறது என்றால் மிகையில்லை. நட்பால் ஜெயிக்கலாம் என்று காட்டியிருக்கிறார்கள் . பாராட்டு பெற்ற சந்திரனுக்கும்  அதே நேரத்தில் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

2 comments:

anandam said...

விழாவுக்கு வந்திருந்தும்,வாழ்த்துரை நல்கியும் சிறப்பித்ததோடு, தங்கள் வெள்ளை மனதால் மீண்டும் பாராட்டி வாழ்த்தியிருக்கிறீர்கள். நன்றி.நன்றி.நன்றி. நண்பர்கள் சார்பாகவும்,தனிப்பட்ட முறையிலும்.....

KARUPPIAH S said...

மனதிற்கு இனிதான ஒரு பதிவினை கொடுத்துள்ளீர்கள் நேரு. அவர்கள் நட்பு தொடரட்டும்.வாழ்த்துக்கள் நண்பர்களே!