Friday 7 September 2012

எழுத்துத் தொழிற்சாலை தோழர் அருணனுக்கு பாராட்டு


பகுத்தறிவாளர் கழகமும், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியும் இணைந்து சென்னை பெரியார் திடலில் 5-9-2012 அன்று மாலை 6 மணி அளவில் முற்போக்கு எழுத்தாளர் தோழர் அருணன் அவர் களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினர். தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்று தோழர் அருணன் அவர்களைப் பாராட்டி, சிறப்புச் செய்து உரையாற்றினார்.
சென்னை - பெரியார் திடல் அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் பல தரப்பட்ட மக்கள், கல்வியாளர்கள், இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் பாராட்டு நாயகர் தோழர் அருணன் பற்றிய தொகுப்பினை பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் ஓர் அங்கமான புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி வழங்கினார்.
தோழர் அருணனின் அண்மைக்காலப் படைப்பான காலந் தோறும் பிராமணியம்நூல் தொகுப்புகளின் (எட்டு பாகங்கள்) குறிப்புகளை பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன், தொகுத்து வழங் கினார்.
காலந்தோறும் பிராமணியம் நூல் தொகுப்புகளின் படைப்பாளி தோழர் அருணனுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
சீரிய சிந்தனையாளரும், பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளருமான, தோழர் அருணன் அவர்கள் ஒரு அருமையான படைப்பினை அண்மையில் அளித்துள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரியது. எழுத்தாளர் பலரும், சிந்தனையாளர் மிகப் பலரும் எழுதிடத் தயங்கிய - தயங்கி வரும் தலைப்பினை மிகவும் துணிச்சலாக மேற்கொண்டு காலந்தோறும் பிரா மணியம் நூல் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.
ஆதிக்கத்தின் அடையாளம் பிராமணியம்; மனிதநேயத் தின் விரோதி பிராமணியம்; சமத்துவத்தின் எதிரிடை பிராமணியம், பொதுவாக, பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் காலம் தொடங்கி இன்று வரை கறுப்புச் சட்டைக்காரர்கள் பிராமணர்களை பார்ப்பனர் என்றுதான் குறிப்பிடுவது இயக்க செயல்முறை வழக்கம். காரணம் வருணாசிரம (அ)தர்மத்தின்படி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால் வருணத்தினருள் பிராமணர் மட்டும் அனைவருக்கும் உயர்ந்த நிலையில் உள்ளனர்.
இத் தத்துவம் நமக்கு உடன்பாடானது அல்ல; எதிர்க்கப்பட வேண்டிய நிலையிலும் உள்ளது. பிராமணர் என குறிப்பிடும் நிலையில் சூத்திரர் எனும் நிலையும் ஏற்கப்படுவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. எனவே சூத்திரத் தன்மையினை மறுப்பதற்கு அதே நேரத்தில் உயர் வருண பிராமணியத்தை எதிர்ப்பதற்கு பார்ப்பனியம், பார்ப்பனர் எனும் சொல்லாட்சிகளை தெளிவாகக் குறிப்பிட்டு, பிரச்சாரம் தொடர்ந்து வருகிறது.
பாராட்டுக் கூட்டத்திற்கு வருகைதந்தோர்.
தந்தை பெரியார் தனக்கே உரிய எளிமையான விளக்கத்தினையும் இதற்கு அளித்துள்ளார். ஒரு ஊரில் பல வீடுகள் இருக்கும். தனி நபர் விருப்பம் என்று ஒரு வீட்டினர் மட்டும் இது பதிவிரதைகள் வாழும் வீடு என எழுதி அவர் வீட்டுக் கதவில் தொங்கவிட்டால் எப்படி இருக்கும்? மற்ற வீட்டினர், அதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?
அதைப் போலவே, பிராமணன் என்று ஒரு வகுப்பினர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வ தால் பிராமணன் எனக் குறிப்பிட்டால், வருணாசிரமத் தின்படி சூத்திரன் நிலையினை ஏற்றுக் கொண்டதாக - இது பதிவிரதைகள் வாழும் வீடு என அடையாளப் படுத்துவதை மற்ற வீட்டினர் ஒப்புக் கொண்டதைப் போல ஆகிவிடும். எனவே பிராமணர் எனும் குறிப்பு வழக்கில் வேண்டாம். பார்ப்பனர் எனக் குறிப்பிடுவதே சரியாகும்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களும் தனது கவிதைகளில் கூட பார்ப்பனர் எனக் கூறாமல் மேற்படி யான் என குறிப்பிட்டுச் சொல்லுவார்.
தோழர் அருணன் அவர்களுக்கும் இந்த அணுகுமுறை உடன்பாடானது என்றாலும், வாசர்களை எளிதில் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில்தான் காலந்தோறும் பிராமணியம் எனும் தலைப்பினைத் தெரிவு செய்துள்ளார் எனக் கருதுகிறோம். இந்த பிராமணிய எதிர்ப்பு என்பது எளிதான பணி அல்ல. ஆண்டாண்டு காலமாக பல சிந்தனையாளர்கள் எழுத்து வடிவத்தில், செயல்முறையில் பிராமணியத்தை கடந்த காலத்தில் எதிர்த்து வந்துள்ளனர். ஆனால் அந்த எதிர்ப்புக்கு ஆதரவு அவ்வளவு எளிதில் கிடைத்து விடவில்லை.
பிராமணிய எதிர்ப்பாளர்கள் மனச் சோர்வுற்று ஒதுங்கி விடுவார்கள்; அப்படியே இருந்துவிட்டவர்கள் பலர். கடை விரித்தோம்; கொள்வார் இல்லை என வள்ளலாரும் மனம் நொந்துள்ளார். ஆனால் காலந்தோறும் பிராமணியம் நூல் படைப்பாளி, தோழர் அருணன் மனம் நொந்து போகிறவர் அல்ல. கடை விரித்தோம்; மக்கள் மனம் கொள்ளும் வரை கடையினை மூடமாட்டோம் எனும் துணிச்சலுக்குச் சொந்தக்காரராக உள்ளவர். அவரது முயற்சிகள் வெல்லவேண்டும். முற்போக்குச் சிந்தனை யுடன், தெளிவான சிந்தனையுடன், புரட்சிகரமான கருத்துகளை இந்தத் தொகுப்பில் வழங்கியுள்ளார்.
களப்பிரர் காலம் இருண்ட காலமா? எனும் வினாவினை எழுப்பி அது இருட்டடிப்பு செய்யப்பட்ட காலம் என்பதையும் வலுவாக்கி விளக்கம் தருகிறார். குப்தர்கள் காலம் பொற்காலம் எனும் வரலாற்றுப் புரட்டைப் புரட்டிப் போடும் போக்கு அவரது எழுத்துகளில் உள்ளது. மனித நேயத்திற்கு ஏதிரான கருத்துகளின் உள்ளடக்கமாக உள்ள மனுசாஸ்திரம் வலுப்பெற்ற, குப்தர்கள் காலம் எப்படி பொற்காலமாக இருக்க முடியும்? 1857ஆம் ஆண்டில் சிப்பாய் கலகம் என குறிப்பிடப் பட்ட செய்தியினையும் தோழர் அருணன் நூலில் குறிப்பிடு கிறார்.
(இந்து) மத கருத்து வலுப்பெற்றிட, ஆதிக்கம் செலுத்திட ஏற்பட்ட கலகத்தை சுதந்திரப் போராட்ட நிகழ்வாக சித்தரிக்கும் நிலை வரலாற்றாளர்கள் மத்தியில் உள்ளது. அப்படியே பதிவும் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கலகம் மதம் சார்ந்த கருத்துகள் வலிமையடைய, ஆதிக்க சக்திகள் உருவாக்கிய கலகம் என்பதை தோழர் அருணன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்துத் தொழிற்சாலை
படித்தவர்கள் எல்லாம் எழுதுவதில்லை. பேசுபவர்கள் எல்லாம் எழுத்து மூலம் படைப்பாளிகளாகி விடுவதில்லை. வெகு சிலரே எழுதுகின்றனர். பல சாதனையாளர்கள் கூட எழுதவில்லை. எழுதுவதற்கு ஒரு வித மனப்போக்கு விகிதம் (sense of proposition)  வேண்டும். அற்புதமான பணியினை தோழர் அருணன் செய்து வருகிறார். சலிப்பில்லாமல் எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தோழர் அருணனை எழுத்துத் தொழிற்சாலை என அழைப்பது மிகவும் பொருத்தமாகும்.
மனிதநேயத்துக்கு விரோதமானது பார்ப்பனியம்
தோழர் அருணன் எடுத்துக் கொண்ட கருப் பொருளான பிராமணியம் - பார்ப்பனியம் மனித நேயத்திற்கு எதிரானது;  விரோதமானது. அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், “What Congress and Gandhiji have done to the Untouchables”   என்ற நூலில், மாந்தரிடையே பேதத்தை வளர்ப்பது பிராமணியம், பேதத்தில் வளர்ந்தது பிராமணியம் எனக் குறிப்பிடுகிறார். ஒரு முறை இதயம் பேசுகிறது இதழ் ஆசிரியராக இருந்த மணியனின் வற்புறுத்தலின் பேரில் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் தாமரை மணாளன் என்னிடம் செவ்வி காண வந்திருந்தார். செவ்வி நடைபெற்ற பொழுது ஒரு கேள்வியினை முன்வைத்தார்.
ஏன் நீங்கள் anti-Brahmin (பார்ப்பன எதிர்ப்பாளர்) ஆக இருக்கிறீர்கள்?
நான் பதிலளித்தேன்: Yes, I am anti-Brahmin, because I am pro-human. (ஆம்; நான் பார்ப்பன எதிர்ப்பாளன்தான்; ஏனென்றால் நான் மனிதத்தை  நேசிக்கிறேன்) ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதால் ஆங்கிலத்திலேயே பதில் சொல்ல வேண்டி வந்தது. மனிதத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் பார்ப்பனிய எதிர்ப்பாளராகத்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். பார்ப்பனர்களின் புனித(?) நூலாகக் கருதும் பகவத்கீதை வருணாசிரமத்தை - பிறப்பின் அடிப்படை யிலான பேதத்தைக் கற்பிக்கிறது. கடவுள் பிறவியிலேயே பேதத்தைப் படைத்ததாகக் கூறுகிறது.
தான் படைத்ததை தான் நினைத்தாலும் மாற்ற முடியாது எனவும் கடவுள் பிரகடனப்படுத்துகிறார்.  ஆன்மாவுக்கு அழிவில்லை என புத்தியைப் பேதலிக்க வைக்கும் ஆபத்தான கருத்தையும் தெரிவிக்கிறார். கடவுளைக் கற்பித்தவரைக் கூட விட்டுவிடலாம். ஆன்மாவைப் படைத்தவன் மிகவும் ஆபத்தானவன். இதனால்தான் தந்தை பெரியார் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் எனச் சொல்லி விட்டு, ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறவி, பிதிர்லோகம் ஆகியவைகளைக் கற்பித்தவன் அயோக்கியன். நம்புகிறவன் மடையன். இவற்றால் பலன் அனுபவிக் கிறவன் மகா மகா அயோக்கியன் எனக் கூறினார்.
ஆத்மாவால் பலன் பெறும் பார்ப்பனியம் மகாமகா அயோக்கியத்தனமானது. அந்தப் பார்ப்பனியத்தை - பிராமணியத்தை, மனித நேய விரோதத் தத்துவத்தை தோலுரித்துக் காட்டி காலந்தோறும் பிராமணியம் எனும் தனது படைப்பில் காலங்கள் பல கடந்தும் போற்றப்படும் பணியினை தோழர் அருணன் செய்துள்ளார். பெரிய பல்கலைக் கழகங்கள் செய்ய வேண்டிய, பணியினை குழு நிலையில் செய்து முடித்திட வேண்டிய இந்த மாபெரும் பணியினை தனி மனித முயற்சியாக தோழர் அருணன் செய்து முடித்துள்ளார்.
இதற்காக அவர் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்; எத்தனை நூலகங்களுக்குச் சென்றிருப்பார்; எத்தனை ஊர்களுக்குச் சென்று அலைந்திருப்பார்; அல்லல் பட்டிருப்பார். அவரது அரும்பணி போற்றுதலுக் குரியது. போற்றப்பட வேண்டும். இங்கு வருகை தந்துள்ள அனைவரும் இந்த எட்டு தொகுதிகளையும் பணம் கொடுத்து வாங்கிட வேண்டும். தாங்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு வாங்கி வழங்கிட வேண்டும். விழாக் காலங்களில், வீட்டில் நடக்கும் மகிழ்ச்சி வேளைகளில் இந்த புத்தகத் தொகுதியைப் பரிசாக அளிக்கலாம்.
Literature is a record of best thoughts (சிறந்த சிந்தனைகளின் பதிவே இலக்கிய மாகும்) என்பது ஆங்கில அறிஞர் எமர்சனின் கூற்று. இந்த எட்டு தொகுப்பும் அப்படிப்பட்ட சிறந்த சிந்தனை களின் பதிவுகளே ஆகும். நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சிந்தனைகள் சமுதாயத்துக்குத் தேவையான மூச்சுக் காற்று போன்றது; உயிர்க் காற்று (பிராணவாயு) போன்றது.
தோழர் அருணனின் பணி போற்றிப் பாதுகாக்கப் படவேண்டும். துணிச்சல் மிக்க இவரது படைப்புகளைத் தூக்கிப் பிடிக்க வேண்டும்.இப்படிப்பட்ட சிந்தனைகள் பல்கிப் பெருகிட வேண்டும். பல அருணன்கள் உருவாகிட வேண்டும்.
போற்றுதலுக்குரிய பல செய்திகளை உள்ளடக்கிய இந்த தொகுப்பில் பெரியார் இயக்கம் பற்றிய விமர்சனங்களும் உண்டு என்பதும் எமக்குத் தெரியும். அந்த விமர்சனங்கள் அனைத்தும் எங்களது சிந்தைக்கு அளிக்கப்பட்டதாகவே கருதுகிறோம். அந்த விமர்சனங் கள் மந்தைக்கு அல்ல; மக்கள் மன்றத்திற்கு அல்ல எனக் கருதுபவர்கள் நாங்கள். எது நம்மைப் பிரிக்கிறது என்பதை விட எது நம்மை இணைக்கிறது என பார்ப்பது அறிவுட மையாகும். ஆக்க ரீதியாக செயலாற்றும் பெரியார் இயக்கத்தினரும், பொது உடைமைக் கருத்தினரும்  இணைந்து பணியாற்றிட வேண்டும்.
கறுப்பு மலர்களும், செம்மலர்களும் இணைந்து கருத்தியல் கூட்டணி அமைத்து (அரசியல் கூட்டணி அல்ல) கடமை ஆற்றிட வேண்டிய காலம் கனிந்துள்ளது. மதவெறி அமைப்பு களிடமிருந்து மக்களை - மனித நேயத்தினைக் காப்பாற்ற வேண்டிய பணி நமக்கெல்லாம் உண்டு. அந்தப் பணியில் களம் புகுவோம். அத்தகைய பணியின் ஒரு கட்டம்தான்  தோழர் அருணனுக்கான இந்தப் பாராட்டு விழா. தோழர் அருணனின் பகுத்தறிவு, மனிதநேயப் படைப்புகள் பல்கிப் பெருகட்டும். பாராட்டுகள். வாழ்க பெரியார்!  வளர்க பகுத்தறிவு!!  பெருகிடுக மானிட சமத்துவம்!!!
- இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
தோழர் அருணன் ஏற்புரை
தோழர் அருணன் தனது ஏற்புரையில், மார்க்சியம் சமத்துவத்தை நடைமுறைப்படுத்தும்    கருத்தியல், பிராமணியம் அசமத்துவத்தை உருவாக்குவது.  அசமத் துவத்தை நிலை நிறுத்திட வலியுறுத்தும் கருத்தியல் பிராமணியம். எனவே ஒரு மார்க்சியவாதி பிராமணிய எதிர்ப்பாளராகத்தான் இருக்க முடியும். அது இயல்பு. எனக்கு உற்சாகம் வகையில் நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்விற்கு நன்றி.  எனக்கு மகிழ்ச்சி தந்திடும் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் உரை தனது படைப்பாக்கப் பணியினை ஊக்கப்படுத்தும் எனக் குறிப்பிட்டார். (தோழர் அருணன் ஆற்றிய முழு ஏற்புரை பின்னர் விடுதலையில் வரும்.)
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலச் செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் நன்றி கூற பாராட்டுக் கூட்டம் நிறைவடைந்தது.
கூட்டத்திற்கு திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி, தீக்கதிர் இதழின் ஆசிரியர் தோழர் அ.குமரேசன், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தோழர் முத்து, பொதுவுடமை எழுத்தாளர் பா.வீரமணி, திராவிடர் தொழிலாளர் அணித் தலைவர் நாகலிங்கம், மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் பொறுப் பாளர்கள், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் மற்றும் பொது நல ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

1 comment:

தமிழ் ஓவியா said...

தோழர் அருணன் அவர்களின் எழுத்துப் பணி தொடர்ந்து தமிழகம் எழுச்சிபெறட்டும்