Thursday, 4 April 2013

அண்மையில் படித்த புத்தகம் : புதையல் புத்தகம்


நூலின் தலைப்பு                   : புதையல் புத்தகம்
ஆசிரியர்                                   : சா. கந்தசாமி
வெளியீடு                                 : கவிதா பப்ளிகேஷன், சென்னை-17.
முதல் பதிப்பு                           : டிசம்பர் 2011
பக்கங்கள்                                 : 272, விலை ரூ 150.

                                                            புதையல் புத்தகம் என்னும் இந்தப்புத்தகத்தில் சா. கந்தசாமி அவர்கள் படித்தால் புதையல் போல் கருத்துக்களும், மகிழ்ச்சியும் ,துயரமும் கிடைக்கக்கூடிய புத்தகங்களைப் பட்டியலிட்டு அந்தந்தப் புத்தகத்தின் அருமை,பெருமைகளை எடுத்துக்காட்டியுள்ளார்.

                                                            " புதையல் புத்தகம் இரண்டு அம்சங்களை  எடுத்துச்சொல்கிறது. முதல் அம்சம் படித்தவர் ஈடுபாடு; அக்கறை; ரசனை. இரண்டாவது அம்சம் படித்த புத்தகத்தை எடுத்துச்சொல்லும் முறை. புத்தகத்தில் சொல்லப்பட்டு இருப்பதும், சொல்லப்படாமல் இருப்பதுமான தனித்தன்மை. புதையல் புத்தகம் ஒவ்வொன்றும் அசல் புத்தகம் என்றும், படிக்கப்பட வேண்டிய புத்தகம் என்ற கருத்துடனே எழுதப்பட்டு இருக்கிறது."என்று முன்னுரையில் குறிப்பிடுகின்றார் இந்த நூலின் ஆசிரியர் சா.கந்தசாமி.

                                                           மொத்தம் 47 புத்தகங்களை புதையல் புத்தகங்களாக இன்றைய தலைமுறைக்கு அடையாளம் காட்டுகிறார் ஆசிரியர். " ஆனந்தரங்கப்பிள்ளை நாள் குறிப்பு  ,  பெரியாரின் அயல் நாட்டுப்பயணக்குறிப்புகள்,  சங்க இலக்கியத்தில் தாவரங்கள், காரல் மார்கஸ், நடந்தாய் வாழி காவேரி, தமிழ் நாடு, சிவ பாதசேகரனின் தஞ்சைக்கல்வெட்டுகள், நாடு விட்டு நாடு, ரசிகன் கதைகள், இருபது வருடங்கள், என் கதை, தம்பிரான் வணக்கம், பெளத்தமும் தமிழும், மலையருவி, சித்திரம் பேசுதடி, மதராசபட்டினம், ஆகாயத்தாமரை, மயன் கவிதைகள், கலைஞர் முதல் கலாப்பிரியா வரை, கமலாம்பாள் சரித்திரம், வாழ்க்கைக்குறிப்புகள், பிரதாப முதலியார் சரித்திரம், என் சரித்திரம், புதுக்குரல்கள், பிரசாதம், போதி மாதவன், வீடுபேறு, கன்யாகுமரி, சிலப்பதிகாரம், பரமார்த்த குருவின் கதை, மங்கையர்க்கரசியின் காதல், வரும் போகும், ஆத்ம சோதனை, குறுந்தொகை, அழியாச்சுடர், கோநகர் கொற்கை, அறியப்படாத தமிழகம், சேர நாட்டில் தமிழ் வட்டெழுத்து, வெள்ளிப்பாதரசம், வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப்பேரகராதி, தமிழ்ச்சுடர் மணிகள், புயலிலே ஒரு தோணி, புதுமைப்பித்தன் வரலாறு, அன்று வேறு கிழமை, சிந்தா நதி, மாந்தருக்குள் ஒரு தெய்வம், தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர் " ஆகிய 47 புத்தகங்களைப் பற்றிய பெருமைகளையும் , அவை வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றிய தனது கருத்தையும் பதிந்துள்ளார் ஆசிரியர்.

                                 பேச்சுத்தமிழில் எழுதப்பட்ட அபூர்வப் புத்தகம் , இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த சுய சரித்திரம் , 1736-ஆம் ஆண்டு முதல் 1761 ஜனவரி 12 வரை தொடர்ந்து எழுதப்பட்ட நாள்குறிப்பு - "ஆனந்தரங்கப்பிள்ளை நாள் குறிப்பு" என்பதனைக் குறிப்பிட்டு , தமிழ் அறிந்தவர்கள் படிக்க வேண்டிய தமிழ்ப்புத்தகம் , எனக்குறிப்பிடுகின்றார் நூலின் ஆசிரியர் சா. கந்தசாமி.

                             இரண்டாவது புத்தகமாக பெரியாரின் " பெரியாரின் அயல் நாட்டுப்பயணக்குறிப்புகள் " என்னும் புத்தகத்தைக்குறிப்பிட்டு , " பெரியாரின் முதல் வெளி நாட்டுப்பயணம் மலேசியா.1929 ..... புதிய நாட்டில் மாறுபட்ட சூழ் நிலைகளில் வாழ்கின்ற தமிழர்கள் சாதி, சமய வேறுபாடுகளை கை விட்டுவிட்டு, மூடப்ப்ழக்கங்களை ஒழித்து விட்டு ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று அறிவுறுத்தினார். பெரியார் மலேசிய பயணம் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த தமிழர்களிடையே ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் பொங்கலைத் த்மிழர் திரு நாளாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள் " பக்கம் 19-ல் ..

                              இலக்கியத்தையும் தாவரத்தையும் ஒப்பிட்டு பக்கம் 26-ல் சா.கந்தசாமி இவ்வாறு எழுதுகின்றார் ..." இலக்கியம் என்பது ஒற்றைப்பரிணாமம் கொண்டதில்லை. அதற்கு எல்லையோ ,காலமோ கிடையாது . ஒரு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் மொழிக்குள்ளே அடங்கியிருப்பது இல்லை. அசலான தன் அடையாளங்களோடு - பொதுத்தன்மை பெற்று எல்லோருக்கும் பொதுவாக இருப்பதாகும். அதாவது கொடி ,செடி, மரங்கள் என்னும் தாவரங்கள் எங்கு வளர்ந்தாலும் என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் அவை எல்லோருக்கும் பொதுவாக இருக்கின்றன " , இந்த ஒப்புமை இதுவரை நான் எதிலும் படித்ததில்லை, அழகான உவமையாக இந்த ஒப்புமை இருக்கின்றது எனக் கருதுகின்றேன்.

                               வெ. சாமி நாத சர்மா  எழுதிய "காரல் மார்க்ஸ் " என்னும் புத்தகத்தை குறிப்பிடும் திரு,சா.கந்தசாமி " காரல் மார்க்ஸ் என்னும் புத்தகத்தின் அடி நாதம் அவர் சொந்த வாழ்க்கைதான். அதனோடு பல இழைகள் வந்து சேர்ந்து கொள்கின்றன " (பக்கம் 29). எனச்சொல்கின்றார். செத்துப்போன தன் பிள்ளைக்கு சவப்பட்டி வாங்க காசு சேர்த்து வைக்கவில்லை, ஆனால் இலட்சக்கணக்கான பிள்ளைகள் செத்துப்போகாமல் இருப்பதற்கான தத்துவத்தை சொன்னவரல்லவா காரல் மார்கஸ்.

                             "நாடு விட்டு நாடு - என்று தன் குடும்பத்தின் சரித்திரத்தைச்சொல்லும் முத்தம்மாள் சுய சரித்திரம் ஒரு புலம் பெயர்ந்த குடும்பத்தின் வழியாகப் பல குடும்பங்களின் சொல்லப்படாத சரித்திரத்தைச்சொல்வதாகும்.: பக்கம் 51.எழுபதாவது வயதில் எழுதிய சுய சரித்திரம் என்பதனை சுட்டிக்காட்டுகின்றார்.
                             18 சிறுகதைகளை மட்டுமே எழுதியிருக்கும் ந.ரகுநாதன் ஏன் முக்கியமானவர் என்பதனை 'ரசிகன் கதைகள் ' விமர்சனத்தில் அழகுற விளக்கியுள்ளார். " இலக்கிய அங்கீகாரம் என்பது எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததில்லை. அசலான படைப்பு,தரமானது என்பதால் வருவதாகும் " என்று சொல்கின்றார் சா.கந்தசாமி பக்கம் 54-ல்.

                            இப்படி மேலே சொன்ன 47 புத்தகங்களைப் பற்றியும் தரமான விமர்சனங்களை, பாராட்டுக்களை வைக்கின்றார் சா. கந்தசாமி. மூவலூர் ஆ.ராமாமிர்தம் அம்மையார் தன்னுடைய 53-ஆம் வய்தில் எழுதிய " தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர் " என்னும் நாவலோடு இந்த புதையல் புத்தகம் முடிகின்றது. " பெண் கல்வி ,பெண்கள் முன்னேற்றம் என்று தமிழகத்தில் பாடுபட்ட பெரியார் தேவரடியார்கள் ஒழிப்பிலும் முதன்மையாக இருந்தார். அது பற்றிச்சமூகம் என்ன சொன்னாலும் , சாஸ்திரங்கள் புகழ்ந்து சொன்னாலும் தேவரடியார்கள் என்பது ஒழிக்கப்படவேண்டியது. அத்ற்கு எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும்; தேவரடியார்கள் குலத்தினர் பெண்களும் ஆண்களும் முன்னணியில் இருக்க வேண்டுமென கூறினார். சமூக வளர்ச்சி, சமத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடும் அக்கறையும் கொண்ட பலர் அவர் அறை கூவலை ஏற்றுத் தன்னளவில் போராட முன் வந்தார்கள். அவர்களில் ஒருவர் மூவலூர் ஆ.ராமாமிர்தம் அம்மாள் .....பெரியார் ஆரம்பித்த சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார். தமிழகம் முழுவதும் சென்று பொதுக்கூட்டங்களில் பேசினார். அவருக்கு எழுதுவதில் ஆர்வம் இருந்தது. ... புனைகதைகள் கருத்தை எடுத்துச்சொல்ல ஒரு சாதனம் என்று கருதி 1936-ஆம் ஆண்டில் தாஸிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்ற நாவலை எழுதி வெளியிட்டார். . .. நாவல் கதை சொல்கிற நாவல் இல்லை. பிரச்சார நாவல். தீமை என்றும் , சமூக அவலம் என்றும் கருதப்பட்ட ஒரு வழக்கத்தை அக்குலத்தில் பிறந்த ஒரு பெண் ஒழிக்க எழுதப்பட்டதாகும். " (பக்கம் 269-270.)

                                 ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் சொல்லிவிட்டு , அந்த அசல் புத்தகத்தின் ஒரு பகுதியை அப்படியே கட்டுரையின் கடைசி இணைப்பாக கொடுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். பெரும்பாலும் சுய வரலாற்றுப்புத்தகங்கள் என்றாலும் படித்தவர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் படித்திருக்கவேண்டிய, அல்லது படிக்க வேண்டிய புத்தகங்களை சிறப்பாகச்சுட்டிக்காட்டி இருக்கின்றார் சா. கந்தசாமி அவர்கள்.

3 comments:

Karuppiah Subbiah said...

தாலிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர் "என்ற பெயர் " தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர் "
என்று இருக்கவேண்டும்.

முனைவர். வா.நேரு said...
This comment has been removed by the author.
முனைவர். வா.நேரு said...

பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தியிருக்கிறேன். 1985-முதல் எனது தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமை பெற்றவர் நீங்கள் . நன்றி.