Wednesday, 5 June 2013

'சீரு சுமந்து அழிகிற சாதி சனமே'-சிறுகதை - எழுதியவர். வா. நேரு

சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளை எல்லாம் மிஞ்சுகின்ற அளவில் பிரமாண்டமாய் அந்தக் கட் அவுட் இருந்தது. கிளம்பும்போதே என் மகன் முத்துவிடம் ," டேய், உன்னுடைய  பிரண்டு வீட்டு விசேசத்துக்கு போகணும்னு சொன்னியே, தெருப்பெயரைக் கேட்டாயா? மண்டபம் பெயர் கேட்டாயா? " என்று  கேட்டபோது முத்து சிரித்துக்கொண்டே " அப்பா, அந்தப் பகுதிக்கு போய் விட்டாலே , வரிசையாக கட் அவுட் இருக்குமாம் , ஈஸியா கண்டுபிடித்து விடலாம் " என்று சொன்னான் , உண்மைதான், கட் அவுட்டுகள்தான் கண்டுபிடிக்கும் கருவிகள் போலிருக்கிறது.

                                   வரிசையாய் கட் அவுட்டுகள். அனைத்திலும் முத்துவின் நண்பன்  சின்னச்சாமி, அவனது அப்பா, அம்மா சிரித்துக்கொண்டும், கைகூப்பி வரவேற்றுக் கொண்டும், பல்வேறு வண்ணங்களில், சைசுகளில் கட்-அவுட்டுகள்.. ஒரு கட அவுட்டில்  சின்னச்சாமி அப்படியே பறந்து கொண்டு இருந்தான், ஒன்றில் குதித்த வண்ணம், ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய வண்ணம்,ஒன்றில் செல்போனில் பேசிய வண்ணம். அப்பப்பா ! ஆச்சரியமாக இருந்தது. முத்துவின் நண்பன் சின்னச்சாமி ஒன்றும் பெரிய பணக்கார வீட்டுப்பையன் அல்ல. அன்றாடங்காய்ச்சிக்கு கொஞ்சம் மேலே, அவ்வளவுதான். அவனது அப்பா ஓட்டுவது வாடகைக் கார்தான். அம்மா சத்துணவில் வேலை பார்ப்பதாகச்சொன்னான். சின்னச்சாமியின் அப்பா வாடகைக் கார் ஓட்டுவதில் நல்ல பெயர் எடுத்திருந்தார். எல்லாரோடும் நல்ல பழக்கம் வைத்திருப்பார் போலும்,. மண்டபத்திற்கு முன் ஏகப்பட்ட வண்டிகள் நின்றிருந்தன. வண்டியைப் பார்த்து நிப்பாட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது எனக்கு. மண்டபத்திற்குள் நுழைந்த போது மண்டபம் நிறைய ஆட்கள் இருந்தார்கள்.

                                ம்ண்டபத்திற்குள் ஏற்கனவே எனக்கு அறிமுகம் ஆன  ஆட்கள் நிறைய இருந்தார்கள். மார்க்கெட்டில் தக்காளி விற்பவரின் மனைவி, கீரை விற்பவர், கொய்யாப் பழக்கடைக்கார அக்கா, சோயா பீன்ஸ் கடைக்காரி என்று பலரும் அறிமுகம் ஆனவர்கள், மார்க்கெட்டில் 5 ரூபாய் , பத்து ரூபாய் என்று காய்கறி விற்பவர்கள், சில் நேரம் யோசித்துப்பார்ப்பதுண்டு. ஒரு கிலோ தக்காளிக்கு 2 ரூபாய் லாபம் கிடைத்தால்கூட 100  கிலோ விற்றால்தான் 200 ரூபா கிடைக்கும்,. ஆனால் அரசாங்க சம்பளத்தில் ஒரு நாளைக்கு 1000 ரூயாய் என்பது எல்லாம் மிகக்குறைந்த சம்பளம் என்று. கூட வேலை பார்க்கும் ஒருவர் ஒரு நாள் கோபித்துக்கொண்டார், எனக்குத் தெரிந்து " அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் அதிகம், குறைத்துக் கொடுக்க வேண்டும், சாதாரண தொழிலாளிக்கும் அரசாங்க ஊழியருக்கும் நிறையச் சம்பள வித்தியாசம் இருக்கக்கூடாது என்று சொன்ன தலைவர் ஒருவர்தான், அவர் பெரியார்தான் " என்று சொன்ன போது கோபித்துக்கொண்டு போன ஆள் 10,20 நாளாக என்னோடு முகம் கொடுத்தே பேசவில்லை. உழைக்கும் கூட்டமாய் நிறையப்பேர் அந்த விசேச வீட்டில் இருந்தார்கள்.

                                மண்டபம் முழுக்க நன்றாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தது. மேடையில் வண்ண வண்ண விளக்குகள் மின்னின. இறந்துபோன ஜாதித் தலைவர்கள் போல் வேடமணிந்த இருவர் மேடையில் தோன்றினர். விசில்கள் பறந்தன, வேடமணிந்த  தலைவர்கள் அங்கும் இங்கும் நடந்து  ஆசிர்வதித்தனர். தலைவரைப் போற்றும் சினிமாப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. வேடமணிந்த தலைவர்களைச்சுற்றி 4, 5 பேர் நடனம் ஆடினார்கள். இடை இடையே தலைவர் வேடமணிந்தவர்கள் கூட்டத்தைப் பார்த்து  கும்பிட்டார்கள். ஜாதி உணர்வு எப்படி தலைக்கேறுகின்றது இளைஞ்ர்களுக்கு என்பது எளிதாகப் புரிந்தது எனக்கு.

                                  வரவேற்கும் இடத்தில் நாலு அண்டாக்கள் இருந்தன. மஞ்சள் துணியை கட்டி, நடுவில் பெரிய ஓட்டை போட்டு அண்டாவை மூடி வைத்திருந்தார்கள். வரவேற்ற முத்துவின் நண்பன் சின்னச்சாமி ' அங்கிள் , சாப்பிடப் போங்க" என்றான். கொஞ்ச நேரம் ஆகட்டுமே என்றேன், "இல்லை , வர, வர ஆட்கள் போய்க்கொண்டேதான் இருக்கின்றார்கள், நீங்கள் தான் பார்மாலிட்டி எல்லாம் பார்க்காதே ஆள் ஆச்சே, போங்க " என்றான். முத்துவோட படித்த பல நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த உற்சாகத்தில் முத்து உட்கார்ந்து கொள்ள, நான் மட்டும் சாப்பிடப்போனேன்.

                                  சாப்பிடும் இடத்திலும் கூட்டம்தான். சாப்பிடும் இடத்தில் ," என்னமா, இவன் கெடாயைக் கின்னு வெட்டாம, வெறும் சாம்பார் சோத்த போட்டுக்கிட்டு இருக்கான். " என்றாள் ஒருத்தி. "எல்லாம் மொய் வாங்குறத்துக்கு நடத்துகிற விசேசம்தானே, இவன் ஏற்கன்வே வீட்டைக் கட்டி, 3 மாசத்துக்கு முன்னாடியே குடி போயிட்டான், இப்போத்தான் விசேசம்ன்னு வச்சு, சாம்பார் சோத்தைப் போட்டுக்கிட்டு இருக்கான் : " என்றாள் ஒருத்தி. "ஏய், இப்போ எல்லாம் எல்லா வீட்டிலும் மினரல் வாட்டர் - பாட்டில் தண்ணீர்தான் வைக்கிறாங்க. இங்கே கார்ப்பரேசன் தண்ணீரை மோந்து மோந்து ஊத்துராங்கே " என்றா:ள் இன்னொருத்தி. கவனித்துக்கொண்டே சாப்பிட்டிக் கொண்டிருந்தேன். சாப்பாடு ஒன்றும் விளங்கவில்லை, ஏதோ பெயருக்கு சாப்பிட்டு விட்டு கீழே வந்தேன்.

                            இப்போது மேடையில் தலைவர்களைப் போல வேடமணிந்த்வர்களைக் காணோம். குத்தாட்டம் நடந்து கொண்டிருந்தது. கிராமத்தில் சிறு வயதில் பார்த்த ரிக்கார்டு டான்ஸ்.  வயசுக்கு மீறிய அத்து மீறல்கள் , ஆபாச சைகைகள், ஆபாச நடனம் என அரசாங்கம் ரிக்கார்டு டான்ஸ்சுகளைத் தடை செய்தது ஞாபகத்தில் இருந்தது. ஆனால் அரசாங்கம் தடை செய்த ரிக்கார்டு டான்ஸ் , மண்டபத்திற்குள் விசேசம் என்னும் பெயரில் நடந்து கொண்டிருந்தது. முக்கல், முணங்கல் பாடலகள். ஒரு பாடலுக்கு ஆடிய ஒருவன், கூட ஆடிய பெண்ணைத் தூக்கி அப்படியே நெஞ்சோடு சேர்த்து கொஞ்ச நேரம் வைத்திருந்தான். கைதட்டலும், விசிலும் அரங்கத்தை வேறு எங்கோ கொண்டு போய்க்கொண்டிருந்தது. நடிகர் விஜயகாந்த் போலவே தோற்றம்ணிந்த ஒருவர் 'அக்கா மகளே ' எனப் பாட்டு பாடினார் ஒரு பெண்ணோடு. பாக்யராஜ் போல, சூரியா போல, விஜய் போல எனப் பல நடிகர்களின் வேடங்களில் டூயட் பாடல்களைப் பெண்களோடு பாடினார்கள். ஆடிய பெண்களும் சளைத்தவர்களாக இல்லை, அவிழ்த்துப்போட்டு ஆடாததுதான் பாக்கி.. எரிச்சலாக இருந்தது எனக்கு. இந்தக் கலாச்சாரக் காவலர்கள் எல்லாம் எங்கே போனார்கள் ? என்று கூட்டத்தில் தேட ஆரம்பித்தேன். ஊகும், எல்லோரும் ரிக்கார்டு டான்சில் ஒன்றிப்போயிருந்தார்கள்.

                                                                 தொடர்ந்து வாசலில் தொடர்ச்சியாக வெடிச்சத்தம் கேட்டது. உசிலம்பட்டியில் வேட்டுப்போட தடை போட்டதும், சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் நேற்றும் 10 பேர் வெடித்துச்சிதறி செத்ததும் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. " காலையில் தீப்பெட்டி / ஒட்டப்போன குழ்ந்தை / மாலையில் / சவப்பெட்டியில் வந்தது " என்னும் கவிஞர் ஜீவாவின் கவிதையும் மனதிற்குள் ஓடியது." டேய், டான்சை , பாட்டை நிப்பாட்டுங்கப்பா , தாய் மாமன் சீர் வருது "என்று சொல்லிக்கொண்டே ஒருவர் உள்ளே ஓடி வந்தார். ஆடல் பாடல் அரைகுறையாய் நிறுத்தப்பட்டாலும் வெளியில் வேட்டுச்சத்தம் தொடர்ச்சியாக 20 நிமிடத்திற்கு மேலாக ஒலித்தது. வெடி வெடிப்பது, அதுவும் எவ்வளவு நேரம் வெடிக்கிறது என்பது ஒரு ஸ்டேட்டஸ் அடையாளம் என்றான் பக்கத்தில் ஒருத்தன். போன வாரம் இதே மண்டபத்திலே விசேசமப்பா, முக்கால் மணி நேரம் தொடர்ச்சியா வெடிகளை வெடிக்கவச்சு, அவுங்க தாய்மாமங்காரங்கே அசத்திட்டாங்கப்பா என்றான் இன்னொருத்தன்.

                                       வெடியை வெடித்து விட்டு வரிசையாக உள்ளே வந்தார்கள். அணடாக்கள்,பானைகள், த்ட்டுகளில் வைத்து கொண்டு வரப்பட்ட சீர் பொருட்கள் எல்லாம் மேடையில் வைத்தார்கள் . எல்லோரும் பார்க்கும்படியாக சீர் பொருட்கள் ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டப்பட்டது. மேடையில் முத்துவின் நண்பன், அவனது அப்பா, அம்மா நின்றார்கள் கைகளைக்கூப்பியவாறு. ஒரு மிகப்பெரிய ரோசா மாலையை , இரண்டு ,மூன்று மலைப்பாம்புகளை இணைத்தால் வரக்கூடிய சைசில் மேடைக்கு கொண்டு வந்தார்கள். சின்னச்சாமியின் தாய்மாமா, சின்னச்சாமி- அவனது அப்பா, அம்மா ஆகியோருக்கு அந்த ரோசா மாலையை அணிவித்தார். போட்டாக்கள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டன். இந்தக் கூத்து எல்லாம் முடிந்தவுடன், நிஜக்கூத்து- ரிக்கார்டு டான்ஸ் மறுபடியும் நடக்க ஆரம்பித்தது. அஜீத் பாட்டைப் பாடு என்று சில இளைஞர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.....மொய்ப் பானைகள் நிரம்பிக்கொண்டிருந்தன.  அதற்கு மேலும் உட்காரமுடியவில்லை, முத்துவும் நானும் வீட்டை நோக்கி வந்து விட்டோம்.

                                                                                      மறு நாள் காலை மார்க்கெட்டிற்கு போனபோது, " என்னன்னே , நேற்று விசேச வீட்டிற்கு வந்திருந்தீங்க, தெரிஞ்சவங்களா, சொந்தக்காரங்களா " என்றாள் தக்காளி கடைக்கார அக்கா. தெரிஞ்சவங்கதா, என்று சொல்லி விட்டு, "நாலு அண்டா நிறைய மொய் விழுந்துகிட்டு இருந்துச்சே, எவ்வளவு வந்ததாம் , மொய் " என்றேன்.  "நாற்பத்தைந்து இலட்சம் வந்துச்சாம்" என்றாள் , எனக்கு மயக்கம் வராத குறைதான், மொய்ப் பணம் 45 இலட்சம் எப்படி ? என்றேன்." நானே ஐம்பதாயிரம் செஞ்சேன், நம்ம தெருக்கார 20 பேர் ஐம்பாதியிரம், ஐம்பாதியிரம் செஞ்சாங்க, அதுவே பத்து இலட்சம் ஆச்சு  , அப்புறம் மத்தவங்க, தாய்மாமங்கே, பழக்கத்துக்காரங்கன்னு மொத்தம் 45 இலட்சம் மொய்" என்றாள்

                                                    எனக்குப் பக்கென்றது. தக்காளி விக்கிற ஆள் செய்யும் மொய் ஐம்பதானயிரமா? எப்படி இது ? என்று யோசித்துக்கொண்டே அடுத்த கீரைக்  கடைக்காரரிடம் வந்தேன். இங்கும் மொய்ப்பேச்சு தொடர்ந்தது. எல்லாம் இப்போ கோடிக்கணக்கிலேதான் மொய், 1/2 கோடி,1 கோடி, 2 கோடி என்றார் என்னதான் முத்துவோட நண்பன் சின்னச்சாமி வீட்டில் ஆடம்பரமாக செலவழித்திருந்தாலும் , செலவு உறுதியாக  3, 4 இலட்சத்தைத் தாணடாது. மீதி 40, 41 இலட்சம் லாபம்தானே, இதை வைத்து நன்றாகப் பிழைத்துக்கொள்ளலாமே, தொழில் செய்யலாமே என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.

                                                    மார்க்கெட்டை சுற்றி வந்தபோது எப்போதும் தேங்காய் விற்ப்வரைக் காணாம்.போன வாரம் வந்த போது இருந்தாரே, இப்போ காணாமே என்று பக்கத்து கடைக்காரரிடம் விசாரித்தேன். " ஏண்ணே, அந்தக் கொடுமையைக் கேக்குறீங்கே, தேங்காய் கடைக்காரர், அவரு பொண்டாட்டி, இரண்டு பச்சை பிள்ளைங்க எல்லாரும் மொத்தமா விசத்தைக் குடிச்சு செத்துப்போனாங்க " என்றார். தேங்காய்க்கடைக்காரர் எப்போதும் சிரித்த முகமாய் இருப்பார். நல்ல தேங்காய்களை எப்போதும் பொறுக்கித் தருவார். என்னவாயிற்று , அவருக்கு , என்று ஆச்சரியத்தோடு அவரிடம்  விசாரிக்க ஆரம்பித்தான்.

                                                   போன வருசம் , பிள்ளைங்களுக்கு மொட்டை போட்டு , காது குத்தி விசேசம் வச்சாரு, மொய் மட்டும் 30 இலட்சம் வந்துச்சு. மொய்யி எனக்கு 30 இலட்சம் வந்திருக்கு, வந்திருக்குன்னு சந்தோசமா சொல்லிகிட்டு அலைஞ்சாரு. மொய்யின்னா எண்ணன்ணே, மிந்திதான் அது வட்டியில்லா கடன், இப்போ அது வட்டியோடு இருக்கிற கடன். வந்த மொய்யைப்பூராம் அப்படியே ஒருத்தனை நம்பி ரியல் எஸ்டேல போட்டாரு, அவன் ஏமாத்திட்டான், ரியல் எஸ்டேட் விசயமா மனுசன் அங்கும் இங்குமா அலைஞ்சுக்கிட்டே இருந்தார். கையில பணம் இல்லே, போன மாசம் நடந்த நாலஞ்சு விசேசத்திற்கு இவரு போகல." கொஞ்சம் இடைவெளி விட்ட பக்கத்து கடைக்காரர் தொடர்ந்து ஆரம்பித்தார். " இப்போ மொய்யி வட்டியோடு இருக்கிற கடன்னு ஏன் சொன்னேன்னா, மொய்யி 50000 செஞ்சிருந்தான்னா  , நாம 60000 அல்லது 70000 செய்யனும். அப்பத்தான் மரியாதை. அதே அளவிலே செஞ்சாவே முறைப்பாங்கே, இந்த மனுசனால 50000 செஞ்சவனுக்கு 10000 மே செய்ய முடியாத நிலைமை, நாலைஞ்சு விசேசத்துக்கு இவரு போகலை, போன வாரம் விசேசம் வச்சிருந்த வீட்டுக்காரி , வீட்டில வந்து தாறுமாறா வார்த்தையாலே கிழிச்சிட்டா, " ஏண்டா, நோலி மவனே, செஞ்ச மொய்க்கு இரண்டு மடங்கா, மூணூ மடங்கா ஜனங்க வந்து செய்யுதுக, நீ நான் செஞ்ச மொய் 50000 யாவதுசெய்ய வேணாமா? ஏதும் சடவு சத்தம் இருந்தாக்கூட , செஞ்ச மொய்யை மட்டுமாவது கொடுத்து விடுறாங்க! நீ தே....மகனே, செஞ்ச மொய்யை செய்யாம ஓழிஞ்சிகிட்டா தெரியுற " என்று அவள் கொடுத்த கொடுப்பில் மனுசன் உக்கி, வெக்கி ரொம்ப நேரமா உக்காந்துகிட்டே இருந்திருக்கிறாரு. பிறகு போய் மருந்து வாங்கிட்டு வந்து  மொத்தமா குடிச்சு  செத்துப்போயிருச்சுக குடும்பத்தோடு என்றார். மனம் கனத்தது.

                                                             "வைகாசி பிறந்திருச்சு, இனி வரிசையா விசேசம்தான். மொய்யை வாங்கி அதை உருப்படியாக்கி பிழைக்கிறவன், 100க்கு 5 அல்லது 10 பேர்தான். மீதி 90 , 95 பேர் கதை இப்படித்தான். அதுவும் கொஞ்சம் குடி, பொம்பளை, சீட்டு பழக்கம் இருக்கிறவனல்லாம் சொல்ல வேண்டாம். மொய்யை வாங்கிட்டு பின்னர் மொத்தமா அசிங்க்ப்பட்டு சாக வேண்டியதுதான். இது வந்து , வம்படியா கொடுக்கிற கடன் தம்பி, எவன் மொய்யை வேணாம்ன்னு சொல்றான், ஒருத்தர் ,இரண்டு பேர்தான் தைரியமா வேணாம் என்று சொல்கின்றான். மத்தவனல்லாம் கந்து வட்டிக்கு கடன் வாங்கிட்டு மாட்றவன் மாதிரி மாட்டிக்கிட்டு  முழிக்கிறான் தம்பி என்றார்" மேலும்  அவர்.

                                                  மார்க்கெட்டை விட்டு வெளியே வந்தபோது  பக்கத்து வீட்டில் விசேசம் போலிருக்கிறது. ;'சீரு சுமந்த சாதி சன்மே ' எனப்பாட்டு பாடிக்கொண்டிருந்தது ஒலிபெருக்கியில். இந்தப் பாட்டை எழுதியவரைக் கூப்பிட்டு 'சீரு சுமந்து அழிகிற சாதி சனமே ' என்று திருத்தி பாட்டை எழுதுய்யா என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.

வெளியிட்ட எழுத்து.காம் இணையதளத்திற்கு நன்றி !
                                                                         

4 comments:

முனைவர். வா.நேரு said...

Nehru periyasamy.saptur :அருமை... எனக்கும் அனுபவமுண்டு, கல்லூரியில் என்னுடன் படித்த பல நண்பர்கள், குறிப்பிட்ட அந்த ஜாதியினரே, எனக்கு முதல்முறையாக பத்திரிக்கை கொடுக்கும் போதே அதிர்ச்சி அடைந்தேன், என்ன விசேஷமென்றை தெரியாது, ஆனாலும் எங்கள் வீட்டு விசேஷம் என்று தான் தலைப்பை இருக்கும்.. பத்திரிக்கையின் பின்பிறம் குறிப்பு: குறிப்பிட்ட இந்த வருடத்திலிருந்து மொய் நோட்டை பார்க்கவும் என கண்டிப்பாக இருக்கும்.. விசேஷ வீட்டின் ஒலிப்பெருக்கியில் இன்னும் இவர் வீட்டு மொய் பணம் வரவில்லை என ஒலித்துக்கொண்டிருக்கும், என்னுடன் படித்த செக்கானூரணியை சேரந்த நண்பர்கள், 250ரூபாய் சம்பளத்திற்கு மொய் எழுதுவதற்காகவே கல்லூரியை கட்அடித்து செல்வார்கள்...... இத்தனை வேடிக்கைக்கும் பின்னே இப்படியோரு துயர சம்பவம் இருக்குமா..! முன்னொரு காலத்தில் வசதியில்லாத பங்காளி வீட்டின் கல்யாணத்திற்கு, வரிபோட்டு கல்யாணம் நடத்தியதாக என் தந்தை சொல்லக்கேட்டுருக்கின்றேன்... இது நாகரிகமனிதர்கள் வாழும் காலம் என படித்த மேதைகளும்,விஞ்ஞானிகளும் சொல்கிறார்கள்....என்ன நாகரிகமோ.... நல்லதொரு செய்தி.. படித்ததில் பிடித்த வரிகள்: சீரு சுமந்த சாதி சனமே எனப்பாட்டு ஒலிப்பெருக்கியில் பாடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை எழுதியவரைக்கூப்பிட்டு "சீரு சுமந்து அழிகிற சாதிசனமேன்னு எழுதிய்யா என்று சொல்ல வேண்டுமபோல் இருந்தது..நன்றி.- Facebook comment

முனைவர். வா.நேரு said...

மங்காத்தா : 06-Jun-2013 11:44 am எழுத்து.காம் இணையதளத்தில் வெளியிட்ட கருத்து

மிகவும் ஆழமான, நுணுக்கமான பார்வை. உருப்பெருக்கி வைத்து கண்டதுபோல அழகாக வார்த்தைகளில் படம் போட்டு காட்டியிருப்பது தங்களின் பொறுமைக்கும் சமூக அக்கறைக்கும் ஒரு நல்ல சான்று.

Karuppiah Subbiah said...

இச்சிறுகதையின் மூலம் நேரு, மொய் செய்யும் வழக்கத்தின் அவலங்களை சரியான பார்வையில் பதிவு செய்துள்ளார் என்று நினைக்கும் அதே தருணத்தில் இந்த வழக்கத்தின் மூலம் பல நடுத்தர மக்களின் பொருளாதார நிலை வளர்ச்சியடைந்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களையும் நினைவு கூற வேண்டியுள்ளது. எப்பொழுது மிக அதிகப்படியான தொகையை மொய்யாகவோ அல்லது பரிசாகவோ பெற்றுக் கொள்கிறோமோ அப்போதே அது நமக்கு ஒரு சுமையாக அமைந்து விடுகிறது . ஒரு சில சாதி அமைப்பை சேர்ந்தவர்கள் இத்தகைய மொய் பழக்கத்தினை ஏற்படுத்தி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களையெல்லாம் நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதுவும் சிலர் வட்டிக்கு வாங்கித் தான் மொய் செய்வார்கள் என்பதும் உண்மை. அவ்வாறு பெற்றுக் கொண்டவர்கள் தருணம் வாய்க்கும் போது திரும்பச் செய்வது தான் நியாயம். தவறும் பட்சத்தில் அவமானம், தற்கொலை போன்ற சம்பவங்கள் நிகழ்வதும் சகசமாகி விட்டது.
ஒருவரின் திருமணம், புதுமனை புகுதல் மற்றும் பூப்புனித நீராட்டு போன்ற இல்ல விழாக்களுக்கு வருபவர்களுக்கு விருந்தளித்து மகிழும் வழக்கம் மாறி, அது ஒரு வர்த்தக பறிமாற்றமாக பார்க்கப் படுவது வேதனை அளிக்கிறது. விதி விலக்காக , சில விழாக்களில் சிலர் பரிசுப் பொருள்கள் ஏற்றுக் கொள்ளாமல் வாழ்த்தை மட்டுமே பெறுவது உண்டு. சிலர் நூல்கள் மட்டுமே பரிசுப் பொருளாகப் பெறுவது உண்டு. இத்தகைய யதார்த்தமான பழக்க வழக்கங்கள் ஏற்பட வேண்டும். பெரும் தொகையினை பழக்க வழக்கங்கள் ஒழிக்கப்படவேண்டும் அப்போது தான் ஆரோக்கியமான சமுதாயம் மலரும். பொதுவாக மேற்கூறிய அனைத்து விழாவிற்கும் பல ஆண்டுகளாக நான் "நூல்கள்" வழங்குவதையே பழக்கமாக கொண்டுள்ளேன். அதில் எனக்கு மிகப்பெரிய திருப்தி. நூல்கள் வாங்க இயலாத தருணங்களில் ஒரு சிறு தொகையினை பரிசாக அளித்ததுண்டு. எதையும் எதிர்பார்க்கும் மனதை அறவே ஒழித்து விட்டேன்.

முனைவர். வா.நேரு said...

"அனைத்து விழாவிற்கும் பல ஆண்டுகளாக நான் "நூல்கள்" வழங்குவதையே பழக்கமாக கொண்டுள்ளேன்."அனைவரும் பின்பற்றலாம். நன்றி !