Thursday 26 September 2013

நிக்ழ்வும் நினைப்பும் (2)

நிக்ழ்வும் நினைப்பும் (2)                             
நேற்று(25.9.13) காலை 5.30 மணிக்கு நடைப்பயிற்சி நாங்கள் நடக்கும்   பூங்காவில். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அதீத ஒலியில் வடமொழி பக்திப்  பாடலை  ஒலிக்க விட்டுக்கொண்டிருந்தார். என்னைப் போன்ற நாத்திகர்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் காலையில் நடைப்பயிற்சி எடுக்கும் நேரம்,இடம். அவருக்கு பக்திப்பாடல்  பிடிக்கிறது என்றால் , வீட்டு அளவில் வைத்துக் கேட்கலாம். மைக் செட் போட்டுப்பாடுவது போல அவ்வளவு சத்தம். காலையிலேயே எரிச்சல் வரவைப்பதாக இருந்தது.பக்திப் பாடல் என்றாலே அடுத்தவர்களைப் பற்றிக் கவலை இல்லை. ஏய்.பக்திமானா இருங்கப்பா, அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் என்று கத்தவேண்டும் போல் இருந்தது. மதுரையில் கோயில் விழா என்ற பெயரில் மைக் போட்டு , பெரிய பெரிய குழாயை வைத்து ,பெரிய அளவில் ,சத்தத்தில் ஒலி பரப்புகின்றார்கள். திருவிழாக்கள் இல்லாத மாதம் இல்லை. பிள்ளைகள் படிக்கின்றார்களே,ப்ரீட்சை நேரமே, ஒருவருக்கும் கவலை இல்லை. பக்தி வந்தால் புத்தி போய்விடும என்றார் பெரியார். புத்தி மட்டுமல்ல, பொது ஒழுக்கம், பொது விதிகள் எல்லாம் போய் விடுகின்றது. எவ்வளவு பெரிய களவாணிப்பயலும், அய்யப்பனுக்கு மாலை போட்டா சாமி ஆகி விடுகிறான் அல்லவா..பக்தி என்ற பெயரால் எவரும் எதுவும் செய்யலாம். எவனும் கேள்வி கேட்கக்கூடாது . நல்ல நாடடா,இந்த நாடு.   புரட்சிக் கவிஞரின் தமிழியக்கம் - சிறிய அளவிலான புத்தகம்(பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர்- புதுவை மு.ந.நடராசன் அவர்கள் அன்பளிப்பாக அளித்தது ) கையில் இருந்தது. அதில்

"சொற்கோவின் நற்போற்றித் திருஅகவல் செந்தமிழில் இருக்கும் போது
கற்கோயில் உட்புறத்தில் கால்வைத்த தெவ்வாறு சகத்ர நாமம்!
தெற்கோதும் தேவாரம் திருவாய்நன் மொழியான தேனி ருக்கச்
செக்காடும் இரைச்சலென வேதபா ராயணமேன் திருக்கோ யில்பால்?"  என்றும்

காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும் பொறாத உள்ளம்,
மேற்படுத்தும் எவற்றினுக்கும் மேற்பட்ட தன்மொழியைத் தமிழைத் தீயோர்
போற்றுவதற் குரியதொரு பொதுவினின்று நீக்கிவைத்தால் பொறுப்ப துண்டோ?
வேற்றுவரின் வடமொழியை வேரறுப்பீர் கோயிலிலே மேவி டாமே. " என்றும் இருந்தது. வேற்றுவரின் வடமொழி பக்திப்பாடல் கோயிலுக்குள் மட்டும் இருந்து அல்ல,   தமிழர்களின் வீட்டுக்குள்ளிருந்தும் அதிகாலையில் அதீத சத்தத்தில் ஒலித்து உயிரை எடுக்கிறது.

4 comments:

anandam said...

காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும் பொறாத உள்ளம்,
மேற்படுத்தும் எவற்றினுக்கும் மேற்பட்ட தன்மொழியைத் தமிழைத் தீயோர்
போற்றுவதற் குரியதொரு பொதுவினின்று நீக்கிவைத்தால் பொறுப்ப துண்டோ?// தமிழை நீக்கி வைத்ததுமல்லாமல்,பள்ளி சென்று படிக்காதவன் கூட தனக்குப் புரியவில்லை என்றாலும் இப்படி வடமொழியிலுள்ள பாடல்களை வீட்டிலும், வியாபாரக் கடைகளிலும் காலையிலும் மாலையிலும் ஒலிக்கவிடுகிறார்கள்.பேராசை, சோம்பேறித்தனம்,ஏமாற்றும் தன்மை இவை இல்லாவிட்டால் பிராத்தனைக்கு இடமே இல்லை என்றார் தந்தை பெரியார். தமிழர்களை இவை மூன்றும் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறது. விடிகிற காலம் வரையில் விடாமல் ஊதுவோம் நமது வேதனை சங்கை....

தமிழ் ஓவியா said...

அய்யா, இந்த கொடுமைகள் ஒழிந்த தமிழகத்தை காண்பது எப்போது?

முனைவர். வா.நேரு said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

முனைவர். வா.நேரு said...

உறுதியாய் ஒரு நாள் விடியும். இருட்டைக் கண்டு மிரளாமல், மெழுகுவர்த்திகளையாவது ஏற்றுவோம் , விடியும் வரை