Friday 8 November 2013

நிகழ்வும் நினைப்பும் (9) : தொழு நோய்த் தீர்வும் எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி அவர்களும்



                                                             நான் அண்மையில் படித்த புத்தகமான 'முள்' என்னும் புத்தகத்தை எனக்கு தலைமை ஆசிரியராக இருந்தவரும், எனது வாழ்வின் வழிகாட்டிகளில் ஒருவருமாகிய திரு வி.வீரிசெட்டி சார் அவர்களிடம் கொடுத்தேன். அவருக்கு இப்போது வய்து 75-ந்திற்கு மேல். அவரிடம் படித்த மாணவன் நான். (பத்தாம் வகுப்பில் இன்னொரு பையனோடு சண்டை போட்டதற்காக அவரிடம் நன்றாகவே அடி வாங்கியிருக்கின்றேன்).நான் +2 வேறு ஊரில் படித்து, கல்லூரி முடித்து, வேலைக்கு வந்து, திண்டுக்கல் , பெரியகுளம், உசிலம்பட்டி, திருமங்கலம் எனப்  பல ஊர்களில் வேலை பார்த்து, மதுரையில் வந்து  வேலை பார்த்த நேரத்தில்  அவரைச் சந்திக்க வேண்டும் என்று சந்தித்தேன். அன்றிலிருந்து ஏறத்தாழ 15 ,20 ஆண்டுகளாக, பல விசயங்களில் எனக்கு அறிவுரைகள் சொல்லக்கூடியவராக இருக்கக்கூடிய எனது  ஆசான் அவர்.இப்போதும் ஒரு சைக்கிளில்தான் வருவார், போவார். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக(C.E.O ), மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளராக (Inspector of Matriculation Schools- South Tamilnadu )  இருந்தவர். நேர்மையின் அடையாளமாக தனது பணிக்காலத்தில் இருந்தவர்.  இன்றைக்கும் இருப்பவர். எளிமை என்றால் அப்படி ஒரு எளிமை.   இந்த வயதிலும் நல்ல புத்தகங்களைத் தேடித் தேடிப் படிப்பவர். படிப்பவர் மட்டுமல்ல, அவர் கையிலிருக்கும் ஒரு சின்ன நோட்டில் , புத்தகத்தின் தலைப்பு, ஆசிரியர் , பதிப்பகம், முகவரி, விலை என அனைத்தையும் குறித்து வைத்து தேடித் தேடி வாங்குபவர். தான் படித்த மிக நல்ல புத்தகங்களை என்னிடம் கொடுத்துப்படிக்கச்சொல்லுவார். அதனைப்போலவே நான் படித்த, என்னைப்பாதித்த நல்ல புத்தகங்களை அவரிடம் கொடுப்பேன். படித்து தனது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுவார். இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வாழ்வில்.

                                                 'முள்' புத்தகத்தைப் படித்து விட்டு, கல்வி, கல்வி, கல்விதான் நம்மை உயர்த்தும் என்றார். அதனைத் தந்தை பெரியாரும் அவரது இயக்கமும் நன்றாக மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்கள் என்றார். முத்து மீனாள் வாழ்வின் மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருந்த போது சில செய்திகளைச்சொன்னார். " எப்படி போனாலும் எங்கே போனாலும், கிறித்துவர்களின் பங்களிப்பை மருத்துவத்திலும், கல்வியிலும் நாம் ம்றுக்க முடியாது, மறக்கக்கூடாது. முத்து மீனாளுக்கு ஆதரவு கொடுத்த கரங்கள் கிறித்துவ இல்லங்கள்தானே. அங்குதானே அவருக்கு மருத்துவமும் , கல்வியும் கிடைத்திருக்கிறது. இந்து மதத்திலே தொடாதேன்னான், பார்க்காதேன்னான், ஆனால் கிறித்துவன் தானே நம்மோடு கை குலிக்கினான், சாதி வேற்றுமை இல்லாமல் எல்லோரும் படிக்க வாய்ப்புக்கொடுத்தான். நம்ம நாட்டில் இத்தனை மடாதிபதிகள் இருந்தார்களே, இருக்கின்றார்களே, எத்தனை பேர் தொழு நோய் மறு வாழ்வு இல்லம் கட்டி வைத்திருந்தார்கள்? வைத்திருக்கின்றார்கள் ? " என்றார் . மிக நியாயமான கேள்வியாக இருந்தது.

                  " நேரு, 1960- 65 களில் தொழு நோயின் பாதிப்பு மிகுந்த அளவில் இருந்தது. அரசு ஒரு போர்க்கால நடவடிக்கை போல , தொழு நோய் ஒழிப்பதற்கான திட்டங்களத் தீட்டி செயல்படுத்தினார்கள். எப்படி செய்ல்படுத்துவது, எங்கிருந்து ஆரம்பித்து இந்த நோயை ஒழிப்பது எனக்குழப்பம் இருந்தது. அப்போது நான் ஆசிரியராக இருந்தேன். மதுரை  அரசு மருத்துவமனைக்குச்சென்று, தலைமை மருத்துவரைச்சந்திந்தேன். தொழு நோய் ஒழிப்பு நடவடிக்கையை பள்ளிக்கூடங்களில் இருந்து ஆரம்பியுங்கள். என்று சொன்னேன். தொழு நோய்ப்படை அறிகுறி யார் யாருக்கு இருக்கிறது என்பதனை பள்ளிக்கூடங்களுக்கு வந்து சோதனை செய்யுங்கள். இருப்பவர்களைக்கண்டு அவர்களுக்கு மருந்து கொடுங்கள். அவர்கள் குணமாவார்கள். அப்படியே பெரியவர்களுக்கும் மருத்துவம் செய்யுங்கள் என்றேன். அந்தத் தலைமை மருத்துவர் அப்படியே எழுந்து வந்து கட்டித் தழுவிக்கொண்டார். அருமையான யோசனை சொன்னீர்கள் என்று பாராட்டினார் என்று சொன்னார். "  இன்றைக்கு பெருமளவில் தொழு நோய் மறைந்திருக்கிறது, அதற்கு அரசுகளின் நடவடிக்கையை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றார்.கடவுள் கொடுத்த நோய் என்று சொன்னான். மேலை நாடுகளில் கூட தொழு நோய் வந்து விட்டால் தனியாக ஒரு தீவில் கொண்டு போய் விட்டிருக்கின்றார்கள் . தொழு நோய் அவ்வளவு கடுமையாக பார்க்கப்பட்டது, பாதிக்கப்பட்டவர்கள் அவ்வளவு கொடுமையாக நடத்தப்பட்டார்கள்  என்று பழைய வரலாறுகளை எல்லாம் சொன்னார். .

                           எங்கள் ஊரில் (சாப்டூரில்) ஒரு 20,25  ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு இயக்கம் போல,விக்டனரி  டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் , மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் இணைந்து வீடு ,வீடாகச்சென்று யாருக்கும் தொழு நோய் பத்து இருக்கிறதா என்று கணெக்கெடுத்தோம். இருந்த ஒரு சிலருக்கு மருந்துகள் கொடுக்க ஏற்பாடு செய்தோம். ஒரு பொதுவான காரியம் என்றவுடன், தன்னலம் இல்லாத செயல் என்றவுடன் எல்லோரும் அவ்வளவு ஒப்புதல் கொடுத்தார்கள், அந்த நோயைப் பெருமளவுக்கு எங்கள் ஊரில் ஒழிக்க முடிந்தது என்று எனது முன்னாள் தலைமை ஆசிரியரிடம் சொன்னேன்.

                        பொதுவான காரியங்களுக்கு , நல்ல காரியங்களுக்கு உதவி செய்பவர்கள் இருக்கின்றார்கள். கேட்கத்தான் வேண்டும், கேட்டு அதனைச்சரியாக நடைமுறைப்படுத்தினால் அவ்வளவு உதவி கிடைக்கும் என்றார். சாப்டூரில் தலைமை ஆசிரியராக இருந்தபோது அவர் செய்த நல்ல காரியங்கள் தெரியும், ஆனால் அவர் தலைமை ஆசிரியராக இருந்த தொண்டி, சிறுகுடி, நத்தம், வாடிப்பட்டி, கருங்காலக்குடி எனப்பல ஊர்களில் செய்த பொதுக்காரியங்களை ( பள்ளிக்கூடம் கட்ட இடம் வாங்குதல், பொதுப்பணித்துறை உதவியோடு கட்டிடம் கட்டுதல், மின்சார வசதி, காலை, மாலை ஸ்டடி, படிக்க அனுப்பப்படாத பெண்பிள்ளைகள் வீட்டிற்கு சென்று பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பக்கேட்டுக்கொள்ளுதல்  ) எனப்பல காரியங்கள் அவர் காலத்தில் நடந்ததை விவரித்தார். மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கும் ஒரு கனவு இருக்கிறது. எனது தலைமை ஆசிரியர் திரு வி.வீரிசெட்டி அவர்களிடம் படித்த, அவரால் முன்னேற்றம் பெற்ற பழைய மாணவ, மாணவிகளை எல்லாம் இணைத்து அவருக்கு ஒரு விழா எடுக்க வேண்டும், அவரைப் பற்றிய்  ஒரு நூலைக்  கொண்டுவர வேண்டும் என்று. அவர் சம்மதிப்பாரா எனத் தெரியவில்லை. ஒரு தடவை அவர் போட்டோவை என் வீட்டில் மாட்ட வேண்டும் என்று கேட்டேன். தருகிறேன் என்று சொல்லிவிட்டு மறு நாள் " யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா ....." என்னும் முழுப்பாடலையும் பிரேம் போட்டிருந்ததைக் கொடுத்தார். "ஆட்கள் மறைந்து போவோம் . நாம் செய்த நல்ல காரியங்கள்தான் உலகில் நிற்கும் , என்னை நினைத்துக்கொள்ள வீட்டில் இதனை  மாட்டு" என்றார்,அதனைத் தான் மாட்டி வைத்திருக்கின்றேன்.
 .

4 comments:

அ.பாண்டியன் said...

நண்பருக்கு வணக்கம்.
அற்புதமான நட்பு, அற்புதமான சிந்தனைக் கொண்ட நண்பர். உண்மையில் உங்கள் நட்பு கிடைத்தற்கரியது தான்.போட்டோவை மாட்டச் சொல்லிய சிந்தனை அழகு அய்யா. பகிர்வுக்கு ந்ன்றி..

முனைவர். வா.நேரு said...

வணக்கம்.மிக்க நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும்.

anandam said...

இன்றைக்கும் இருப்பவர். எளிமை என்றால் அப்படி ஒரு எளிமை.//உங்கள் தொடர்பால் அய்யா .வீரிச் செட்டியார் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை எணணி மகிழ்கிறோம்.

முனைவர். வா.நேரு said...

எளிமையாக நம்முன் வாழும் பெரியோர்களே வழிகாட்டி எனக்கொண்டால், சமூகத்தில் பாதிப்பிரச்சனைகள் குறைந்து விடும். எப்போதும் ஊக்கமூட்டும் தங்கள் கருத்திற்கு நன்றி , நன்றி.