Sunday 3 November 2013

அண்மையில் படித்த புத்தகம் : ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்


நூலின் தலைப்பு             :  ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்
நூலின் ஆசிரியர்            : அப்துல் ரஹீம்
வெளியீடு                          : சாமி புக்ஸ், சென்னை-04
முதல் பதிப்பு                    : 2007 , பக்கங்கள் - 128 , விலை ரூ 60 .

                                                                     லியோ டால்ஸ்டாயின் நூல்களைப் படித்துள்ளேன். டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும் ' பற்றி காந்தியார் எழுதியுள்ளதைப் படித்திருக்கிறேன், ஆனால் முழுமையாக டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததில்லை. இந்த நூல் அதற்கான வாய்ப்பைக் கொடுத்தது.

                                                       முன்னுரை, பதிப்புரை என்றெல்லாம் ஒன்றும் இந்தப் புத்தகத்தில் இல்லை. புத்தகத்தின் 3-ம் பக்கமே டால்ஸ்டாயின் பிறப்பும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஆரம்பிக்கிறது. மொத்தம் 12 தலைப்புக்களில் டால்ஸ்டாய் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அப்துல் ரஹீம் கொடுத்திருக்கின்றார்." பிறப்பும் வளர்ச்சியும், இலக்கிய முயற்சி, போர் அணிச்சேவை, காதல் வாழ்வு, போரும் அமைதியும், குடும்ப வாழ்க்கை, ஆன்மீக விழிப்பு,எளிமையில் இன்பம், டால்ஸ்டாய் இயக்கம், மதப்பிரஷ்டம், குடும்பத் துறவு, மகரிஷியும் மகாத்மாவும்"  என்பன நூலாசிரியர் கொடுத்திருக்கும் 12 தலைப்புக்களாகும்.

                                          லியோ நிகலோவிஸ் டால்ஸ்டாய் என்னும் முழுப்பெயர் கொண்ட டால்ஸ்டாய் ரஷ்யாவிலுள்ள யாஸ்னாயா பால்யானா என்னும் கிராமத்தில் பிறந்தவர்  , மிகப்பெரிய பிரபு குடும்பத்தைச்சேர்ந்தவர் , 42 அறைகளிலுள்ள பிரமாண்டமான மாளிகையில் பிறந்தவர், இவரோடு சேர்த்து மூன்று ஆண்கள், ஒரு பெண் இவர் குடும்பத்தில், 3 வய்தில் தாயையும், 9 வய்தில் தந்தையையும் இழந்தவர் , அத்தையால் வளர்க்கப்பட்டவர், இளமையில் படிப்பில் கவனம் செலுத்தாதவர், பள்ளியில் படிக்கும்போது பிரபு குடும்பததைச்சேர்ந்தவன் என்னும் தற்பெருமையோடும், கர்வத்தோடும் நடந்து கொண்டவர் , பாடத்தைப் படிக்கவில்லையே தவிர தனக்குப் பிடித்த விசயங்களைப் படித்தவ்ர, குறிப்பாக ரூஸோவின் இருபது வால்யூம்களையும் திரும்பத் திரும்ப படித்தவர் , 16 வய்திலேயே தன்னுடைய எண்ணங்களை எழுத ஆரம்பித்து விட்டவர் என்பன போன்ற பல செய்திகளை முதல் அத்தியாயமான 'பிறப்பும் வளர்ச்சியும்' என்னும் த்லைப்பில் இந்த் நூலின் ஆசிரியர் , சுவைபடக்கூறுகின்றார்.

                                            பாகப்பிரிவினை ஏற்பட்டதால் டால்ஸ்டாய்க்கு  மிகப்பெரிய சொத்து கிடைத்தது. தன் கிராமத்தை மாற்ற விரும்பினார். ' தன்னுடைய கிராமத்திலுள்ள குடியானவர்க்ள் இறைவனால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களென்றும் ,அவர்களுடைய நலன்களைப் பற்றிக் கவனிப்பது தன்னுடைய தலையாய கடன் என்றும் உணர்ந்தார். அவர்களுக்கு கல்வி அறிவைப்புகுத்தி அவர்களிடையே வாசம் செய்யும் வறுமைப்பேயை விரட்டியடிக்க வேண்டுமென்றும் எண்ணினார் அவர் .எவ்வித உடல் மூளை உழைப்பையும் பொருட்செலவையும் அவர் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவர்களுக்குத்  தாராளமாக மான்யங்கள் வழ்ங்கினார். ...அவர்க்ள் கல்வி பயில்வதெற்கென ஒரு பள்ளிக்கூடத்தையும் நிறுவினார். ஆனால் குடியானவர்களோ அவ்ரை விரும்புவதற்குப் பதிலாக வெறுக்கத் தலைப்பட்டனர். அவரை ஏமாற்றவும்   முற்பட்டார்கள், அவரை ஒரு முட்டாள் என்று தங்களுக்குள் பேசிக்கொள்ளவும் செய்தார்கள். ...அவர் பள்ளிக்கூடம் நிறுவியதும் அவர்களுக்கு ஏற்பட்ட கோபத்திற்கு அளவேயில்லை ..."  பக்கம் (14) . கிராமத்து மனிதர்களை மாற்ற முடியாமல் , டால்ஸ்டாய் கிராமத்தை விட்டு வெளியேறி , மாஸ்கோவிற்கு சென்று விட்டார் . யார் நமக்கு நன்மை செய்பவர்கள்,யார் நமக்கு கெடுதல் செய்பவர்கள் என்று உணராத தன்மை நம் நாட்டிற்கு மட்டும் சொந்தமல்ல போலும், ரஷ்யாவிலும் அப்படித்தான் போலும் . மாஸ்கோவிற்கு சென்று மது, மாது ,சூது எனப் பணத்தை தண்ணீராக செலவு செய்தார் என்றும் அதுவும் சூதாட்டத்தில் பணத்தை எல்லாம் பெருமளவில் இழந்தார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை முதல் சூதாட மாட்டேன் , இது சத்தியம் என்று தனக்குத் தானே உறுதி எடுத்துக்கொள்வதற்காக நாட்குறிப்பில் எழுத ஆரம்பித்தார் என்றும் , அதனைத்  தானே மீறிப் பணத்தை இழந்து , இழந்து அவதியுற்று, அதனையும் நாட்குறிப்பில் எழுதினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது . இவ்வாறு இருந்த நிலையிலும் கற்பனையிலும், ஆகாயக் கோட்டை கட்டுவதிலும் ஈடுபட்டு , தன்னுடைய சிற்றன்னையிடம் கூறியபோது ' கற்பனை விசும்பில் பறந்து செல்லும் நீ நவீனம் எழுதத்தான் தகுதியானவன் ' என அவள் கூறினாள் . தன்னுடைய சிற்றன்னை கூறிய கருத்து  , ஆங்கிலத்தில் ஸ்பார்க என்று சொல்வார்களே , அதனைப் போல மனதில் உருவாகி, ஏன் நாம் நவீனம் எழுதக்கூடாது என்ற எண்ணம் டால்ஸ்டாய் மனதில் தோன்றியது ..எழுதத் தொடங்கினார். எழுதும்போதே தன்னுடைய சகதி எங்கேயிருக்கிறது என்பதைக் கண்டு கொண்டார்.
அவருடைய   எழுத்துப்பயணம்  'குழந்தைப் பருவம் ' என்னும் நவீனத்தில் ஆரம்பித்தது , எல்.என். என்னும் புனைபெயரில் காண்டம்பரரி என்னும் பத்திரிக்கையில் 1852-ல் வந்தவுடன் ரஷ்யா முழுவதும் பிரபலமடைய ஆரம்பித்துவிட்டார் -டால்ஸ்டாய் என்பதனை இந்த நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

                                      போர் அணியில் சேர்ந்தததையும் , அங்கு அவர் எழுதுவதையும் நிறுத்தவில்லை, தீய பழக்கங்களையும் நிறுத்தவில்லை என்பதனையும் , கல்வி பற்றிய டால்ஸ்டாயின் சிந்தனைகளையும் , அன்றைய ரஷ்யாவில் நிலவிய சமூகக்கொடுமைகளையும்   'போர் அணிச்சேவை '   என்னும் அத்தியாயம் விவரிக்கிறது. சோன்யா, எலிசபெத் என்று இரண்டு உடன்பிறந்த சகோதரிகள் டால்ஸ்டாயை விரும்பியதையும், அதில் சோன்யா என்பவரை டால்ஸ்டாய் திருமணம் செய்து கொண்டதையும் அடுத்த அத்தியாயம் விவரிக்கிறது.  ,

                                      சோன்யாவுடன் திருமணம் முடிந்த 18-வது நாளிலேயே இருவருக்கும் கருத்து வேற்றுமை வந்து சண்டையிடத் தொடங்கினர் என்றும் அதற்குக் காரணம் தன்னுடைய கெட்ட செயல்களையெல்லாம் எழுதி வைத்திருந்த நாள்குறிப்பை டால்ஸ்டாய் தன்னுடைய மனைவியிடம் காட்டியதுதான் என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். அதற்குப்பின்  டால்ஸ்டாயின் ஒவ்வொரு நடவடிக்கையையும் சோன்யா சந்தேகப்பட்டார் என்றும் அதனைப்போல டால்ஸ்டாயும் தன்னுடைய மனைவியை சந்தேகித்தார் என்றும் , அவர்களின் குடும்ப வாழ்க்கை புயலாய் ,சோகமாய் ஆனது என்றும் குறிப்பிடுகின்றார். ஆனால் அந்த நிலையிலும் ஒரு உதவியாளரைப் போல டால்ஸ்டாயின் புரியாத எழுத்துக்களைப் புரிந்து படித்து ஏழு முறை நகலை கைகளால் சோன்யா தன்னுடைய கணவருக்காக் எழுதிக் கொடுத்தார் என்றும், ஒவ்வொரு முறை புரூப் வரும்போதும் பெருமளவில் அடித்து விடுவது, பெருமளவில் சேர்ப்பது என்பதனை டால்ஸ்டாய் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்த்க்கது 'போரும் அமைதியும்" என்னும் நவீனம் உருவான நிகழ்வை விவரிக்கும் 5-வது அத்தியாயம்.
                                     அவர் எழுதிய நவீனத்தின் தலைப்பு மட்டுமல்ல, அன்றாட அவரின் வாழ்க்கையும்  எப்படி போரும் அமைதியுமாக இருந்தது என்பதனை விளக்குவது 'குடும்ப வாழ்க்கை' என்னும்  தலைப்பிலான அத்தியாயம். ஆனால் 'அன்ன கரீனா' என்னும் நாவல் எப்படி அவருக்கு புகழையும் , பணத்தையும் அள்ளிக் கொடுத்தது என்பதும், அதில் அவரது மனைவி சோன்யாவின் பங்களிப்பும் (புரியாத எழுத்தை புரிந்து பலமுறை எழுதிக்கொடுத்ததில்)  விவரிக்கப்பட்டிருக்கிறது.

                                               மதக்கோட்பாடுகளை தீவிரமாகப் பின்பற்றியும் , இறைவனை எல்லா நேரங்களிலும் வணங்கியும் மதப்பற்றாளராக சில காலம் டால்ஸ்டாய் வாழ்ந்திருக்கின்றார். " ஆனால், சிறிது காலத்திற்குள் மதத்துக்குள்ளிருந்தே மதத்திற்கு விரோதமாகப் புரட்சிக்கொடியைத் தூக்க ஆரம்பித்து விட்டார். மாதாகோவிலில் நடக்கும் சடங்குகளில் மூன்றில் இரண்டு பகுதியை அவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ...புனித தினங்களைக் கொண்டாடவே அவருக்கு வெறுப்பாக இருந்தது. கிறிஸ்துமஸ்ஸைத் தவிர்த்து மற்றப் பண்டிகைகளெல்லாம் ஆச்சரிய நிகழ்ச்சிகளின் ஞாபகார்த்த நாட்களாகவே இருந்தன. பிறரின் காரண மகிமையில் அவருக்கு நம்பிக்கையே இல்லை.இயேசு நாதர் உயிர்த்தெழுந்தார் என்ற கிறிஸ்துவ கோட்பாட்டை அவரால் நம்ப இயலவில்லை. மதம் என்ற போர்வையில் உண்மை நூலுடன் மெல்லிய உரோமம் போன்ற பொய்மை நூல்களும் கலந்து நெய்யப்பட்டிருப்பதைக் கண்ணுற்றார்" (பக்கம்  71) என்று டால்ஸ்டாயின் மனமாற்றத்தை விவரிக்கும் நூலாசிரியர் மதங்க்ளில் நம்பிக்கை இல்லாதவராக ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவராக டால்ஸ்டாய் வாழ்ந்த விவரங்களை ஆன்மிக விழிப்பு என்னும் அத்தியாயத்தில் விவரிக்கின்றார்.

                                             பட்டு மெத்தைகளில் வாழ்ந்த டால்ஸ்டாய், எப்படி எளிமையான ,பிறருக்கு உதவும் வாழ்க்கைக்கு மாறினார் என்பதனை 'எளிமையான வாழ்க்கை ' என்னும் அத்தியாயம் விவரிக்கின்றது. எளிமையாக வாழவேண்டும், அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும் , நிறைய நிலம் வைத்திருப்பவர்கள் அதனை குடியானவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் போன்ற கொள்கைகள் அடங்கிய'டால்ஸ்டாய் இயக்கம் ரஷ்யாவிலும், மற்ற இடங்களிலும் பரவியதையும், டால்ஸ்டாயின் நாடகத்தை ஸார் சக்ரவர்த்தி ரசித்துப் பார்த்ததை, பின்பு அவரே நாடகத்திற்கு தடை போட்டதை, டால்ஸ்டாயிற்கும் அவரது மனைவி சோன்யாவிற்கும் தகராறு முற்றியதை, மனைவியின் கொடுமை பற்றி டால்ஸ்டாய் 'குரூட்ஸர் ஸோனடா' என்னும் நவீனத்தை எழுதிவிட்டார் என்று சோன்யா 'யாருடைய தவறு ? ' என்று ஒரு புத்தகம் எழுதியது , டால்ஸ்டாய் இயக்கத்தின் சிறப்புகள்  பற்றியும் மிக இயல்பாக இந்த இயலில் ஆசிரியரால் சொல்லப்பட்டுள்ளது.

                                           மதப்பிரஷ்டம் என்னும் அத்தியாயம் டால்ஸ்டாயின் எழுத்துக்களைக் கண்டு ரஷ்ய அரசாங்கம் பயந்ததையும், அவரின் எழுத்துக்களால் ஏற்பட்ட மாற்றம் அவ்ர்களை உறுத்தியதையும் ஆனால் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஸார் மன்னனின் ஆட்சிக்கு எதிராக டால்ஸ்டாய் எழுதியதையும், பின்னர் கிறித்துவ மதக் கருத்துக்களை சுருக்கி 5 கட்டளைகளாக டால்ஸ்டாய் வடிவமைத்தமைக்காக அவர் மதப்பிரஷ்டம் செய்யப்பட்டத்தையும் விவரிக்கிறது. குடும்பத்துறவு என்னும்  அத்தியாயம் டால்ஸ்டாயின் உயிலின் மீதே அவரின் மனைவி சோன்யா கவனமாக இருந்ததையும், அதனால் வெறுத்து தனது மகளிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி, பின்பு ஓரிடத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்ததையும் , அவர் சேர்த்து வைத்த புத்தகப்பட்டியலையும் , ரஷ்யப் புரட்சிக்கு இவரின் எழுத்துக்களும் காரணம் என்பதால் அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதைகளும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
காந்தியாரின் வாழ்க்கையில் டால்ஸ்டாயின் வாழ்க்கையும், புத்தகங்களும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து கடைசி அத்தியாயமான மகரிஷியும் மகாத்மாவும் என்னும் பகுதி விவரிக்கின்றது.

                                        வாழ்க்கை வரலாறு என்பதனையும் தாண்டி, இந்தப் புத்தகம் வாசிப்பவர் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் புத்தகம். கேளிக்கைகளில் மூழ்கிக் கிடந்த ஒரு மனிதர் தன்னுடைய எழுத்தாலும், படிப்பாலும் , எண்ணத்தாலும் எப்படி இன்றைக்கும் படிப்பவ்ர்களை ஈர்க்கும் ஓர் ஆளுமையாக மாறினார் என்பது படிப்படியாக அருமையாக விவரிக்கப்பட்டுள்ள புத்தகம் .படித்துப்பார்க்கலாம். பாதுகாத்து வைக்க்லாம்.


                            

 


2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் படிக்க வேண்டிய ஆர்வத்தினைத் தூண்டிவிட்டுள்ளீர்கள் ஐயா. லியோ டால்ஸ்டாய் பற்றித் தெரியும், ஆனால் தங்களின் விமர்சனத்தைப் படித்ததும்தான் தெரிந்தது, ஏற்கனவே தெரிந்து வைத்துள்ளது கடுகினும் சிறியது என்று. நன்றி ஐயா

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா .