Sunday 3 November 2013

ஒலிக்கும் வெடிச்சத்தங்களால் ! வா. நேரு


அடைய வந்த
பறவைகள்
ஒரு மரத்திலிருந்து
இன்னொரு மரத்திற்காய்
மாறி மாறி
அலைந்து அலைந்து
பறந்து கொண்டிருந்தன
ஒலிக்கும் வெடிச்சத்தங்களால் !

ஓசோன் ஓட்டை 
பற்றித் தினம் எழுதும்
பத்திரிக்கைகள்
கருமேக மூட்டமென
வானை மூடும்
கரிப்புகைகள் பற்றி
கள்ள மெள்னம் காத்தன !
திருவிழாக்களின் மேன்மை
பற்றி மேட்டுக்குடிக்கு
எழுத்துக்களால்
பல்லக்குத் தூக்கும் ஒருவன்
விதவிதமாய்
விவரித்திருந்தான் பத்திரிக்கையில் !

சில ஊர்களில்
சாதிக்கலவரம் வரக்கூடும்
தீபாவளியால் !
அபாய அறிவிப்பினைக்
கொடுத்துக்கொண்டிருந்தது
உளவுத்துறை !

நடு இரவே
ஆடுகள் அனைத்தும்
உரிக்கப்பட்டு
வரிசையாய்த் தொங்கும்
பலூன்கள் போல
ஏகத்திற்கும் தொங்க
விடப்பட்டிருந்தன !

சைக்கிளின் மீது
ஏறி அமர்ந்து
உட்காரவும் முடியாமல்
ஓட்டவும் முடியாமல்
விழுந்து விழுந்து
எழுந்திரித்துக்கொண்டிருந்தான்
நடுரோட்டில் ஒருவன்
தீபாவளிப் போதை
இன்னும் இறங்கவில்லை போலும்


கறி தின்று
தண்ணி அடித்து
சண்டையிட்டு
மண்டையுடைதல்தான்
தீபாவளி என
நிருபித்துக்கொண்டிருந்தனர்
தெருவில் சிலர்

பதவி கிடைத்தவன்
பணம் கிடைத்தவன்
தங்களுக்கு கிடைத்தவற்றை
கரியாய் புகையாய்
துணியாய் வெடியாய்
வேடிக்கை காட்டிய வேளையில்

கந்து வட்டிக்காரனிடம்
கடன் வாங்கிப்போட்ட
தெருவோரக் கடை
வியாபாரம்
நேற்றுப்பெய்த மழையில்
படுத்திருச்சே! அய்யய்யோ !
கழுத்திலே கத்தியை
வைப்பானே கந்துவட்டிக்காரப்
பய மவன் எனும் 
பயத்தோடு
விற்பனைக்கு வைத்திருந்த
புதுத்துணிகளை எல்லாம்
குடிசைக்குள்ளே
போட்டு விட்டு
அழுக்கு வேட்டியோடும்
பழைய சேலையோடும்
அடுப்பெரிக்க மனமில்லா
நினைப்போடும்
வானவேடிக்கைகளை
வண்ண வண்ணத் துணிகளை
பார்த்த வண்ணம்
உட்கார்ந்திருக்கும் வேலையிலே

கருப்பா  ஒருத்தி
டி.வி.பெட்டிக்குள்ளே
உக்காந்துகிட்டு
எவ்வளவு மகிழ்ச்சி இன்னைக்கு !
எங்க நம்பிக்கை இன்னைக்கு !
இதிகாசமெல்லாம்
உண்மையாக நடந்ததுதென்னு
நமக்கு ஆத்திரம்
வரப் பேசுறாளே ! அம்மா !
நம்ம  தாத்தாவை
பார்த்தாலே தீட்டுன்னு
பண்ணி வச்ச
பாவிகளுக்கு ஆதரவா
ஏகமா வரிஞ்சு கட்டி
எக்குத்தப்பா பேசுராளே அம்மா !

                                                                       . வா. நேரு .











2 comments:

தமிழ் ஓவியா said...

இந்நிலை மாற உழைப்போம், உழைப்போம்!!

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா , கூட்டு உழைப்பே பலன் தரும்.