Friday, 20 December 2013

நிகழ்வும் நினைப்பும்(11) : ஓடிக்கொண்டிருக்கும் பெரியாரியல் இணைய நதியாய் ....

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் இணையம் இணைப்பு பி.எஸ்.என்.எல்-ல்லில் வேண்டும் என்றார். விவரங்கள் பல கேட்டார். இணைப்பையும் வாங்கினார். எத்தனையோ பேர் இணைய இணைப்பு வாங்கி , என்ன செய்வது , எப்படி அதனைத் தனக்கும் , சமூகத்திற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்துவது என்று இன்றும் கூடத் தெரியாது இருக்கும் நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு இணைப்பு வாங்கி , ஒரு வலைத் தளம் ஆரம்பித்தார். எனக்குத் தெரிந்த அந்த நண்பர், மிகப்பெரிய பணக்காரர் இல்லை, பெரிய வாய்ப்பு வசதிகள் இல்லை, ஆனால் ஆழமான புரிதல் பெரியாரியலில் உண்டு.தந்தை பெரியாரின் தொண்டர்களுக்கே உரித்தான கடுமையான உழைப்பு உண்டு.  தொடர்ந்து , தொய்வில்லாமல், எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காமல், தான் எடுத்துக்கொண்ட கொள்கைக்காக தொடர் உழைப்பினைக் கொடுக்கும் அந்த இனிய நண்பர் பழனி வ.மாரிமுத்து அவர்கள். தமிழ் ஓவியா என்னும் பெயர் தமிழ் மணம் மற்றும் தமிழ் திரட்டிகளில் மிகவும் புகழ்வாய்ந்த பெயர்.அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளித்தரும் வலைத்தளமாய், தந்தை பெரியாரை, அண்ணல் அம்பேத்கரை, புரட்சிக் கவிஞர் பாவேந்தரை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை, திராவிடர் இயக்க கொள்கையை இந்த வலைத்தளத்திற்குள் சென்றால் , தெவிட்ட தெவிட்ட  தெரிந்து படிக்கலாம் என்ற வகையில் அமைந்திட்ட வலைத்தளமாய் தோழர் தமிழ் ஓவியாவின் வலைத்தளம்.

                        

                                      பல ஆண்டுகள் தொடர்ந்து காலை 4 மணி முதல் காலை 6 மணிவரை இணையத்தில் தகவல்களை ஏற்றும்  தோழர். விடுதலையில் , உண்மையில் , பெரியார் பிஞ்சுவில் வரும் செய்திகளை, தனது வலைத்தளத்தில் தரும் தோழர். ஆரம்பித்த காலத்தில் , பரம்பரைப் பகைவர்கள், பொய்ப்பெயர்களில் வந்து திட்டிக் குவித்தபோதும், ஆபாசமாய் அர்ச்சித்த போதும், தனது பணியைத் தொடர்ந்து செய்தவர். பழகுவதற்கு மிகவும் இனியவர்.  சாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்டவர்.நண்பரின் இணையர் தமிழரசி, மேல் மெய்ஞ்ஞானபுரத்து திராவிடர் கழகக்  குடும்பத்தினைச்சேர்ந்தவர். ஒத்த மனதினராய், ஒருமித்த கருத்தினராய், தந்தை பெரியாரின் கருத்துக்க்ளை தரணி எங்கும் கொண்டு செல்லும் ஆற்றல் மிக்க இணையருக்கு ஆக்கபூர்வமாய் ஒத்துழைக்கும் அன்புத் தங்கை தமிழரசி அவர்கள். பெரியார் பன்னாட்டு மையத்தின் தலைவர் , மதிப்பிற்குரிய சிகாகோ டாக்டர் சோம்.இளங்கோவன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் , மிகப்பெரிய பணி, தமிழ் ஓவியாவின் பணி, அவரை அறிவீர்களா எனக்கேட்டார். நன்றாக அறிவேன் என்று கூறியபோது, மிகப்பெரிய அளவிலே பாராட்டினார்கள். இன்றைக்கும் உலகத்தில் இருக்கும் பெரியார் தொண்டர்கள், தமிழர் தலைவர் ஆசிரியரின்  தலைமையைஏற்றுச்செல்பவர்கள் எல்லாம் பார்த்து வியக்கும் வண்ணம் , அன்பிற்குரிய நண்பர் பழனி வ.மாரிமுத்து அவர்களின் பணி அமைந்துள்ளது. இயக்க ரீதியாக என்னைச்சுற்றி இருக்கும் பல தோழர்களைப் பார்க்கிறேன், வியக்கின்றேன். என்ன எதிர்பார்ப்பு வாழ்வில் அவர்களுக்கு, தந்தை பெரியார் சொன்ன மனித நேயக்கொள்கை வளரவேண்டும் என்பதனைத் தவிர. , தன் வீட்டுச்சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு,தன் சொந்தக் காசை செலவழித்து பொதுத்தொண்டு ஆற்றும் பெரியாரின் தொண்டர்களைப் பார்த்து பல நேரம் வியந்திருக்கின்றேன்.  . பழனி மாவட்டத்தின் பகுத்தறிவாளர் கழக மாவட்டத்த்லைவராக பணியாற்றக்கூடிய அருமையான தோழர் அவர். அவரின் பணி இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். அவருடைய உழைப்பிற்கு தலை வணங்குகின்றேன். "19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி " என்று தன்னுடைய வலைத்தளத்தில் பதிந்திருக்கின்றார் தமிழ் ஓவியா . இதுவரை அவரது வலைத்தளத்திற்குள் செல்லாதவர்கள் சென்று பாருங்கள் . http://thamizhoviya.blogspot.in/. வியந்து போவீர்கள். ஓடிக்கொண்டிருக்கும் பெரியாரியல் இணைய நதியாய்- தமிழ் ஓவியாவின் வலைத்தளம்,பாராட்டுக்கள் , பாராட்டுக்கள். .

14 comments:

Unknown said...

இந்த நல்லாற்றினால் பயனடைந்தவன் என்ற முறையிலும் தொடர்ந்து சார்ந்து வாழ்கின்றவன் என்பதாலும் எங்களின் வணக்கத்தையும் வாழ்த்தையும் உரித்தாக்குகிறோம். நன்றி...!

செந்தில் ஆசான்

anandam said...

அளப்பரிய பணியை செய்துவிட்டு ,அடக்கமே உருவாக வலம் வரும் அண்ணன் மாரிமுத்துவை மனதார வாயார கையார பாராட்டலாம். பாராட்டும் பணியினை செவ்வனே செய்த தங்களையும் தான்.....

தமிழ் ஓவியா said...

அய்யா, வணக்கம்.

தங்களின் பாராட்டுக்கு உரிய வகையில் உழைத்திருக்கிறேனா? என எண்னிப்பார்க்கிறேன்?
தங்களின் பாராட்டுக்கு உரிய வகையில் இன்னும் உழைப்பேன்.

எங்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும்,பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி அய்யா

கரந்தை ஜெயக்குமார் said...

திரு மாரிமுத்துஅவர்கள் பாராட்டப்பட வேண்டியவர். இதோ அவரின் வலைத்தளத்திற்குச் செல்கிறேன் ஐயா.
நன்றி

முனைவர். வா.நேரு said...

நன்றி செந்தில். வருகைக்கும் கருத்திற்கும்.

முனைவர். வா.நேரு said...

நன்றி. ஊக்கமூட்டுவோம், ஆக்கபூர்வமாய் செய்ல்படுவோம்.

முனைவர். வா.நேரு said...

அதற்கும் அதிகமாக்வே உழைத்திருக்கின்றீர்கள். தொடர்ந்து வற்றாத நதியாய் ஓடுவீர்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்த்துக்கள், 7-ஆம் ஆண்டிற்கு.

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா. உருப்படியாகச்செயல்படுபவர்களை மனதாரப்பாராட்டுவோம்.

Unknown said...

திரு மாரிமுத்து அய்யா அவர்களின் வலைத்தில் செய்யும் நற்பணிகள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் இணையத்தில் மட்டும் அல்லாமல் வேறு நற்பணிகள் செய்து வருகிறார்கள். அவர் செய்த நற்பணி மூலம் எனக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைத்து உள்ளது. (என்னை படிக்க வைத்தார்) திரு மாரிமுத்து அய்யா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

dhandapani said...

திரு.மாரிமுத்து அவர்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கது.நான் அவரின் ஒவ்வொரு பதிவையும் தினமும் படித்து வந்து கொண்டு இருக்கிறேன்.மற்றும் அவரின் சில பதிவுகளை என் முகநூலில் பகிர்ந்து உள்ளேன்.அய்யா தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை உலகெங்கும் கொண்டு செல்லும் திரு.மாரிமுத்து அவர்களுக்கு என் வாழ்த்தையும்,பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.,

முனைவர். வா.நேரு said...

அறிவுமணி, வாழ்த்துக்கள். வாழ்க்கையில் உயர, மற்றவர்களுக்கு உதவ நல்ல மனிதர்களின் உதவியும், நல்ல புத்தகங்களின் வழிகாட்டுதலும் தேவை. தான் வைத்திருந்த புத்தகங்களைப் பாதுகாப்பதற்கென்றே , புதிய வீடு கட்டியது போல புது வீடு கட்டியவர் மாரிமுத்து அவர்கள். மிக அரிய புத்தகங்களை சேர்த்து, தன் இல்லத்தில் நூலகம் போல வைத்திருக்கின்றார். அந்தப்புத்தகங்களையும் படியுங்கள், நல்லவற்றை பதிவிடுங்கள்.

முனைவர். வா.நேரு said...

மர்ரிமுத்து போன்றவர்களின் பணி நம்பிக்கையூட்டக்கூடியது, மகிழ்ச்சியூட்டக்கூடியது. தங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி தண்டபாணி அவர்களே

பூ.மணிமாறன் said...

தங்களுக்கு திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆசிரியர் அவர்களின் கூட்டத்தில் தோழர் மாரிமுத்துவை தங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். அதற்காக பெருமை கொள்கிறேன்.எமது குடும்பதோழர் மாரிமுத்துவை இப்படி பலர் பாராட்டும்போது உண்மையில் பெருமையாக உள்ளது. நன்றி நேரு தோழர்.

முனைவர். வா.நேரு said...


நன்றி மணிமாறன், தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.