Saturday, 29 March 2014

நிகழ்வும் நினைப்பும்(20) வாழும் படைப்பாளியை அவர் வாழும் காலத்திலேயே பாராட்டுவது

           நிகழ்வும் நினைப்பும்(20)  வாழும் படைப்பாளியை  அவர் வாழும் காலத்திலேயே பாராட்டுவது :


                                         புதுச்சேரியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80-ம் ஆண்டு  பிறந்த நாள் விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை 23.3.2014 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. எழுத்து. காம் இணையதளத்தில் எழுதக் கூடிய பல தோழர்களை, தோழியர்களை சந்திக்கும் வாய்ப்பினை புதுச்சேரி தோழர் அகன் என்னும் தி.அமிர்த கணேசன் ஏற்படுத்தித் தந்திருந்தார்.  80 படைப்பாளிகளுக்கு விருது அளிக்கப்பட்டது,9 நூல்கள் வெளியிடப்பட்டன.அதில் சூரியக் கீற்றுகள் என்னும் என்னுடைய கவிதைத் தொகுப்பும் ஒன்று. தொடர்ந்து இயங்கும், தன்னுடன் இருப்பவர்களை இயக்கும் பல்துறைக் கவிஞர் அய்யா கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களால் என்னுடைய கவிதை நூல் வெளியிடப்பட்டது மகிழ்ச்சி தந்தது.

                                                        புதுச்சேரி சென்று அடைந்தவுடனேயே, புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் அய்யா சிவ.வீரமணி அவர்கள் ரெயில் நிலையத்திற்கே வந்து வரவேற்றார்கள். அன்று முழுவதும் அவரோடு சில மணி நேரங்கள் இருப்பதற்கும், உரையாடுவதற்கும்,சிற்றுண்டி அருந்துவதற்குமான வாய்ப்பாக அமைந்தது. திராவிடர் கழகத் தோழர்களுக்கு உரித்தான எவ்வளவு வ்சதி வாய்ப்புகள் இருந்தாலும், உயர் பணியில் இருந்தாலும் தோழமை கலந்த நட்பும் மரியாதையும் வியப்புத் தருவது. அந்த வகையில் அய்யா சிவ.வீரமணி அவர்களின் இல்லத்தில் இருந்து காலையில் குளித்துவிட்டு, உணவ்ருந்திப் பின்பு பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் அய்யா புதுச்சேரி மு. ந. நடராசன் அவர்களோடு சேர்ந்து நிகழ்வு நடைபெறும் விவேகானந்தா பள்ளியைச்சென்று அடைந்தோம்.தோழர்கள் கடலூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டத்தலைவர்  ஜெயக்குமார், பொறியாளர் சிவக்குமரன் ஆகியோரும் வந்திருந்தனர். தோழர் புதுச்சேரி பழனி எங்கிருந்தோ வந்து தங்களின் படைப்பாக்கத்திற்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி பொன்னாடையப்  போர்த்தி விட்டு போனார்.

                                                             பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு போல தொலைபேசி வாயிலாகவும், கணினி வாயிலாகவும் நான் அறிந்த தோழர் அகன் அவர்களைச்சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 60 வயது என நம்ப்முடியாத 35, 40 என எண்ணத்தோன்றும் தோற்றம். உற்சாகமான வரவேற்பு அளித்த தோழர் அகன் நான் நினைத்ததைவிட அதிகமாகவே நெற்றிக் குறிகளோடு இருந்தார். அதனை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் பேசும்போது, என்னுடைய மூத்தமகனைப் போன்றவர்  அகன்  , நான் நாத்திகன், நான் வேண்டாம் என்று சொல்ல சொல்ல, இல்லை வேண்டும் என்று சொல்லி இத்தனை ஏற்பாடுகளையும் செய்த அகன் ஆத்திகன் என்று சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது.  எந்த இடத்திலும் நான் நாத்திகன் அல்லது ஆத்திகன் என்று தன்னை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொள்வது , மாற்றுக் கருத்து உள்ளவரிடமும் அன்பு செலுத்துவது வரவேற்புக்குரியதுதான். பாராட்டுக்குரியதுதான்.

                                                     சில்ம்பொலி செல்லப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உரையரங்கம் நன்றாக் இருந்தது. முனைவர் க. பஞ்சாங்கம், முனைவர் மணிகண்டன் போன்றோரின் உரைகள், கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் இலக்கியப் படைப்புகளின் மேன்மையையும், தனித்தன்மையையும் தெளிவு படுத்தின, தொடர்ந்து தமிழகத்தின் மிகப்பிரபலமான கவிஞர்கள் யுகபாரதி, கருணாநிதி, இளம்பிறை உள்ளிட்டோரின் கவியரங்கம் நடந்தது. தொடர்ந்து கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் அருமையானதொரு ஏற்புரையை நிகழ்த்தினார். எனக்குப் பிடித்த கவிஞர்களில் ஒருவரான இளம்பிறை அவர்களைச்சந்திக்கும் வாய்ப்பும் ,உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. தோழர் பொள்ளாச்சி அபி , அகனோடு சேர்ந்து ஒத்துழைத்துக்கொண்டிருந்தார்.

                                    முழுக்க, ,முழுக்க இலக்கிய நிகழ்வாக, அரசியல் கடந்து , மதம் கடந்து நிகழ்ந்த நிகழ்வாக மிகச்சிறப்பாக அய்யா கவிஞர்  ஈரோடு தமிழன்பன் அவர்களின் விழா நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாழும் படைப்பாளியை, அவர் வாழும் காலத்திலேயே பாராட்டுவது, அவருக்கு விழா எடுப்பது, எடுக்கும் விழாவையும் இலக்கியப் படைப்பாக்கத்திற்கான ஒரு களமாக ஆக்குவது, புதிய புதிய தோழர்களை ஊக்குவிப்பது, அவர்களின் படைப்பாக்கத்திறனை வெளிப்படுத்தும் நிகழ்வாக அந்தப் பாராட்டு விழாவை ஆக்குவது, எந்த விதப் பிசிறும் இல்லாமல் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்தியது, செவிக்கு உணவு மட்டுமல்லாது ஒரு நல்ல விருந்தினை அளித்தது என அத்தனையும் அகம் குளிர நடந்தது. அத்தனைக்கும் காரணமான தோழர் புதுச்சேரி அகன் என்ற தி.அமிர்த கணேசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

                                  
                                                        
பு

2 comments:

நா.முத்துநிலவன் said...

உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது தோழர்.
நம் காலத்தின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான தமிழன்பன் அவர்களுக்கான பாராட்டுவிழா. 80வயது? எழுத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே?
அதில், உங்கள் “சூரியக் கீற்றுகள்“ வெளியிடப்பட்டதும் மகிழ்ச்சிக்குரிய செய்திகள். நட்பு வட்டமும் நல்லவற்றைப் பாராட்டும் பண்பும் வளரட்டும். திரு அகன் அவர்களுக்கும் பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் பாராட்டுகள். நன்றி.

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழரே., நன்றி. கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பாராட்டு விழா உண்மையிலேயே அருமையாக இருந்தது. தங்களின் முகவரியை அருள்கூர்ந்து எனது செல்பேசிக்கு அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'சூரியக்கீற்றுகள் ' கவிதைத் தொகுப்பை தங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வப்போது எழுதும் படைப்புகளுக்கு தங்களைப் போன்றவர்களின் பாராட்டும், விமர்சனமுமே கவிதைத் தொகுப்பாய் வரும் அளவிற்குக் காரணம். என்னுரையில் எனது நன்றிக்கு உரியவர்களில் தாங்களும் இருக்கின்றீர்கள் . நன்றி தோழரே, நன்றி. தொடர்வோம், இணைந்த கரங்கள் எப்போதும் வெற்றி பெறும்.... இணைக்கும் புள்ளிகளால் இணைவோம், துண்டிக்கும் புள்ளிகளை அலட்சியப்படுத்துவோம்.