Saturday, 12 April 2014

நிகழ்வும் நினைப்பும் (21) :மான் கராத்தே சினிமாவிற்கு போன கதை

சில நாட்களுக்கு முன்னால் , பக்கத்து வீட்லே தண்ணீர் வரலைன்னு, போர் போட, மொத்த குடும்பமே என்னைய மட்டும் மதுரையில விட்டுட்டு , திண்டுக்கல்லுக்கு எஸ்கேப். போர் போடற சத்தமும், 10 நிமிடத்திற்கு ஒரு தரம் அது ஏறி இறங்கும் கொடூரமான சத்தமும் தாங்க முடியலை, தூங்க முடியலை. திடீர்ன்னு எங்கே போய் தூங்குவது என்று ஒரு குழப்பம். யாராவது நண்பர் வீட்டிற்கு போய்த்தூங்கலாமா என்று நினைத்தேன். திடீரென்று இரவு 8 மணிக்கு அழைத்து , உங்க வீட்டுக்கு தூங்க வாரேன் என்று சொல்வது நன்றாகவா இருக்கும் என்று யோசித்தேன். அப்படி சொன்னாலும், வா என்று சொல்லக்கூடிய நண்பர்கள் இருக்கின்றார்கள் மதுரையில் என்றாலும் எவரையும் அழைக்கவில்லை. நண்பர் புத்தகத்தூதன் பா.சடகோபன் கடைக்குச்சென்று நிதானமாக அமர்ந்து இலக்கியம், இயக்கம் என்று நிறையப் பேசிக்கொண்டிருந்தோம், தோழர் அழகுபாண்டியும் உடன் இருந்தார். மணி 10 ஆக, நான் எப்போது கடை அடைப்பீர்கள் என்றேன். எப்பவும் 9.30 க்கு அடைச்சிருவேன். நீங்க வந்து பேசிக்கொண்டிருந்ததால் இன்னும் அடைக்கவில்லை என்றார். மேலும் பசிக்கவில்லையா என்றார். நான் 8 மணிக்கு உங்க கடைக்கு வந்தப்பவே சாப்பிட்டு விட்டுத்தான் வந்தேன் என்றேன். ஏற இறங்கப் பார்த்தார் என்னை. . வீட்டில் எல்லோரும் திண்டுக்கல்லுக்கு போய்விட்டார்கள் என்று சொல்லி, கடையை அடைக்கச்சொன்னேன். அடைத்துவிட்டு, பசியைத் த்ணிக்கப் பறந்து விட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்தால் போர் சத்தம் நின்ற பாடில்லை. என்ன செய்வது என்று ஒரே யோசனை.

                            சினிமாவிற்கு போகலாம் என்று முடிவெடுத்து, மதுரை  ரிசர்வ் லைன் பக்கம் உள்ள தியேட்டருக்குச்சென்றேன்.   20 ஆண்டுகளுக்கு முன்னால் தென்காசியில் படம் பார்த்து விட்டு, குற்றாலத்திற்கு மழைத்தூறலோடு இரவு 1 மணிக்கு நடந்து வந்தது ஞாபகம் வந்தது. வாழ்க்கையிலே ஒரு 3 வருடத்திற்கு பிறகு  செகண்ட் சோ, அதுவும் தன்னந்தனியா. 3 வருடத்திற்கு முன் திராவிடர் கழகத்தின் தோழர் இராஜபாளையம் திருப்பதி அவர்களின் தூண்டுதலில்  ஒரு படம் பார்த்தேன். அய்யா சுப.வீ அவர்களோடு இராஜபாளையம் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு, உணவெல்லாம் முடித்து தூங்குவோம் என்று நினைத்த வேளை , திருப்பதி சினிமாவுக்குப் போவோமா என்றார். அய்யா சுப.வீ. அவர்கள் உற்சாகத்தோடு போகலாமே என்றார்கள். அன்று இராஜபாளையத்தில் படம் பார்த்தது  செகண்ட் சோ.  அதற்குப் பிறகு இன்றைக்கு பக்கத்து வீட்டுக்காரர் போர் போடும் தூண்டுதலில் எங்காவது இரவைக் கழிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் இன்றைக்கு இந்த செகண்ட் சோ.

                              . வண்டி நிபபாட்றதுக்கு டோக்கன் வாங்கிட்டு, ஏங்க இங்க ஓடுற இரண்டு படத்திலே எந்தப் படம் நல்லாயிருக்கின்னு, அவருகிட்ட கேட்டா, ஏற இறங்க என்னைப் பார்த்த டோக்கன் கொடுக்கிறவர் , இந்தப் படத்திற்குத் தான் நிறையப் பேர் போறாஙகே என்று மான் கராத்தே படத்தைக் காண்பித்தார். டிக்கெட் எங்கே வாங்குறது என்றவுடன் , தியேட்டருக்கு உள்ளேதான் சார் வாங்க்ணும் என்றார் சீரியசாக. பின்பு கையைக் காட்டினார். ஒரு கூட்டமும் இல்லை, டிக்கெட் வாங்கும் இடத்தில். டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனேன். பஸ்ட் கிளாஸ் என்று டிக்கெட் கொடுத்தார்கள் . ஆனால் சீட்டில் நம்பர் போட்டு , கிட்டத்தட்ட திரைக்கு மிக அருகில் உட்கார வைத்து விட்டார்கள். எல்லோருக்கும் ஒரே டிக்கெட்தானாம். முன்னால் போனால் முன்னாடி போய்த்தான் உட்காரணுமாம். திரைக்குப் பக்கத்தில் உட்காருவதற்கு , முன்னாடியெல்லாம் டிக்கெட் விலை குறையாக இருக்கும். பின்னாடி வர வர டிக்கெட் விலை கூடும். இப்போ எல்லாம் ஒன்று தானாம். தியேட்டரில் திரைக்குப் பக்கத்தில் உட்கார்ந்தால் , உருவங்கள் எல்லாமே பெரிது , பெரிதாய்த் தெரிந்தது

                                     மான் கராத்தே படம். சிவ கார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து உள்ள படம். எடுத்தவுடன் பி.எஸ்.என்.எல். லோகோவைக் காட்டினார்கள். பின்பு பீட்டர் பி.எஸ்.என்.எல்.லில் வேலை பார்ப்பவர் மகன் என்றார்கள். படம் எடுத்தவரோ, நடித்தவரோ  பி.எஸ்.என்.எல்.லில் வேலை பார்ப்பவர் பிள்ளையாக இருப்பார் போலும். எப்படியோ நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தை விளம்பரம் செய்கிறார்கள் என்பது  மகிழ்ச்சிதான் ஒரு லாஜிக்கும் இல்லை, ஒரு உருப்படியான கதையும் இல்லை, ஆனால் 3 மணி நேரம் ஓடியது தெரியவில்லை. குததாட்டம், கும்மாளம், அரை குறை ஆடை டான்ஸ்.,மொத்தமாய் பாடிக்கிட்டே குடி , அடி, .... பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற ஆளு கைதட்டறான், விசில் அடிக்கிறான் , நான் மட்டும் அமைதியாக உட்கார்ந்து படம் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

                                   ஒரு சாமியார் ஆய்த பூசைக்கு மறு நாள் வந்த தினத்தந்தி பேப்பரை( 22 வருடமாக நாங்கள் ஆயுத பூசை அன்று பிரிண்ட் செய்வதில்லை என்று தினத்தந்தி  பத்திரிகை ஆசிரியர் பேட்டி வேறு )  ஆகாயத்தில் இருந்து எடுத்துத்தர, அதை ஐ.டி. படித்து வேலை பார்க்கும் 5 பேர் ஆராய, 4 மாதங்களுக்குப் பிறகு தேதியிட்ட அந்தச்செய்தி எல்லாம் உண்மையாக நடக்க, 2 கோடி ரூபாய் அடைவதற்காக ஒரு தொத்த ஆளை  , வீரனாக்கி, குத்துச்சண்டை போட்டியிலே ஜெயிக்க வைப்பதுதான் மான் கராத்தே படத்தின் கதை.ரெண்டு பீட்டர், கொஞ்சம் செண்டிமண்ட், கொஞ்சம் காதல் , கொஞ்சம் காமெடி அதற்காக குத்துச்சண்டை மைதானத்தையே காமடியாக்கிறது ரொம்ப ஓவர்,  ஆரம்பமே மூட நம்பிக்கை . அப்புறம் எல்லாம் அபத்தம். எப்படியோ மூன்று மணி நேரம் ஓடியது. இரவு 1 மணிக்கு வந்தால் போர் சத்தம் நின்றிருந்தது. இப்படி எல்லாம் மூட நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, ஏற்கனவே படிச்சவன் பாதிப்பேரு மந்திரிச்சுகிட்டு, ஜோசியம் பார்த்துக்கிட்டு அலையுற சமயத்திலே, இப்படி படங்கள் வேறயா, கொடுமையடா என்று எண்ணங்கள் ஓட ஆரம்பிக்க, தூக்கம் போனது


                                  

3 comments:

Anbazhagan Ramalingam said...

Arumaiyana pathivu. Arumaiyana nadai. Nandrigal aiyya

முனைவர். வா.நேரு said...

அய்யா, நன்றி, தங்கள் வருகைக்கும் , கருத்திற்கும்.

J.Jeyaseelan said...

Super sir