Friday, 24 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : என் பார்வையில் பாரதிதாசன்-பி.எல்.இராசேந்திரன் , எம்.ஏ.

அண்மையில் படித்த புத்தகம் : என் பார்வையில் பாரதிதாசன்
ஆசிரியர்                                        :  பி.எல்.இராசேந்திரன் , எம்.ஏ.
வெளியீடு                                      : செல்லம்மாள் பதிப்பகம் , சென்னை-600 014.
முதல் பதிப்பு                                : ஏப்ரல் -2008, மொத்த பக்கங்கள் 198, விலை ரூ 100.
மதுரை மைய நூலக எண்        :  182120

                                                              புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் 3 ஆண்டுகள் உதவியாளராக உடன் இருந்து , தமிழ் கற்றுக் கொண்டவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் இந்த நூலின் ஆசிரியர் பி.எல்.இராசேந்திரன் அவர்கள், சுவை படவும், பல நிகழ்வுகளின் மூலம் புரட்சிக் கவிஞரை முழுமையாக படிப்போர் புரிந்து கொள்ளவும் , அறிந்து கொள்ளவும் இயற்றியுள்ள நூலாக இந்த் நூல் உள்ளது.

                                                          "பாவேந்தர் பார்ப்பதற்கு முரட்டுத்தோற்றம் உடையவர். ஆனால் அவர் ஒரு பலாப்பழம். மேலே முள்ளிருக்கும் , உள்ளே அவ்வளவும் தீங்கனிச்சுளைகள் . அதுபோலவேதான் புரட்சிக் கவிஞர் வாழ்க்கையும் என்று இந்நூலாசிரியர் இந்நூலில் நிறுவியுள்ளார் " என்று அணிந்துரையில் திரு.இரா.முத்துக்குமாரசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

                           " பாவேந்தர் பாரதிதாசன் மீது அப்படியென்ன அக்கறை உங்களுக்கு ? " என்று யாரேனும் கேட்கக்கூடும். அவர் கறுப்பா? சிவப்பா? குணம் எப்படி ? மனம் எப்படி ? என்றெல்லாம் கூடத் தெரியாத சில அதிமேதாவிகள் ' பாரதிதாசனைப்ப் பற்றிப் பேச உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது ? "...எனக்கேட்டுத் துள்ளிக் குதிப்பதையும், ' அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா ? ' எனக்கேட்டு, பாவேந்தருக்கே தொடர்பில்லாத சில கட்டுக்கதைகளைக்  கற்றறிவாளர் அவைகளிலேயே அவிழ்த்து விடுவதையும் நானே கண்டிருக்கிறேன்; கேள்விப்பட்டும் இருக்கிறேன். வேதனைப்பட்டிருக்கிறேன்.
                           சம்பந்தமில்லாதவர்களெல்லாம் தனக்குத்தானே சாயம் பூசிக்கொள்ளுகிறபோது , மூன்றாண்டுகளுக்கு மேல் அவர் கோபத்தில் எரிந்து , அன்பில் நனைந்து , பாராட்டுதலில் மகிழ்ந்து குருகுலவாசம் இருந்த நான் , அவரைப் பற்றிய சில உண்மைகளை இந்நூல் மூலம் பதிவு செய்ய விரும்புகிறேன் " பக்கம் - 6 என்று இந்த நூலின் நோக்கத்தை மிகத்தெளிவாக நூலாசிரியர் முதல் அத்தியாயத்திலேயே வரையறைத்து விடுகின்றார். அதற்கேற்ப பட்டுக் கோட்டையில் முதன் முதலாக ,தற்செயலாக புரட்சிக் கவிஞரை சந்தித்தது, திராவிடர் கழகத்துக்காரர்களான விஸ்வநாதன்(செட்டியார்), இளவரியிடம் தெரிவித்தது , வீட்டிலிருந்து புலால் உணவு கொண்டு போய்க் கொடுத்தது என ஆரம்பிக்கும் நிகழ்வுகளை மிகச்சுவையாக படிப்போர் அறிந்து கொள்ளும் விதமாக நூலாசிரியர் விவரித்துள்ளார்.

                                பாவேந்தரின் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் இந்த நூலில் நூலாசிரியர் விவரித்துள்ளார். அதில் பாவேந்தரின் மாப்பிள்ளையான , வசந்தா அவர்களின் கணவர் மா.தண்டபாணி பற்றியும் , கவிஞரின் மகன் மன்னர்மன்னன் பற்றியும் நிறைய செய்திகளைக் கூறியுள்ளார்.

                                புரட்சிக் கவிஞர் நடத்திய 'குயில் ' இதழ் பற்றியும் அதில் தான் பணியாற்றியது பற்றியும் விரிவாக விவரித்துள்ளார். நூலின் க்டைசிப்பகுதியில் 'குயில்' ஏட்டில் வாராவாரம் எழுதியவர்கள் யார் ? யார் என்னும் பட்டியலை கொடுத்துள்ளார். மதுரைக்காரர்கள் நிறையப்பேர் வருகின்றார்கள் அந்தப் பட்டியலில். 'முதல் பத்திரிக்கை ' அனுபவம் 'என்ற தலைப்பின்கீழ் தான் குயிலில் பணியாற்றியதுபற்றியும் , எந்தவித சமரசமும் இல்லாமல் புரட்சிக் கவிஞர் கொள்கைக்காக மட்டுமே அந்த இதழை நடத்தினார் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். கண்ணதாசன் தன்னைத் தாக்கி எழுதிய பாட்டை , நன்றாக இருக்கிறது என்று ரசித்துவிட்டு, இலக்கணப்பிழையை சுட்டிக்காட்டி, இதனை எழுதிப்போடு என்று  புரட்சிக் கவிஞர் சொன்ன செய்தியைப் பதிந்துள்ளார் நூலாசிரியர் . இதனைப் போல இதழோடு தொடர்புடைய பல நிகழ்வுகள் புதுமையாகவும், வியப்பாகவும் உள்ளன.

                           இன்று திருவள்ளுவர் சிலையைக் காண்கின்றோம். எங்கெங்கும் திருவள்ளுவர் படம் காண்கின்றோம். திருவள்ளுவர் படத்தினை ஆக்குவதற்கான புரட்சிக் கவிஞரின் பங்களிப்பையும் , அதனை பெருந்தலைவர் காமராசர் அவர்களும், டாக்டர் கலைஞர் அவர்களும் நடைமுறைப்படுத்தியதையும் சுட்டிக்காட்டி திருவள்ளுவர் படத்தினை அழுகுற வரைந்த திரு. வேணுகோபல சர்மா அவர்களையும் பெருமைப்படுத்தியுள்ளார்,' திருவள்ளுவர் படமும் புரட்சிக் கவிஞரும் ' என்னும் தலைப்பில்.

                               புரட்சிக் கவிஞரின் இறுதி நாட்கள் பற்றியும், இறுதி ஊர்வலம் பற்றியும் தகவல்களைத் தந்துள்ளார். புரட்சிக் கவிஞருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டபொழுது , கடைசியில் அவரோடு உடன் இருந்தவர் புலவர். ந.இராமநாதன்(கரந்தை) அவர்கள் என்பதையும் , அவர் சொன்ன செய்திகளையும் குறிப்பிட்டுள்ளார். 1983-84-ஆம் ஆண்டுகளில் பெரியாரியல் பட்டயச்சான்றிதழ் அஞ்சல் வழியில் நான் படித்தபொழுது , அதன் இயக்குநராக அய்யா புலவர் .ந. இராமநாதன் அவ்ர்கள் இருந்தார். தந்தை பெரியார் பற்றியும், புரட்சிக்கவிஞர் பற்றியும் அவர் பாடம் எடுத்த காட்சிகள் இன்றைக்கும் கூட என் மனக்கண் முன்னால் ஆடுகின்றன. அப்படி ஓர் ஈடுபாடு, அப்படி ஒரு பற்றோடு அய்யா புலவர் ந.இராமநாதன் அவர்கள் தந்தை பெரியார் பற்றியும் , புரட்சிக் கவிஞரின் பாடல்கள் பற்றியும் வகுப்புகள் எடுப்பார்.  அய்யா புலவர் ந.இராமநாதனுக்கும்  புரட்சிக்கவிஞருக்கும் இருந்த நெருக்கத்தை, உணர்வை இந்தப் புத்தகத்தின் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றார் நூலாசிரியர்.

                                பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் யார் ? யார் என்பதையும், பாரதிதாசனால் தான் கற்றுக்கொண்டதையும் , பொது வாழ்வில் விருதுகள் பல பெற்றுக் கொண்டதையும் நன்றி உணர்ச்சியோடு குறிப்பிடுகின்றார். பாவேந்தர் விருது பெற்றவர்கள், பாவேந்தரின் வாழ்க்கைக் குறிப்புகள், பாவேந்தர் எழுதிய பல பாடல்கள் எழுவதற்காக எழுந்த சூழல் எனப் பல செய்திகள் புதியதாக உள்ளன .. புரட்சிக் கவிஞரின் வாழ்க்கை பற்றி மிகச்சிறப்பாக் எழுதப்பட்டுள்ள நூலாக இந்த நூல் விளங்குகின்றது. 'எனது கவிதைகள்' என்னும் தலைப்பில் இந்த நூலின் ஆசிரியர் பி.எல். இராசேந்திரன் அவர்கள் எழுதியுள்ள கவிதைகள் ' அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை ' என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் பாரதியைப் பாடியதுபோல , புரட்சிக் கவிஞரைப் பற்றிப் பி.எல். இராசேந்திரன் பாடியதாக உள்ளன.  புரட்சிக் கவிஞரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்புவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. 

2 comments:

Geetha M said...

வணக்கம் அய்யா
மிகவும் தேவையான நூல் என்பதை அறிகின்றேன்...”தன்னை எதிர்த்து கண்ணதாசன் கவிதையை பிரசுரித்த தன்மை அவரின் தமிழ் மேல் உள்ள பற்றை காட்டுகின்றது..நான் பாரதிதாசன் இல்லத்திற்குச் சென்ற போது அங்குள்ளவர்களே அதிகம் சென்றதில்லை என்பதை உணர்ந்தேன்....அவரது சமுதாயப்பாடல்கள் பல மறுபிரதியாகவில்லை என வில்வம் கூறி பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட நூல் ஒன்றை காட்டினார்...அரிதான உணர்வூட்டக்கூடிய பாடல்கள் அதில் இருந்தன...இந்நூலையும் வாங்கிப்படிக்கின்றேன்...நன்றி

முனைவர். வா.நேரு said...

வணக்கம் ,
நன்றி , தங்கள் வாசிப்பிற்கும், கருத்திற்கும். இன்னொரு செய்தி இந்த நூலில் உள்ளது. நேற்றுத்தான்(24.10.2014) இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ஆர் அவர்கள் மறைந்தார். புரட்சிக்கவிஞர் அவர்கள் மறைந்தவுடன், கவிஞர் கண்ணதாசன் மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் புரட்சிக் கவிஞர் உடலை கொண்டு செல்ல , கவிஞர் கண்ணதாசன் காரைக் கேட்டபோது " அதென்ன வேட்டியா? புடவையா? மடித்துவைத்து எடுத்துப்போவதற்கு ? என்று கேட்டு வண்டி கொடுக்க மறுத்துவிட்டார். (பக்கம் எண் 134) என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் டாக்டர் மு.வ. அவர்கள் சென்னையில் உள்ள புரட்சிக்கவிஞர் வீட்டிற்கு உடலைக் கொண்டுசெல்ல காரைக்கொடுத்ததையும் , பின்ன்ர் " பிற்கு பிற்பகல் இலட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ஆர்.அவர்கள் வண்டி கொடுக்க, அவ்வண்டியில்தான் புரட்சிக்கவிஞர் அவர்களது புகழுடலானது புதுவைக்கு எடுத்துச்செல்லப்பட்டது " பக்கம் 135 . என்ற செய்தி உள்ளது.