Friday, 21 November 2014

நிகழ்வும் நினைப்பும்(25) : அதீத நெற்றிக்குறியீடும் உள்ளுணர்வும்

நிகழ்வும் நினைப்பும்(25) : அதீத நெற்றிக்குறியீடும்  உள்ளுணர்வும்

                                 சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால் எனது மகள் தனியாக பள்ளி சென்று வந்தார். நேற்று அப்பா , நான் பள்ளியிலிருந்து சேர் ஆட்டோவில் வந்தேன். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இன்னொரு பெண் உடன் இருந்தார். பின் நான் மட்டும் தனியாக ஆட்டோவில் வந்தேன். நம்முடைய  பேருந்து நிறுத்தம் வருவதற்கு முன்பே , மூன்று ஸ்டாப்புகளுக்கு முன்னாலேயே இறங்கி விட்டேன் என்றார். ஏன் ஆட்டோ ஓட்டுகிற ஆள் ஏதும் தேவையில்லாமல் பேசினானா? எனக்கேட்டேன். இல்லைப்பா, அதெல்லாம்  ஒன்றும் இல்லை. " நெத்தி நிறைய பட்டை, கழுத்திலே ஒரு உத்திராட்சக் கொட்டை,அதில குங்குமப்பொட்டு வேறு பெரிசா நெத்தியிலே " பார்த்தாலே பெரிய ஏமாற்றுக்கார ஆள் மாதிரி இருந்துச்சு, அதுவும் வர்ற வழியல கோயில்கிட்டே ஆட்டோவை நிப்பாட்டி நிப்பாட்டி சாமி கும்பிட்டுக்கிட்டே வந்தாரு, அதனாலே இறங்கிட்டேன்  என்றார். சரி , நீ விபரம் தெரிந்த பெண், உனது உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி செய், நல்லதுதான் நீ இறங்கியது என்றேன் நான்.

                                       என் மகள் சொன்ன செய்தியைக் கேட்டதும் இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்தது. 1988-89 களில் பெரியகுளத்தில் தங்கியிருந்தபோது , விடுதி போன்று ஒரு வீட்டில் அறைகளில் தங்கியிருந்தோம். எனது அறைக்கு பக்கத்து அறையில் எல்.ஐ.சி-யை சார்ந்த வளர்ச்சி அதிகாரி (D.O) காளிமுத்து தங்கியிருந்தார். இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டிருப்போம் . அவருடைய கிராமத்துக் கதை, என்னுடைய கிராமத்துகதை என்று ஓடிக்கொண்டிருக்கும். ஒரு அறையில் நான் முதலில் இருந்து இருக்கிறேன் என்றால் அந்த அறைக்கு யாரும் புதிதாக வந்தால் , நான் அவரிடம் வாடகை வாங்கிக்கொள்ளலாம் . ஆனால் வீட்டுக்காரரிடம் மொத்த வாடகையை நான் தான் கொடுக்கவேண்டும். ஒரு நாள் பக்கத்து அறைக் காளிமுத்து, சார் எனது ரூமூக்கு புதிதாக ஒருவர் வந்திருக்கின்றார். இப்போ இருக்கிற பணப்பிரச்சனைக்கு வாடகையை பகிர்ந்துகொள்ள ஒருவர் வந்து விட்டார் என்றார். நான் பக்கத்து அறையில் போய்ப்பார்த்தேன். ஆள் நெற்றி நிறையப்பட்டை, குங்குமப்பொட்டு என்று வித்தயாசமான கெட்டப்பில் இருந்தார். பக்கத்து சர்க்கரை ஆலையில் வேலை பார்ப்பதாகச்சொன்னார்.

                            தனியாக  நண்பர் காளிமுத்துவிடம் , " சார் ,ஆள் ஒரு மாதிரியா இருக்கிறார். வாடகை அட்வான்ஸ் பணம் வாங்குங்கள் , கொஞ்சம் கவனமாக இருங்கள் " என்றேன். உடனே  காளிமுத்து' " சார், நீங்க தி.க.காரங்களே இப்படித்தான் சார். பக்திமானா இருக்கிறவங்க எல்லாம் நல்ல்வங்க இல்லையா ? " என்றார். எனக்குத்தெரிந்தே நிறையப் பேர் இருக்கின்றார்கள். எனது ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர் போன்றவர்கள் எல்லாம் பக்திமான்கள்தான். பல பேரை வாழ்க்கையில் உயர்த்தி விட்டவர்கள். ஆனால் பக்திமான் வேறு, பக்திமான் மாதிரி நடிக்கிறவன் வேறு. அதீத நெற்றிக்குறியீடு என்றாலே ஆபத்து என்பது எனது எண்ணம் " என்று சொல்லிவிட்டு சில விளக்கங்கள் சொன்னேன். ஆனால் அவர் ஏற்கவில்லை, கடுமையாக விவாதித்தார்.

                          முதல்மாதம் முடிந்தது. புதிதாக குடி வந்த ஆள் வாடகை கொடுக்கவில்லை. "சார் , ஏதோ அவங்க கம்பெனியில சம்பளம் லேட்டா போடுவாங்களாம், சம்பளம் போட்டவுடன் கொடுத்து விடுகின்றேன் என்று சொல்கின்றார்  " என்று காளிமுத்து சொன்னார். சரி, அவர் பாடு, அவரது புது பார்ட்னர் பாடு என்று இருந்து விட்டேன். பின் சில நாள் கழித்து  " சார் , என் பையில் இருந்த வாட்சைக் காணாம் சார், பணம் 1000 காணாம் சார் " என்றார். அதற்குப் பின் அந்தப் பட்டை அடித்த ஆள் வரவும் இல்லை, அவரைப் பற்றி விவரமும் தெரியவில்லை. பக்கத்து ஊர் சர்க்கரை ஆலையில் கேட்டதற்கு அப்படி ஒரு பெயரில் ஒரு ஆளும் இங்கு வேலை பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள்:. பாவம் காளிமுத்து நொந்து போனார். பின்பு பார்க்கும் நேரங்களில் கேட்பார் , "எப்படி சார் பார்த்தவுடன் சொன்னீர்கள் " என்பார். நான் சிரித்துக்கொண்டே," யார் அதீதமாக நெற்றிக்குறி ,பட்டை, குங்குமப்பொட்டு வைத்திருக்கின்றார்களோ, அவர்களை நம்பாதே  என்பது எங்கள் கருத்து"  என்று சொன்னதாக ஞாபகம். அந்த நாள் ஞாபகத்தை நினைவு படுத்திய எனது மகளுக்கு நன்றி.

                                     

No comments: