Thursday, 1 October 2015

வலைப்பூ உலகத்திற்குள் வாருங்கள் ! .....வானகத்தில்
மழை நேரத்தில்
வில்லின்
வண்ணங்கள்
விரிந்து எழுவது போல்
எண்ணச்சிறகுகளை
இணையத் தமிழில்
வலைப்பூக்களில் அச்சிட்டு
எவர் படிப்பார் ?
எந் நாட்டில் படிப்பார் ?
படித்தபின்பு
பாராட்டா
இடித்துரைப்பா
எனும்
எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி
எழுதுகின்றார் உலகமெங்கும்
தமிழர்களில் ஒரு சிலர் ....

செத்து விடும் என்பான் தமிழை
சில பேர் ...
பட்டு விடும் என்பான் தமிழை
சில  பேர் ....
சாகா நிலை பெற்ற
நடப்பு உலக மொழி
என் மொழி தமிழ் என்பதால்தான்
இக்கட்டில் வாழும் இடத்திலும்
இணையத்திலும் எழுதி எழுதிக்
குவிக்கின்றார் எம் தமிழர் ....

அடிமை விலங்கை உடைக்கும்
ஆயுதங்கள் வலைப்பூக்கள்
எமக்கு எனப் பெண்கள் சிலர்
வரையத் தொடங்கியபின்புதான்
கைவிலங்கை உடைக்க
இப்படியும் ஓர் ஆயுதமா ?
என உணரத் தொடங்குகிறது உலகம் !

வலைப்பூ எழுத்தாளர்கள்
வங்கதேசத்தில்
இன்னுயிரை இழந்திருக்கின்றார்கள்
இன்னும் பல உயிரை
பலியிடவேண்டும் எனப்
பழமைவாதிகள் துடிக்கிறார்கள்..
விழும் ஒவ்வொரு தலைக்கும்
ஈடாய் ஓராயிரம்
தலை முளைக்கும்
பழமையின் பத்தாம்பசலித்தனங்களை
உடைத்து நொறுக்கும்

விரிந்து கிடக்கிறது பிரபஞ்சம் !
பரந்து கிடக்கிறது
வீட்டில் இடத்தை
அடைக்காத
இணைய தள வலைப்பூக்கள் !
வாருங்கள் இளைஞர்களே!
வாருங்கள் மாணவர்களே !
உங்களை உங்களாகவே
உலகம் உணர்ந்து கொள்ள
அறிவியல் தந்த
அரிய வாய்ப்பு! வாருங்கள்!
வலைப்பூ உலகத்திற்குள்
வாருங்கள் !


கொட்டுகின்ற வார்த்தைகள்போல்
தட்டுகின்ற வார்த்தைகளால்
வலைப்பூவை அலங்கரித்து
வந்தவர்க்கு
கருத்து தந்தவர்க்கு
நன்றி கூறி
எழுதி   எழுதித்   தினமும்
சேர்ந்தாரை எல்லாம்
ஒன்றிணைத்து
வலைப்பதிவர் திருவிழாவென
பெயரிட்டு
முத்து நிலவு
ஒருங்கிணைக்க
புதுக்கோட்டையில்
இணையப் படை அமைக்கும்
 தோழர்களே  ! தோழியர்களே  !
வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !

                                வா. நேரு , 01.10.20156 comments:

Muthu Nilavan said...

தோழரே வணக்கம். விழாவைப் பற்றிய கவிதைப் பதிவு பார்த்து மகிழ்ந்தோம்
மிக்க மகிழ்ச்சி. தங்கள் மின்னஞ்சல் வேண்டும் - அழைப்பிதழ் அனுப்ப.
எனது செல்பேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாலும் போதும். உடல்நலத்தைப் பார்த்துக்கொண்டே பணிகளையும் தொடர வேண்டுகிறேன். வணக்கம்.

Muthu Nilavan said...

நமது விழா அழைப்பைத் தங்கள் தளத்தில் பகிர்ந்து தங்கள் பாணியில் அழைப்பு விடுக்க அன்புடன் அழைக்கிறேன். நன்றி தோழரே!

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழரே, அனுப்பி வைக்கின்றேன். இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு முதல் பதிவு வலைப்பதிவர் சந்திப்பு பதிவுதான். பெரிய முயற்சியை கூட்டு முயற்சியாக்கி இணைந்து செயல்படும் அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

உடல் நலத்தினை கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா

முனைவர். வா.நேரு said...

உடல் நிலை தேறி வருகின்றேன். நன்றி அய்யா.

முனைவர். வா.நேரு said...

பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் , எனது பெருமரியாதைக்குரிய மனிதநேயர், மருத்துவர் சிகாகோ மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களின் வாழ்த்து செய்தி "மூடப்பழக்கங்களை ஒழித்து, சாதியற்ற சமுதாயத்தில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ இணையம் ஒரு ஒப்ப்ற்ற கருவி ! ஆதிக்க அயோக்கியர்களால் தொட முடியாத ஒரே கருவி ! நன்கு பயன் படுத்தி இளைய தலைமுறை முன்னேற வழி வகுப்போம் "