Sunday, 12 February 2017

குரங்கிலிருந்து வளர்ந்து வந்த மனுசங்கடா.......

உலகத்தின் போக்கையே மாற்றியமைத்த அறிவியல் அறிஞர் சார்ல்ஸ் ராபர்ட் டார்வின்(Charles Robert Darwin) அவர்களின் பிறந்த நாள்(பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) இன்று . 1809 ஆம் ஆண்டு பிறந்தவர். இன்று 2017,பிப்ரவர் 12. ஏறத்தாழ 208 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தவர். அன்றைய கால கட்டத்தில் இருந்த உலகம் பற்றி இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மன்னர்களின், நாடுகளின் வரலாற்றைப் படிப்பதுபோலவே  பகுத்தறிவு அடிப்படையிலான உலக வரலாறு என்று ஒன்று எழுதப்பட்டால் அதில் மிக முக்கியமான வரலாறு  சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் அவர்களுடைய வரலாறாக இருக்கும். அதுவரையில் உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றுதான் அனைவரும் நம்பினார்கள். அதிலும் உலகத்தில் உள்ள உயிரினங்கள் எந்த எந்த தோற்றத்தில் உள்ளனவோ அதே தோற்றத்தில் கடவுளால் படைக்கப்பட்டவை என்று நம்பினார்கள். இன்றைக்கும் கூட அப்படி நம்புவர்கள் உண்டு.ஆனால் அப்படி நம்பக்கூடியவர்கள் உலகம் முழுவதும் எடுத்துக்கொண்டால் 10 சதவீதம் கூடத்தேறாது. ஆனால் அன்றைக்கு 100-க்கு நூறு சதவீதம் உலகத்தில் உள்ள உயிர்னங்கள் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது என்று நம்பிய நேரத்தில் தனது அறிவியல் அடிப்படையிலான ஆராய்ச்சி முடிவால் அந்த நம்பிக்கையைத் தகர்த்தவர் சார்லஸ் ராபர்ட் டார்வின் அவர்கள்..

டார்வின் அவர்களின் ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக இன்றளவும் அறிவியலில் ஏற்படும் மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. இருதய வால்வு மாற்றங்களில் மனிதர்களின் இருதய வால்வுக்குப் பதிலாக அறுவை சிகிச்சையின் மூலம் பன்றியின் இருதய வால்வுகள் பொருத்தப்படுகின்றன. பன்றி கொடுக்கும் உடல் உறுப்பு நன்கொடையால் மனிதர்களின் வாழ்வு நீடிக்கின்றது. மரபியல்  அறிவியல் , உலகம் முழுவதும் இருக்கும் மனிதர்களின் மூதாதையர்களின் தொடர்ச்சியை கணினி மூலம் கண்டுபிடிக்க உதவுகிறது. 'நாங்கள் கடவுளின் முகத்தில் இருந்து பிறந்தவர்கள்' என்று பிதற்றிக்கொள்ளும் பேதமைக்கு எல்லாம் டார்வினின் கோட்பாடு முடிவுரை எழுதியிருக்கிறது.

1859-ஆம் ஆண்டு டார்வின் வெளியிட்ட புத்தகம் உலக நடப்பையே, சிந்தனையையே புரட்டிப்போட்ட புத்தகம். 'இயற்கைத் தேர்வு மூலமாக உயிர்னங்களின் தோற்றம் ' என்னும் அந்தப்புத்தகம் வெளியிட்ட நாளிலேயே 1000 பிரதிகள் விற்றுத்தீர்ந்தன என்று படிக்கும்போது வியப்பு ஏற்படுகிறது. இன்றைய நவீன கருவிகள் உலகில் வெளியிடும் நாளில் 100 புத்தகங்கள் விற்றாலே பெரிது என்று நினைக்கும் நிலையில் இப்படிப்பட்ட அறிவியல் தொடர்புகள் இல்லாத நிலையில் அவரின் புத்தகம் அப்படி ஒரு விற்பனையை ஏற்படுத்தியது என்றால் , அதனைப் பற்றிக்கேட்டவர்கள் எல்லாம் வாங்குவதற்கு ஓடியிருப்பார்கள் போலும் .'உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும் ,வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும், மற்றவை அழிந்து போகும் ' என்பது டார்வினின் கோட்பாடு. ஆனால் மனிதர்கள் நாம். வாழ்க்கைப்போராட்டத்தில் வலிமை இல்லாதவர்களும் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.டார்வின் தனது கொள்கையை வெளியிட்ட காலத்தில் அது மனிதனுக்குப் பொருந்தாது என்று மக்கள் நினைத்திருக்கின்றனர். விலங்குகளுக்கும் செடி, கொடிகளுக்கும் அது பொருந்தக்கூடும் என்று நினைத்திருக்கின்றனர். ஆனால் மனிதர்களுக்கும் அது பொருந்தும் என்று அறிவியல் அடிப்படையில் டார்வின் விவரித்தபோது மதவாதிகள் கண்டனம் தெரிவித்தனர். அன்று முதல் இன்றுவரை அவரது கோட்பாடு அறிவியல் உண்மை என்றாலும் மதவாதிகள் அந்தக்கோட்பாட்டை நம்ப மறுக்கின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்றளவும் டார்வின் கொள்கை பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை என்று கேள்விப்படுகிறோம்.

அறிவியல் அறிஞர்கள் உலகத்தை மாற்றியிருக்கிறார்கள். கண்டுபிடிப்புகளின் உதவியால் வாழ்க்கைத் தரத்தை மாற்றியிருக்கிறார்கள். டார்வின் அவர்களைப் பொறுத்தவரையில் உலகத்தின் நம்பிக்கையை மாற்றியவர். இந்தியாவைப் பொறுத்தவரையில் சாதிக்கொடுமைக்கும் அடிப்படையாக இருப்பது வர்ணாஸ்சிரமம் எனப்படும் சாதி அடுக்குமுறைத் தத்துவம். கடவுள் தன்னுடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொரு வர்ணத்தைப் படைத்தார் என்னும் அந்தத் தத்துவம்தான் இன்றைக்குவரைக்கும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளின் தத்துவமாக இருக்கிறது. அந்த அமைப்பைச்சார்ந்தவர்கள் இன்றைக்குவரைக்கும் 'சாதி ' வேண்டும் எனச்சொல்வதற்கு அவர்களின் கடவுள் நம்பிக்கையும் , அந்தக் கடவுளின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட சாதி அமைப்பு முறையால் உயர் ஜாதிக்காரர்களுக்கு கிடைத்த வாய்ப்புமே காரணம். அப்படிப்பட்டவர்கள் சார்ல்ஸ் டார்வினை ஆழமாகப் படிக்க வேண்டும். இன்றைக்கு வளர்ந்திருக்கும் மரபியல் அறிவியலைப் படிக்கவேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் சார்லஸ் இராபர்ட் டார்வின் கொள்கை ஜாதி முறையின் தோற்றத்தோடும் வளர்ச்சியோடும் இணைத்து பேசப்படவேண்டும்.அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டிய சமமில்லாத ஏணிப்படியிலான சாதி முறையைத் தகர்ப்பதற்கு டார்வின் கொள்கை பயன்படுத்தப்படவேண்டும். 'மனுசங்கடா, நாமெல்லாம் ஒரே மாதிரி குரங்கிலிருந்து வளர்ந்து வந்த மனுசங்கடா, இங்கே எங்கே வந்தது உசந்த சாதி, தாழ்ந்த சாதி, மனுசங்கடா நாமெல்லாம் ஒரே மாதிரி குரங்கிலிருந்து வளர்ந்து வந்த மனுசங்கடா' என்று பாடுவதற்கும் , அதனைப் பரப்புவதற்கும் டார்வின் கொள்கையைப் பயன்படுத்தவேண்டும்.

  சார்லஸ் இராபர்ட் டார்வின்  புகழ் என்றும் உலகில்  நிலைத்து நிற்கும். வாழ்க சார்ல்ஸ் ராபர்ட் டார்வின்....

வா.நேரு, 12.02.20172 comments:

anandam said...

அருமை

முனைவர். வா.நேரு said...

வலைத்தளத்தில் தொடர்வதற்கும் கருத்திற்கும் நன்றி.