Tuesday 16 May 2017

மாற்றும் வலிமை மிக்கதாக வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி 12 .......

மாற்றும் வலிமை மிக்கதாக வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி 12 .......








தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தோழர்கள், பகுத்தறிவாளர் கழகத்தோழர்கள், நண்பர்கள் மிக நல்ல முறையில் வாழ்வியல் சிந்தனைகள் 12 ஆம் தொகுதி புத்தக அறிமுகத்தினை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். 10,000 மைல் தூரப் பயணம் ஒரு அடியில்தான் துவங்குகின்றது எனச்சொல்வார்கள். ஆம் 1000 ஆவது வாழ்வியல் கட்டுரையைத் தாங்கி அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் 12 ஆம் தொகுதி வெளிவந்திருக்கின்றது. வீட்டில் இருக்கும்.
வாழ்வியல் சிந்தனைகள் தொகுதிகளில் முதல் தொகுதியை எடுத்துப் பார்க்கின்றேன். எனது வாழ்க்கை இணையருக்கு 20.3.2004 அன்று பரிசாக அந்தப் புத்தகத்தை அளித்து, ‘முழுமையாக இந்த நூலைப் படிக்கவும். படித்த பின்பு தன்னையும் என்னையும் மாற்ற ஆலோசனைகள் கூறவும்‘ என்று கையொப்பமிட்டிருக்கின்றேன். ஆம். வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பு என்பது படிப் பவரையும் பக்கத்தில் இருப்பவரையும் மாற்றும் வலிமை மிக்கதாக தொகுதி 1 முதல் தொகுதி 12 வரை இருக்கின்றது.
வாழ்க்கை என்பது முரண்பாடுகளால் நிரம்பி இருக்கின்றது. இன்பமும் துன்பமும் இரண்டு சக் கரங்களாகக் கொண்டுதான் வாழ்க்கைப் பயணம் ஓடிக்கொண்டிருக்கின்றது. புதிய பொருளாதாரக் கொள்கை,தாராளமயம்,தனியார்மயம்என்று ஆகிப்போன வாழ்க்கைக் சூழல் ஒரு நிரந்தத் தன்மை இல்லாத வாழ்க்கையாக இருக்கின்றது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மேலும் மேலும் வளர, ஏழைகள் மேலும் ஏழைகளாகும் கொடுமை தொடர்ந்துகொண்டிருக்கின்றது.மீண்டும்ஒரு நெருக்கடிநிலைவந்துவிடுமோஎனும்அரசியல் சூழல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. கொள்கை அடிப்படையில்அமைந்தபலவிதமான நூல்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத்தால்வெளியிடப்படுகின்றன.படிக்கின்றோம். பகிர்கின்றோம்.ஆனால்மிகத்தீவிரமாககொள் கைத் தளத்தில் இயங்கவேண்டிய அதே நேரத்தில் நமது வாழ்க்கையையும் நம்மைச் சுற்றிவாழ்வோர்களின்வாழ்க்கையையும்செம் மைப் படுத்திக்கொள்ள சில நேர்மறைச் சிந்தனைகள் தேவைப்படுகின்றன. அந்த நேர்மறைச் சிந்தனை என்பது எதார்த்தமாகவும், வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களாகவும் அமைகின்றபோது மற்றவர் களுக்கு அது படிப்பினையாகின்றது.அப்படிப்பட்ட படிப்பினையை வாசிப்போர்க்கு வழங்குகின்ற அற்புத நூல்களாக அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் தொகுதிகள் அமைந்திருக்கின்றன.
வாழ்வியல் சிந்தனைகள் முதல் தொகுதியின் முன்னுரையில் அய்யா ஆசிரியர் அவர்கள், ‘நான் பலவிதமான நூல்களை விரும்பிப் படிப்பவன். தத்துவங்களையும், அரசியல், சமூகவியல், வரலாறு களையும் படிக்கும்போது, அவை மிகுந்த சிந்தனை அலைகளை உருவாக்கும். மிகவும் கருத்தூன்றிப் (சீரியசாக) படிக்கவும் வேண்டியிருக்கும். அவை களிலிருந்து விடுபட்டு இளைப்பாற மென்மையும், இனிமையும், சுவையும் கலந்த நூல்களைப் படிப்பது வாடிக்கை. அத்துடன் பல செய்திகளையும் வாழ்க்கையின் நிகழ்வுகளையும் கூர்ந்து பார்க் கும்போது இதுபற்றி ஏன் தெளிவு படுத்தி எழுதக்கூடாது என்ற எண்ணமும் நமக்குள்ள நிறைகளைவிட, குறைகளை ஆராய நம்முள் ஏன் ஒரு உரத்த சிந்தனை ஏற்படக்கூடாது என்று நினைத்து இக்கட்டுரைகளை விளையாட்டாக எழுதத்தொடங்கினேன்.இதற்கு‘விடுதலை’ வாசக நேயர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு என்னை மலைக்க வைத்தது. பலதரப்பட்ட நண்பர்கள், நலம் விரும்பிகள், சான்றோர்கள் அனைவரும் இதைப்படித்து வரவேற்றனர்; பாராட்டி மேலும் எழுத ஊக்கப்படுத்தினர். சந்தித்த பல இருபால் குடும்ப நண்பர்கள்- இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் உட்பட இதுஎங்களுக்காகவே எழுதப்பட்டதுபோல் இருந்தது என்று உளந்திறந்து மகிழ்ந்தனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். என்னைப் போன்றவர்கள் வாழ்வியல் சிந்தனைகளில் வரும் கருத்துக்களின் செழுமைகளைப் பற்றிப் பேசுகின்றபொழுது 5 ஆம் தொகுதியில் ஏழாம் தொகுதியில் எனத் தொகுதிகளைக் குறிப்பிட்டு பேசுவது வழக்கம்.
ஆனால், பல தோழர்கள் கட்டுரைகளின் எண்களை வைத்துத்தான் பேசுவார்கள். மதுரை மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் அ.முருகானந்தம்அவர்கள்மதுரையில்மொத்தப் பழக்கடை வைத்திருக்கின்றார். பழங்களோடும் பழங்களை அவரிடம் வாங்கி விற்கும் சிறு வியா பாரிகளோடும்தான்அவரதுவாழ்க்கையின்பெரும் பகுதி கழியும். கடும் உழைப்பால் தான் உயர்ந்தது மட்டுமல்லாமல் தனது உடன் பிறந்தவர்களான அ.வேல்முருகன், அ.இராமமூர்த்தி போன்றவர் களும் வாழ்வில் உயர்வதற்கு காரணமாக இருந்தவர், இருப்பவர்.   நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படிக்கின்றார்.
வாழ்வியல் சிந்தனைகளை அவர் படித்து மனதில் நிறுத்தி வைத்திருக்கும் தன்மை கண்டுநானேவியப்படைந்திருக்கின்றேன் (மதுரை வழக்கில் சொல்வதென்றால் அரண்டு போயிருக்கின்றேன். அப்படி ஒரு உள்வாங்குதல்). தோழர்களோடு பேசும்போது பொது ஒழுக்கம் பற்றிப் பேச்சு வந்தால் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை 43 இல் ஆசிரியர் சொல்லியிருக்கின்றார் என்பார். தனது மகன் திருமணத்தில், மணமகளின் அப்பாவிடம் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை 378 அய் படியுங்கள் எனக் கொடுத்தவர். கொடுத்து விட்டு ரொக்கம், நகை போன்ற பேச்சுக்கள் பேசு பவர்கள் ‘மணச்சந்தையில் மனமில்லா பிராணிகள்’ என்று எடுத்துரைத்தவர். வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை 378-த்தான் தன்னை தனது சம்பந்தி புரிந்துகொள்வதற்கு அடிப்படையாக அமைந்த கட்டுரை என்றவர். உங்க ஆயுளில் இன்னும் 20 வருடம் கூட்டவேண்டுமா வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை 216-அய் படியுங்கள் என்பார். இப்படி பல தோழர்கள் கருத்துகளோடு கருத்துகளைத் தாங்கி நிற்கும் வாழ்வியல் கட்டுரையின் எண்ணையும் மனதில் நிறுத்தி வைத்திருக்கின்றார்கள். அப்படிப் பட்ட தோழர்களுக்கு 1000 ஆவது கட்டுரை வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி 12 இல் வெளிவந்திருக்கின்றது.
திருக்குறள் 1330 குறட்பாக்களை உள்ளடக்கியது. அறத்தைப் பேசும் திருக்குறள் பொருளைப் பேசுகின்றது. பொருளைப் பேசும் திருக்குறள் இன்பத்தைப் பேசுகின்றது. வாழ்க்கையின் நிலை யில்லாத தன்மைபற்றி பேசும் திருக்குறள் நிலைத்து நிற்பவை எவை எவையெனப் பேசுகின்றது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு இரு வரிகளால் ஆன திருக்குறள் கருத்துகளுக்கு  வாழ்வியல் நிகழ்வுகளோடு விளக்கம் சொல்லும் கட்டுரைகள் போல வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகள் அமைந்துள்ளன. வாழ்வியல் சிந்தனைகள் பேசாத பொருள் இல்லை, தொடாத தலைப்புகள் இல்லை என நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளும், நம் மனதிற்குள் நிகழும் நிகழ்வுகளும் இரத் தினச் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ள கட்டுரை களாக வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகள் அமைந்துள்ளன. இளையோர் காதல் முதல் முதியோர் காதல்வரை, புத்தகம் முதல் மரணம் வரை, குழந்தைகள் சுதந்திரம் முதல் ‘முதி யோர்களிடம் பரிவு காட்டுங்கள்’ என்பதுவரை இந்த வாழ்வியல் சிந்தனைகள் தொட்டிருக்கும் வாழ்க்கைக்கோடுகள் எண்ண இயலாதவை.
வாழ்வியல்சிந்தனைகள்தொகுதி12இல், பதிப்பகத்தார் வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி-1 முதல் வாழ்வியல் சிந்தனைகள் 12வரைஒவ்வொருதொகுதியிலும்இடம்பெற் றிருக்கும் கட்டுரைகளில் காணப்படும் தனித் தன்மையான பொதுத்தலைப்புகளைப் பட்டியலிட் டிருக்கின்றார்கள்.
அந்தவகையில்12ஆம்தொகுதியை‘இந்த பன்னிரெண்டாம் தொகுதியில்’ எனக் குறிப் பிட்டு,‘மூளையைப்பாதுகாக்கதவிர்க்கவேண் டிய தவறுகள், வள்ளுவர் கூறும் நல வாழ்வி யல், ஊட்டச்சத்து, நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வுக்கட்டுரைகள், துக்கம், கவலை போன்றவற்றிலிருந்து வெளிவருவது எப்படி? நீண்டகாலம்வாழ்ந்தமக்களிடமிருந்துகிடைத்த 12 ரகசியங்கள் எனப்பல் துறைத் தகவல்களைக் கொண்டது’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
நல்ல சரியான ஒரு குறிப்புரையாக பதிப்புரை உள்ளது. வாழ்வியல் சிந்தனைகள் 12 ஆம் தொகுதியில் ‘விந்தன் என்ற விந்தையாளர்- புரட்சி யாளர்’ என்னும் தலைப்பில் மூன்று கட்டுரைகள் உள்ளன. காமுகனும் திருந்தும்வண்ணம் ஏழைப் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் கொடுமைதனை விந்தனின் கதைமூலம் விவரிக்கும் பாங்கைப் பார்க்கலாம். விந்தன் எனும் எழுத்தாளர் இப்போது இல்லை, மற்றோர் அவரைச்சரியாக அடையாளம் காட்டாதநிலையில்,ஆசிரியர்வாழ்வியல்சிந்த னைகளில் அவரின் அருமையைச் சுட்டிக் காட்டி இன்றைய தலைமுறை அவரின் கதை களைத் தேடிப்படிக்கவேண்டும் என எண் ணத்தை வாழ்வியல் சிந்தனைகள் மூலம் விவரித் திருக்கின்றார். மதுரையில் ‘புத்தகத் தாத்தா’ என்று அழைக்கப்படும், தமிழில் முனைவர் ஆய்வு செய்வோர் அனைவர்க்கும் அரிய நூல்களை வழங்கும் பெருமைக்குரிய அய்யா முருகேசன் அவர்கள் பற்றி கட்டுரை 917 இல் ‘கவலைப்பட நேரமில்லை’ என்னும் தலைப்பில் ஆசிரியர் விவ ரித்திருக்கின்றார். ஆம், அவரது எளிமை, அவரது தொண்டறம் என்பது மதுரையில் பல கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் அறிந்த ஒன்று.
ஆம்,அடுத்தவர்களுக்குதொண்டறம்செய் வதற்காகத் தனது வாழ்க்கை என்று அமைத்துக் கொண்டவர்களுக்கு கவலைப்பட ஏது நேரம். தன் வீடு... தன் குடும்பம் என எந்த நேரமும் கவலைப்படுபவர்கள் மத்தியில் அடுத்தவர்களுக்கு தொண்டறம் ஏதோ ஒரு வகையில் என்று ஆற்ற முனைந்தால் பின் எங்கே கவலை வாழ்க்கையில்.....
வாழ்வியல் சிந்தனை தொகுதி 12-அய் அறி முகப்படுத்தும் நமது தோழர்கள் நாம் படிப்பதோடு நிறுத்தாமல், பொதுவெளியில் உள்ள பலரிடம் இந்த புத்தகங்கள் சென்றடையப் பணியாற்ற வேண்டும். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி, கடவுள் பக்திக்காரர். அவர் ஒருமுறை என்னிடமிருந்து வாழ்வியல் சிந்தனைகள் 5 ஆம் தொகுதியை வாங்கிச்சென்று படித்துவிட்டு, புத்தகம் விலைக்கு வேண்டுமென்றார். கொடுத் தேன். எவ்வளவு கருத்தாழமிக்க புத்தகம் இது. தினந்தோறும் இரண்டு கட்டுரைகளை விடாமல் தொடர்ந்துபடித்துக்கொண்டிருக்கிறேன்என்றார். படிக்கும் எவரையும் ஈர்க்கும் தன்மையுள்ளதாக வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகள் அமைந் துள்ளன. நிறைய சென்று சேர்ந்திருந்தாலும் இன்னும் சேர்க்கவேண்டிய எண்ணிக்கை அதிக மாக இருக்கின்றது என்பதைத் தோழர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
வாழ்வியல் சிந்தனைகள் 12 ஆம் தொகுதியின் நுழைவு வாசலில் ‘எண்ணாமல், எண்ணியதை எழுதினேன்’ என ஆசிரியர் எழுதியிருக்கின்றார். அதில்,‘எண்ணிக்கைகாகவோ,எழுதிஇடத்தை நிரப்பவேண்டும்என்பதற்காகவோநான்எழுதிய தில்லை! உணர்ந்தபோதும், உந்தப்பட்டபோதும் தான் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ வடிவம் எடுத்தன! தாகம் எடுத்துக்கொடுக்கும் தண்ணீருக்குத்தானே பயன் அதிகம்? அதுபோல விளையாட்டு போல தொடங்கி, விளைவுகளை -மாற்றங்களை பலரது வாழ்வில் உருவாக்கிய இக்கட்டுரைகள் மூலம் இவ்வளவு சமூக விளைச்சல் வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. இதை விட ஒரு கருத் தாளனுக்கு  மகிழ்ச்சி, ‘‘மதிப்பூதியம்தான் வேறு எது?’’ என்று குறிப்பிடுகின்றார்.
வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகளை வாசித்ததால் எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றம், எனது இணையர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம், எனது நண்பர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என மாற்றங்களை விவரித்துக்கொண்டே நமது தோழர்கள் செல்கின்றனர். பலன் கொடுக்கும் மரம்தானே நல்ல மரம். அதுவும் தித்திக்கும் இனிப்பும், தெவிட்டாத உடல் நலனுக்கும் உகந்ததாக அந்த மரத்தின் சுளைகள் அமைந்துவிட்டால், எடுத்து எடுத்து சுவைப்பதுதானே நமது வேலை. பலன் கொடுக்கும் நல் மரமாய் நமக்கு வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்புகள் அமைந்துள்ளன. பயன்படுத்தி நலம் பெறுவோம்,வாழ்வில் வளம் பெறுவோம், மற்றவர்கள் நலம் பெறவும் வளம் பெறவும் வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி 12 அய் விழாக்களில், நிகழ்வுகளில் பரிசாக அளிப்போம்.

நன்றி : விடுதலை 10.05.2017


No comments: