Wednesday 13 September 2017

அண்மையில் படித்த புத்தகம்: மேடையில் பேசலாம் வாங்க!....கோ.ஒளிவண்ணன்

அண்மையில் படித்த புத்தகம்: மேடையில் பேசலாம் வாங்க!
ஆசிரியர்                  :  கோ.ஒளிவண்ணன்
பதிப்பகம்                  :  எழிலினி பதிப்பகம்,சென்னை-8,044-28193206,044-42146994
விலை                    : ரூ 150.00, ஒலிப்புத்தகத்துடன்- ரூ 200
மொத்த பக்கங்கள்          : 133




                         மேடையில் பேசலாம் வாங்க! என்ற இந்த புத்தகத்தைப்படித்து முடித்தவுடன் கல்லூரியில் படிக்கும் எனது மகன்,மகளிடம் இந்தப்புத்தகத்தைப் படியுங்கள், உங்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய புத்தகம் என்றேன். இன்னும் பல நண்பர்களிடம் இந்தப்புத்தகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றேன்.பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவராகவும், நாடறிந்த நல்ல பேச்சாளராகவும், உலக அளவில் நாத்திகத்தை, தந்தை பெரியாரை அழகு ஆங்கிலத்தில் உரை ஆற்றக்கூடியவராகவும்.ரோட்டரி சங்கத்தில்  தொடர்ந்து உரையாற்றக்கூடியவராகவும் திகழக்கூடிய அருமை அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் எழுதியுள்ள புத்தகம் இது. புத்தகத்தைப்படிக்கும் முன் இவ்வளவு சிறப்பாக இந்தப்புத்தகம் இருக்கும் என நினைக்கவில்லை, ஆனால் படித்து முடித்தபிறகு உண்மையிலேயே ஒரு வியப்பையும், மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளித்த புத்தகம் இது.

                  எங்கள் கிராமத்தில் ' நீச்சல் பழகணுமா? தூக்கி அவனை கிணற்றில் போடு, கொஞ்சம் தண்ணீர் குடித்தவுடன் தூக்கி விடுங்கள்...இரண்டொரு நாளில் நீச்சல் கற்றுக்கொள்வான் ' என்று சொல்வார்கள். செய்யவும் செய்வார்கள். அப்படிக் கிணற்றில் தூக்கிப்போடப்பட்டு நீச்சல் பழகியவர்கள்தான் நாங்கள். அப்படி முதன்முதலில் ஏழாம்வகுப்பு படிக்கும்போது பேச்சுப்போட்டிக்கு பெயரைக் கொடுத்துவிட்டு ' நான் ஏன் திருடன் ஆனேன் ? ' என்னும் தலைப்பில் பேச முயன்றதில் இருந்துதான் கோ.ஒளிவண்ணன் இந்தப்புத்தகத்தை ஆரம்பித்துள்ளார். நகைச்சுவையாக சம்பவத்தை விவரித்துச்சென்றாலும், பேசும்கலையில் இன்று உச்சத்தைத் தொட்டுள்ள அவரின் புகழை,பேச்சின் வலிமையை உணர்ந்த நமக்கு அவரின் வளர்ச்சி பிரமிப்பை ஊட்டுகின்றது. அப்படி இருந்த தான் எப்படி இப்படி வலிமையான பேச்சாளராக மாறினேன் என்பதனை ஒவ்வொரு நிகழ்வாக சொல்லும்போதுதான் இது புத்தகம் அல்ல, படிப்படியாக பேசும்கலையை வளர்த்துக்கொண்ட, தான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கும் சொல்லவேண்டும் என்னும் உந்துதலில்,உயரிய எண்ணத்தோடு எழுதப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளின் கோர்வை  எனப்புரிகிறது.

                        புத்தகத்தின் முதல் அத்தியாயம் 'அச்சம் தவிர்' .'அமெரிக்காவில் இறப்பதற்கு பயப்படுகின்றார்கள் அதற்கு அடுத்ததாக மேடையில் பேசுவதற்கு பயப்படுகின்றார்கள்' என்று சொல்கின்றார். உண்மைதான். மேடையில் பேசுங்கள் என்று சொன்னாலே அஞ்சி நடுங்கும் ஆட்களைப் பார்க்கின்றோம். ஆனால் அந்த அச்சத்தை எப்படி வெல்வது என்பதனை மிக விளக்கமாகவே கொடுத்திருக்கின்றார். அதனைப் போலவே ' எந்த வகையில் பேசுவது ? ' என்பதனை அடுத்து விளக்குகின்றார். அதில் டாக்டர் சி.எஸ்.ஆர் அவர்களின் அறிவுரையை 'உரையாடுவதாக நினைத்து பேச்சை தயாரித்துக்கொள்.கருத்துக்களை கோர்வையாகச்சொல்ல குறிப்புகள் வைத்துக்கொள் ' என்பதனை பின்பற்றியதைக் குறிப்பிடுகின்றார்.

                        புத்தகத்தின் மூன்றாவது அத்தியாயம் 'மேடையில் பேசலாம் வாங்க ' என்பது. 'கருத்து, தொடர்ச்சி, தெளிவு ' என்னும் மூன்று உள்தலைப்புக்களில் பல்வேறு நடைமுறைகளை நூலாசிரியர் தனது பட்டறிவின் மூலம் விளக்குகின்றார்.எவ்வளவு பெரிய பேச்சாளர் என்றாலும் தலைப்பை ஒட்டி அவரது கருத்து அமையவில்லை என்றால் அவரின் பேச்சு தோற்றுப்போவதைப் பார்க்கின்றோம். கருத்து எவ்வளவு அவசியமானது என்பதனை ' தூண்டிற்காரனுக்கு தக்கையில் கவனம் இருப்பதுபோல நமது கவனம் எப்பொழுதும் நம் தலைப்பை ஒட்டியே இருக்கவேண்டும். ஒரு தாய் எத்தனை வேலையில் இருந்தாலும் அவர் கவனத்தில் பெரும்பகுதி குழந்தையை ஒட்டியே இருக்கும். நன்கு ஆழ்ந்து தூங்கும்பொழுது கூட ,சிறு சிணுங்கல் குழந்தையிடம் இருந்து வந்தால் உடனே எழுந்துகொள்வார். அதுபோல நாம் பேசவிருக்கின்ற கருத்து நமது குழந்தை எனக்கருதி நமது நெஞ்சிலே சுமக்கததொடங்கினால் , எந்த வேலையில் இருந்தாலும் கவனத்தில் பெரும்பகுதி நமது தலைப்பை ஒட்டியே இருக்கும் " என்று குறிப்பிடுகின்றார்.தொடர்ச்சி எப்படி அமைய வேண்டும் என்பதனை 'சுவையானது, தகவல்கள் நிறைந்தது,எழுச்சியூட்டக்கூடியது 'என விவரிக்கின்றார். அதைப்போல பேச்சில் தெளிவு இருக்க வேண்டியதன் தேவையை சுவையாகக் குறிப்பிடுகின்றார்.

                         பேச்சின் தொடக்கம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு டாக்டர் கலைஞர் அவர்களின் பேச்சின் தொடக்கத்தை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். உரையைத் தொடங்க 'கேள்விகளால் தொடங்குவது , எதிர்பார்க்காத திருப்பம் நிறைந்த தகவல்களால் தொடங்குவது, கதை சொல்லி தொடங்குவது, நகைச்சுவையாகத் தொடங்குவது என நான்கு நிலைகளைக் குறிப்பிட்டு அவற்றினை விவரிக்கின்றார்.தன்னைக் கவர்ந்த தொடக்கம் என விருதுநகர் கல்லூரியில் திரு.வை.கோ. அவர்களின் பேச்சு எனச்சொல்லும் அவர் பசியோடு இருந்த தன்னை இரண்டரை மணி நேரம் கட்டிப்போட்ட பேச்சு அவரின் பேச்சு என விவரிக்கின்றார்,

                         பேச்சாளர்கள் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது உடல்மொழி.தொலைக்காட்சி விவாதங்களில் நாம் பார்க்கின்றோம்.பேசுவதற்கு சம்பந்தம் இல்லாமல் சிலரின் உடல்மொழி இருப்பதை.உடல்மொழி மிக எளிதாகக் காட்டிக்கொடுத்துவிடும். உடல்மொழி பகுதியில் உடை, நடை,சிரம்,கரம், புறம் நீட்டாதிருத்தல்,உணவு,  கண்களால் கைது செய்வோம் என நடைமுறை சார்ந்த பல பிரச்சனைகளை தனது அனுபவத்தின் பிழிவாக சுட்டிக்காட்டியுள்ளார். இளைஞர்களுக்கு, புதிதாகப்பேச வருபவர்களுக்கு மிகவும் பயன்படும் பகுதி இந்த உடல்மொழி அத்தியாயம் எனலாம்.

                          பேச்சில் 'பார்வையாளர்களைப் பங்கு கொள்ளச்செய்தல் ' என்னும் தலைப்பில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார் நூலாசிரியர். " கவிஞர் கலிபூங்குன்றன் அவர்கள் சுவையான தகவல் ஒன்றினைக் கூறினார். ஒலிபெருக்கி இல்லாத காலத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருக்கும் கூட்டத்தில் அந்தக்காலத்தில் தலைவர்கள் எப்படி பேசினார்கள்,அது கூட்டத்தின் கடைசியில் இருப்பவர் காதுக்கு எப்படி சென்று சேரும் என்று கேட்டேன்.அதற்கு, கூட்டத்தின் முன்பகுதியிலிருந்து கடைசிவரை ஒவ்வொரு அய்ம்பது பேருக்கும் நடுவில் ' பெஞ்சு' ஒன்று  போட்டு ஒருவர் நிற்பாராம். மேடையில் பேசுவதை முதலாமவர் கேட்டு உரக்கப்பேசுவார். அடுத்த பெஞ்சில் நிற்பவர் இதைக்கேட்டு அந்தப்பகுதியில் உள்ளவர்களிடம் உரக்கச்சொல்லுவாராம்.இப்படியாக ,கூட்டத்தின் கடைசியில் இருப்பவர் வரை தொடர் ஓட்டம்போல செய்திகள் கொண்டு சேர்க்கப்படும் " பழைய செய்திகளைச்சொல்வது போலவே புதிய 'யூ டியூப் ' போன்ற செய்திகளையும் அதில் இருக்கும் புகழ்வாய்ந்த உரைகளையும் குறிப்பிடுகின்றார்.

                           நாம் பேச்சாளராக ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஏற்படும் இடையூறுகளை சமாளிப்பது எப்படி என்பதில் நடைமுறையில் ஏற்படும் சிக்கல்களையும் அதனை தீர்வு காணும் வழிமுறைகளையும் குறிப்பிடுகின்றார். திடீரென்று பேசுங்கள் என்று அழைக்கப்பட்டால் அதனை எதிர்கொண்டு திறமையாக பேசுவது எப்படி என்பதனையும் விரிவாகக் குறிப்பிடுகின்றார். மேடையில் பேசுவதற்கு எப்படியெல்லாம் வழிமுறைகள் இருக்கின்றன என்பதையும் அடுத்தடுத்து விளக்குகின்றார்.

            ' காலத்திற்கு ஏற்றவாறு நமது நடைமுறைகளையும் மாற்றிக்கொள்வதுதான் சிறந்த வழி' என்று சொல்லும் நூலாசிரியர் அதற்கான வழிகளையும் வாய்ப்புக்களையும் சுட்டிக்காட்டுகின்றார். 
கடைசியில் பின்னுரையில் மேடைப்பேச்சாளராக ஆவதற்கான முத்தாய்ப்பான செய்தியைச்சொல்கின்றார். " மிக முக்கியமாக நல்ல விமர்சர்களை வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களது பேச்சைப்பற்றி விமர்ச்சிக்கும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெறுங்கள்.பல நேரங்களில் மிகச்சிறப்பாக பேசிவிட்டோம் என்று நினைத்திருக்கும்பொழுது அந்த நினைப்பை பொய்யாக்குவதுபோல எதிர்மறையான விமர்சனங்கள் எழும்பொழுது கோபமும் எரிச்சலும் வருவது நியாயம்தான். நம் மீது அன்பும் அக்கறையும் உடையவர்கள் நமது மேம்பாட்டிற்காகத்தானே சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் அவர்கள் சொல்வதில் இருக்கும் உண்மை புலப்படும். ...தொடர்ந்து நல்ல விமர்சகராக இருந்து என் மேம்பாட்டிற்கு உதவுபவர் என் வாழ்விணையர் நல்லினி அவர்கள் " எனக்குறிப்பிடுகின்றார். உண்மைதான். நல்ல விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பண்பு இருந்தால்தான் எந்தத்துறையிலும் வெற்றி பெற இயலும்.விமர்சனங்கள்தான் நம்மை பட்டை தீட்டும். 

             புத்தகத்தின் கடைசி இணைப்பாக பல சிறந்த ஆளுமைகளின்  பார்வைகளை 'இவர்கள் பார்வையில் ' என்னும் தலைப்பில் கொடுத்திருக்கின்றார். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் " சீரிய பகுத்தறிவாளரான தோழர் கோ.ஒளிவண்ணன் அவர்களது தந்தையார் திரு 'எம்ரால்ட்' கோபால கிருஷ்ணன் அவர்கள் (பகுத்தறிவாளர் கழகத்தலைவர்- பெரியார் கருத்தாளர் ) கொடுத்த இளமைக்காலப் பயிற்சியே இன்று அவரை இப்படி உயர்த்தியுள்ளது. பொது நலம்,பொதுத்தொண்டு இவைகளில் நாட்டம் பெரிதும் உடையவரான இவரது தொண்டு- ரோட்டரி சங்கத்தின் மூலம் பலரும் வியக்கத்தக்க அளவில் விரிந்து பரந்த ஒன்றாகும். அவரது வாழ்விணையரும் குடும்பமும் பிள்ளைகளும் பகுத்தறிவுத் தோட்டப்பழங்கள் ஆவார்கள். சீரிய ஆங்கில எழுத்து -பேச்சு ஆற்றாலாளர் ' என வாழ்த்தியிருக்கின்றார்.ரோட்டரி அமைப்பச்சார்ந்தவர்கள், அய்யா சுப.வீ.அவர்கள், பெரியார் பன்னாட்டு அமைப்பு-அமெரிக்காவின் தலைவர் மருத்துவர் அய்யா சோம.இளங்கோவன் அவர்கள், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் எனப்பல ஆளுமைகள் இந்தப்புத்தகத்தினை பாராட்டியிருப்பதை கொடுத்திருக்கின்றார்.

           ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகுறப்பேசும் இந்த நூலின் ஆசிரியர் திரு.கோ.ஒளிவண்ணன் அவர்களின் இந்தப்புத்தகம் முழுக்க முழுக்க அனுபவப் பிழிவுச்சாறு. அதனால்தான் முழுக்க முழுக்க சுவையாகவும் தெளிவாகவும் அமைந்திருக்கின்றது. மேடையில் பேச விரும்பும் எவரையும் இந்தப் புத்தகம் ஈர்க்கும்,வழிப்படுத்தும்,மேடைப்பேச்சில் வெற்றி பெற வைக்கும். படித்துப்பாருங்கள், இளைஞர்களிடம், இளைஞிகளிடம் இந்தப்புத்தகத்தைக் கொடுங்கள்.படிக்கச்சொல்லுங்கள், மேடைப்பேச்சாளர்களாக வெற்றி பெறச்சொல்லுங்கள். 



                                 
 
 

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் வாங்கிப் படிப்பேன்
நன்றி ஐயா

முனைவர். வா.நேரு said...

அய்யா, நன்றி, வருகைக்கும் கருத்திற்கும். கட்டாயம் வாங்கிப்படியுங்கள், மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்....