Saturday, 9 December 2017

அண்மையில் படித்த புத்தகம் : பன்னாட்டுச்சந்தையில் பாரத மாதா.......மு.சங்கையா

அண்மையில் படித்த புத்தகம் : பன்னாட்டுச்சந்தையில் பாரத மாதா
ஆசிரியர்                    : மு.சங்கையா
வெளியீடு                   : வாசிப்போர் களம், மதுரை ,பெறுவதற்கு : 0452-2643003, 9486100 608
முதல்பதிப்பு                 : அக்டோபர் 2017
விலை                      : ரூ 225 / மொத்த பக்கங்கள் 238

                         இந்தப் புத்தகம் அரசியல் அறிவைப் புகட்டும் புத்தகம். நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளால் குழம்பிப்போய் , ஏன் இப்படி நிகழ்கிறது எனப்புரியாமல் ,பொருளாதார ரீதியாகத் தொடர்ந்து அடிவாங்கும் பாமரனுக்கு ,ஏன் இப்படி நிகழ்கிறது,இதற்கு யார் காரணம் என்பதனை மிகத்தெளிவாக பாடம் போல நடத்துகின்ற, வாசிக்க வாசிக்க அறிய வைக்கும் புத்தகம்.

                           கந்து வட்டிக்காரன் அலுவலகம் முழுக்க கடவுள்கள் படம் பல இருக்கும். கந்துவட்டிக்காரனின் முகமும் மதக்குறியீடுகளால் நிரம்பி வழியும் . பேச்சில் முழுக்க கருணை அப்படியே பொங்கும். ஆனால் அவனது செயல்கள் வட்டிக்கு கடன் வாங்கியவனை பரம்பரை பரம்பரையாக எழ முடியாமல் அடி மேல் அடி கொடுக்கும். இப்படித்தான் இன்றைக்கு நமது நாட்டுக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் என்பதனை பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகின்ற புத்தகம். 
அண்மையில் படித்த புத்தகம் : 

                         உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம்,உலக  வர்த்தக நிறுவனம் இப்படியெல்லாம் சொல்லப்படும் நிறுவனங்களின் வரலாறு என்ன ? எதற்காக இவைகளெல்லாம் தோற்றுவிக்கப்பட்டன? எப்படி இவை வளர்ந்தன ? இவர்களுக்குப் பின்னால் இருக்கும் நாடான அமெரிக்கா எப்படி எப்படி எல்லாம் இந்த நிறுவனங்களை வழி நடத்துகிறது ? போன்ற செய்திகள் அளப்பரிய தகவல் சேகரிப்புகளோடு, புள்ளி விவரங்களோடு தரப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு, உறுமீன் வருமளவு காத்து நின்ற கொக்காக அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் எந்தப்பக்கமும் சேராமல் முதலில் நின்றது, இரண்டு பக்கமும் ஆயுதங்களை விற்பனை செய்தது பின்பு இணைந்து ஜப்பான் நகரங்களின் மீது  அணுகுண்டு வீசி அழித்தது பின்பு உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனங்களை அமைத்தது என வரலாற்றுப் பாடத்தோடு கூடிய பொருளாதாரப்பாடம் எடுத்துள்ளார் இந்த நூலின் ஆசிரியர்/ 1970--களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம், எண்ணெய் நாடுகளுகளுக்கு கிடைத்த பொருளாதார வளர்ச்சி அதன் விளைவுகள், WTO  என்னும் உலக வர்த்தக நிறுவனத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி என விரிவாகவே பேசும் புத்தகம் இந்தப்புத்தகம். 

                        உலக வங்கி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் எவ்வாறு இந்தியாவிற்குள் நுழைந்தது என்பதையும்,பின்னர் நரசிம்மராவ், சந்திரசேகர் காலத்தில் இந்தியாவிற்குள் வந்தமர்ந்து சம்மணமிட்டு கொண்டு என்னென்ன செய்துகொண்டிருக்கிறது என்பதையும், டாக்டர் மன்மோகன் சிங் காலத்தில் இன்றைய மோடியின் ஆட்சியில் எப்படியெல்லாம் கந்துவட்டிக்காரன் போல இந்தியாவிற்கு கடனைக்கொடுத்து ,அவர்கள் சொல்லும் விதத்தில் எல்லாம் இந்திய ஆட்சியாளர்கள் எப்படி சட்டமியற்றுகின்றார்கள் என்பதையும் விரிவாகப்பேசும் புத்தகம் இந்தப்புத்தகம். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்பதற்கு எதற்காக என்பது மட்டுமல்ல, யாருக்காக என்பதையும் படிப்பவர்கள் எளிதாகப் புரிந்த கொள்ள இயலும் இந்தப்புத்தகத்தின் வாயிலாக.....

                         பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரான இந்த நூலின் ஆசிரியர் ,பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கப்படுகின்றன என்பதையும், தான் பணியாற்றிய பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நட்டத்தில் கொண்டுவருவதற்காக அரசு எப்படிப்பட்ட நடவடிக்கையெல்லாம் எடுத்தது என்பதையும், எத்தனையோ இன்னல்கள், நய வஞ்சகம் அத்தனையும் தாண்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் நிலைத்து நின்று வருவதையும், அதன் லாப நட்ட கணக்குகளையும் ,எம்.டி.என்.எல், பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் பற்றிய ஏகப்பட்ட புள்ளிவிவரங்களோடும் ,ஆதாரங்களோடும் ஆசிரியர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் மட்டுமல்ல, எந்தவொரு தொழிற்சங்கவாதியும் மிக ஆழமாகவும், பொறுமையாகவும் படித்து உள்வாங்கி  தன் ஊழியர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பயன்படும் புத்தகம் இது.

                          வளர்ச்சி, வளர்ச்சி என்னும் வார்த்தை நம்மைச்சுற்றி ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தை. 'வளர்ச்சியா? வீக்கமா ? எனத்தலைப்பிட்டு' வாராக்கடன்கள் ' எனும் பெயரில் நடக்கும் மோசடிகளை,மல்லையா போன்ற பணக்காரர்களுக்கு வங்கிகள் அள்ளிக்கொடுத்த கடன்களை பின்னர் அவையெல்லாம் வாராக்கடன் என்னும் பெயரில் தள்ளுபடி செய்த வரலாறுகளை எல்லாம் வங்கிப்பெயர்களை குறிப்பிட்டு, ஒவ்வொரு பணக்காரரும் வாங்கிய கடனைக் குறிப்பிட்டு பின்பு தள்ளுபடி செய்யப்பட்ட செய்திகளை எல்லாம் வகைப்படுத்திக் கொடுத்துள்ளார். படித்தவுடனேயே நமக்கு எல்லாம் அறச்சீற்றம் வரவேண்டும். அவ்வளவு விவரங்களும் விளக்கங்களும் இந்தப்பகுதியில் உள்ளன.. சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு, வால்மார்ட் -ஒரு பொருளாதார புற்று நோய் போன்ற தலைப்புகள் சொல்லும் செய்திகள் படிப்பவர்களுக்கு பளிச்சென புரிகின்றன. பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. வால்ட்மார்ட் என்பதற்கு ஒரு வரையறை தருகின்றார் ஆசிரியர் . "வால்ட்மார்ட் என்றால் விலைக் குறைப்புப்போட்டி, மலிவு விலையில் கொடுத்தல், தொழிலாளர் விரோதப்போக்கு,இவற்றோடு ஊழலும் சேர்ந்து செய்த கலவைதான் வால்ட்மார்ட் " என்பது அந்த வரையறை. இதற்கான ஆதாரங்களை, எத்தனை கம்பெனிகளை தொலையக் காரணமாக அமைந்தது வால்ட்மார்ட் என்பதையும் எப்படி எப்படி எல்லாம் அவர்கள் மற்றவர்களுக்கு இன்னல் செய்து வளர்ந்தார்கள் என்பதையும் பெயர்களோடு நூலின் ஆசிரியர் பகிர்ந்துள்ளார்.தன்னொடு வேலை பார்த்த பாலு என்னும் தோழர் முதன் முதலில் வணிகர்கள் மத்தியில் இந்த வால்ட்மார்ட் பற்றிப்பேசச்சொன்னதும், அதற்காக தான் தயார் செய்ததும் பின்பு அந்த நிகழ்வில் கிடைத்த பாராட்டே இந்தப் புத்தகம் வருவதற்கு காரணம் என்றும் என்னுரையில் நூலின் ஆசிரியர் மு.சங்கையா குறிப்பிட்டுள்ளார்.

                         'தண்ணீர், தண்ணீர் ' எனத் தலைப்பிட்டு,தண்ணீர் எப்படித் தனியார் மயமாகியது என்பதையும், குடிக்கும் தண்ணீருக்கு விலை வைத்தது கூட எப்படி என்பதையும் குறிப்பிடும் நூலாசிரியர் பொலிவியா நாட்டில் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டதற்கு எதிராக நடந்த எழுச்சியை, போராட்டத்தை குறிப்பிடுகின்றார். ஆறுகள் விற்பனைக்கு என்னும் தலைப்பில் எப்படி ஆற்று நீர் பன்னாட்டு கம்பெனிகளால் உறிஞ்சப்படுகிறது என்பதையும், சிறப்பு பொருளாதார மண்டலம் என்றால் என்ன? நிலம் எப்படி வளைக்கப்படுகின்றது? எப்படி அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு கம்பெனிகளால் நிலம் வாங்கப்படுகின்றது, வனவேட்டை என்னும் தலைப்பில் வனங்கள் எப்படி அழிக்கப்படுகின்றன, பழங்குடி மக்கள் எப்படி வனத்திலிருந்து விரட்டப்படுகின்றார்கள் என்பதையும் விரிவாகவே விளக்குகின்றார். ஒரு கிழக்கிந்திய கம்பெனிக்குப் பதிலாக பல கிழக்கிந்திய கம்பெனிகள் எப்படி இந்தியாவின் வளத்தைக் கொள்ளையடிக்கின்றார்கள், சூறையாடுகின்றார்கள் என்பதையெல்லாம் விளக்குகின்றார். 

                       செல்லாக்காசு எனத் தலைப்பிட்டு, 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டதன் நோக்கத்தை, சாதாரண மக்கள் பட்ட அவதியை எல்லாம் -நாம் எல்லாம் கண்ணில் கண்டவைதான். அவற்றை எல்லாம் எழுத்தாக ஆக்கி, ஆவணமாக நமது கையில் கொடுத்துள்ளார். இந்த தலைப்பிற்கு 'பித்தலாட்ட பெரும்புள்ளிகள் கட்டாத பணத்தையெல்லாம் வட்டியோடு வசூலிக்கப்பார்க்கிறது பஞ்சைப்பராரிகளிடம் 'எனும் கவிஞர் யுகபாரதியின் கவிதை மிக பொருத்தமாக உள்ளடக்கைத்தை உணர்த்துகிறது. 

                        முடிக்கும் முன் எனும் தலைப்பில் சுதேசி பேசிய விதேசிகள் எப்படி நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் " நிலவுகின்ற எல்லாப்பிரச்சனைகளுக்கும் தீர்வாக சொல்லப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயக்கொள்கைகள் முற்றிலும் தோற்றுப்போய்விட்டது. அதன் எதிர் விளைவுகளாக வறுமை , வேலையின்மை அதிகரித்தது,விவசாயம் அழிந்தது, தண்ணீர் விலைப்பொருளானது,கிராமங்கள் இடம் பெயர்ந்தன....எல்லாச்செல்வங்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் தனதாக்கிக் கொண்டு ,இந்தியாவைக் கழிவுகளைச்சுமக்கும் குப்பைத்தொட்டியாக மாற்றி விட்டது " என்று ஆசிரியர் குறிப்பிடுவது உண்மைதான். சமூகப்பொருளாதார நெருக்கடிகளால் அழுத்தப்படும் மக்கள் அதனைத் தீர்க்க வீதிக்கு வந்து போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதனைத் தனது கருத்தாகக் கூறி இந்த நூலின் ஆசிரியர் நூலினை முடிக்கின்றார். 

                      எவ்வளவு அநீதிகள் நிகழ்ந்தாலும் உழைக்கும் மக்கள் ஒன்றிணையாமல் பார்த்துக்கொள்வதற்கு நமது நாட்டில் ஜாதிகள் இருக்கின்றன. மதங்கள் இருக்கின்றன. மாதம் ஒரு திருவிழா, மாதம் ஒரு உற்சவம் என்று உழைக்கும் மக்களை உறிஞ்சிக் கொழுப்பதற்கு பார்ப்பனியம் நமது நாட்டில் இருக்கிறது.கார்ப்பரேட் சாமியார்கள் புதுப்புது வேசங்களோடு ,பிரச்சனைகளுக்கு தீர்வு இதுதான் என மக்களை மயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். எல்லாம் கோள்களின் செயல்கள் என சோதிடத்தைக் காரணம் காட்டிக்கொண்டிருக்கின்றன ஊடகங்களும் பத்திரிக்கைகளும். மூட நம்பிக்கை என்பது உழைக்கும் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது பார்ப்பனியத்தால். இந்த நம்பிக்கைகள் உடைவது என்பது எளிதாக உழைக்கும் மக்கள் ஒன்றுசேரவும், புதிய பாதை அமையவும் வழி வகுக்கும் என்பது எனது எண்ணம்.மதமும் நம்பிக்கைகளும் எப்படி கார்பரேட் நிறுவனங்களால் வளர்க்கப்படுகின்றன,கார்ப்பரேட் சாமியார்கள் எப்படி, யார் யாருக்கெல்லாம் இடைத்தரகர்களாக இருக்கிறார்கள் என்னும் விவரங்களும் மக்களுக்குத் தெரியவேண்டும். அதனை ஒரு அத்தியாயமாக இந்தப் புத்தகத்தில் இணைக்கலாம்.   

                   புத்தகத்தின் கடைசிப்பகுதியில் உதவிய நூல்களின் பட்டியல் இருக்கிறது. இதழ்கள், வலைத்தளங்கள் எனப் பலவும் கொடுக்கப்பட்டுள்ளன. அட்டைப்படம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் நுழைவு வாயிலில் உள்ள வெளியீட்டாளரின் உரை என்னும் பகுதியில் சு.கருப்பையா நூலைப் பற்றிய சுருக்கத்தை, நோக்கத்தை மிக நேர்த்தியாகக் கொடுத்துள்ளார்."உலக வங்கியிடம் கடன்பெற்று வீழ்ச்சியடைந்த மெக்சிகோ,பொலிவியா ,மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளின் கண்ணீர் கதைகளை இந்நூல் நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டியுள்ளது" என விவரித்துள்ளார்.  பேரா.டாக்டர். இரா.முரளியின் அணிந்துரை வலியுறுத்த வேண்டியதை மிக அழுத்தமாக எள்ளல் நடையில் வலியுறுத்துகிறது.நூலின் ஆசிரியர் பல இடங்களில் பயன்படுத்தும் உவமைகள், சொல்லாடல்கள் வாசிப்பவருக்கு மிக எளிதாகக் கருத்தை புரியவைக்கின்றன.உலகவங்கி ஏன் தொற்றுவிக்கப்பட்டது என்பதற்கு 'அமெரிக்காவுக்கு வலி தெரியாமல் ரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டையைப் போன்ற அமைப்பை தோற்றுவிக்க வேண்டிய தேவை எழுந்தது '-பக்கம் 4,'நிதியாதிக்க கும்பல்களின் காட்டிலோ சிரபுஞ்சியில் கொட்டுகிற மழையை விட அதிகமாகப் பண மழை கொட்டுகிறது' பக்கம்21, 'இந்தியா இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் வீழ்ச்சி ஒரு மின்னலைப் போல தாக்கிவிட்டு மறைந்து விடுவதில்லை " பக்கம் 41, "இந்திராகாந்தி ,நேருவால் மெத்தப் புகழப்பட்ட கலப்புப் பொருளாதார பதாகையையும் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார் ' பக்கம்50, 'திவாலாகிப்போன என்ரானுக்காக ரூ 5250 கோடியை, தூக்கிக்கொடுக்கவேண்டிய பரிதாபகரமான நிலைக்கு பா.ஜ.க.வின் 13 நாள் ஆட்சிதான் காரணமாக அமைந்தது ' பக்கம் 65, 'அரசுத்துறை நிறுவனங்களைப் பெருமாள் கோவில் புளியோதரையைப் போல எண்ணி அள்ளி அள்ளி தனியாரின் கைகளில் திணித்தது' பக்கம் 66. இப்படி புத்தகம் முழுக்க ஏராளமான எடுத்துக்காட்டுகள் அமைந்துள்ளன.

                  மதுரை வாசிப்போர் களத்தின் உறுப்பினர் இந்த நூலின் ஆசிரியர் தோழர் மு.சங்கையா அவர்கள். பணிக்காலம் முழுவதும் தொழிற்சங்கப்பணியில் தீவிரமாக ஈடுபட்ட தோழர். பணி ஓய்வுக்குப் பின்பு தனது இரண்டாவது புத்தகத்தை  நூலாசிரியர் மு.சங்கையா வெளியிட்டுள்ளார். தான் வாழும் வாழ்க்கையை மிகுந்த அர்த்தமுள்ளதாக ஆக்கும் வகையில் அவரின் படைப்பாற்றலை வகுத்துக்கொண்டுள்ளார். மிகுந்த அர்ப்பணிப்போடும், கடுமையான உழைப்பின் விளைவாக விளைந்த புள்ளிவிவரங்களோடும், தரவுகளோடும் ஆக்கியிருக்கும் இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அவரின் உழைப்பும் , எளிய மக்களின் உயர்வுக்கான விருப்பமும் தெரிகிறது.வாழ்த்துக்கள். தொடர்ந்து இன்னும் பல நூல்களைப் படைத்திட வேண்டும்.....  

                         

No comments: