அண்மையில் படித்த புத்தகம் : பாக்குத்தோட்டம்
நூல் ஆசிரியர் : பாவண்ணன்
வெளியீடு :உயிர்மை பதிப்பகம்(499)
முதல்பதிப்பு : ஜனவரி 2015
மதுரை மைய நூலக எண் : 216638
நூல் ஆசிரியர் : பாவண்ணன்
வெளியீடு :உயிர்மை பதிப்பகம்(499)
முதல்பதிப்பு : ஜனவரி 2015
மதுரை மைய நூலக எண் : 216638
மொத்தம் 10 சிறுகதைகள்.ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களில்,வெவ்வேறு சூழல்களில்....ஆனால் அனுபவப் பகிர்வாகவும்,ஆற்றுப்படுத்தும் எழுத்தாகவும் இருக்கிறது.சைக்கிள் ஓட்டத்தெரியாமல் அப்பாவிடம் அடிவாங்கும் முத்துசாமி,குடிகார அப்பனிடம் அடிக்கடி அடிவாங்கும் அம்மா,அதன் பின் திடீரெனக்காணாமல் போகும் அப்பா முடிவில் அம்மா சொல்வதாக அமையும் அந்த சொல் "ஓடிப்போன ஆளவிட உயிரோட இருக்கிறவங்க முக்கியம் எப்பவும்.அது ஞாபகத்திலே இருக்கட்டும்.புரிதா?" என்றாள் அம்மா...அவன் தலையை அசைத்தான்." ஒரு பத்துப்பக்க கதைப்பின்னலில் இந்த முடிவுச்சொல்லாடல் மிக முக்கியமாகப் படுகிறது.
கல்தொட்டி செய்யும் தொழிலாளியைப் பற்றிய கதை 'கல்தொட்டி'. வருமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு பிடித்தமான வேலையை அணுஅணுவாக இரசித்து இரசித்து செய்யும் தொழிலாளியைப் பற்றிய கதை. இதைப் போன்றே கூத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்ட உதயகுமார்(பாக்குத்தோட்டம்), பின்னணிப்பாடகனாக வேண்டும் என்ற ஆசையில் உள்ள சண்முகப்பிரியனின் மாமா-இரயில்வே துறையில் வேலைபார்த்தாலும் பாடுவதில் தன்னையே உருக்கிக்கொள்ளும் கதாபாத்திரம் (வாழ்க்கையில் ஒரு நாள்), நாடகக்கம்பெனியில் அளவற்ற நாட்டத்துடன் வேலைபார்க்கும் 'ஒளிவட்டம் சிங்காரம் ' கதை சொல்லும் 'ஒளிவட்டம் 'எலையிலே படம் வரைவதற்காக தன்னையே இழக்கத்துணியும் குமாரசாமியின் கதை சொல்லும் 'நூறுவது படம் ' என்று பல சிறுகதைகளின் கதாநாயகர்கள் ஒவ்வொரு துறை சார்ந்த திறமையாளர்கள். தங்கள் திறமையை விற்காமல் அதே நேரத்தில் அதில் ஈடுபடுவதால் தங்களுக்குத் தாங்களே மன நிறைவும் அதன் மூலம் வாழ்க்கை நிறைவும் கொள்பவர்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திரமும் அவர்கள் பெயர்களால் அல்ல அவர்களின் தனித்திறமைகளால், அதனை ஆசிரியர் பாவண்ணன் வடித்திருக்கும் வார்த்தை ஓவியங்களால் நாம் படித்து முடித்த பிறகும் மனதில் நிற்கிறார்கள்.
'ஒரு நாள் ஆசிரியர் ' துணிகளைத் தேய்த்து வீடு வீடாகக்கொடுக்கும் திருவருட்செல்வனின் கதை. திருவருட்செல்வனுக்கு திருக்குறள் மீது இருக்கும் ஈர்ப்பு...அதற்கு காரணமாக இருந்தசேது மாதவன் என்னும் ஆசிரியர்... அவர் திருக்குறளை கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு கொடுத்த புதுமையான பயிற்சி...விளையாட்டு மாதிரியே திருக்குறளை மாணவர்கள் மனதிலே பதிய வைத்த விதம்....திருவருட்செல்வனும் அவனது வகுப்புத்தோழன் கரிகாலனும் போட்டி போட்டு திருக்குறளை மனப்பாடம் செய்த விதம்... என செய்முறைப் பயிற்சி போல பல பக்கங்கள் இந்தச்சிறுகதையில் திருக்குறள் பற்றி.
இஸ்திரி போட்டுக்கொண்டே திருக்குறளை மனப்பாடம் செய்வதை " 'என் திருக்குறள் ஆர்வத்தை ஒரு நாளும் நான் மறந்ததே இல்லை சார்.இஸ்திரி போடறதயே திருக்குறள் எழுதறதா மாத்திக்கிட்டேன்.எல்லாம் ஒரு புதுமைதான்' என்று குறும்பாகச் சிரித்தான்.நான் புரியாமல் அவனையே பார்த்தேன்.
'ஆமா சார்.இப்ப சட்டைக்கு இஸ்திரி போடறம்ன்னு வச்சிங்குங்க...காலர் மேல பொட்டியை வச்சு தேய்க்கும்போது கற்க கசடறன்னு மனசுக்குள்ளேயே எழுதிடுவேன்.அப்புறம் கைப்பக்கம் தேய்க்கும்போது கற்பவை கற்றபின்னு எழுதிடுவேன்.துணிய உதறி திருப்பிப்போட்டு முதுகுப்பக்கம் அழுத்திப்போடும்போது நிற்க அதற்குத் தகன்னு எழுதிடுவேன்.சட்டைக்கு ஒரு குறள்.பேண்டுக்கு ரெண்டு குறள்.புடவைக்கு ஒரு அதிகாரம்.அதான் என் கணக்கு.இஸ்திரி போடறோம்ன்னு நினைக்கமாட்டன். தெனம் எரநூறு முந்நூறு திருக்குறள எழுதிப்பாக்கறமன்னு நெனைச்சுக்குவேன்' " (பக்கம் 54). (இந்தக் கதையைப் படித்த போது மதுரை மெஜீரா கோட்ஸில் வேலைபார்த்து ,திருக்குறள் மேல் அளவற்ற நாட்டம் கொண்ட மறைந்த அய்யா திருப்பரங்குன்றம் தமிழ்க்கூத்தன் நினைவுக்கு வந்தார்.) திருவருட்செல்வன், தமிழ்ப்படித்து ஆசிரியர் பயிற்சியும் படித்து முடித்து வைத்திருப்பதை அறிந்து, அவனுக்காக வேலைக்கு அலைவது, முடியாத பெற்றோரைப்பார்ப்பதற்காக அவன் மறுப்பது ,பின்னர் தீவிபத்தில் பெற்றோரை இழந்த திருவருட்செல்வனுக்குக் கல்லூரி ஆசிரியரான அவர் வேலை வாங்கிக்கொடுப்பது என இந்தக்கதை முடிகிறது.இந்தத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கதை இது. பள்ளிகளில்,கல்லூரிகளில் இந்தக் கதையைப் பாடமாக வைக்கவேண்டும்.
'பள்ளிக்கூடம்' கதை இன்றைய நடப்புக்கதை. அரசாங்கப் பள்ளிக்கூடங்களை அரசாங்கங்களே மூடத்துடிக்கும் இக்காலக்கட்டக்கதை. 30 ஆண்டுகளுக்கு முன்னால் தான் படித்த பள்ளிக்கூடத்திற்கும், வாழ்ந்த ஊருக்கும் செல்லும் கதாபாத்திரம்.தான் படித்த பள்ளிக்கூடம் பூட்டிக்கிடக்கிறது.ஊரில் தெரிந்தவர்கள் யாரும் தென்படாத நிலையில் 'பள்ளிக்கூடத்தையே வெறித்து நோக்கியபடி ,எதிர்ப்பக்கத்தில் ஒரு வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்த வயதான பெரியவர் ஒருவரின் உருவம்' தெரிகிறது.கதர் வேட்டியும் கதர் சட்டையும் அணிந்திருந்த அந்தப் பெரியவர்தான் அந்தக் கால கட்டத்தில் ,இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் வருவதற்காக 5 ஏக்கர் தனது சொந்த நிலத்தைக்கொடுத்தவர்.சின்னப்பிள்ளையாக இருந்தபோது அவரிடம் வணக்கம் சொல்லி 'பென்சில்' வாங்கிச்சென்றது நினைவுக்கு வருகிறது.அவரோடு பேசுகின்றார்.தான் கொண்டு வந்த பள்ளிக்கூடம்,மாணவர்கள் இல்லையென்று மூடப்பட்டதை சோகமாகப்பகிர்ந்து கொள்கின்றார் பெரியவர். அந்த அரசுப்பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது என்று தான் அலைந்ததையும்,மாவட்ட ஆட்சியர் ஒரு 50 மாணவ,மாணவியர் இருந்தால் பள்ளிக்கூடம் தொடர அனுமதி அளிப்பதாகக் கூற,தான் கிராமத்தில் ஒவ்வொரு பெற்றோராகப் பார்த்துச்சொல்ல,மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கமுடியாது என்று சொன்னதையும் முடிவில் அரசுப்பள்ளிக்கூடம் மூடப்பட்டதையும் பெரியவர் சொல்கின்றார்.......
இன்றைய கிராமங்களின் நிலை இதுதான்.சின்னச்சின்ன கிராமங்களுக்குக்கூட 4,5பேருந்துகள் தினந்தோறும் வருகின்றன.மெட்ரிக் பள்ளிகளுக்கு பிள்ளைகளைச்சுமந்து செல்கின்றன.இன்றைய அரசுப்பள்ளிகளின் பெரிய ஆபத்தே பக்கத்திலிருக்கும் மெட்ரிக் பள்ளிகள்தான்.100 மெட்ரிக்,நர்சரி பள்ளிகளில் 10தான் கட்டமைப்பு வசதிகளோடும்,தரமான ஆசிரியர்களோடும் இருக்கின்றன.மெட்ரிக் பள்ளிகள் புதிதாகத்தோன்றுவதை முதலில் தடுக்கவேண்டும்.பின்பு மெட்ரிக் பள்ளிகள் படிப்படியாகக் குறைக்கப்படவேண்டும்.அதுவெல்லாம் இப்போதைக்கு நிகழ்வதாகத் தெரியவில்லை.அரசுப்பள்ளிக்கூடம் நமது பள்ளிக்கூடம் என்னும் உணர்வு குறைந்திருக்கிறது. இதனைக் கதைப்போக்கில் இந்த நூலாசிரியர் அழகாக சுட்டிச்செல்கின்றார்.
"அரசாங்கப் பள்ளிக்கூடம்னா பிஞ்சிப்போன தொடப்பக்கட்டன்னு நெனைக்கற ஊருல வேற என்ன நடக்கும் ....?".....""இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திலே படிச்சாத்தான் அறிவு வளரும்ன்னு டவுன் ஸ்கூல்ங்கள்ல சேந்து படிக்கிறாங்க...அடிவாசல் வரைக்கும் வண்டிங்க வந்து குப்பைய அள்ளறாப்புல புள்ளைங்கள வாரிப்போட்டுக்கினும் போவுது" என்றார். இப்படி எதார்த்த நிலையை சுட்டிக்காட்டும் பல உரையாடல்கள் இந்தப் பள்ளிக்கூடம் கதையில் உள்ளது.
இந்தத் தொகுப்பில் உள்ள கதை ஒவ்வொன்றும் உயிர்ப்பும்,வர்ணிப்பும் உள்ளதாக இருக்கிறது. 'என்னுரை'யில் "விதைகளைக் கரை சேர்க்கிற காலம் கதைகளையும் கரை சேர்க்காதா என்றொரு வரி தோன்றியது...." எனச்சொல்லும் பாவண்ணன் அந்த வரி தோன்றியதற்கான காரணத்தைச் சொல்வதும் கவனித்திற்குரியது." ஒரு கூட்டத்துக்காக சென்றிருந்தபோது ஓர் எழுத்தாளரைச்சந்தித்தேன். சுவாரசியமாக வளர்ந்துகொண்டிருந்த உரையாடலை நிறுத்திவிட்டு அவர் திடீரென்று என்னைப்பார்த்து உங்கள் எழுத்துக்கு எத்தனை வாசகர்கள் இருப்பார்கள்?"என்று கேட்டார்.என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு கணம் குழம்பித் திகைத்து மறுகணமே அதை என் புன்னகையால் கடந்து வந்தேன். பேருந்து பிடித்து இரவெல்லாம் பயணம் செய்து மறு நாள் அதிகாலை வீட்டுக்கு வரும் வரைக்கும் அந்தக் கேள்வி எனக்குள் ஒரு முள்ளாக உழன்றபடியே இருந்தது.வழக்கம்போல தொட்டிக்குத் தண்ணீர் ஊற்றச்சென்ற கணத்தில் விதைகளைக் கரை சேர்க்கிற காலம் கதைகளையும் கரை சேர்க்காதா என்றொரு வரி தோன்றியது.கேள்வி கேட்ட எழுத்தாளருக்குச்சொல்லவேண்டிய பதிலாக அல்ல.என்னைத் திடப்படுத்திக்கொள்ள கிடைத்த பதிலாக அவ்வரியை நினைத்துக்கொண்டேன்..காலத்தை நம்பி எழுதப்பட்டவையே இத்தொகுப்பிலிருக்கும் கதைகள்" என்று சொல்கிறார்.
சிறுகதைகளை முழுவதுமாக வாசித்து முடித்தபொழுது, இவ்வளவு மென்மையாகவும் அதே நேரத்தில்மனித நேய சிந்தனைகளை வலிமையாகவும் சொல்லக்கூடிய ஓர் எழுத்தாகவும் இனி மேல் நான் எழுதும் சிறுகதைகள் இப்படி,இப்படி இருக்கவேண்டும் என வழிகாட்டும் எழுத்தாகவும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு அமைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
பாவண்ணன் சார், "உங்கள் பார்வைப்படியே,விதைகளை பறவைகள் தூவிக்கொண்டே இருக்கின்றன..ஈரம் இருக்கும் இடத்தில்,வலிமை இருக்கும் விதைகள் முளைத்துக்கொள்கின்றன.உங்கள் கதைகள் மிக வலிமையான விதைகளாக இருக்கின்றன.பறவைகளுக்குப் பதிலாக கதை விதைகளைத் தூவ இணையமும், பேஸ்புக்கும்,டுவிட்டரும்,வலைத்தளங்களும் இருக்கின்றன. இவை எங்கெங்கோ மனித நேயமுள்ள, வீரியமிக்கக் கதைகளை கொண்டு செல்கின்றன. நமது கண்ணுக்குத் தெரியாத வாசிப்பாளர்கள்,உலகெங்குமிருந்து வாசிக்கிறார்கள்...மகிழ்கிறார்கள்..பகிர்கிறார்கள்... ஒரு கதை ஆசிரியராய் ,மிகவும் வெற்றிகரமாக கதை சொல்லும் ஆசிரியராய்,அதுவும் சமூகத்திற்குத் தேவையான கதைகளை எழுதுபவராக இருக்கிறீர்கள்.....இன்னும் எழுதுங்கள்......எழுதுங்கள்......வாழ்த்துகள்"
2 comments:
கதைகளை நேசிப்புடன் வாசித்திருக்கிறீர்கள்.மிகவும் உயிர்ப்புள்ள பதிவு....வாழ்த்துகள்......திரு.எஸ்.சுப்பிரமணியன்.....கட்செவி வாயிலாக
மிகவும் வியப்பாகவும்,அற்புதமான வாசிப்பு அனுபவமாகவும் இருந்ததுங்க சார்...ஒவ்வொரு துறை சார்ந்தவர்களையும் அவர்களது தனிப்பட்ட விருப்பம் சார்ந்த,மகிழ்ச்சி சார்ந்த நிகழ்வுகளை படித்துக்கொண்டிருந்தபொழுது வாசிப்பதில் மகிழ்வு கொள்ளும் உங்கள் நினைவு வந்தது.நல்ல படைப்பாளி ...நம் துறை(பி.எஸ்.என்.எல்) சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி...(கட்செவியில் என் பதில்)
Post a Comment