Saturday, 14 March 2020

அம்மையார் சொர்ணஅரங்கநாதன் அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்


சுயமரியாதை இயக்கத்தின் வீராங்கனை, கருநாடக மாநிலம் பெங்களூரைச்சார்ந்த அம்மையார் சொர்ண அரங்கநாதன் அவர்கள் நேற்று(13.3.2020) அன்று இயற்கை எய்திருக்கிறார். ஒரு அருமையான கொடையாளர்..கொள்கை வழி நடக்கும் செம்மல்...அய்யா அரங்கநாதன் அவர்களும் சொர்ணம் அரங்கநாதன் அவர்களும் இணைந்தே கழக நிகழ்ச்சிகளுக்கு வருவார்கள். சொர்ணம் அரங்கநாதன் அவர்கள் மிகவும் எளிமையாக இருப்பார். சொர்ணம் அரங்கநாதன் விடுதி என அவர் பெயரில். அவரது கொடையுள்ளத்தைப்பாராட்டி அய்யா ஆசிரியர் அவர்கள் விடுதிக்கே அவர் பெயர் வைத்திருந்தாலும், அங்கு வேலை பார்க்கும் ஒரு பரபரப்பான பணியாளராகவே அம்மா சொர்ணம் அரங்கநாதன் அவர்கள் அங்கிருப்பார். அண்மையில் மறைந்த மதுரை ஆர்.வி.பட்டி இராமசாமி ஆசிரியர் போலவே கழகத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுத்த கொடை வள்ளல்....அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் முகநூலில் விரிவாகக்குறிப்பிட்டு வீரவணக்கம் செலுத்தியுள்ளார். அய்யா ஆசிரியர் அவர்கள் விடுதலையில் துயரத்தோடு வீரவணக்கம் செலுத்தியுள்ளார்கள். 

'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்' என்னும் முதல் கவிதைத் தொகுப்பு கவிதைகள் முழுவதும் சில ஆண்டுகளுக்கு முன்னால் விடுதலை ஞாயிறு மலரில் வெளிவந்தவை. முதன் முதலாக பெரியார் திடலில் அந்தக் கவிதைகள் விடுதலையில் வெளிவந்து கொண்டிருந்தபொழுது அம்மையார் சொர்ணம் அரங்கநாதன் அவர்களைச் சந்தித்தேன். ' நேரு, நல்லா எழுதுறீங்க, இப்போ இருக்கற பிரச்சனைகளை கவிதையா எழுதுறீங்க,விடுதலையில் தொடர்ந்து எழுதுங்கள் " என்று கை குலுக்கி மனமாரப்பாராட்டியது இன்றும் கூட மனதில் நிற்கிறது. நான் எம்.ஏ.தமிழ் ,வேலை பார்த்துக்கொண்டிருந்தபொழுதே படித்து பாஸ் செய்து, அதில் வெற்றி பெற்றதைச்சொன்னபோது எனது அம்மா ஓடிவந்து கைகுலுக்கி பாரட்டியது வாழ்வில் மறக்கமுடியாதது.அதனைப்போல சொர்ணம் அரங்கநாதன் அவர்கள் பெரியார் திடலில் வைத்துப்பாராட்டியதும் மறக்கமுடியாதது.வல்லத்தில் பார்த்தால் அவ்வளவு அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் பேசுவார்கள்.அம்மையார் சொர்ணம் அரங்கநாதன் அவர்களின் மறைவு மிகப்பெரிய இழப்பு நமக்கு. அவருக்கு எனது குடும்பத்தார் சார்பாகவும்,எனது சார்பாகவும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் வீரவணக்கத்தை செலுத்துகிறோம். அய்யா அரங்கநாதன் அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.     






No comments: