Saturday 2 November 2024

கண்களால் நன்றி சொல்கிறதோ?....

 

      

 

பெரும் இரைச்சலோடு

கொட்டித்தீர்த்த மழை

இப்போது விட்டு விட்டு

தூறலாய் தூறிக்கொண்டிருக்கிறது…

வீட்டிற்கு முன்னால்

பெருகியிருந்த மழைத்தண்ணீர்

வற்றிக் கொண்டிருக்கிறது..

 

வீட்டின் முன் கேட்டை

யாரோ ஏதோ செய்வது போல ஓசை

எட்டிப்பார்த்தால் நனைந்த

உடலோடு எப்போதாவது வரும் மாடு..

தலையைத் தலையை ஆட்டி

ஏதோ சொல்ல முயற்சிக்கிறது

ஏதாவது கொடுங்கள் என்று

கேட்பது போல உணர்வு எனக்கு..

 

விறுவிறுவென வீட்டிற்குள் ஓடி

வடிதண்ணீர்.. எஞ்சிய சோறு

எடுத்துக்கொண்டு வரும்போது...

‘மாடா?’ அந்த மிஞ்சிய இட்லியையும்

கொண்டு போங்கள் என்னும்

இணையரின் சொல்லினால்

இட்லியையும் இணைத்து

எடுத்துக்கொண்டு ஓடுகிறேன்…

பொறுமையாய்ப் பார்த்துக்கொண்டு

நிற்கிறது மாடு…

 

கொண்டு வந்த சட்டியில் இருந்து

மாட்டிற்கு ஊற்றும் சட்டிக்கு

மாற்றி ஊற்றி ..

தூறுவதால்

காம்பவுண்டுக்குள்ளேயே வைக்கிறேன்..

இரண்டு கால்களைப் படிகளில் வைத்து

தலையை மட்டும் உள்ளே  நீட்டி

உறிஞ்சிக் குடிக்கிறது..

 

குடித்து முடித்தவுடன் அதன் கண்களில்

ஏதோ ஒரு உணர்வு தெரிவதுபோல்

தோன்றுகிறது எனக்கு…

கண்களால் நன்றி சொல்லி

விடைபெறுகிறதோ…

அமைதியாக

வைத்த காலை பின்னாலே

எடுத்துவைத்து  நடக்கிறது..

மனம் ஏனோ குதுகலிக்கிறது..

                           வா.நேரு, 03.11.2024

6 comments:

ஆ.செல்லப்பாண்டியன், said...

சிறப்பான பதிவு! மனத்தைத் தொடும் ஓர் உணர்வு! வாழ்த்துக்கள்!..முக நூலில்

வா.நேரு said...

நன்றிங்க அண்ணே...

Anonymous said...

உயிர் அன்பு - உயர் அன்பு
சிறந்த பண்பு.
ஐயா பகுத்தறிவாளர்
என்பதால் மாடு மாடாகவே
பார்க்கப் படாது.
(வீ.அரிஸ்டாட்டில்)

Anonymous said...

@வீ.அரிஸ்டாட்டில்...மிக்க நன்றி அய்யா...

anandam said...

மழைக்காலங்களில் உயிரினங்களும் படும்பாட்டை அனைவரின் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு பாராட்டுகள் அண்ணே!

Anonymous said...

@anandam நன்றிங்க அண்ணே....