Tuesday, 19 August 2025

திரு.மில்லர் நினைவு நூலகம்- முனைவர் வா.நேரு

 

துரையில் இருக்கக்கூடிய டோக் பெருமாட்டி கல்லூரி என்னும் கல்லூரி  பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி. இந்தக் கல்லூரியின் நிறுவனர் கேட்டி வில்காஸ் அம்மையார் என்னும் அமெரிக்கப் பெண்மணி.இந்தக் கல்லூரிக்கு டோக் பெருமாட்டியும் திரு.மில்லர் அவர்களும் பெரும் நன்கொடையை அளித்தனர்.திருமதி மில்லர் அவர்கள் தனது கணவரின் நினைவாக அவரது பெயரில் டோக் பெருமாட்டி கல்லூரியில் ஒரு நூலகம் அமைக்கவேண்டும் என்று தான் விரும்பியபடி 1964இல் நூலகம் டோக் பெருமாட்டி கல்லூரியில் திறக்கப்பட்டிருக்கிறது. திரு. மில்லர் மற்றும் தான் சேகரித்த புத்தகங்களை எல்லாம் அந்தக் கல்லூரி நூலகத்திற்கு அன்பளிப்பாகத் திருமதி மில்லர் அவர்கள் அளித்திருக்கிறார்கள்.
 
மில்லர் நினைவு நூலகத்தில் மட்டும் ஒரு இலட்சத்து ஆய்ம்பதாயிரம் நூல்கள் இருக்கின்றன என்று நூலகர் குறிப்பிட்டார். கல்லூரி நூலகம் தவிர, எங்கள் கல்லூரியின் ஒவ்வொரு துறையிலும் நூலகம் இருக்கின்றது என்றார்.திரு.மில்லர் நூலகம் பற்றிய பல்வேறு செய்திகள் இந்தக் கல்லூரியின் இணையதளப் பக்கத்தில் உள்ளன. https://www.ladydoakcollege.edu.in/Library.html இந்த நூலகத்தில் இருக்கும் வசதிகளைப் பற்றி எல்லாம் இந்தக் குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ளது. நூலகத்திற்குள் ஏராளமான மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தனர். இங்கு இருக்கும் எல்லாத் துறை மாணவிகளும் கட்டாயம் இந்த நூலகத்தைப் பயன்படுத்தும் வகையில் பாடத்திட்டம் இங்கு அமைந்துள்ளது என்றார். எனவே,படிக்கக்கூடிய மாணவிகள் வாரந்தோறும் ஒரு நாள் இருநாள் கல்லூரி நூலகத்திற்குள் வந்து ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் செலவழிக்கின்றனர். நூல்களில் இருந்து குறிப்புகள் எடுக்கின்றனர். ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் பாடக் கட்டுரைகளை அளிக்கின்றனர் என்றார்.
 
2014 முதல் எங்கள் நூலகத்தில் கருத்துத் திருட்டைக் கண்டுபிடிப்பதற்கான மென்பொருள் இருக்கிறது என்றார். இங்கு எழுதப்படும் எல்லாக் கட்டுரைகளும் ஏற்கனவே ழுதப்பட்டவற்றில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளனவா என்பது சோதிக்கப்படுகிறது என்றார்.கல்லூரி முதலாம் ஆண்டின் தொடக்கத்திலேயே கல்லூரி நூலகம் பற்றிய விரிவான விளக்கம் கொடுக்கப்படும். வாசிப்பதில், எழுதுவதில் ஆர்வம் உள்ள மாணவிகளை வைத்து புக் கிளப்இங்கு நடத்தப்படுகிறது. படிக்கும்போதே புத்தகம் படைக்கும் மாணவிகள் நிகழ்ச்சிகளில் பாராட்டப்படுகிறார்கள். மாதந்தோறும் இரண்டு புத்தக விமர்சனக் கூட்டங்கள் கல்லூரிப் பொது அரங்கில் நடத்தப்படுகின்றன என்று பல்வேறு செய்திகளைக் குறிப்பிட்டார்.
 
நூலகச் சேவைத் திட்டத்தின் வழியாக(Library service program) மாணவியர் நூலகத்தின் வேலை முறை பற்றி அறிந்துகொள்ள உதவுவதை அறிய முடிந்தது. NSS, NCC போல LSP என்பதும் மாணவிகளுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது. அப்படி நூலகச் சேவைத் திட்டத்தில் சேர்ந்து கொள்பவர்கள் நூலகப் பராமரிப்பு, நூல்களை அடுக்குதல் போன்றவற்றில் உள்ள தொழில் நுட்பங்களைத் தெரிந்துகொள்கிறார்கள்.நூலக அறிவியல் பாடத்தில் சான்றிதழ் பட்டம் பெறுகின்ற அளவிற்கான அனுபவத்தை இந்த நூலகச் சேவைத் திட்டத்தின் மூலமாக மாணவிகள் பெறுகிறார்கள் என்றார்.கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் எளிதாகப் புத்தகத்தைப் பெறுவதற்கும், குறிப்பிட்ட புத்தகங்கள் இந்த நூலகத்திற்குள் இருக்கின்றனவா என்பதை அறிவதற்கும் தங்கள் கல்லூரியின் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள்.மேலும் பொதுவாக, இணையத்தில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கக்கூடிய இணையதளங்களில் இருக்கின்ற ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் போன்ற ஆய்வு ஆதாரங்களைத் தனி நபராக அணுகினால் ஓர் ஆய்வுக் கட்டுரையை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கவேண்டியிருக்கும். அது போன்ற இணைய தளங்களுக்குக் கல்லூரி நூலகம் மொத்தமாகச் சந்தா கட்டி மாணவியருக்கு எளிமையான அணுகலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
 
மிக அரிதான பல நூல்கள் இந்த நூலகத்தில் இருக்கின்றன. 1948ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை இருக்கக்கூடிய கல்லூரியின் நாட்குறிப்புகளையும், ஆண்டு மலர்களையும், கல்லூரி சார்ந்த பல்வேறு ஒளிப்படங்களையும் அவர்கள் நூலகத்தின் வாயிலாகச் சேமித்து வைத்திருக்கிறார்கள். அவை நிரந்தரமாக இருப்பதற்கான ஏற்பாட்டையும் செய்து, பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பற்றிய செய்திகளைத் தொடர்ந்து அளிக்கும் இடமாக இந்தக் கல்லூரி நூலகம் விளங்குகிறது.
 
 மதுரையைப் பொறுத்த அளவில் அமெரிக்கன் கல்லூரி, தியாகராஜர் கல்லூரி, செந்தமிழ்க் கல்லூரி, என்று பல்வேறு கல்லூரிகளுடைய நூலகங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.சிறப்பான நூலகங்கள். அந்த நூலகங்களில் இருக்கக்கூடிய பழமையான புத்தகங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டும் ஆராய்ச்சி மாணவர்கள் அதனைப் பயன்படுத்தும் வண்ணமும் வைத்திருக்கிறார்கள்.
 
நூல் என்பது ஆராய்ச்சி மாணவர்களைப் பொறுத்த அளவில் மிகப் பெரிய கருவூலம்.ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் பலர் முனைவர் பட்டங்களும், டாக்டர் பட்டங்களும் பெறுகின்றனர். அவர்களுடைய அந்த ஆராய்ச்சிப் புத்தகங்கள் பல கல்லூரிகளில் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. புதிதாக ஆராய்ச்சி செய்வதற்கு வரக்கூடிய ஒருவர் அந்தப் புத்தகங்களை எல்லாம் ஒரு முறை பார்த்தாலே அவர்கள் எப்படி அந்த ஆராய்ச்சி வடிவைச் செய்து இருக்கிறார்கள் எப்படி உள்ளே எழுதி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் பல்வேறு தலைப்புகளில் தெரிந்து கொள்வதற்கு இந்தக் கல்லூரி நூலகங்கள் பயன்படுகின்றன.
 .
முடிவில் டோக் பெருமாட்டி கல்லூரி நூலகர் அவர்கள் படிக்கும்போதே சம்பாதியுங்கள்’-‘Earn While you Learn’ என்னும் திட்டத்தின் மூலமாக மாணவிகளுக்கு நூலகத்தில் வேலை செய்ய அனுமதி அளிக்கப்படுவதைப் பற்றி விவரித்தார்..அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அவர்கள் தங்கள் அத்தியாவசியச் செலவு மற்றும் விடுதிச் செலவு போன்றவற்றுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டு அதில் பெருமளவு மாணவிகள் பயன்பெறுகிறார்கள் என்றார்.
 
1981 முதல் 84 வரை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நான் படித்த பொழுது, அந்தக் கல்லூரி நூலகத்தில் நிறைய நூல்கள் இருந்தது மட்டுமல்லாது, ஒவ்வொரு துறை சார்ந்தும் நிறைய இதழ்கள், ஆங்கிலத்தில் வரக் கூடிய இதழ்கள் எல்லாம் அங்கு வாசிக்கக் கிடைத்தன.அந்தக் கல்லூரியில் முதல்வராக இருந்த டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள் முதலாம் ஆண்டில் முதல் செமஸ்டர்முடிவுகள் வந்தவுடன் அழைத்தார்கள். செமஸ்டர்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறாய் என்று பாராட்டிவிட்டு, எனது வீட்டின் நிலைமையைப் பற்றிக் கேட்டார்கள்.வறுமை நிலைமையைச் சொன்னேன். ‘‘உனக்குப் பகுதி நேர வேலை தருகிறேன் செய்கிறாயா?’’ என்று கேட்டார்.செய்கிறேன்என்று சொன்னவுடன், ‘உனக்கு நமது நூலகத்தில் வேலை. மாலை 4 மணிக்கு கல்லூரி முடிந்தவுடன் நீ நூலகத்திற்குச் சென்று விட வேண்டும் நூலகத்தில் நாலு முதல் ஆறு மணி வரை வேலை பார்க்க வேண்டும். அதற்கு மாதம் இருநூற்று அய்ம்பது ரூபாய் கொடுக்கப்படும்என்று சொன்னார் அது அந்த நேரத்தில் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. இன்னொரு வகையில் 20 வயதில் நூலகம் பற்றியும் நூலகத்தில் நடக்கக்கூடிய பல்வேறு அறிவு சார்ந்த செயல்களைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது.
 
நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது அப்படிப் பணியாற்றியது நினைவுக்கு வர, அப்படிப்பட்ட வாய்ப்பினை அளிக்கும் டோக் பெருமாட்டிக் கல்லூரியின் மில்லர் நினைவு நூலகத்தைப் பற்றித் தெரிந்துகொண்ட மகிழ்வோடு அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.

 நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் 16-08-2025 - 31-08-2025
x

Tuesday, 5 August 2025

நூல்களின் வேடந்தாங்கல்- முனைவர் வா.நேரு

சென்னையில் அண்ணா  நூற்றாண்டு  நூலகம் போல, பெரியார்  நூலகம் மற்றும் ஆராய்ச்சி மய்யம்போல  நாம் கவனிக்கவேண்டிய நூலகம் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமாகும். இந்த நூலகம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது ஒரு தனிப்பட்ட நபரின் வாசிப்பு ஆர்வமும், அவர் தனது வருமானத்தில் பெரும்பகுதியை  புத்தகங்கள் வாங்குவதற்குச் செலவழித்துச் சேகரித்த புத்தகங்களும் ஆகும். அவரது பெயராலும் அவர் வைத்திருந்த நிறுவனத்தின் பெயராலும் இந்த நூலகம் அமைந்திருப்பது சிறப்பாகும்.


ஆம், அவரது பெயர் முத்தையா.1926ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பிறந்தவர்.சொந்த ஊர் இப்போதுள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர்.


அடிப்படையில் ஓவியம் வரைவதில் விருப்பம் உள்ளவர். வேலை தேடி சென்னைக்கு வந்த அவர், ஓவியம் வரைவதைத் தனது தொழிலாக
மாற்றுகிறார். ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்னும் பெயரில் ஓர் ஓவியக்கூடத்தை நிறுவுகிறார். புதிது புதிதாக ஓவியம் வரைவதற்கு, ஓவியத்தின் நுட்பங்களை அறிந்து கொள்வதற்கு ஓவியம் குறித்த நூல்களை விலைக்கு வாங்குகிறார். புதிய நூல்கள் மட்டுமல்லாது பழைய புத்தகக் கடைகளுக்கும்  சென்று அங்கும் நூல்களை வாங்குகிறார். அப்படி வாங்குகிறபோது மற்ற  நூல்களையும் வாங்கி வாசிக்க ஆரம்பிக்கிறார். வாசிப்பதில் மிகப்பெரிய ஆர்வம் ஏற்படுகிறது. மேலும் மேலும் நூல்களை விலைக்கு வாங்கி, வாசித்து, பின்பு அவற்றைச் சேர்த்துவைக்க ஆரம்பிக்கிறார். சென்னையில் வசிக்கும் இடத்தில் புத்தகங்களை வைக்க முடியாத நிலை வருகிற போது அவற்றையெல்லாம் தூக்கிக்கொண்டு தனது சொந்த ஊரான கோட்டையூருக்குச் செல்கிறார்.  கோட்டையூரில் அவரது சொந்த வீடு முழுக்கப் புத்தகங்களால் நிரம்பி விடுகிறது. பின்பு இரண்டு வீடுகளைப் பக்கத்தில் வாடகைக்கு எடுத்து அங்கும் தான் வாங்கும் புத்தகங்களை எல்லாம் சேகரித்து அடுக்கி வைக்கிறார் புத்தகங்களைப் படித்து, அவற்றைத் தலைப்பு வாரியாகப் பிரித்து அட்டவணைப்படுத்தி, எளிதாக எடுத்துப் படிக்கும் வண்ணம் அவற்றையெல்லாம் தனது சொந்த ஊரான கோட்டையூரில்  அடுக்கி வைக்கிறார். இப்படித் தேடித் தேடிச் சேர்த்த புத்தகங்கள்  நூறல்ல,இரு நூறு அல்ல, ஒரு இலட்சம் புத்தகங்கள்!


திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் நடத்திய இதழ்கள் மற்றும் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த இதழ்களையெல்லாம் வாங்கிச் சேகரித்து வைத்திருந்திருக்கிறார். இவர் சேர்த்து வைத்ததில் இரண்டு இலட்சம் சிறுகதைகள்,5 இலட்சம் செய்தித் துணுக்குகள், ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், விலங்குகள் தொடர்பான 5000 கட்டுரைகள், அவருக்குக் கொடுக்கப்படும் அழைப்பிதழ்கள் என்று இவர் சேமிப்பைப் பற்றி அறியும்போது வியப்பு மேலிடுகிறது.


1992ஆம் ஆண்டு, திடீரென திரு.முத்தையா
அவர்கள் மறைந்துவிடுகிறார். வெளிநாட்டில்  வேலைபார்த்த ஒரு பேராசிரியரின் முயற்சியால், அவரது நூல், இதழ் சேகரிப்புகளைப் பாதுகாக்க அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ  பல்கலைக்கழகம் முயற்சி எடுக்கிறது.கோட்டையூரில் இருந்த அவரது நூல் மற்றும் சேகரிப்புகள் எல்லாம் சென்னைக்கு மாற்றப்படுகின்றன.1994ஆம் ஆண்டு ரோஜா முத்தையா நிறுவனமாக அது மாறுகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுகிறது. 2004ஆம் ஆண்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டு, பின்பு அது இன்றைக்கு இருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமாக மாறியிருக்கிறது.

நாம் இப்போது சென்னை ரோஜா முத்தையா நூலகத்திற்குச் சென்றால் 4 மாடிக் கட்டடம் வரவேற்கிறது.  நாம் தேடி வந்த நூல் இருக்கிறதா என்பதனை அறிய இணையவழி நூலகப் பட்டியலை(கேட்டலாக்) கொடுக்கிறார்கள். இணைய வசதியும் இருக்கிறது. எந்த நூல் நமக்குத் தேவை என்பதைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் கொடுத்தால் அங்கு இருக்கும் அலுவலர்கள் அந்த நூலைக் கொண்டு வந்து நம்மிடம் தருகிறார்கள். அங்கேயே உட்கார்ந்து குறிப்புகள் எடுத்துக்கொள்வதற்கு ஏற்ப அங்கு வசதிகள் இருக்கின்றன. பல ஆராய்ச்சி மாணவர்கள், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து தங்களுக்குத் தேவையான நூல்களை எடுத்து, ஆய்வுக் குறிப்புகளை எடுத்துக்கொண்டு சென்னையில் இருந்து திரும்புகிறார்கள்.




https://rmrl.in/ta/visit என்னும் இணையதளம் மிக விரிவான தகவல்களைத் தருகிறது. இந்த நூலை எதற்கு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறார்கள்.” தமிழ்ப் பண்பாட்டின் பல அம்சங்களைக் காட்சிப்படுத்தி வருகிறது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். இதன் முக்கியச் செயல்பாடுகள் நூல் சேகரித்தல், நூல்பட்டியலிடுதல், எணினிமயமாக்கல், நூல் பாதுகாப்பு, ஆராய்ச்சி, கண்காட்சி வடிமைத்தல் முதலியவையாகும்.


தனி நபர் சேகரிப்புகள் என்னும் பகுதி, தனிப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளில் தாங்கள் சேகரித்து வைத்திருந்த நூல்களை எல்லாம் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு வழங்கியவர்கள் பற்றியும், அவர்கள் வழங்கிய நூல்கள் பட்டியலும் உள்ளது.அந்த வகையில் முனைவர் வசந்ததேவி மற்றும் பலர்  வழங்கிய நூல் பட்டியல் தனி நபர் சேகரிப்புகள் என்னும் பகுதியில் இருக்கிறது.(இந்தக் கட்டுரை எழுதி அனுப்பும்போது  தோழர் பேரா வசந்ததேவி அவர்கள் இருந்தார்கள்.இந்தக் கட்டுரை வெளிவரும்போது அவர்கள் இல்லை.தன் வாழ் நாளிலேயே தான் சேகரித்த நூல்களை எல்லாம் ரோஜா முத்தையா நூலகத்திற்கு அளித்த தோழர் பேரா வசந்ததேவி அவர்களுக்கு வீரவணக்கம்...வா.நேரு)


இந்த நூலகத்தில் சிந்துவெளி ஆய்வு மய்யம் என்னும் தனிப்பிரிவு இருக்கிறது. அய்ராவதம் மகாதேவன் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வு மய்யத்தின் தற்போதைய தலைவர் திரு.ஆர். பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். ஆவார். “சிந்துவெளி ஆய்வு மய்யம் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், சென்னை கணித அறிவியல் நிறுவனம், சியாட்டில் வாஷிங்டன் பல்கலைக்கழகம் போன்ற உலகெங்கிலும் உள்ள முதன்மையான நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இத்துடன் ஓர் ஆய்விதழையும் ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.


அய்ராவதம் மகாதேவன் வெளியிட்ட சிந்துவெளித் தொடரடைவை (1977) இணையச் செயலியாக மாற்றி, அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் indusscript.in என்னும் தளத்தில் வெளியிட்டுள்ளது. இது சிந்துவெளி அறிஞர்கள், ஆர்வமுள்ள நபர்களுக்கு சிந்துவெளி எழுத்துகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் விளக்குவதற்கும் திறந்தநிலை இணையக் கருவியாகச் செயல்படுகிறது. இந்தத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் அனைத்து அறிஞர்களுக்கும் சிந்துவெளி ஆய்வு மய்யம் எப்போதும் உதவுதற்குத் தயாராக இருக்கும்.அய்ராவதம் மகாதேவன், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோரின் எழுத்துகளை எங்கள் மின்நூலகத்தில் வாசிக்கலாம்.” என்று அதன் இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு ஆலமரமாய், திராவிட மாடல் அரசினை நடத்தும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு பல்வேறு நிதியுதவிகளைப் பெறும் நிறுவனமாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் திகழ்வதுடன், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் எல்லாம் விரும்பி வரும் நூல்களின் வேடந்தாங்கலாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் திகழ்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

நூலகத் தொடர்புக்கு : 914422542551

செல்பேசி : 8015312686

நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் ஆகஸ்டு 1-15,2025