Tuesday, 19 August 2025

திரு.மில்லர் நினைவு நூலகம்- முனைவர் வா.நேரு

 

துரையில் இருக்கக்கூடிய டோக் பெருமாட்டி கல்லூரி என்னும் கல்லூரி  பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி. இந்தக் கல்லூரியின் நிறுவனர் கேட்டி வில்காஸ் அம்மையார் என்னும் அமெரிக்கப் பெண்மணி.இந்தக் கல்லூரிக்கு டோக் பெருமாட்டியும் திரு.மில்லர் அவர்களும் பெரும் நன்கொடையை அளித்தனர்.திருமதி மில்லர் அவர்கள் தனது கணவரின் நினைவாக அவரது பெயரில் டோக் பெருமாட்டி கல்லூரியில் ஒரு நூலகம் அமைக்கவேண்டும் என்று தான் விரும்பியபடி 1964இல் நூலகம் டோக் பெருமாட்டி கல்லூரியில் திறக்கப்பட்டிருக்கிறது. திரு. மில்லர் மற்றும் தான் சேகரித்த புத்தகங்களை எல்லாம் அந்தக் கல்லூரி நூலகத்திற்கு அன்பளிப்பாகத் திருமதி மில்லர் அவர்கள் அளித்திருக்கிறார்கள்.
 
மில்லர் நினைவு நூலகத்தில் மட்டும் ஒரு இலட்சத்து ஆய்ம்பதாயிரம் நூல்கள் இருக்கின்றன என்று நூலகர் குறிப்பிட்டார். கல்லூரி நூலகம் தவிர, எங்கள் கல்லூரியின் ஒவ்வொரு துறையிலும் நூலகம் இருக்கின்றது என்றார்.திரு.மில்லர் நூலகம் பற்றிய பல்வேறு செய்திகள் இந்தக் கல்லூரியின் இணையதளப் பக்கத்தில் உள்ளன. https://www.ladydoakcollege.edu.in/Library.html இந்த நூலகத்தில் இருக்கும் வசதிகளைப் பற்றி எல்லாம் இந்தக் குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ளது. நூலகத்திற்குள் ஏராளமான மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தனர். இங்கு இருக்கும் எல்லாத் துறை மாணவிகளும் கட்டாயம் இந்த நூலகத்தைப் பயன்படுத்தும் வகையில் பாடத்திட்டம் இங்கு அமைந்துள்ளது என்றார். எனவே,படிக்கக்கூடிய மாணவிகள் வாரந்தோறும் ஒரு நாள் இருநாள் கல்லூரி நூலகத்திற்குள் வந்து ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் செலவழிக்கின்றனர். நூல்களில் இருந்து குறிப்புகள் எடுக்கின்றனர். ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் பாடக் கட்டுரைகளை அளிக்கின்றனர் என்றார்.
 
2014 முதல் எங்கள் நூலகத்தில் கருத்துத் திருட்டைக் கண்டுபிடிப்பதற்கான மென்பொருள் இருக்கிறது என்றார். இங்கு எழுதப்படும் எல்லாக் கட்டுரைகளும் ஏற்கனவே ழுதப்பட்டவற்றில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளனவா என்பது சோதிக்கப்படுகிறது என்றார்.கல்லூரி முதலாம் ஆண்டின் தொடக்கத்திலேயே கல்லூரி நூலகம் பற்றிய விரிவான விளக்கம் கொடுக்கப்படும். வாசிப்பதில், எழுதுவதில் ஆர்வம் உள்ள மாணவிகளை வைத்து புக் கிளப்இங்கு நடத்தப்படுகிறது. படிக்கும்போதே புத்தகம் படைக்கும் மாணவிகள் நிகழ்ச்சிகளில் பாராட்டப்படுகிறார்கள். மாதந்தோறும் இரண்டு புத்தக விமர்சனக் கூட்டங்கள் கல்லூரிப் பொது அரங்கில் நடத்தப்படுகின்றன என்று பல்வேறு செய்திகளைக் குறிப்பிட்டார்.
 
நூலகச் சேவைத் திட்டத்தின் வழியாக(Library service program) மாணவியர் நூலகத்தின் வேலை முறை பற்றி அறிந்துகொள்ள உதவுவதை அறிய முடிந்தது. NSS, NCC போல LSP என்பதும் மாணவிகளுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது. அப்படி நூலகச் சேவைத் திட்டத்தில் சேர்ந்து கொள்பவர்கள் நூலகப் பராமரிப்பு, நூல்களை அடுக்குதல் போன்றவற்றில் உள்ள தொழில் நுட்பங்களைத் தெரிந்துகொள்கிறார்கள்.நூலக அறிவியல் பாடத்தில் சான்றிதழ் பட்டம் பெறுகின்ற அளவிற்கான அனுபவத்தை இந்த நூலகச் சேவைத் திட்டத்தின் மூலமாக மாணவிகள் பெறுகிறார்கள் என்றார்.கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் எளிதாகப் புத்தகத்தைப் பெறுவதற்கும், குறிப்பிட்ட புத்தகங்கள் இந்த நூலகத்திற்குள் இருக்கின்றனவா என்பதை அறிவதற்கும் தங்கள் கல்லூரியின் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள்.மேலும் பொதுவாக, இணையத்தில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கக்கூடிய இணையதளங்களில் இருக்கின்ற ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் போன்ற ஆய்வு ஆதாரங்களைத் தனி நபராக அணுகினால் ஓர் ஆய்வுக் கட்டுரையை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கவேண்டியிருக்கும். அது போன்ற இணைய தளங்களுக்குக் கல்லூரி நூலகம் மொத்தமாகச் சந்தா கட்டி மாணவியருக்கு எளிமையான அணுகலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
 
மிக அரிதான பல நூல்கள் இந்த நூலகத்தில் இருக்கின்றன. 1948ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை இருக்கக்கூடிய கல்லூரியின் நாட்குறிப்புகளையும், ஆண்டு மலர்களையும், கல்லூரி சார்ந்த பல்வேறு ஒளிப்படங்களையும் அவர்கள் நூலகத்தின் வாயிலாகச் சேமித்து வைத்திருக்கிறார்கள். அவை நிரந்தரமாக இருப்பதற்கான ஏற்பாட்டையும் செய்து, பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பற்றிய செய்திகளைத் தொடர்ந்து அளிக்கும் இடமாக இந்தக் கல்லூரி நூலகம் விளங்குகிறது.
 
 மதுரையைப் பொறுத்த அளவில் அமெரிக்கன் கல்லூரி, தியாகராஜர் கல்லூரி, செந்தமிழ்க் கல்லூரி, என்று பல்வேறு கல்லூரிகளுடைய நூலகங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.சிறப்பான நூலகங்கள். அந்த நூலகங்களில் இருக்கக்கூடிய பழமையான புத்தகங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டும் ஆராய்ச்சி மாணவர்கள் அதனைப் பயன்படுத்தும் வண்ணமும் வைத்திருக்கிறார்கள்.
 
நூல் என்பது ஆராய்ச்சி மாணவர்களைப் பொறுத்த அளவில் மிகப் பெரிய கருவூலம்.ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் பலர் முனைவர் பட்டங்களும், டாக்டர் பட்டங்களும் பெறுகின்றனர். அவர்களுடைய அந்த ஆராய்ச்சிப் புத்தகங்கள் பல கல்லூரிகளில் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. புதிதாக ஆராய்ச்சி செய்வதற்கு வரக்கூடிய ஒருவர் அந்தப் புத்தகங்களை எல்லாம் ஒரு முறை பார்த்தாலே அவர்கள் எப்படி அந்த ஆராய்ச்சி வடிவைச் செய்து இருக்கிறார்கள் எப்படி உள்ளே எழுதி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் பல்வேறு தலைப்புகளில் தெரிந்து கொள்வதற்கு இந்தக் கல்லூரி நூலகங்கள் பயன்படுகின்றன.
 .
முடிவில் டோக் பெருமாட்டி கல்லூரி நூலகர் அவர்கள் படிக்கும்போதே சம்பாதியுங்கள்’-‘Earn While you Learn’ என்னும் திட்டத்தின் மூலமாக மாணவிகளுக்கு நூலகத்தில் வேலை செய்ய அனுமதி அளிக்கப்படுவதைப் பற்றி விவரித்தார்..அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அவர்கள் தங்கள் அத்தியாவசியச் செலவு மற்றும் விடுதிச் செலவு போன்றவற்றுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டு அதில் பெருமளவு மாணவிகள் பயன்பெறுகிறார்கள் என்றார்.
 
1981 முதல் 84 வரை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நான் படித்த பொழுது, அந்தக் கல்லூரி நூலகத்தில் நிறைய நூல்கள் இருந்தது மட்டுமல்லாது, ஒவ்வொரு துறை சார்ந்தும் நிறைய இதழ்கள், ஆங்கிலத்தில் வரக் கூடிய இதழ்கள் எல்லாம் அங்கு வாசிக்கக் கிடைத்தன.அந்தக் கல்லூரியில் முதல்வராக இருந்த டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள் முதலாம் ஆண்டில் முதல் செமஸ்டர்முடிவுகள் வந்தவுடன் அழைத்தார்கள். செமஸ்டர்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறாய் என்று பாராட்டிவிட்டு, எனது வீட்டின் நிலைமையைப் பற்றிக் கேட்டார்கள்.வறுமை நிலைமையைச் சொன்னேன். ‘‘உனக்குப் பகுதி நேர வேலை தருகிறேன் செய்கிறாயா?’’ என்று கேட்டார்.செய்கிறேன்என்று சொன்னவுடன், ‘உனக்கு நமது நூலகத்தில் வேலை. மாலை 4 மணிக்கு கல்லூரி முடிந்தவுடன் நீ நூலகத்திற்குச் சென்று விட வேண்டும் நூலகத்தில் நாலு முதல் ஆறு மணி வரை வேலை பார்க்க வேண்டும். அதற்கு மாதம் இருநூற்று அய்ம்பது ரூபாய் கொடுக்கப்படும்என்று சொன்னார் அது அந்த நேரத்தில் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. இன்னொரு வகையில் 20 வயதில் நூலகம் பற்றியும் நூலகத்தில் நடக்கக்கூடிய பல்வேறு அறிவு சார்ந்த செயல்களைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது.
 
நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது அப்படிப் பணியாற்றியது நினைவுக்கு வர, அப்படிப்பட்ட வாய்ப்பினை அளிக்கும் டோக் பெருமாட்டிக் கல்லூரியின் மில்லர் நினைவு நூலகத்தைப் பற்றித் தெரிந்துகொண்ட மகிழ்வோடு அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.

 நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் 16-08-2025 - 31-08-2025
x

2 comments:

பாக்யலெட்சுமி பெரியசாமி,மதுரை said...

வணக்கம் தோழர். திரு.மில்லர் நினைவு நூலகம் மதுரையில் இருக்கக் கூடிய டோக் பெருமாட்டி கல்லூரியில் இருக்கும் நூலகம். இந்தப் பதிவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி தோழர்.வாழ்த்துகள்.

வா.நேரு said...

நன்றி தோழர்.வாசிப்பிற்கும் கருத்திற்கும்...