Wednesday, 19 August 2026

ஊடல் சிறுகதைத் தொகுப்பு...பெ.ஜானகிராமன்




புது  நூலினையும் அனுப்பி,தனது நன்றியைக் கடிதமாக எனக்கு அனுப்பிய எழுத்தாளர் திரு பெ.ஜானகிராமன் அவர்களின் கடிதத்தின் ஒரு பகுதி....


"நான் எழுதிய 12 சிறுகதைகளை உள்ளடக்கிய 'ஊடல்' என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பிற்கு தாங்கள் மிகச் சிறந்த அணிந்துரை வழங்கி சிறப்பித்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகளை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

​சிறந்த கதைகள், சிறுகதைகளை தேர்வு செய்வது போல சிறந்த அணிந்துரை என்று தேர்வு செய்தால் தாங்கள் எனது 'ஊடல்' சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரை தவறாமல் இடம் பெறும். மிகச் சிறப்பான அணிந்துரை, நான் எழுதிய சிறுகதைகளை விட அதனை பகுத்தாய்ந்து தாங்கள் வழங்கிய அணிந்துரை சிறப்பு வாய்ந்தது. தங்களின் பல்வேறு அலுவலுகளுக்கிடையே நான் எழுதிய சிறுகதைகளை ஆய்வு நோக்குடன் படித்து அருமையான அணிந்துரை வழங்கியுள்ளீர்கள். மீண்டும் நன்றி.

​நான் தங்களுக்கு அறிமுகம் இல்லாதவன். எனினும் தாங்கள் எனது அணிந்துரை வழங்கியது தங்களின் பெருந்தன்மை மனதின் வெளிப்பாடு. அதற்கும் நன்றிகள்...."






அணிந்துரை எழுத்து வடிவில்...

                     முனைவர் வா.நேரு,

தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,

பெரியார் திடல், சென்னை-600 007.

 

                           அணிந்துரை

 ‘ஊடல்என்னும் இந்த  நூல் திரு பெ.ஜானகிராமன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு.இதில் பணிரெண்டு சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.தொடர்ந்து இளம்வயது முதல் வாசிக்கும் இயல்புடைய இந்த நூல் ஆசிரியர் படிப்பு,பணி என்று இருந்த நிலையில் நேரம் இன்மையால் எழுத முடியாமல் இருந்து பின்பு நேரம் கிடைத்தபின்பு முக நூலில் எழுத ஆரம்பித்து,பின்பு அந்தக் கதைகளைத் தொகுத்து நமக்கு ஒரு சிறுகதைத் தொகுப்பு நூலாகக் கொடுத்திருக்கிறார்.

முதலில் திரு பெ.ஜானகிராமன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் இந்த முயற்சிக்கு. மொத்தம் 12 கதைகளில் 10 கதைகள் வாழ்வியல் கதைகள்.வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டவை. இல்லற வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை, கோப தாபங்களை, மனதுக்குள் எழும் ஈகோவை,சின்னச் சின்ன ஊடல்களைப் பின்பு ஏற்படும் கூடல்களை அழகாக எழுதி நமக்குக் கொடுத்துள்ளார்.முதல் கதையின் தலைப்பான ஊடலையே தொகுப்புக்கும் தலைப்பாகக் கொடுத்துள்ளார்.

சிறுகதை என்பது வாழ்க்கையில் சிறிய சாளரளங்கள்என்றார் புதுமைப்பித்தன். சாளரங்கள் வழியாகத்தான் நாம்  நல்ல காற்றைச் சுவாசிக்கிறோம். சூரிய ஒளியைப் பெறுகிறோம். சில நேரங்களில் இருட்டையும் துர் நாற்றத்தையும் கூட சாளரங்கள் வழியாக நாம் உணர்கிறோம். அதைப் போல  ஒரு நல்ல சிறுகதை நம்முடைய வாழ்க்கையை  வளப்படுத்துவதற்கும்,திடீரென்று நிகழும் ஒரு நிகழ்வை எதிர்கொள்வதற்குமான வழிகாட்டுதலைக் கொடுக்கும். அப்படித்தான் இந்தத் தொகுப்பில்  உள்ளகடைசி ஆசைஎன்னும் சிறுகதை ஓர் அற்புதமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்து வழிகாட்டுதலையும் கொடுக்கிறது.24 பக்கம் உள்ள சிறுகதை . மிகச்சிறப்பான சிறுகதைக்.கதாபாத்திரங்களும் கதையைச்சொல்லும் விதமும் ஒரு மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளராகப் பெ.ஜானகிராமன் அவர்களை அடையாளம் காட்டுகிறது.’அருமைஎனப் பாராட்டத் தூண்டுகிறது.

.’தலைமுறைகதை காதல்,சாதி மறுப்புத் திருமணங்களை இயல்பாகப் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது ஏன் என்பதை மூன்று தலைமுறை கதாபாத்திரங்களை வைத்துச் சொல்லியிருப்பது சிறப்பாக உள்ளது.வேணுவின் அப்பா கதாபாத்திரம் முதல் தலைமுறையைச் சார்ந்தது. இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறையின் உளவியலை உணர்ந்து ,இரண்டாவது தலைமுறையான வேணுவுக்கு,முதல் தலைமுறை உணர்த்தும் நுட்பமான கதை.

விதிப்புள்ளிஎன்னும் சிறுகதை இயல்பாகச் செல்வதுபோல் சென்று கடைசியில் ஏற்படும் முடிவு  நமது உள்ளத்திலும் வடுவை ஏற்படுத்துகிறது.ஆணாதிக்க மனப்பான்மையை மிக வெளிப்படையாகச் சொல்லும் கதை.ஒரு அலுவலகத்தில் நிகழும் இயல்பான நட்பை,ஈர்ப்பை விவரிக்கும் கதை. விவாகரத்து ஆனபின்பும் கூடப் பெண்களின் வாழ்க்கை எப்படி அறிவுகெட்ட கணவன்களால் கொடுமையாக்கப்படுகிறது என்பதைச் சொல்லும் கதை. வாசித்து விட்டுத் தாண்டிச்செல்ல முடியாத கதை இது.ஏன் நமது நாட்டில் மட்டும் இந்த நிலை என்று யோசிக்கவைக்கும் கதை.இதை விதி என்று என்னால் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘அகம்பாவம், ஆணவம்போன்ற தலைப்புகளைக் கொடுக்கலாம்.

திடீர் அப்பாகதையில் மாமியாருக்கும் மருமகளுக்குமான உறவை மிக நன்றாகப் படைத்துள்ளார். அம்மா துயரத்தில் மருமகளிடம் சாய்ந்து அழுவதும், என்ன செய்வது என்பதை வழிகாட்டும் கதாபாத்திரமாக மருமகள் சியாமளாவைப் படைத்திருப்பதும் நன்று. கடமையைச் செய்யும் காலத்தில் காணாமல் போய்விட்ட உறவுகள் திரும்பி வந்தால் என்ன செய்வது என்பதற்கான தீர்வுபோலதிடீர் அப்பா’  என்னும் இக்கதை இருக்கிறது.

கல்யாணம்கிறது சிறுகதை இல்லைதொடர்கதை’, இன்பம் துன்பம் இரண்டும் இணைந்து வரும் தொடர்கதை என்பதையும்,சத்தத்தை ஏன்  பழகிக்கொள்ளவேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்ளஎங்கே அவள்கதையை வாசித்துப்பாருங்கள்  கணவன் மனைவிக்குள் இழையோடும்ஈகோவைமுறிக்க வழி சொல்லும்கோபமா? வெறுப்பாஎன்னும் கதை,, ‘மனை அதிகாரம்கதை எல்லாம் இல்லறத்தை நல்லறமாக நடத்திச்செல்ல உதவும் அனுபவப் பகிர்வுக் கதைகள்,

திடீரென்று  மாறிவிடும் அப்பாவைப் பற்றிய கதையானஅச்சமே போ !’ மூத்தவர்களின் மனநிலையைப் பற்றிப்பேசுகிறது. திடீரென்று குணத்தால் மாறும் அப்பாவின் மாறுதலுக்குக் காரணம் என்ன என்பதையும் கதையின் போக்கில் தெளிவாக்குகிறது.

இதில் இருக்கும்இன்னொரு உலகம்என்னும் கதை இன்னொரு உலகத்தில் மகனும் அப்பாவும் சந்திப்பதாக வருகிறது. இந்தக் கதையைப் பொறுத்த அளவில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது.

மொத்தத்தில் அருமையான சிறுகதைத் தொகுப்பு. மணமுடித்துப் புதுவாழ்வை ஆரம்பிக்க இருக்கும் மணமக்களுக்குத் தாராளமாகப் பரிசாகக் கொடுக்கலாம் என்று நாம் பரிந்துரைக்கும் அளவிற்கான சிறுகதைத் தொகுப்பு. விட்டுக் கொடுத்தலும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளலும் இல்லற வாழ்வில்  எவ்வளவு தேவை என்பதை இயல்பாக இந்தக் கதைகளை வாசிப்பதன் மூலம் அந்தப் புது மணமக்கள் புரிந்துகொள்வார்கள்.

மிகச்சிறப்பாகத் தனது முதல் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கும் எழுத்தாளர் திரு. பெ.ஜானகிராமன் அவர்களுக்கும் அதனை மிக அழகாக வடிவமைத்து அச்சிட்டு வெளியிட்டு இருக்கும் கீழடி வெளியீட்டகத்திற்கும்,அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.வாழ்த்துகள்.

திரு.பெ.ஜானகிராமன் இதனைப்போல இன்னும் பல சிறுகதைகளைத் தொகுப்புகளைப்  படைக்க வாழ்த்துகள்.

 

                                              தோழமையுடன்

                                             வா.நேரு, 01.07.2026

                                           9486101547

 

 

 

 









 

No comments:

Post a Comment