Thursday, 12 April 2012

திருவிழாச் செய்திகளும் சமூகமும் (2)

திருவிழாச் செய்திகளும் சமூகமும் (2)

- முனைவர் வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்

சரி சாமி என்று சொல்லிக் கும்பிடப் போகிறார்களே? கோவிலுக்கு உடம்பில் போட்டுப்போகும் உடைமைக்குப் பாது காப்பு இருக்கின்றதா? அப்பொழுது மட்டும் எப்படி எல்லாம் வல்ல கடவுள் காணாமல் போய் விடுகிறார்? அடுத்த செய்தி : செங்குன்றம் லட் சுமி அம்மன் கோவில் விழாவில் 9 பெண் களிடம் 80 பவுன் நகை திருட்டு .போலீஸ் அதிகாரியை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் (பக்கம் -23) .அட, இது என்னய்யா கொடுமையா இருக்கு - கடவுள் நம்மைக் காப்பாத்தும், அம்மன் நமக்கு அருள் பாலிக்கும்ன்னு பார்ப்பனப் பத்திரிகை எல்லாம் பக்கம் பக்கமா எழுதறா? தங்கம் விக்கிற விலையில , இப்படி 9 பெண்கள் நகையைப் பறிகொடுத்திருக் காங்களே! போலீஸ் அதிகாரியை முற்றுகையிடுவதற்கு முன்னாலே கோவில் அர்ச்சகரை அல்லவா முற்றுகையிட்டிருக்கணும், ஏம்பா எங்கிட்ட இருந்து காணிக்கையெல்லாம் வாங்கிக் கடவுள்கிட்டே கொடுத்தியே , இப்போ நகை காணாமல் போச்சே, கடவுளுக்கும் எங்களுக்கும் இடையிலே நீதானே மிடில் மேன், கடவுள்கிட்ட சொல்லி கண்டு பிடிச்சு சொல்லுன்னு சொல்லியிருக் கணும் , அதை விட்டுட்டு போலீசை முற்றுகையிட்டா, 300 பேர் நிக்கிற இடத்திலே 3000 பேர் நின்னு கன்னத் திலே நீங்க கை போட்டுக்கிட்டு இருக்கிற நேரத்திலே, திருடன் உங்க கழுத்திலே கையப்போட்டு திருடிக்கிட்டு போயிட றான், போலீஸ் என்ன செய்யும் ?

சரி சாமி என்று சொல்லிக் கும்பிடப் போகிறார்களே அவர்களின் உயிருக் காவது பாதுகாப்பு இருக்கிறதா? எல்லாம் வல்ல ? கடவுள் அப்போதும் காணாமல் போய்விடுவார், மாட்டிக்கொண்டவர் களின் உறவினர்கள்தான் அய்யோ பொய்யோவென்று கூக்குரலிடவேண்டும். இதோ அடுத்த செய்தி, சேலம் அருகே பெரிய மாரியம்மன் கோவில் தேரோட் டத்தின்போது உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் 34 அடி உயர தேர் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உடல் கருகினர். சேலம் மாவட்டம் பெரிய வீராணத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. . கோவிலின் பங்குனி திருவிழா கடந்த 27ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. எதிர்பாராத விதமாய் மின் கம்பி உரசியதில் இன்வெட்டருக்கும் மின்சாரம் பாய்ந்து வெடித்தது. இதனால் தேரின் உள்ளே அமர்ந்திருந்த வீரா ணத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 14), சந்திரன் (10), தனுஷ் (10) மற்றும் 5 வயது சிறுவன் மணிகண்டன் ஆகியோர் இன் வெட்டர் வெடித்ததில் உடல் கருகினர் (பக்கம் 23) மேலே கண்ட செய்தி அனைத்தையும் படித்துப் பாருங்கள். பக்தர்களின் உடை மைக்கு பாதுகாப்பில்லை, பக்தர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லை, பக்தர்களுக் குள் நடக்கும் குழுச் சண்டைகளால் ஊரில் பதற்றமான சூழ்நிலை, ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக கட்டப் பஞ்சாயத்துகாரர்களால் கட்டாயமாக வசூலிக்கப்படும் வரி முறை, இது தவிர ஆபாச நடனங்கள், கலாச்சாரச் சீரழி வுகள், இவை அனைத்தையும் சேர்த்த தாகத்தான் இந்த மாத(பங்குனி) திரு விழாக்கள் அமைந்திருக்கின்றன.

பொருளாதார ரீதியாகவும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலே இந்த திருவிழாக்கள் அமைகின்றன. குடிக்காத இளையோரை குடிப்பதற்கு பழக்கும் விதமாகவும் சில ஊர்களில் இவை அமைகின்றன. ஊரில் மூன்று நாள் திருவிழா என்றால் பக்தி கரை புரண்டு ஓடி, இலட்சக்கணக்கில் டாஸ்மார்க் கடைகளில் மது விற்பனையாகின்றது. ஊரில் உள்ள ஒரு மாரியம்மனோ, முத்தாலம்மனோ, காளியம்மனோ எல்லா சாதிக்காரர்களுக்கும் பொதுவாக இல்லாமல் போவதால், சாதிக்கு ஒரு வாரம் வைத்து, சாதிக்கு ஒரு அம்மனை வைத்து மாதம் முழுவதும் ஊரில் ஒலிபெருக்கியும், டாஸ்மார்க் விற்பனை யும் ஓடிக்கொண்டிருக்கிறது.

பல ஊர்களில் ஜாதிச் சண்டையை துவக்கி வைக்கும் விசில்களாக இந்தப் பங்குனி திருவிழாக்கள் அமைகின்றன. ஜாதிகளாய் நம்மை பிரித்து வைத்து, நம்மை படிக்க விடாமல் ஆக்கிய பார்ப்பனர்கள் தங்கள் பத்திரிகைகள் மூலம் இந்த அம்மன் திருவிழாக்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து நமது படிப்பை, நமது பொருளாதாரத்தை, நமது வளர்ச்சியைக் கெடுக்கின்றனர். பல வண்ணங்களில் நோட்டீஸ்களை அச்சடித்து, ஏதோ ஆகாயத்தில் ராக் கெட் ஏவுவதற்கு நேரம் குறிப்பதுபோல, நேர அட்டவணை போட்டு கொடி ஏற்றுதல் என ஆரம்பித்து, காப்பு கட்டுதல், அம்மன் கரகம் எடுத்து வருதல். அம்ம னுடன் முளைப்பாரி, ஆயிரம் கண்பானை, காவடி எடுத்து வருதல். பெண்கள் கோடு கீரி வருதல், ஆண்கள் உருண்டு கொடுத்து வருதல், தீச்சட்டி எடுத்து வருதல், பறவைக் காவடி தீச்சட்டியுடன் வருதல் என மிகப் பெரிய பட்டியலை ஒவ்வொரு கோவில் விழாக் கமிட்டி யாரும் அச்சடித்து கொடுத்து வசூல் செய்கிறார்கள். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பல ஊர்களில் தீச்சட்டியை கையில் ஏந்தி, இது கடவுள் செயல் இல்லை என்பதனைக் காட்டி யிருக்கிறார், திராவிடர் கழகத் தோழர் களும் தோழியர்களும் பல்வேறு ஊர்களில் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களில் கைகளில் தீச்சட்டியை ஏந்தி, தீச்சட்டி இங்கே, மாரியாத்தா எங்கே? எனக் குரல் கொடுக்கின்றார்கள், ஒரு ஆத் தாளும் இதோ நான் இருக்கிறேன் என வரக்காணோம். கடவுள் பேர் சொல்லி பக்தர்கள் தேர் இழுத்தால், கடவுள் இல்லை எனச் சொல்லி திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கார் இழுக்கிறார்கள், எந்த கடவுளும் காரை நகர விடாமல் நிப்பாட்டக் காணோம். ஆனால், நாம் செயல் வடிவத்தில் காட்டும் பகுத்தறிவு செயல்பாடுகளை, மூட நம்பிக்கை ஒழிப்பு செயல் விளக் கங்களை பத்திரிகைகளும், ஊடகங்களும் பெரிய அளவில் வெளியிடுவதில்லை. விளைவு மூடநம்பிக்கை வைரஸ் கிருமிகள் பன்றிக்காய்ச்சலை விட வேகமாகப் பரவு கின்றன. சிலர் இது மக்களின் கொண் டாட்டம், கடவுள் பக்தி இல்லை என் கிறார்கள். மக்கள் நிலை கொண்டாடும் நிலையிலா இருக்கிறது. நாளில் பாதி நேரம் மின்சாரம் இல்லை, அடுப்பெரிக்க எரிவாயு இல்லை, பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டணம் உயர்வு , பால் விலை உயர்வு என மக்கள் விழி பிதுங்கி நிற்கும் நிலை. இந்த நிலையில் கட்டாயமாக நடத்தப்படும் செயற்கை கொண்டாட்டங்கள் மக்கள் வாழ்க்கையில் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை, மாறாக பல குடும்பங்களில் இந்த பண்டிகைக்காக கடன் வாங்கி செலவழித்துவிட்டு பின்பு வட்டி கட்டி திணறும் நிலைதான் உள்ளது. இந்த திருவிழாக்களைப் புறக்கணிப்போம். சாதாரண மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி புறக்கணிக்க வைப்போம்.நன்றி - விடுதலை 11-4-12

No comments: