Saturday 19 May 2012

ஆந்திராவில் தமிழர் தலைவர் ஒலித்த சமூக நீதிக் குரல்


தனியார் துறைகள் பெருகி வரும் பொருளாதாரச் சூழலில்
தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பதே நமது அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கை!
ஆந்திர மாநிலம் ரேபல்லியில் நடைபெற்ற சமூகநீதி பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி எழுச்சியுரையாற்றுகின்றார். ஆந்திர சமூக நீதி பேரவையின் மதிப்புறு தலைவர் கேசன சங்கர் ராவ் உடன் உள்ளார். பேரவையின் தலைவர் கேசன ராம கோட்டிஸ்வரராவ் தமிழர் தலைவரின் ஆங்கிலப் பேச்சினை தெலுங்கில் மொழி பெயர்க்கின்றார். (10.5.2012)
தெனாலி மே, 11- புதிய பொருளா தாரச் சூழலில், தனியார்த் துறைகள் பெருகி வரும் இக்காலக் கட்டத்தில் சமூக நீதிக் கண்ணோட்டத்தில் நமது அடுத்த நடவடிக்கை - தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தி அதனைப் பெறுவதுதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் தெனாலி அருகில் ரேபல்லி பேரூரில் மாபெரும் சமூக நீதிப் பொதுக் கூட்டம்  ஆந்திர மாநில சமூகநீதிப் பேரவை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மே 10 ஆம் நாள் ரேபல்லி அரசு இளநிலை கல்லூரி மைதானத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கிய பொதுக் கூட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேருரை ஆற்றினார். ஆந்திர மாநிலத்தின் சமூகநீதித் தலைவர்கள் மற்றும் போராளிகள் பலர் கலந்து கொண்டு உரையாற்றிச் சிறப் பித்தனர்.

தமிழர் தலைவரை வரவேற்றனர்

ரேபல்லி சமூக நீதிக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து இரயிலில் சென்ற தமிழர் தலைவரை தெனாலி இரயில் நிலையத்தில் மே 10ஆம் நாள் காலை 6 மணி அளவில் சமூக நீதிப் பேரவையின் தலைவர்கள் அன்புடன் வரவேற்றனர். தமிழர் தலைவருடன் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு, பொதுச் செயலாளர் வீ. குமரேசன், மேனாள் நீதிபதி ஆர். பரஞ்சோதி  ஆகியோர் சென்றனர்.

முற்பகல் செய்தியாளர் சந்திப்பு

தெனாலி நகரத்திலேயே விடுதியில் தமிழர் தலைவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆந்திர சமூக நீதிப் பேரவையின் சார்பாக முற்பகல் 11.30 மணியளவில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சமூகநீதிப் பேரவையின் மதிப்புறு தலைவர் கேசன சங்கர்ராவ் அவர்களின் தெனாலி இல்ல வளாகத்திலேயே செய்தியாளர்களை தமிழர் தலைவர் சந்தித்தார்.
சமூகநீதிப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய சமூக நீதிப் பேரவையின் தலைவர் வழக்குரைஞர் கேசன ராம கோட்டீஸ்வராவ், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.குமரேசன், பேராசிரியர் கவுடு சத்தியநாராயணா, வழக்குரைஞர் கேசன ராமசாமி, கொக்கிலிகட்டா வெங்கட நரசிம்மராவ், சுனில் கவுடு.
செய்தியாளர்களிடம் தெனாலியில் உள்ள தெலுங்கு, செய்திப் பத்திரிகை மற்றும் தெனாலியில் உள்ள தெலுங்கு, செய்திப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடக செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் சுருக்கமாகக் கூறியதாவது:

சமூக நீதிப் பயணம் பல காட்டாறுகளைக் கடந்து வந்துள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் தமிழக, ஆந்திரப் பகுதியினைச் சார்ந்த மக்கள் தலைவர்கள் சமூகநீதி வெளிச்சத்தைத் தூக்கிப் பிடித்த காரணத்தால்தான் சமுதாயத்தில் கடவுள், மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெற்று உயர்நிலைக்கு, மற்றவர் களுக்கு இணையாக வர முடிந்தது. அடுத்து சமூகநீதித் த்துவத்தை தந்தை பெரியார் மாபெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தார். சமூக நீதிப் பயணம் ஒழுங்காக நடைபெற தளம் அமைத்துக் கொடுத்தார்.
அடுத்த கட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் இதர சமூகநீதித் தலைவர்களுடன் இணைந்து போராடிய காரணத்தால் மண்டல் குழு பரிந்துரைகள் படிப்படியாக நடைமுறைக்கு வரும் சூழல்கள் உருவாயின.

இப்பொழுது மாறிவரும் பொருளாதாரச் சூழலில் அடுத்த கட்டத்தை சமூக நீதிப் பயணம் எட்டியுள்ளது. இதுவரை கல்வி, வேலை வாய்ப்புகளில் அரசு மற்றும் அரசு சார்ந்த நிலையங்கள் மற்றும் நிறுவனங்களில் மட்டுமே இருந்து வந்துள்ளது இட ஒதுக்கீடு முறை, தனியார் மயமாகும் சூழலில், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை.

அதனை நடை முறைப்படுத்துவதற்கு திராவிடர் கழகமும் இதர சமூக நீதி அமைப்புகளும் குரல் கொடுத்து அதற்காகக் களம் இறங்கும் சூழல்கள் உருவாகி உள்ளன. இந்த சவால் நிறைந்த சமூக நீதிப் பயணத்தை ஒடுக்கப் பட்ட, அடக்கப் பட்ட மக்களுடன், சமூகத்தின் அடித்தளத் தில் உள்ள மக்களின் ஆதரவினையும் சேர்த்து போராட அணியமாக உள்ளோம். இட ஒதுக்கீடு என்பது வெறும் வேலை வாய்ப்புக்கான, வாழ்விற்கான வருவாய் ஈட்டும் வழி என்பதை விட, நாட்டு நிர்வாகத்தில், அதிகாரத்தில் அனைத்துத் தள மக்களும் பங்கேற்கும் அதிகாரப் படுத்துதல்   என்ற நோக்கத்தில்தான் என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அனைத்துப்  பிரிவு மக்களும் பங்கேற்கும் ஆட்சி அதிகார முறையே உண்மையான மக்களாட்சியாகும்.

மேற்குறிப்பிட்ட தனது உரைக்குப் பின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு தமிழர் தலைவர் பதிலளித்தார். செய்தியாளர் சந்திப்பில் தமிழர் தலை வருடன் ஆந்திர சமூக நீதிப் பேரவையின் மதிப்புறு தலைவர் கேசன சங்கர் ராவ், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, பொதுச் செயலாளர் வீ.குமரேசன் மற்றும் மேனாள் நீதிபதி ஆர்.பரஞ்சோதி ஆகியோர் இருந்தனர்.
மாலையில் தெனாலியில் இருந்து 43 கி.மீ. தொலைவிலுள்ள ரேபல்லியில் நடைபெற்ற சமூக நீதிப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று எழுச்சி மிகு பேருரை ஆற்றினார்.

தோழர் சரயா குழுவினரின் பாடல் நிகழ்ச்சி

கூட்டத்தின் தொடக்கத்தில் பகுத்தறிவாளர் தோழர் சரையா தலைமையில் மக்கள் சேவை சங்கத்தின் தோழர்கள் உணர்ச்சி மிக்க சமூக நீதிப் பாடல்களை நாட்டு இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டே பாடினர். தந்தைபெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோரைப் பற்றிய தெலுங்குப் பாடல்களைப் பாடிய போது திரண்டிருந்த மக்கள் கூட்டத்தினர் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சமூக நீதிக் கூட்டத்தில் அறிமுக உரையினை சமூக நீதிப் பேரவையின் தலைவர் கேசன ராமகோடீஸ்வர ராவ் ஆற்றினார். அதனையடுத்து ஆந்திர சமூக நீதிப் பேரவையின் மதிப்புறு தலைவர் சங்கர்ராவ் தலைமையுரை ஆற்றினார்.

ஆந்திர சமூக நீதிப் பேரவை மதிப்புறு தலைவர் கேசன சங்கர் ராவ் தலைமையுரை

தலைவர் வீரமணிகாரு, இந்த சமூக நீதிப் பொதுக் கூட்டத்தின் கலந்து கொண்டு உரையாற்றுவது எங்களுக் கெல்லாம் எழுச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது. தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் கொள்கை வாரிசாக உள்ள வீரமணிகாரு மிகுந்த தொலைநோக் குடன் எங்களைப் போன்ற சமூக நீதி அமைப்புகளை ஊக்கப்படுத்தி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு பாடுபட்டு வருகிறார். இந்த தலைமுறையின் நலனுக்குப் பாடுபடுபவர்கள் அரசியல்வாதிகள்; எதிர்காலத் தலைமுறைக்கும் சேர்த்துப் பாடுபடுபவர்கள் அரசியல் அறிஞர்கள். அத்தகைய அறிஞராகத் திகழ்கின்ற வீரமணிகாரு முன்னெடுக்கும் சமூக நீதிப் பயணச் செயல் பாடுகளில் நாங்கள் - எங்களை, எங்கள் பகுதி மக்களை இணைத்துக்கொண்டு முழுமையாகப் போராடுவோம்.

இதுவரை சமூக நீதிப் பலன் கிடைக்காத அடித்தள மக்களுக்கும், இப்போது பலன் பெற்று வரும் மக்களின் அடுத்த கட்ட உயர்விற்கும் சேர்த்து எங்களது சமூக நீதிப் பேரவை பாடுபடும். அதற்கான செயல்பாடுகளில் எங்களை சமூகநீதித் தலைவர் வீரமணிகாரு வழி நடத்திட வேண்டும்.- இவ்வாறு கேசன சங்கர்ராவ் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார். பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.குமரேசன்
அடுத்து பகுத்தறிவாளர் கழகப்பொதுச் செயலாளர் வீ. குமரேசன் சுருக்கமாக உரையாற்றினார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முறையாகத் திருத்தப்பட்டது சமூக நீதித் தத்துவத்தின் நடைமுறை அணுகுமுறையான இட ஒதுக்கீட்டுக்காகத்தான் என்பது வரலாறு. அந்த முதல் சட்டத்திருத்தத்திற்கு தந்தை பெரியார் தலைமையேற்று நடத்திய போராட்டங்கள்தான் காரணமாக அமைந்தன- 1951 ஆம் ஆண்டில்.

தந்தை பெரியாரது கொள்கை வழித் தோன்றலாக பொது வாழ்க்கையில் உள்ள தமிழர் தலைவர் கி.வீரமணி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 76 ஆவது திருத்தத்திற்குக் காரணமாக அமைந்தார்.  ஆம். தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டின் அளவு 69 விழுக்காட்டினைப் பாதுகாக்க வேண்டிய தனி சட்டமே விதி 31 (சி)யின் கீழ் கொண்டு வரும் ஆலோசனையினை வழங்கி அரசமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது அட்டவணையில் அதனைச் சேர்த்து, அந்தச் சட்டத்திற்கு நீதிமன்ற ஆய்வில் இருந்து பாதுகாப்பு வழங்கும் வழி முறைகளை நடைமுறைகளாக்கிவர் வரலாற்று சாதனையாளர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆவார்.  தந்தை வழியில் தனயன் என சமூக நீதித் தத்துவப் போராட்டத்திலும் தந்தை பெரியாரின் கொள்கை வழித் தோன்றலாகவே தமிழர் தலைவர் விளங்குகிறார். மற்ற மாநில சமூக நீதிப் போராட்டங்களுக்கு ஊக்கம் கொடுத்து, முன் மாதிரியாகவும் தமிழர் தலைவர் விளங்குகிறார்.

சமூக நீதிப் பொதுக் கூட்டத்தில் தலைவர்கள் பலர் உரையாற்றிய பின்பு தமிழர் தலைவர் நிறைவுப் பேருரை ஆற்றினார். அவரது ஆங்கிலப் பேச்சினை பிரபல வழக்குரைஞர் கேசன ராம கோட்டீஸ்வர ராவ் தெலுங்கில் மொழி பெயர்த்தார். மொத்தம் 50 நிமிடங்கள் பேசிய தமிழர் தலைவரின் கருத்தாழ மிக்க உரையினை ஆர்வமுடனும் அமைதியாகவும் பொதுமக்களும் பங்கேற்ற தலைவர்களும் செவிமடுத்தனர்.

தமிழர் தலைவரின் சமூக நீதித் தத்துவ எழுச்சிப் பேருரை

தெலுங்கு மொழியில் உங்களுடன் பேச இயலாத தற்கு பொறுத்தருள வேண் டுகிறேன். நான் தமிழ் மொழியில் பேசினாலும், ஆங்கிலத்தில் பேசினாலும் அது ஒரு பொருட்டல்ல. காரணம், நம் அனைவருக் கும் பொதுவான மொழி, புரிந்த மொழி, போராட் டங்கள் நடத்தப்பட வேண் டிய மொழி சமூகநீதி மொழியாகும்.

ஆந்திர மாநிலம் அன்றைய சென்னை மா காணத்துடன் இணைந்து இருந்த சூழலில் அன்றைய ஆந்திரத் தலைவர்கள் பனகல் ராஜா, பொப்பிலி ராஜா ஆகியோர் நீதிக் கட்சி ஆட்சியில் சமூக நீதிக்காகப் பாடுபட்டார்கள். அடுத்து லச்சண்ண கவுடு ராமசாமி சவுத்திரி, நீதியரசர் பி.எஸ். ஏ.சாமி ஆகியோர் சமூக நீதிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர்.

ஜோதிபாபூலே, சாவித்ரி பாய் பூலே, சாகுமகராஜ், நாராயண குரு, தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர் ஆகியோர் தூக்கிப் பிடித்த சமூக நீதிக் கொள்கை யினை இன்று தொடர்ந்து, கூடுதல் வலிமையுடன் எடுத்துச் செல்ல வேண்டிய காலக் கட்டத்தில் இருக்கி றோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நீதி வழிமுறைகளை நடை முறைப்படுத்தாததால் அரசியல் விடுதலை பெற்று 65 ஆண்டுகள் நிறை வடைந்த வேளையிலும், சமூக நீதிக்காகப் போராட வேண்டியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் கூறிய வழிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்திருந்தால், சமூக நீதி விளக்கம், சமூக நீதிப் போராட்டத்தின் தேவையே தோன்றியிருக்காது. இந்திய அரசப்புச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தவே சமூக நீதி இயக்கம் பாடுபடவேண்டியுள்ளது; பாடுபட்டும் வருகிறது. நமக்கு பத்திரிகை ஊடகங்கள் ஆதரவாக இல்லை. அதைவிட ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் உங்களின் ஆதரவே சமூக நீதிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் வலிமை வாய்ந்தது.

சமூக நீதி விளக்கம் - ரயில் பயணம்

சமூக நீதித் தத்துவம் என்பது புரியாத புதிரல்ல. புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவதும் கடினமான தும் அல்ல. எடுத்துக் காட்டாக, தெனாலியிலிருந்து வெமூரு, கொல்லூரு வழியாக ரேபல்லிக்கு தினசரி ரயில் சென்று வந்து கொண்டிருக்கிறது. தெனாலியில் கிளம்பும் ரயிலில் இடம் பெரும்பாலும் காலியாக உள்ள நிலைமை ரேபல்லிக்கு வரும்போது ரயில் முழுவதும் பயணிகள் நிறைந்ததாக மாறிவிடுகிறது.

இது எதார்த்தமான நிலைமை. தெனாலியில் இருந்து வெகு சிலரே பயணப் படும் சூழலில், பயணம் செய்பவர்கள் உட்கார்ந்து கொண்டு, வசதியாகப் படுத்துக் கொண்டும் பயணம் செய்யலாம். காரணம், பெரும்பாலான இடங்கள் காலியாக இருக்கும். தெனாலியில் இருந்து கிளம்பி வெமூருக்கு வந்தவுடன், பயணிகள் ஏறுவார்கள். அடுத்த கொல்லூரு விலும் பயணிகள் ஏறுவார்கள்.
ஏறிய பயணிகள் அமர்வதற்கு இடம் வேண்டி, அது வரை படுத்துக் கொண்டு வந்த பயணிகளை எழுப்பி அவர்களை உட்காரச் சொல்வது இயல்பு. ஆனால், இதுவரை வசதியாகப் படுத்துக் கொண்டு வந்தவர்கள் தங்களை எழுந்து உட்காரச் சொல்வது தவறு என்று சொன்னால் அது எப்படி நியாயமாகும்? உட்காருவதற்கு ஆள் இல்லாத சூழலில் படுத்துக்கொண்டு பயணிக்கலாம். உட்கார ஆள் வந்ததும், எழுந்து உட்கார்ந்து அடுத்தவருக்கு இடம் அளிப்பதுதான் முறை; சரி; நியாயமும் கூட. முறையாகப் பயணம் செய்பவரைக் காத்திருக்க வைத்து, படுத்துக் கொண்டு ஒருவர் பயணம் செய்வது சரியா? இல்லை என்று நாம் சொல்லுகிறோம். ஆதிக்கவாதிகள் சரி என்று சொல்லுகிறார்கள். இப்படிநிலை ஒத்த சமூகச் சூழல்கள் நிறைந்திருக்கிறது இந்த நாட்டில்.

இதுவரை ஒடுக்கப் பட்ட மக்கள், அடக்கப்பட்ட மக்கள் படித்திட வாய்ப்பில்லை. வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதனால் ஆதிக்க வாதிகள் ஏகபோகமாக அனுபவித்து வந்தனர். இப்பொழுது அடித்தள மக்கள் எழுச்சி கொண்டு கல்வி கற்று அதிகார வேலை பார்க்கும் நிலைக்கு வரும்போது, அவர்களுக்கு உரிய பங்கினை அளிப்பதுதான் ஆதிக்க வாதிகளுக்கு முறையாகும். ஆனால் உரிய பங்கினை அளிக்க மறுத்து வருகின்றனர். உரிய பங்கு எவ்வளவு என்பது பற்றி விளக்குவதுதான் சமூகநீதித் தத்துவம்; உரிய பங்கினைப் பெற்றுத் தருவதுதான் சமூக நீதி இயக்கத்தின் பணியாகும்.

ஒடுக்கப்பட்ட மக்கள்தான் ஒழுங்கான வழிமுறையில் இயல்பாகப் பிறந்தவர்கள்!

சமுதாயத்தில் அடக்கப்பட்ட மக்களின் உரிய பங்கினை மறுப்பதற்கு ஆயிரக்கணக்கான கார ணங்கள் சொல்லப்படுகின்றன.  புராண, இதிகாச, மனுஸ்மிருதி கோட்பாடுகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. கடவுளை, மதத்தினை துணைக்குச் சேர்த்துக் கொள்ளுகிறார்கள். மக்கள் அனைவரும் ஒன்றல்லவாம். பிரம்மாவின் முகத்தில் உதித்தவர் பிராமணர்; தோளில்பிறந்தவர் க்ஷத்திரியர்; தொடையில் தோன்றியவர் வைசியர்; பாதத்திலிருந்து வந்தவர்கள் சூத்திரர்கள்.

இவ்வாறு புராண காரணங்கள் கூறி சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ளது தான் வரலாறு. தந்தை பெரியார் தனது பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டங்களில் இந்தப் புராண விளக்கங்களை விளக்கிக் கூறும்போது, ஒருமுறை கூட்டத்தில் ஒருவர் கேட்டாராம். இந்த நான்கு வகையிலும் வராத பஞ்சமர்கள் எப்படிப் பிறந்தார்கள் எனக்கேட்டார். அதற்குத் தந்தை பெரியார், பஞ்சமர்கள்தான் ஒழுங்காக, இயல்பாக, தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவர்கள் என பதில் சொன்னார். இப்படிப் புராணத்தைக் காட்டி மக்களை வேறுபடுத்தி, அண்ணல் அம்பேத்கார் கூறுவது போல, அடுக்கு முறையில் வேறுபடுத்தி, அடித்தள மக்கள் உரிய நிலைக்கு, உயர்வு நிலைக்கு வராமல் ஆதிக்க வாதிகள் ஆண்டாண்டுகாலமாக பார்த்துக் கொண்டனர்.

நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் சமூக நீதி இயக்கம் பாடுபட்ட காரணத்தால் அடக்கப்பட்ட மக்கள் கல்வி கற்று, அரசு அதிகார வேலை வாய்ப்புகளில் ஓரளவிற்கு உயர முடிந்தது. அடக்கப்பட்ட மக்கள் இன்னும் நுழைய முடியாத, இட ஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்படாத துறைகளுள் ஒன்று நீதித்துறை. உச்ச நீதிமன்ற நீதிபதியாய் பலர் உள்ளனர். அடக்கப் பட்ட மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வகையில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி கூட தற்சமயம் உச்சநீதி மன்றத்தில் இல்லை.

கேட்டால் உயர்நீதிமன்றத்தில் இருந்துதான் உச்ச நீதி மன்றத்துக்கு வர இயலும் என்று காரணம் சொல்லுகிறார்கள். உயர்நீதிமன்றங்கள் பலவற்றில் தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதிகள் மிகப் பலர் உள்ளனரே; ஆனால் ஆதிக்கவாதிகளுக்கு மனமில்லை. எனவேதான் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற பதவிகளிலும் இட ஒதுக்கீடு முறை - தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். மக்கள் சமுதாயத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் பிரதிநிதித்துவம் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிகளில் உரிய முறையில் இல்லை. தற்சமயம் உள்ள ஒரே பெண் நீதிபதியும் உயர்ஜாதி வகுப்பினரைச் சார்ந்தவராகவே உள்ளார். எனவே உயர் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் சமூக நீதியினை பிரதிபலிக்கின்ற வகையில் இட ஒதுக்கீடு நடைமுறை யாக்கப்பட வேண்டும்; அதற்கான போராட்டம் நடத்தப்படும்.

தனியார் துறையிலும் வேண்டும் இடஒதுக்கீடு!

ஒரு பக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கல்வி நிலையங்களில், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் வேலை வாய்ப்பு என ஓரளவு இட ஒதுக்கீடு நடைமுறை இருந்தாலும், இன்றைய மாறி வரும் பொருளாதாரச் சூழல் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரும் சூழலை உருவாக்க வில்லை.

தனியார் மயமாக்கல் எனும் அரசு கொள்கை மூலம், அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகின்றன. அரசின் பணத்தில், ஆதரவில் துவக்கப்படும் தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட,  சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் அடுத்த கட்ட சமூக நீதிப் பயணத்தைத் திராவிடர் கழகம் முன்னெடுக்கும். உங்கள் சமூக நீதிப் பேரவையும், இந்த மக்களும் உடன் போராட முன்வர வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் பல இந்நாட்டில் முளைத்துள்ளன.

அமெரிக்கா முதலாளித் துவ நாடு. அந்த நாட்டிலேயே கருப்பின மக்களுக்கு, வெள்ளை இன மக்களுக்கு என முதலாளித்துவ தனியார் நிறுவனங்களில் உடன்பாட்டு முறை   என்ற பெயரில் இட ஒதுக்கீடு நடைமுறை உள்ளது. அந்த அணுகு முறையிலேயே இந்நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு தனியார் துறையில் இடஒதுக்கீடு கடைப் பிடிக்கப்படுவது தான் சரியான அணுகுமுறை யாகும்.

அரசினரின் கவனத்தை ஈர்த்துத் தனியார் நிறுவனங் களிலும் இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த அனைத்து விதப் போராட்ட முறைகளும் கடைப்பிடிக் கப்படும். சமூக நீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் துவக்குவோம்! புதுப் பயணம், அடக்கப்பட்ட மக்களுக்கு மற்றுமொரு விடியலாக அமையும் என்பது உறுதி. இந்த சமூக நீதிக் கூட்டத்தினை ஏற்பாடு செய்த சமூக நீதிப் பேரவை பாராட்டுக்குரியது. உழைத்தவர்கள் அனை வருக்கும் நன்றி.

கலந்து கொண்ட தலைவர்கள்

சமூகநீதிப் பொதுக் கூட்டத்தில் கேசன ராமசாமி, முதுநிலை வழக்குரைஞர் ஒடுக்கப்பட்ட மக்கள் சங்கத் தலைவர், பேராசிரியர் கவுடு சத்தியநாராயணா, மேனாள் முதல்வர், உஸ்மானியா பல்கலைக் கழகக் கல்லூரி, பேராசிரியர் விஜய் ராஜூ, கே. சுனில் கவுடு, ஆந்திர பார் கவுன்சில் உறுப்பினர், வெண்டேரு ரவிபாபு யாதவ், ஆந்திர மாநில திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், கொக்கிலிகட்டா வெங்கடநரசிம்ம ராவ், மக்கள் சேவை சங்கம், பொப்பிலி வெங்கடேசுவர ராவ், குண்டூர், ஆர். சுதாகர் ஆகிய சமூக நீதித் தலைவர்கள் மற்றும் போராளிகள் உரையாற்றினர்.

இரவு 9 மணி வரை நடைபெற்ற சமூக நீதிப் பொதுக் கூட்டம் நன்றி கூறலுக்குப் பின் நிறைவு பெற்றது. இறுதி வரை கூட்ட மைதானம் பொது மக்கள் நிறைந்து காணப்பட்டது சமூக நீதிப் பொதுக் கூட்ட வெற்றிச் சிறப்பினை அந்நிலை எடுத்துக் காட்டியதாக இருந்தது.

No comments: