Sunday 8 July 2012

அண்மையில் படித்த புத்தகம் : எழுத்துக் கலைஞன் கந்த்ர்வன்

அண்மையில் படித்த புத்தகம் : எழுத்துக் கலைஞன் கந்த்ர்வன்

நூலின் தலைப்பு : எழுத்துக் கலைஞன் கந்தர்வன்

தொகுப்பு  : மு.முருகேஷ்

வெளியிட்டவர்கள் : அகநி வெளியீடு, வந்தவாசி 604 408,
                                             -  பேச : 04183-226543  செல்: 94443 60421.
முதல் பதிப்பு : 2007
விலை ரூ 70
மொத்த் பக்கங்கள் : 160

                                                            தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராய் இருந்து மறைந்தவர் கந்தர்வன். அவர் எழுதிய கடிதங்கள் முன்னுரைகள், அணிந்துரைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளி வந்திருக்கிறது. முதலில் இந்த நூலைத் தொகுத்தளித்த எழுத்தாளர் மு.முருகேஷ் அவர்களைப் பாராட்ட வேண்டும், ஒரு படைப்பாளியின் பன்முகத்தை இந்த நூல் மூலம் நமக்கு காட்டியிருக்கிறார்.

                                                                                                            கந்தர்வன் ஒரு அரசு ஊழியர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளா, கவிஞர், சிறு கதை ஆசிரியர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். தனிமையில் அமர்ந்து, தன்னந்தனியாய் குளு குளு அறையில் உட்கார்ந்தால்தான் எனக்கு கவிதை வரும் என்பவர்கள் மத்தியில் போராட்டமே வாழ்க்கை, வாழ்க்கையே எனது இலக்கியம் எனப் படைத்த ஒரு படைப்பாளனின் பங்களிப்பை ஒன்று கூட்டித் தர எடுத்திருக்கும் முயற்சி எனலாம். தம்பிக்கு(சு.லெ.நரசிம்மன)  எழுதிய கடிதத்தில் " உங்கள் வேலையின் மீதும் திறமையின் மீதும் நம்பிக்கை வையுங்கள். தாராளமாய்ப் பழகுங்கள். படைப்பாளி என்றாலும் பத்திரிக்கையாளனென்றாலும் இது ரொம்ப முக்கியம் " -பக்கம் 18 என்று குறிப்பிடுகின்றார் கந்தர்வன். அவர் 44 பேருக்கு எழுதி அனுப்பிய கடிதங்கள் முதலில் கொடுக்கப்பட்டுள்ளன. கடிதங்கள் இவ்ரின் உள்ளக் கிடக்கையை , இயக்கத்தின் பால் இவர் கொண்டிருந்த ஈர்ப்பை சொல்வதோடு, குடும்பதினர் மீதும் வீட்டின் மீதும் வைத்திருந்த அன்பை சொல்கின்றன.

                                                                                                    இரண்டாவது பகுதி முன்னுரைகள் மற்றும் அணிந்துரைகள் . " தெருக்களிலும் வயல்களிலும் கிடைத்த அனுபவங்களை இவர்கள் கவிதைகளில் சொல்ல முயல்கிறார்கள் . எனவே அது இயல்பாக இருக்கிறது, சரியாக இருக்கிறது. ஆனால் அழகாகவும் இருக்கவேண்டும் என்ற முக்கிய உண்மையையும் இந்த இடத்தில் சொல்லியாக வேண்டியுள்ளது " (பக்கம்-74) என்று அழகியலின் முக்கியத்துவத்தை ஜன நேசன் என்பவரின் ஆலிவ் இலைகளேந்தி  கவிதைத் தொகுப்புக்கான முன்னுரையில் சொல்கின்றார். " ஊரெங்கும் பவர்கட்/ இயந்திரங்கள் இயங்குகின்றன /அடடா ....பெண்கள் " என்னும் கவிதையைக் குறிப்பிடுகின்றார். கவிதை எழுதும்போது மிக அவசியமான மூன்று என்று "
செய் நேர்த்தி அவசியம்
மொழி லாவகம் முக்கியம்
சுருக்கம் அதி முக்கியம் "  கந்தர்வன் சொல்கின்றார். கவிதை எழுதுகின்ற அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.
சோவியத் சோசலிச அமைப்பு சிதறுண்டதை ஜீவி என்னும் கவிஞரின்  (கவிதைத் தொகுப்பின் பெயர் - வானம் தோலைந்து விடவில்லை )
கவிதையை
" அம்மா சாவுக்கு
  சிரிக்கும் குழ்ந்தையாய்
மாஸ்கோ வாசிகள் " குறிப்பிட்டு ஒரு பொறுப்பு மிகுந்த கவிஞனின் மிக உயர்ந்த விமர்சனம் (பக்கம் 78 ) என்று சொல்கின்றார் கந்தர்வன்.   

முத்து நிலவனின் "புதிய மரபுகள் " என்னும் கவிதை நூலுக்கான மதிப்புரையில் மரபு என்றால் என்ன என்பதற்கு அழகான விளக்கத்தை அடுக்கடுக்காய்த் தருகின்றார். அடுத்து கவிஞர் முத்து நிலவனுக்கும் தனக்கும் இருந்த நெருக்கத்தைச் சொல்லி தன்னைப்போலவே ஒரு பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி முத்து நிலவன் என்பதனை சுட்டிக்காட்டுகின்றார்.
" அன்பே தெய்வமென
 அடுத்தவனை  உதைக்கும்
மதங்கள் " என்பதில் பொதுமை அதிகம்

" கலைக்கு வயதில்லை
சும்மா சொல்லக்கூடாது-
அந்த ஐ,ஏ,எஸ்.வீட்டுக்
கிழவியின் நடனம்
அருமை " என்னும் கவிதையில் இருக்கும் கேலியும் கிண்டலும் தொகுதி முழுவதும் விரவிக் கிடக்கிறது என்கிறார்.  

கந்தர்வன் கவிதைகளைப்பற்றி எழுதியிருப்பவைகளை மட்டும் எடுத்து தனிப்புத்தகமாகப் போடலாம் போலிருக்கிறது. " சலிப்பும் ,துக்கமும், நிராசைகள் மிக்கதுமான வாழ்க்கையை நல்ல கவிதை ஈரப்படுத்துகிறது. சருகு உதிர்ந்த இடங்களில் துளிர் விட வைக்கிறது. ....வேட்டி,சட்டை, செருப்பு, சீப்பு என்று எந்தப் பொருள் தயாரிக்கவும் கூட்டு உழைப்பு வேண்டும்,இலக்கியம் மட்டுமே தனி மனிதத் தயாரிப்பு. இலக்கிய வகையில் கவிதை இன்னும் ஒரு படி மேலே ...." பக்கம் 94 இப்படிப் பலவிதமான கவிதை குறித்த பார்வைகள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது.

                             மூன்றாம் பகுதியாக கந்தர்வனின் நேர்காணல்கள். விரிவாக வந்திருக்கிறது. அவரின் ஈடுபாடு, கந்தவர்வன் என்னும் புனைபெயர் மற்றும் பல்வேறு கருத்துக்களைப் பதித்திருக்கிறார்.  நான்காம்  பகுதியாக தோழர் மதிமாறன் அவர்கள் எழுதிய "பாரதிய ஜனதா பார்ட்டி " என்னும் நூலுக்கு மறுப்புரையாக மார்க்சிஸ்ட் இதழில் எழுதிய கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது.  மதிமாறன் அவர்கள் கருத்தே சரியானது எனபது என் கருத்தாகும் அதைப்போலவே அதிசயங்கள் பார்த்தேன் என்னும் கட்டுரையோடு நூல் முடிகிறது. (பக்கத்தில் இருக்கும் என் மகன் புத்தக் விமர்சனத்தையே  இவ்வள்வு விரிவாக எழுதினால் , யார் படிப்பார்கள் என்கிறான்) . விமர்சனத்தையும் படிப்பார்கள், ஒரு படைப்பாளனின் பன்முகத்தையும் படிப்பார்கள் என்னும் நம்பிக்கை எனக்குண்டு என்றேன் அவனிடம். 

2 comments:

KARUPPIAH S said...

தோழர் நேரு ! நான் இன்னும் கந்தர்வன் நூல்களை வாசிக்கவில்லை. வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டதற்கு நன்றி.

anandam said...

தொடர்ந்து புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தும் தங்கள் பணி தொடரட்டும்...