Wednesday, 19 December 2012

சாகப்போகும் விவசாயிகளே!


கடன் வாங்கி
நாத்து விதைத்து
மீண்டும் கடன் வாங்கி
நாத்தை நட்டு
பயிராகிப் பார்த்தவேளை
பருவ மழை பொய்த்துப்போனது !

கண்மாய் பெருகிவிடும்
கன மழை பெய்துவிடும்
பயிரெல்லாம் நெல்லாகி
அம்பாரம் குவிந்துவிடும்
அடைத்து விடலாம்
கடனை என்றெண்ணி
நம்பி விதைத்த பயிரெல்லாம்
சருகாகி காய்ந்து போக‌
வானம் பார்த்த விவசாயம்
வயிற்றைக் காயப் போட்டதடா !

கண்மாயில் தண்ணியில்லை
பக்கத்து கிணத்து மோட்டாரிலே
இன்னும் கொஞ்சம் கடனை
வாங்கியாவது காப்பாத்திடலாம்
பயிரையென்னு
விடிய விடிய உட்கார்ந்திருந்தும்
வீணாப்போன கரண்ட் இல்லே

கரண்டில்லை ,தண்ணியில்லை
அன்பார்ந்த விவசாயிகளேன்னு
அகில இந்திய வானொலி
காலையிலே கொட்டி முழக்கும்
கூத்துக்கு மட்டும் குறைவில்லே!

சேற்றில் நெட்டியைப் போட்டு
மிதித்தற்கு காசு வேணாம்
வரப்பு வெட்டி வாய்க்கால் வெட்டி
ஒத்தாசையா நின்னு
உழைத்ததுக்கு காசு வேணாம்
இராப் பகலா
மோட்டை அடைச்சு
தண்ணீர் பாய்ச்சி
நாத்தை வளர்த்ததற்கு காசு வேணாம்

செத்துப் போன
பிள்ளையைப் பார்த்து
கதறி அழும் பெத்தவன் போல‌
கருகின பயிரைப் பார்த்து
மனதுக்குள் கதறி அழும்வேளை
வட்டிக்கு கடன் கொடுத்த
பணக்காரன் வாறானே !
அவனுக்கு கொடுக்க காசு வேணுமே
என்ன செய்ய ?

பாறைக்குள்ளிருக்கும்
தண்ணியெடுத்து
பயிரை விளைய வைக்கிறோம்ன்னு
இத்தாலிக்காரன் சொல்லுகிறான்

இருக்கிற தண்ணியை
பகிர்ந்து கொடுக்க வக்கில்லே!
இல்லாத பகுதிக்கு
தண்ணி வர வைக்கிற‌
திட்டம் ஏதுமில்லே!

பின்னே எதுக்கு
அன்பார்ந்த விவசாயிகளே!
இனிமே சொல்லுங்கடா
அரசாங்க வானொலியில்
சாகப்போகும் விவசாயிகளே!
                                                      வா. நேரு .

எனது கவிதையை வெளியிட்ட எழுத்து.காம் -ற்கு நன்றி .

1 comment:

KARUPPIAH S said...

சிறுவயதில், பசுமை நிறைந்த வயல்வெளியில் ஓடி,ஆடி,படுத்து உருண்டு, நெற்கதிர்களை ரசித்து, மகிழ்ந்து அதை மறந்துவிட்ட இந்த "விவசாயின்" மனம் அழுகிறது! வேறென்ன செய்யமுடியும் என்னால்?

சு.கருப்பையா.