Saturday, 29 December 2012

அண்மையில் படித்த புத்தகம் : திருப்புமுனைகள் - என்.சொக்கன்

அண்மையில் படித்த புத்தகம் : திருப்புமுனைகள் - என்.சொக்கன்
 
நூலின் தலைப்பு         :  திருப்புமுனைகள் .
ஆசிரியர்             :   என்.சொக்கன்.
பதிப்பகம்                :   மதி நிலையம் , சென்னை-86,
முதல் பதிப்பு         :   டிசம்பர் 2011 , 288 பக்கங்கள்
 விலை               :   ரூ 160
                                      வெற்றி அடைந்த 50 சாதனையாளர்களை எடுத்துக்கொண்டு , அவர்கள் வாழ்க்கையில் நடந்த திருப்பு முனை சம்பவங்களைக் கோடிட்டுக் காட்டுகிற புத்தகம் இந்தப் புத்தகம் .முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தொடங்கி , பாட்டுக்கோட்டையாக தமிழகத்தில் புகழ்பெற்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை வரை பட்டியலிட்டுக் காட்டுகிறது.

             முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர், கபில்தேவ் தன்னுடைய 13-வது வய்தில் கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்து ரசிப்பதற்காக வந்த இடத்தில், விளையாடும் அணியில் ஒருவர் குறைவதால் விளையாட்டை ஆரம்பிக்காமல் இருக்கிறார்கள். சிறுவன் கபில்தேவ் ஏன் விளையாட்டை ஆரம்பிக்க தாமதம் ஆகின்றது எனக்கேட்க, ஒருவர் குறைகிறார், தம்பி நீ விளையாட வருகிறாயா எனக் கபில்தேவிடம் கேட்க , சரி என கிரிக்கெட்  விளையாட்டு மைதானத்தில் இறங்கியதுதான் கபில்தேவ் வாழ்க்கையில் நடைபெற்ற திருப்புமுனை. கிரிக்கெட் விளையாட்டு  என்றால் என்னவென்றே தெரியாத குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய பரம்பரையில் யாரும் விளையாட விளையாட்டில் உலகப்புகழ் பெற்ற கபில்தேவ் வாழ்க்கையில் தானாகக் கிடைத்த வாய்ப்பு, அதனை எப்படி கபில்தேவ் வசப்படுத்திக் கொண்டார் என்பதனை பக்கம் 11முதல் 15 வரை நன்றாக சொல்கின்றார் இந்த நூலின் ஆசிரியர் திரு.என்.சொக்கன்.

                             எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்த சிறுவன் வில்லியம்ஸ், எதை எடுத்தாலும் 'போரடிக்கிறது ' என்று சொல்லி வாழ்க்கையை நொந்து கொண்டிருந்த சிறுவன் வில்லியம்ஸ் வாழ்க்கையில் , அவனது பள்ளியில் வந்து இறங்கிய கம்யூட்டர்கள் திருப்பு முனையாக மாறுகின்றது. புத்திசாலிப் பையனான வில்லியம்ஸ், எந்தப் பாடத்தையும் அதிவேகத்தில் கிரகித்துக்கொள்ளும் வில்லியம்ஸ் கம்ப்யூட்டரைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபின் போரடிக்கிறது என்ற வார்த்தையைக் கூறவில்லை. அலாவுதினின் அற்புத விளக்கைப் போல அற்புதங்கள் பல செய்யும் கருவியாக கண்னியை மாற்றுகின்றான் சிறுவன் வில்லியம்ஸ் , அவர்தான் பில் கேட்ஸ் என்று சொல்லி விளக்கம் கொடுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். " நம்முடைய இலக்கு எது, பாதை எது என்று தெரியும்வரை வாழ்க்கைப் பயணம் போரடிப்பது போல்தான் தோன்றும்.ஆனால் ,பில் கேட்ஸிக்கு கம்ப்யூட்டர் போல் நமது வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் அந்தத் திருப்புமுனை, எப்போது ,எப்படி எதிர்ப்படுமோ தெரியாது. அந்த நேரத்தில், அதைச்சரியாக அடையாளம் கண்டு பயன்படுத்திக்கொள்வது, நம்முடைய சமர்த்து என்று சொல்கின்றார் இந்த நூலின் ஆசிரியர் என். சொக்கன் பக்கம் 19-.

            கோபக்குதிரைகள் என்ற தலைப்பில் அலெக்ஸாண்டரின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனையை புத்தக ஆசிரியர் பக்கம் 35 முதல் 39 வரை விவரிக்கின்றார். யாராலும் அடக்க முடியாத முரட்டுக்குதிரையை அடக்க சிறுவன் அலெக்சாண்டர் அவனது தந்தையிடம் கேட்பது, அவர் அரைகுறை மனதோடு சரி எனச்சொல்வது, கோபக்குதிரையான பூசெபைலஸ் குதிரையிடம் சென்ற அலெக்ஸாண்டர் , தன் நிழலைப் பார்த்து குதிரை பயப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு அதன் நிழல் படியாமல் சூரியனுக்கு நேராக நிறுத்தி, பின் குதிரையில் சவாரி ஏறி குதிரையை அடக்கியது என்னும் நிகழ்வைத் தொகுத்து தந்துள்ளார்.  " நாம் சந்திக்கும் தினசரிப் பிரச்சனைகள் ஒவ்வொன்றும் பூசெபைலஸ் போன்ற கோபக்குதிரைகள்தான். அவற்றை அடக்கி ,ஜெயிக்க விரும்பினால் ,வெறும் வீரம் மட்டும் போதாது. பிரச்சனையின் வேர் எது என்று கண்டறிய வேண்டும், குதிரையின் நிழல்போல, அந்தப் பிரச்சனை வேர்களை வெட்டி எறிந்து விட்டால் , வெற்றி தானாக மடியில் விழும் " என்கின்றார் நூல் ஆசிரியர் பக்கம் 39. ஆம் உண்மைதான், வீரமும் விவேகமும் இணைந்தால் மட்டும்தானே வெற்றி .

                    வெற்றிக்கும் விடாமுயற்சிக்கும் உள்ள தொடர்பை சுட்டிக்காட்டப் பலரும் பயன்படுத்தும் வாழ்க்கை வரலாறு அறிவியல் அறிஞர் தாம்ஸ் ஆல்வா எடிசன் அவர்களின் வரலாறு. அவரது வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை அவரது மனித நேயச்செயல் என விவரிக்கின்றார் நூல் ஆசிரியர் பக்கங்கள் 40 முதல் 45 வரை 'வெளிச்சம் ' என்னும் தலைப்பில் . ரெயில் தண்டவாளத்தில் ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கிறான். அந்தத் தண்டவாளத்தில் ஒரு ரெயில் வருகிறது, அந்தச்சிறுவனை யாரும் கவனிக்கவில்லை. " யாரோ ஒரு பையன் அடிபடப்போகிறான், நமக்கென்ன ? " என்று சும்மா இருந்து விடாமல் , பாய்ந்து சென்று அந்தப்பையனைக் காப்பாறுகின்றார் தாமஸ் ஆல்வா எடிசன். தனது காலில் அடிபட்டு, சிராய்ப்புகள் , சின்ன அடிகள் பட்டாலும் உயிரைப் பயணம் வைத்து அந்தச்சிறுவனைக் காப்பாற்றி விடுகின்றார். அந்தச்சிறுவனின் தந்தை , மோர்ஸ் தந்தி அடிப்பது எப்படி என்பதனை நிறையப் படிக்காது தாமஸிக்கு சொல்லித் தருகின்றார். தந்தி அடிப்பதைக் கற்றுக்கொண்ட தாமஸ் ஆல்வா எடிசன் அதில் வல்லுநராகி, அதில் புதிய தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிக்கின்றார், அந்த சிறு விபத்தில் அந்தச்சிறுவனைக் காப்பாற்றியதுதான் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கையில் திருப்புமுனை என்பதனை சுவை படச்சொல்கின்றார் நூல் ஆசிரியர்.
 
                                  " குரு " என்ற தலைப்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனையை சுட்டிக்காட்டுகின்றார் நூல் ஆசிரியர் பக்கம் 51 முதல் 55 வரை . 1935 திருப்பூர் வாலிபர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களோடு நிகழ்ந்த முதல் சந்திப்புதான் அண்ணா அவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனை  என்பதனை விவரிக்கின்றார். " ஒருவர் எத்தனை பெரிய திறமைசாலி, உழைப்பாளியாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களும் கூட , தங்களுடைய முழுத்திறமையை வெளிப்படுத்தி ஜொலிப்பதற்கு ஒரு சரியான ஆசிரியர் ,வழிகாட்டி தேவைப்படுகிறார். தனது வாழ் நாள் முழுவதும் , தந்தை பெரியாரின் தொண்டராகவே வாழ்ந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரையை, தமிழகம் 'அறிஞர் அண்ணா ' என்று அன்போடு அழைக்கிறது. தந்தை பெரியாரையும் , அறிஞர் அண்ணாவையும் இணைத்த அந்த முதல் சந்திப்பு, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயததுக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாகத் திகழ்கிறது " என்று பக்கம் 55-ல் குறிப்பிடுகின்றார்.

                                                               கனவு காணுங்கள் என்று சொல்கின்றோம், ஆனால் காணும் கனவு அவ்வளவு எளிதில் வசப்பட்டு விடுகிறதா என்ன? உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் 'தி மாங்க் கூசோல்டு ஹிஸ் பெர்ராரி " என்னும் புத்தகத்தை எழுதிய ராபின் சர்மாவின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை, காணும் கனவை வசப்படுத்தும் வழிமுறையைச் சொல்கிறது. புகழ்பெற்ற வழக்கறிஞராக , இலட்சக்கணக்கில் வழக்கறிஞர் தொழிலில் பணம் சம்பாதித்த ராபின்சர்மா, எழுத்தாளர் ஆவது என முடிவு செய்து வழக்கறிஞர் தொழிலை விட்டு விடுகின்றார். நிறையப் படிக்கின்றார்.  எழுதத் தொடங்குகின்றார்.'தி மெகா லிவிங் எனப் புத்தகம் எழுதுகிறார், , தானே அச்சடித்து வெளியிடுகின்றார். வாங்க ஆளில்லை, தளராமல் அடுத்த புத்தகம் எழுதுகிறார், தானே பதிப்பிக்கின்றார், விற்கவில்லை, அப்போதுதான் ஒரு நண்பர் பதிப்பகத்தின் மூலம் வெளியிடுங்கள் எனச்சொல்ல, பதிப்பகத்தின் மூலம் வெளியிடுகின்றார். இன்று உலக மொழிகள் பலவற்றில் அவரது புத்தகம்.  புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்த ராபின்சர்மா அதனை விட்டுவிட்டு எழுதுவது என முடிவெடுத்து எழுத்துக் களத்தில் இறங்கியதுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை என்பதனை அழகுற பக்கம் 190 முதல் 194 சொல்லுகின்றார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

                பெரும்பாலும் மனிதர்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைவது நல்ல மனிதர்களிடம் ஏற்படும் தொடர்பு அல்லது படிக்கும் நல்ல புத்தகங்கள் எனலாம், அதனை நிருபிக்கும் விதமாக புகழ்பெற்ற மனிதர்கள் , புகழ் பெறுவதற்கு முன்னால் சந்தித்த மனிதர்களால் ஏற்பட்ட திருப்புமுனைகளை பல்வேறு அத்தியாயங்களில் இந்த நூலின் ஆசிரியர் என்.சொக்கன் சுட்டிக்காட்டியுள்ளார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் முதன்முதலாக பாரதியார் அவர்களை சந்தித்த நிகழ்வு , பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் திரு எம்.ஜி.ஆர் அவர்களால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாட வாய்ப்பு பெற்ற நிகழ்வு,முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்கள் சுவாமி சிவானந்தர் அவர்களைச் சந்தித்த நிகழ்வு, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் இசை அமைப்பாளர் திரு எம்.எஸ்.விசுவநாதன் அவர்களைச் சந்தித்து முதன்முதலாக வாய்ப்பு பெற்ற நிகழ்வு  எனப் பல்வேறு பிரபலங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பு முனைகள் விரிவாக தனித்தனி அத்தியாயங்களாக விவரிக்கப்பட்டுள்ளன. "இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள 50 பேரில் ஒரு சிலரைத் தவிர , மற்ற யாரும் ஏற்கனவே புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்லர். அவர்களுடைய வாழ்க்கையில் , அது குழந்தைப் பருவத்திலோ, இளம் பருவத்திலோ அல்லது முதுமைப் பருவத்திலோ ஏதோ ஒரு தருணத்தில் - ஒரு சிறு பொறி தட்டியது என்று சொல்வார்களே அதுபோல் வாழ்க்கையையே மாற்றிய சம்பவத்தால் இன்று சாதனையாளர்களாக உயர்ந்து நிற்கிறார்கள் ". படித்துப்பார்க்கலாம். இளைஞர்கள், மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கக்கூடிய புத்தகம். வரும் திருப்புமுனைகளைப் புரிந்துகொண்டு வாழ்வில் உயர  , இந்தத் திருப்புமுனைகள் பயன்படும்,

3 comments:

Karuppiah Subbiah said...

பல நல்ல நூல்களை தொடர்ந்து வாசிப்பது மட்டுமல்லாமல் , அதை மிகத் தெளிவாக பதிவும் செய்கிறீர்கள் . அத்தோடு உங்களுடைய வாழ்க்கையை, நேரத்தை மிகச் சரியாகப் பயன்படுத்துகிறீர்கள். அர்த்தமுள்ள வாழ்க்கை!

eraeravi said...

நூல் விமர்சனம் மிக நன்று !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி*

*www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
**http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
**http://www.noolulagam.com/product/?pid=6802#response*

முனைவர். வா.நேரு said...

அர்த்தமுள்ள வாழ்க்கை!-உங்களைப் போன்றவர்களின் ஊக்கமூட்டல், வழிகாட்டுதல்களால். நன்றி..