Tuesday, 5 March 2013

அண்மையில் படித்த புத்தகம் : வி.ஸ. காண்டேகர் கதைகள்

நூலின் தலைப்பு    : வி.ஸ. காண்டேகர் கதைகள்  தொகுதி ஒன்று
தமிழ் வடிவம்          : கா.ஸ்ரீ.ஸ்ரீ.
பதிப்பகம்                  :   அல்லயன்ஸ் பதிப்பகம்
இரண்டாம் பதிப்பு :  டிசம்பர் 2004
மொத்த பக்கங்கள்: 216 விலை ரூ 50.00
மதுரை மைய நூலக எண் : 160859


                                          இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான காண்டேகரின் சிறுகதைத் தொகுப்பு இந்தப் புத்தகம் . காண்டேகரைப் பற்றி 'காண்டேகர் என்னும் சூறாவளி' என்னும் தலைப்பில்(பக்கம் 5-9 )  1940 முதல் 1970 வரை தமிழ் வாசகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர் என்பதனைக் கூறியிருக்கிறார்கள். 'திலீபன் ' என்னும் பெயர் தமிழர்களால் மறக்க முடியாத பெயர். இன்றைய இளம் பருவத்தினர் பலருக்கு திலீபன் என்னும் பெயர் இருப்பதைக் காண முடியும். தமிழ் ஈழப்போராட்டத்தில் தண்ணீர் கூட அருந்தாது, அகிம்சை வழியில் உயர் நீத்த மாவீரனின் பெயர் அது . ஆனால் ஒரு 60 , 70 வயதில் இருப்பவருக்கும் 'திலீபன் ' என்று பெயர் இருக்கிறதே என்று பார்த்தால் அது காண்டேகரின் கதாபாத்திரமான 'திலீபன் ' என்னும் பெயர் என்பது இதில் சுட்டப்பட்டிருக்கிறது.

                                கற்றவர்கள் பார்வையில் காண்டேகர் என்னும் தலைப்பில் பலரின் கருத்துரைகளை அடுத்து பக்கங்களில் (10-14)  கொடுத்திருக்கின்றார்கள் . பேரறிஞர் அண்ணா " சமூக அமைப்பு முறையிலே மிகப் புரட்சிகரமான மாறுதல் வேண்டும் என்பதற்கான போர் முரசு காண்டேகரின் கதைகள் " என்று சொல்லியிருக்கின்றார். " ,,, எழுதுகோலால் உலகை வாழ வைக்கும் உத்தமர்களில் காண்டேகர் ஒருவர் " என்று டாக்டர் மு.வ. , என்ப பலரும் , பல பத்திரிக்கைகளும் காண்டேகரின் எழுத்தைப் பாராட்டியதை பட்டியலிட்டுக் கொடுத்திருக்கின்றார்கள்,

                                     அதனைத் தொடர்ந்து தமிழ் மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.," காண்டேகரும் நானும் " என்னும் தலைப்பில் தன்னுடைய கருத்துக்களைக் கூறியிருக்கின்றார்(பக்கம் 15-16) . மொழி பெயர்ப்பு நூலின் வெற்றிக்கு மூல் நூல் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் , அதனை வெற்றி நூலாக ஆக்குவதில் மொழி பெயர்ப்பாளரின் பங்கு என்பது மிக இன்றியமையாதது. கா.ஸ்ரீ.ஸ்ரீ -யின் மொழி பெயர்ப்பு எப்பொழுதுமே வேற்று மொழி நூல் என்று காட்டாது. அமையும் அருமையான மொழி பெயர்ப்பு.

                                      காண்டேகரின் கதைகள் எப்பொழுதுமே அமைதியாகப் பேசும் , ஆனால் ஆழமாகப் பேசும் வல்லமை உடையவை. மனிதர்களின் மனங்களின் ஊடாகப் பயணித்து, அவனுக்குள் நீர்த்துப்போயிருக்கும் மனிதத் தனமைகளை எடுத்துக்காட்டும் வல்லமை வாய்ந்தவை . இந்த நூலின் முதல் சிறுகதை ; கறுப்பு ரோஜா " அப்படித்தான் உள்ளது. இரண்டு தம்பதிகள். ஒரு தம்பதிக்கு பணம் இருக்கிறது, பதவி இருக்கிறது, ஆனால் குடும்பத்தில் அமைதி இல்லை, ஆனால் இன்னொரு தம்பதிக்கு படிப்பு மிக அதிக அளவில் இல்லை, பதவி பெரிய அளவில் இல்லை ,ஆனால் ஆழமான புரிதலின் காரணமாக தம்பதிகளுக்கு இடையே அன்பு இருக்கிறது. இதனை மிக அழகாக சுட்டிக்காட்டும் கதை, சிவப்பு ரோஜா, கறுப்பு ரோஜா என ஒப்பிட்டு. 

                                    'சித்தப்பாவின் உயில் ' என்னும் சிறுகதை உறவுகளுக்கு இடையே நிலவும் மனித நேயமற்ற தனைமையை சுட்டிக்காட்டும் சிறுகதை. 'சுதா' என்னும் பாத்திரம் பேராசைக் கணவனுக்கும் , பேராசை பிடித்த அப்பாவுக்கும் இடையே மாட்டிக்கொண்ட பெண் . கொடுத்தால்தான் அழைத்துப்போவேன் என அடம் பிடிக்கும் கணவன், எப்படியாவது எதனையாவது கொடுத்து கணவ்னோடு சுதாவை அனுப்பிவிடத் துடிக்கும் தந்தை என்று கதாபாத்திரங்களை விவரிக்கின்றார் காண்டேகர். சுதாவின் சித்தப்பா திடீரென்று இற்ந்து போகின்றார், சித்தப்பாவின் மகன் சிறுவன் சந்திரகாந்தன் சுதாவின் வீட்டிற்கு அடைக்கலமாக வருகின்றான். சுதா அவனிடம் அன்பு காட்டுகிறாள். அப்பாவும் , கணவனும் சேர்ந்து சித்தப்பாவின் சொத்தை அபகரிக்கத் திட்டம் போட , சுதா அதனை எதிர்த்து சந்திரகாந்தனோடு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் என்பது கதை. உறவுகளுக்கு இடையே இருக்கும் பண ஆசையை மிக நுட்பமாக எதார்த்தமான நடையில் சுட்டுகின்ற சிறுகதை இது.

                                   'இருபது ஜீன் ' என்னும் கதை,ஆசிரியராக வேலை பார்க்கும் குடும்பம் இல்லாத் ஒரு பெண்மணி, சிந்துவின் மன ஓட்டத்தைப் பற்றியது. ஒரே மாதிரியான வேலை, பொழுது எனப் போரடிக்கும் வாழ்க்கையாக தன் வாழ்க்கையை உணர்கின்றாள். தன்னுடைய தோழி குந்தம் என்பவளை சந்திக்கின்றாள். குழந்தை இல்லாது, மிக அன்பு செலுத்தும் கணவனோடு வாழ்பவள். அவள் வாழ்க்கையில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று நினைக்கின்றாள். ஆனால் குந்தம் தனக்கு முழு மகிழ்ச்சி குழ்ந்தை இன்மையால் இல்லை என்றும் தனது தங்கை மஞ்சு இரண்டு குழந்தைகளோடு மிக மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்றும் , அவள் பாக்கியம் செய்தவளென்றும் சொல்கின்றாள். மகிழ்ச்சியாக இருப்பதாகச்சொல்லப்படும் மஞ்சுவை சந்திக்கின்றாள், சிந்து. மஞ்சுவின் மூலமாக குடும்பம் என்ற அமைப்பைப் பற்றி ஆழமான கேள்விகளை முன் வைக்கின்றார் காண்டேகர் . இதோ அவரின் எழுத்துக்களிலேயே

                                "சிறிது நேரம் கழித்து மஞ்சு பேசினாள் " காலேஜில் படித்த நாளில் நானும் எப்போதும் மனக்கோட்டை கட்டி வந்தேன். பட்டம் பெற்றதும் வாத்தியாரம்மா ஆகவேண்டும் , ஆண்களைப் போலச்சுதந்திரமாக வாழவேண்டும், குழ்ந்தைகளுக்குக் கல்வி புகட்டும் தூய செயலைச்செய்யவேண்டும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் --- "
                               அவள் தயங்கிப் பேச்சை நிறுத்தினாள். அவளுடைய அழகிய கண்களில் சோர்வு பரவுவதை சிந்து நன்றாகக் கவனித்தாள். அவளுக்கு ஆறுதல் கூறுவதற்காக . "நாற்பது குழந்தைகளுக்கு வாத்தியாரம்மாவாக இருப்பதைவிட, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருப்பதில் மிகுந்த சுகம் இருக்கிறது, மஞ்சு " என்றாள்

                               " சுகமாவது? குடும்பமும்,மலையும் தூரத்திலிருந்து பார்க்கத்தான் அழகானவை, சிந்து அம்மா! உலகத்தார் நான் சுகமாக வாழ்வதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையைச்சொல்லப்போனால் , எரிமலை உள்ளுக்குள்ளே குமுறுவதுபோல என் நிலைமை இருக்கிறது; கணவருடைய அன்பு இருக்கிறது.இரண்டு குழ்ந்தைகளும் இருக்கின்றன. ஆனால் ..."

                                 " சிந்து அம்மா, நான் காலேஜில் இருந்தபோது பிரசங்கப்போட்டியில் பொற்பதக்கம் பெற்றேன். இப்பொழுது ' காபி கொண்டு வரட்டுமா? ' என்று அவரைக் கேட்பதைத்தவிர என் பிரசங்க வன்மைக்கு எவ்விதப்பயனும் இல்லை. நான் கு வருசங்களில் இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டன. உலாவப்போவதோ, கூட்டத்துக்குப் போவதோ -எதுவுமே என்னால் செய்ய முடியவில்லை. கைக்குழந்தையைக் கூட்டத்துக்கு அழைத்துப்போனால் அங்கே அது அழுகிறது.எல்லோரும் நம்மை வெறுப்போடு பார்க்கிறார்கள்.ஒன்று மாற்றி ஒன்று, குழ்ந்தைகள் நோயாளிகளாக இருக்கின்றன. கவலையும் கண்விழிப்பும் ஓய்வதில்லை. குழந்தைகள் மலர்கள் என்று சொல்லும் கவிகளைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்ப வேண்டும். குழ்ந்தை என்பது தென்னை மரம். பத்துப் பன்னிரெண்டு வருடங்கள் கஷ்டபட்டு வளர்த்தால் ஒரு குழந்தை பெரிதாகும் ...." பக்கம் (156&157).

                         என்னைச்சுற்றி இருக்கும் பெண்களைப் பார்க்கிறேன். எனக்கு தெரிந்த ஒரு பெண், +2 -வில் அவ்வளவு துன்பப்பட்டு, உயர் மதிப்பெண் பெற்று மருத்துவக்கல்லூரியில் படித்து டாக்டரானாள். திருமணம் செய்ய வந்த மாப்பிள்ளை வீட்டார் மிகப்பெரிய பணக்கார இடம், அவர்கள் போட்ட் ஒரே  கட்டுப்பாடு, பெண் வேலைக்குப் போக வேண்டியதில்லை, பெண் வீட்டார் ஒத்துக்கொள்ள, அந்தப் பெண் திருமணம் முடிந்து போய்விட்டாள்,. தன்னுடைய பிள்ளைகளுக்கு மருந்து , மாத்திரை கொடுப்பதோடு சரி, எவ்வளவுதான் வாய்ப்பு, வசதிகள் இருந்தாலும் இளம் வய்தில் இருந்து தான் கண்ட கனவுக்காக உழைத்து, உயர் பட்டம் பெற்ற ஒருவரின் கனவு இப்படி கல்யாணம் மூலம் பறிக்கப்படலாமா? ஒரு ஆண் டாக்டரிடம் இப்படிச்சொல்ல இயலுமா? நிறைய சாப்ட்வேர் பொறியாளர்களின் நிபந்தனை, பெண் படித்திருக்க வேண்டும், ஆனால் வேலைக்குப் போகக்கூடாது, வீட்டில் இருந்து சாப்பாடு ஆக்கிப்போட்டாள் போதும் என்பதாகத்தான்  இருக்கிறது.  படிக்க வைக்கின்றோம், படிக்க வைத்த பின் நம்முடைய பெண் பிள்ளைகளின் மன ஓட்டத்திற்கு ஏற்ப அவர்களை வேலை பார்க்க அனுமதிக்கின்றோமா? என்பதுதான் இன்றைய உலகத்தின் கேள்வி. காண்டேகர் கேட்கின்றார் 80 ஆண்டுகளுக்கு முன்னால், தந்தை பெரியார் கேட்டது போலவே தன் எழுத்துக்களால் இன்றைய பெண்களின் கேள்வியை.

                            அதனைப் போலவே 'கல்லும் கரையும் ' என்னும் கதை ஒரு அரசனின் இறுமாப்பை தொண்டுள்ளம் கொண்ட நாட்டியக்காரி அகற்றி அவனைப் போர்க்களத்தில் அழவைக்கும் கதை.'திருட்டுத் தெய்வம் ' என்னும் கதை தலைப்பைப் பார்த்தவுடன் சிலர் கோபிக்கக்கூடும்,இரண்டு பிச்சைக்காரர்களைப் பற்றிய கதை. பிச்சை எடுக்கும் நிலையிலும் போகாத ஈகோ, மற்றவன் துன்பப்பட வேண்டும் என்பதே ஒருவனின் இலக்காக இருப்பதைச்சொல்லும் கதை.

                          'முதற்காதல் ' என்னும் சிறுகதையும் மிகவும் நன்றாக இருக்கிறது. காதல் என்பதை மிகவும் இயல்பாக எடுத்துக்கொண்டு பேசும் சிறுகதை, முதற்காதல் என்னும் நாவல் மிக நன்றாக விற்றுத் தீர்ந்து விட்டாலும் அதனை மீண்டும் பதிப்பிக்காமல் இருக்கும் நாவல் ஆசிரியரைச்சந்தித்து பேசும்போது முதல்காதலுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை, அது ஒரு வித இனக்கவர்ச்சி என்பதாகவும் அடுத்தடுத்து காதல் வரும் எனவும் கூறுவதாக விவரிக்கின்றார். இந்த சிறுகதையைப் பேசினால் 4,5 பக்கம் விரிவாகப் பேசலாம்.

                          " இப்பொழுதும் இவருடைய (காண்டேகருடைய ) புத்தகங்கள் அனைத்தையும் ஒருமுறை ஊன்றிப் படிப்பது எழுத்தாளர்களுக்கு எழுத்து வன்மையைக் கூட்டும் " என்று வலம்புரி சோமனாதன் என்பவர் குறிப்பிட்டிருப்பதை பக்கம் 10-ல் குறிப்பிட்டிருக்கின்றார்கள். உண்மைதான் , தமிழில் எழுத விரும்புகிறவர்களும், எழுத்தை விரும்புகிறவர்களும் கட்டாயம் காண்டேகரையும் படிக்கவேண்டும் என்பதே எனது கருத்தும்.

1 comment:

akil said...

மிக அருமையான புத்தகத்தை அறிமுகம் செய்துள்ளீர்கள்.....அருமையாக... கிரௌஞ்சவதம் நூலில் தீலிபனை நானும் முதல் முதல் சந்தித்தது என் நினைவுகளில் நிழலாடியது...பாராட்டுக்கள்..தொடரட்டும் உங்கள் பணி...!!