Monday, 30 September 2013

அணமையில் படித்த புத்தகம் : நீ எழுத மறுக்கும் எனதழகு- இளம்பிறை கவிதைகள்

அணமையில் படித்த புத்தகம் : நீ எழுத மறுக்கும் எனதழகு- இளம்பிறை கவிதைகள்
நூலின் ஆசிரியர்             கவிஞர் இளம்பிறை
வெளியீடு                   பொன்னி, சென்னை-91
முதற்பதிப்பு                : 2007
மொத்த பக்கங்கள்          : 272  விலை ரூ 140

                                          இளம்பிறையின் கவிதைத் தொகுப்புகளான இளவேனில் பாடல்கள்(1990),மெளனக்கூடு(1993), நிசப்தம்(1998), முதல் மனுசி(2003),பிறகொரு நாள்(2005) ,2005க்குப்பின் பல்வேறு இதழ்களில் பிரசுரமான புதிய கவிதைகள் என இளம்பிறையின் 2007-வரையிலான முழுப்படைப்புகளும் தொகுக்குப்பட்டுள்ள நூல்.

                                       இளம்பிறையின்  இயற்பெயர் பஞ்சவர்ணம்.சென்னையில் ஆசிரியராக வேலை பார்க்கின்றார். பெற்ற விருதுகள் என முதல்பக்கத்திலேயே அவ்ரைப் பற்றிய தகவல்கள். கவிதைகளுக்கு முன்பாக எனத் தன் கருத்துக்களை பக்கம் 7 முதல் 10வரை இளம்பிறை கொடுத்துள்ளார். இயல்பாக இருந்த ஆர்வம், வயல் வேலைக்குச்சென்றபோது ,'நான் அதிகமான பாடங்களை அங்குதான் கற்றுக்கொண்டேன் ' எனக்கூறும் இளம்பிறையின் கவிதைகளில் கிராமத்து மண்ணின் மணம் கமழ்கின்றது. சிந்தனையாளர் மன்றம் என்ற அமைப்பால் தனக்குக்கிடைத்த வாய்ப்பு , அதனைத் தொடர்ந்த ஆர்வம், உதவியவர்கள், நன்றிக்குரியவர்கள் என ஒரு  பட்டியலைக் கொடுத்துள்ளார்.

                                    மொத்தம் 169 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 'மழைத்துளிகளோடு
என் கண்ணீர்த் துளிகளும்
வயலில் விழுந்ததை அறிந்ததுபோல் ' என அறிமுகப்படுத்தும் தனது அப்பாவிற்கும் 'உன் வயதையொத்த உன் நண்பர்களுக்கும்/இந்தப் புத்தகம் " எனக் காணிக்கையாக்குகின்றார். நான் பல கூட்டங்களில் கீற்று இணையதளத்தில் வந்த இளம்பிறையின் பேட்டியை குறிப்பிடுவதுண்டு. 'படிக்கப்போவியா? படிக்கப்போவியா ? ' என விளக்குமாத்தோடு இளம்பிறையின் அம்மா ,இளம்பிறையை விரட்டியதை....    'அம்மா' என்னும் இளம்பிறையின் கவிதை
                                                'வயது பத்தாகுமுன்னே
                                                வயலுக் கிழுத்தவளே...
                                                வாடி வயலுக்கென
                                                வம்பு செஞ்ச எந்தாயே ' என எந்தவிதப் பூச்சும் இல்லாமல் அம்மா செய்த வம்பை இயல்பாகப் பாடிவிட்டு ' காலுக்குச் செருப்பில்லாமே நான்
                      கஷ்டப்பட்டு நடக்குறேன்னு
                      மொட்டக்காலோடு நீ
                      முள்ளு வெட்டி வித்துப்புட்டு
                      மட்ட விலையில் ஜோடி
                      செருப்பு வாங்கித் தந்தவளே...' என்று அம்மாவின் தியாகத்தைப் பாடிவிட்டு
                       'நான் எங்க திரிஞ்சாலும் என்
                       இதயத்துலே வாழுகிற
                        உனக்குத்தான் மொதப்பாட்டு
                        என் உயிர் பாடும் தாலாட்டு ' எனத் தனக்கு தாலாட்டுப்பாடாத தாயை நினைவுகூறும் 'அம்மா' கவிதை வாசிக்கும் எவரையும் உருக்கும்.  

                           தாத்தாவின் பிணத்தருகே அம்மா அழுக, 'வெற்று ஊளையிட்டேன் நான் '  என எழுதும் இளம்பிறை எது எதற்காக அழுதேன் எனப் பட்டியலிடும் 'அழுத நினைவுகள் ' கவிதை கனமான கவிதை.
 'என் கூடு
 கொடூரமான
மெளனங்களால் ஆனது ' என்று பறை சாற்றும் 'மெளனக்கூடு ' கவிதையும், அதன் தொடர்பான சில கவிதைகளும் தலைச்சும்மாட்டை கொஞ்ச நேரம் இறக்கிவைத்து இளைப்பாறி மறுபடியும் சுமப்பதைப் போல , குடும்பத்தை சுமத்தலையும் அதனால் தவித்தலையும் மிக நுட்பமாக உணர்த்துகின்றன.
நீங்கள்
உங்களைத் தோண்டிச்செல்கையில்
அடியாழத்தில்
ஒரு மூலையில் கேட்கும்
அழுகுரலே...
உண்மைக்குரல்
கேட்டதுண்டா எப்போதாவது ?
என்னும் 'உண்மை' கவிதை(பக்கம் 44)யின் கருத்தைப் போலவே அடியாழத்தில் கேட்கும் அழுகுரலாய் பல கவிதைகள் இத்தொகுப்பில் .  'அறுவடைக்காலம்' என்னும் கவிதை என் தங்கைகளும், அக்காக்களும் கிராமங்களில், குடிகார கணவனைக் கட்டிக்கொண்டு, அடியும் மிதியுமாய் ஓடும் வாழ்க்கை அவலத்தை அப்படியே எழுத்தில் வடித்த கவிதை.
இந்தத் கவிதைப் புத்தகத்தின் தலைப்பாய் அமைந்திருக்கும் 'நீ எழுத மறுக்கும் எனதழகு' -உழைக்கும் மக்களை அல்ட்சியப்படுத்தும் ஊடகங்களுக்கும் , காமிராக்களும் நல்ல் இடி.

              கவிதைகள் கண்ணாடி(பக்கம் 75) , இப்பவும் என் கிராமத்திலே(95), தொட்டிச்செடி(99), அதுவரை(104) ,வி.ஐ.பி.பகுதி(171),விலகிச்செல்லும் திருடர்களும் மின்னும் நட்சத்திரங்களும் (191)போன்ற கவிதைகளைப் பற்றி நிறைய எழுதலாம். 'இப்பவும் என் கிராமத்திலே' என்னும் கவிதை இன்ன்மும் புரையோடிப்போய்க்கிடக்கும் ஜாதியத்தை,மத்த்தை  வரிகளால் வறுத்தெடுக்கிறது

' நேத்து பொறந்த பய
  பேரு சொல்லிக் கூப்புடுறான்
 ஆளூ 'நடவாளு'னு
அப்பங்காரன் சொல்லித்தாரான்.

வேல கிடைச்சாலும்
வித்த பல கத்தாலும்
வாடகக்கி வீடு கேட்டா
சாதி கேட்டு இல்லேங்கிறான்

களத்த செதுக்குவோம்
காவடியுந் தூக்குவோம்
அம்மன குளிப்பாட்ட
ஆழ்கெண்றும் வெட்டுவோம்
அபிசேவம் பண்ணயில
வெளியிலதான் நிக்கிறோம்.

ஆண்ட நொழஞ்ச்சாதான்
கற்பூரம் காட்டுறாங்க
அவருக்கு மட்டுதாங்க
பிரசாதம் நீட்டுறாங்க
விபூதிய அள்ளிப்போட்டு
'வெலகு ...வெலகு'ங்கிறார்
கேவலத்த தாங்கிக்கிட்டு
கோவிலுக்குப் போயி வாரோம் .

கல்லு செலய வச்சி
காசு போட உண்டி வச்சு
எல்லாமே சாமிக்கென
சொல்லிப் பொழச்சிக்கிட்டு
அநியாயந்தான் பண்ணுறாங்க.

பட்டுச்சேலை கட்டுக்கிட்டு
பவளத்தோடு போட்டுக்கிட்டு
நெய்யும் பருப்புமா
நெதம் திங்கும் பொம்பளங்க
உடம்பு எளக்கனும்னு-கோயிலுக்கு
ஓயாம வந்து போறா...
அய்யருக்கும் ....சாமிக்கும்
அவளைப்புடிக்காம
கட்டிப்ப்ழஞ்சோறும்
சுட்ட மெளகாயும்
வேலைத்தளத்துலேயே
வெரசாக சாப்பிடுற
எங்களையா பிடிக்கும் ?
வெளியில நின்னுதாங்க- சாமிகிட்ட
வேதனைய சொல்லி வாரோம்.

புள்ளகள கூட்டிப்போயி
பள்ளிக்கூடம் சேக்கயில
எங்களையும் 'இந்து'  னுதான்
எழுதிக்கிறான் அவனாவே....
எதுக்குப்பின்னே ஏமாத்துறான் ? (பக்கம் 96)


பெயர் சொல்லி, சிலரைப் பற்றிய கவிதைகளும் இத்தொகுப்பில்  உள்ளது. திராவிடர் கழகத்தின் பிரச்சாரச்செயலாளர் தோழியர் அருள்மொழி பற்றி ஒரு கவிதை உள்ளது .

நட்பொளிரும் கண்களுடன்
நிழல்களிருந்து
சேகரித்து வந்த நினைவுகளைக்
கலந்து கொண்டிருக்கிறாள் காற்றில்
தனக்குக் கறுத்த நிறம் வாய்க்கவில்லையே !-என்று
மெய்யாகக் கவலைப்பட்ட ஒருத்தியை
அப்போதுதான் நேரில் பார்த்தேன்
எள்ளலுடன் குறைசுட்டிப் பேசும்
அவளின் பேச்சுமொழி புன்சிரிப்பில்
ப்ரியமுடன் கலக்கிறேன்.....
வாய்ப்பு கிட்டும் போதெல்லாம்
பார்வையாளர் வரிசையிருந்து(திராவிடர் கழக அருள்மொழி அவர்களுக்கு ) பக்கம் 219/
இதைப்போலவே இளங்கோ என்னும் பெயர் சுட்டி அவரைப்பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார்.

                  இளம்பிறையின் கவிதைகளில் அழகியல் உள்ளது.உவமை உள்ளது. கவிதைக்கான இலக்கணம் அனைத்தும் உள்ளதோடு உண்மை நிலை உணர்த்தும் கவிதைகளாக இருப்பதுதான் இந்தத் தொகுப்பின் வெற்றி. பத்து முறை படித்தால்தான் புரியும் என் கவிதை என்னும் பாசாங்குத்தனம் இல்லை. உள்ளது உள்ளபடி வெகு இயல்பாக கிராமத்தை சொல்லிச்செல்லும் இக்கவிதைத் தொகுப்பு, கிராமத்தில் பரவிக்கிடக்கும் ஜாதி நச்சையும் சொல்லிச்செல்லத் தவறவில்லை. பக்கம் 225 முதல் 270 வரை இளம்பிறை கவிதைகளைப் பற்றிய விமர்சனங்களும் மதிப்பீடுகளும் என்னும் பகுதி உள்ளது,கவிஞர் கந்தர்வன், எழுத்தாளர்கள்  சுஜாதா,வெங்கட்சுவாமி நாதன்,கவிஞர்கள் அறிவுமதி,ராஜ மார்த்தாண்டன்,ஞானக்கூத்தன் ,இந்திரன எனப்பலரும் எழுதிய இளம்பிறையின் கவிதைகள் பற்றிய மதிப்புரைகள் மிக நன்றாக உள்ளன. படித்துப்பாருங்கள்.                                             

4 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அருமை தோழரே!. அதிகம் பேசப்பட வேண்டிய - ஆனால் அவ்வாறு பேசப்படா த- சிறந்த தமிழ்க்கவிஞர்களுள் ஒருவர் இளம்பிறை. இதுபற்றிய எனது வருத்தத்தை என் கட்டுரைகள் சிலவற்றில் பதிவு செய்திருக்கிறேன். வாய்க்கும் இடங்களில் இவருக்கான எனது பாராட்டுப் பதிவையும் தவறாமல் செய்திருக்கிறேன்.

”மும்பையிலிருந்து புதியமாதவியும், புதுவையி லிருந்து மாலதி மைத்ரியும், சென்னையிலிருந்து கனிமொழி, இளம்பிறை, தாமரையும், வந்தவாசியிலிருந்து அ.வெண்ணிலாவும், திருத்தணியிலிருந்து ப.கல்பனாவும், துவரங்குறிச்சியிலிருந்து சல்மாவும், சிவகாசியிலிருந்து திலகபாமாவும், புதுக்கோட்டை -ஆலங்குடியிலிருந்து நீலாவும் நம்பிக்கையூட்டும் வகையில் தற்போது எழுதி வரும் பெண்கவிகள் என்று உறுதியாகச் சொல்லலாம்” இது எனது 2003ஆம் ஆண்டு வரிகள் (எனது வலைப்பக்கம்பார்க்க -http://valarumkavithai.blogspot.in/2013/09/blog-post_9232.html). அத்தோடு, இளம்பிறையின் ஒரு தொகுப்புக்கு கவிஞர் இன்குலாப் எழுதிய முன்னுரையுடன், மும்பைக் கவிஞர் புதிய மாதவியின் கவிதைத் தொகுப்பு ஒன்றுக்கு நான் எழுதிய முன்னுரையை ஒப்பிட்டு, கணையாழி இதழில் கவிஞர் பழமலை எழுதிய கட்டுரை முக்கியமானது. சிறந்த கவிஞரை அவரது கவிதைகளோடு அறிமுகப்படுத்திய உங்களின் தொடர் வாசிப்பு தொடர வேண்டுகிறேன்.

தமிழ் ஓவியா said...

சிறப்பான விமர்சனம் அய்யா

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழரே ! தங்களின் வலைத்தளத்தில் சென்றும் வாசித்தேன், தாங்கள் குறிப்பிட்ட கட்டுரையை. எப்பொழுதும் ஆக்கமும் ஊக்கமுமாகவே அமைகிறது தங்கள் கருத்துக்கள் எனக்கு... நன்றி.

முனைவர். வா.நேரு said...

நன்றி தமிழ் ஓவியா, தங்களின் கருத்திற்கும், என் வலைத்தளப்பதிவு வருகைக்கும்.