Monday, 3 February 2014

நிகழ்வும் நினைப்பும் (16) நமது தோழர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம்

01.02.2014   இரவு  9 மணியளவில் , திராவிடர் கழக மாணவரணி மாநிலச்செயலாளர் தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்கள் அலைபேசியில் அழைத்தார். அய்யா, கூட்டத்திற்கு சென்ற இடத்தில், ஒட்டன்சத்திரம் அருகில் தலைமைக் கழகப்பேச்சாளர் பெரியார் செல்வம் அவர்களுக்கு, உடல் நிலை சரியில்லை, மாரடைப்பு என்று சொல்கின்றார்கள், மதுரைக்குத் தான் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள். கொஞ்சம் என்னவென்று பாருங்கள் என்றார். பதற்றம் தொற்றிக் கொண்டது.  திராவிடர் கழக் மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் அவர்களிடம் பேசினேன். அண்ணன், திண்டுக்கல் வீரபாண்டி பேசினார், முதல் உதவி சிகிச்சை ஒட்டன்சத்திரத்தில் செய்திருக்கின்றார்கள், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள் , அங்குதான் நான் போய்க் கொண்டிருக்கின்றேன் என்றார்.

                                            இன்று(2.2.2014)  ஆஞ்சியோகிராம் செய்து பார்த்ததில் , 3 அடைப்புக்கள் இருக்கின்றன, அதிலும் மாரடைப்பு வரக்காரணமான ஒரு அடைப்பிற்கு ஆஞ்சியோ பிளாஸ்டிரி செய்ய வேண்டும் என்று மருத்துவனை மருத்துவர்கள் சொல்ல், ஆஞ்சியோ பிளாஸ்டிரி செய்யப்பட்டு, இப்போது நலமாக மருத்துவமனையில் இருக்கின்றார். தோழர் பெரியார்செல்வத்தின் அம்மா, துணைவியார் மற்றும் உறவினர்களோடு திராவிடர் கழகத் தலைமைக் கழகச்சொற்பெருக்காளர் முனைவர் அதிரடி அன்பழகன், அண்ணன் வே.செல்வம்,  மதுரை புற நகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மா.பவுன்ராசா, பா.சடகோபன் க.அழகர்,.அ.வேல்முருகன் மற்றும் பல தோழர்கள் வநது பார்த்த வண்ணமும் அருகிலும்  உள்ளனர். தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்திருக்கின்றார். கழகப் பொதுச்செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். திராவிடர் கழகத்தின் தலைமைக் கழக உறுப்பினர் அய்யா தே.எடிசன்ராசா அவர்கள், தோழர்கள் பெரியார் செல்வத்திற்கு செய்யும் உதவி, இப்போது அவரைத் தொந்தரவு படுத்தாமல் இருப்பதே,தய்வு செய்து அவரை ஓய்வு எடுக்க விடுங்கள்  என்றார். உண்மைதான். ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் இது.

                                            தோழர் பெரியார் செல்வன் பேசாத திராவிடர் கழகக் கிளை உள்ள ஊர் தமிழகத்தில் கிடையாது என்ற அளவிற்கு சென்ற 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேசி வரும் தோழர். ஆளே கூடாத  இடத்தில் பேசச்சொன்னாலும், தன்னுடைய பேச்சால் போவோர் , வருவோரை எல்லாம் நிறுத்தி , 500 1000 மென ஆட்களை சேர்த்து, தான் சொல்லும் கருத்தை கேட்க வைக்கும் அருமையான பேச்சாற்றல் உள்ள தோழர். எடுத்துக்கொண்ட கருத்தை சொல்வதற்கு பல்வேறு உதாரணங்களை அடுக்கடுக்காக அடுக்கும் தோழர். பள்ளிகளில், கல்லூரிகளில் சென்று மாணவ மாணவிகளுக்கு அவர் சொல்லும் அறிவுரை சார்ந்த பகுத்தறிவுக் கருத்துக்கள் தனித் தன்மை உடையவை.    தொடர் சுற்றுப் பயணத்தில் இருப்பவர்.மதுரையில் 3 நாள் தொடர் கூட்டங்கள் என்றாலும், முதல் நாள் பேசிவிட்டு இரவு பத்தரை மணிக்கு சாப்பிட்டு விட்டு, தஞ்சாவூருக்கு பேருந்தில் போய் 3, 4 மணிக்கு வீட்டுக்குப் போய் மறுபடியும் பயணம் செய்து மதுரை வந்து பேசிவிட்டு மறுபடியும் தஞ்சாவூர் போய் வந்து கொண்டிருப்பார். இயக்கப் பேச்சாளராகவும்  அதே நேரத்தில் குடும்பத் தலைவராகவும் தனது பணிகளைச்சரியாகச்செய்ய வேண்டும் என நினைக்கும் தோழர்.கூட்டத்தில் தனது பேச்சை முடிக்கும் நேரத்தில் , ஒரு ஐந்து மணித்துளிகள் உச்ச கட்ட குரலில், உரத்த குரலில்  தொகுத்து உணர்ச்சி பிழம்பாய் மாறி  தனது பேச்சை முடிப்பார் .

                                    கொஞ்ச காலம் ஓய்வு எடுத்து விட்டு, மறுபடியும் பேச வருவார் பெரியார் செல்வம். . தமிழர் தலைவர், அய்யா ஆசிரியர் அவர்கள், 40 வயதில் செய்ய் வேண்டிய மருத்துவ பரிசோதனைகளை , வரிசையாக வாழ்வியல் சிந்தனைகளில் எழுதி இருக்கின்றார். 'இதயம் காப்போம் ' என்று தனி நூலே எழுதியிருக்கின்றார். அவர் காட்டும் வழியில் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஊர் ஊராகச்சொல்லும் ஆற்றல் மிக்க பேச்சாளர் இவர். ஆனால் உடல் பரிசோதனை எதுவும் செய்ததில்லை போலும். 50 வயதிற்கு கீழேதானே என்று இருந்திருக்கின்றார். உடனடி மருத்துவ வசதியால் மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டிருக்கின்றது. பெரியார் செல்வத்தின் துணைவியாரிடம் , மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இதற்கு முன் தெரிந்ததா எனக் கேட்டபோது , இல்லை அய்யா என்றார். அவரே ஒரு செவிலியர். நமது தோழர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். முறையாக சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டால், ஆபத்துக்களைத் தவிர்க்கலாம் . . வருமுன்ன்ர் இன்னல்களைத் தவிர்க்கலாம்.
 

6 comments:

தமிழ் ஓவியா said...

பெரியார் செல்வம் மீண்டும் வருவார். பரப்புரை செய்வார்.

முனைவர். வா.நேரு said...

ஓய்வு கொடுக்கும் புத்துணர்ச்சியோடு வருவார். வரட்டும். நன்றி

Karuppiah Subbiah said...

பொது வாழ்வில் ஈடுபடும் சமூகப் பாதுகாவலர்கள் தங்கள் உடல் நலத்தைப் பேணுவதில் அக்கறையின்மை காட்டுவது கண்கூடாகப் பார்க்கும் உண்மை. மேலும், சரியான உணவு பழக்க வழக்கங்களை நாம் சீராக கடைப்பிடிப்பதில்லை. விளைவு, இப்படி ஆபத்தாக உள்ளது. தோழர்.செல்வம் விரைவில் நலம் பெற்று களத்திற்கு வர வாழ்த்துக்கள்.

Karuppiah Subbiah said...

பொது வாழ்வில் ஈடுபடும் சமூகப் பாதுகாவலர்கள் தங்கள் உடல் நலத்தைப் பேணுவதில் அக்கறையின்மை காட்டுவது கண்கூடாகப் பார்க்கும் உண்மை. மேலும், சரியான உணவு பழக்க வழக்கங்களை நாம் சீராக கடைப்பிடிப்பதில்லை. விளைவு, இப்படி ஆபத்தாக உள்ளது. தோழர்.செல்வம் விரைவில் நலம் பெற்று களத்திற்கு வர வாழ்த்துக்கள்.

anandam said...

இன்றுதான் இந்த செய்தி பார்க்கின்றேன் மருத்துவ மனையில் தான் இருக்கிறரா தஞ்சாவூர் சென்று விட்டாரா?

முனைவர். வா.நேரு said...

திராவிடர் கழகத்தைச்சாராத தங்களின் வாழ்த்து மிகப்பெரிய மகிழ்ச்சி. நன்றி.