Sunday 10 August 2014

கையில் ஒரு கவிதைப்புத்தகம்......

கையில் எப்போதும்
ஒரு கவிதைப்புத்தகம்
இருப்பது வசதிதான் !

பேருந்துக்காக
காத்திருக்கும் வேளைகளில்
சில மனிதர்களோடு
பேச்சினைத் தவிர்க்க
நினைக்கும் நேரங்களில்
கோபத்தால் மனம்
கொந்தளிக்கும் சூழல்களில்
கையில் கவிதைப் புத்தகம்
இருப்பது வசதிதான் !

அவர் எழுதியது
இவர் எழுதியது
தெரிந்தவர் எழுதியது
தெரியாதவர் எழுதியது
என எவரோ, எங்கேயோ
எழுதிய ஒரு
கவிதைப் புத்தகம்
கையில் இருப்பது
வசதிதான் எப்போதும் !

மழைக்குப் பிடிக்கும்
குடைபோல
மனதிற்குப் பிடிக்கும்
இதமான வார்த்தைகள்
சுருக்கென்று தைக்கும்
உண்மைகள்
நறுக்கென்று தைக்கும்
உவமைகள்
வாய்விட்டுச்சிரிக்க
வைக்கும் வசவுகளால்
நிறைந்து இருக்கும்
கவிதைப் புத்தகங்கள்
மட்டுமல்ல

உண்மையும் இல்லாமல்
உவமையும் இல்லாமல்
அவருக்கு நன்றி சொல்லி
இவருக்கு நன்றி சொல்லி
எழவு -இந்தப் புத்தகத்தில்
என்ன இருக்கிறது?
இதையெல்லாம் ஒரு
கவிதைப் புத்தகமாக
வெளியிட்டு விளம்பரம்
செய்யும் வேளையில்
நமது கையில் இருக்கும்
புத்தகம் பரவாயில்லை
என ஆறுதல்படுவதற்காகவாவது
கையில் ஒரு கவிதைப்புத்தகம்
இருப்பது வசதிதான் !!!!!!!!.

  • எழுதியவர் : வா. நேரு
  • நாள் : 10-Aug-14, 12:15 pm
  • நன்றி : எழுத்து.காம்
     

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அழகிய உவமைகொண்ட கவி கண்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

முனைவர். வா.நேரு said...

நன்றி ரூபன் , தங்கள் வருகைக்கும் , கருத்திற்கும்.

venu's pathivukal said...

இந்தக் கவிதை உண்மையிலேயே அழகு அழகு அத்தனை உண்மை உணர்வு...

வாழ்த்துக்கள்...

எஸ் வி வேணுகோபாலன்
12 10 2014

முனைவர். வா.நேரு said...

நன்றி , நன்றி.தங்களின் வாசிப்பிற்கும், பாராட்டிற்கும்..