Sunday 19 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : அக்னி மூலை-பா.செயப்பிரகாசம்

அண்மையில் படித்த புத்தகம் : அக்னி மூலை
நூலின் ஆசிரியர்                         :  பா.செயப்பிரகாசம்  (தேர்ந்தெடுக்கப்பெற்ற கதைக் களஞ்சியம்)
வெளியீடு                                       : தோழமை வெளியீடு , சென்னை-78 கைபேசி : 9444302967
முத்ற்பதிப்பு                                   : ஜீலை 2008, 184 பக்கங்கள், விலை ரூ 100 /= பதிப்பாளர் :கு.பூபதி
மதுரை மத்திய நூலக எண்       :   184486

                                                       பா.செயப்பிரகாசம் அவர்களின் சிறுகதைகள் இவை. கட்டுரை, கவிதை எழுதுவதை விட சிறுகதை, நாவல் எழுதுவது என்பது கடினமானது. கவிதையைப் போல சிறுகதையின் மொழியும் மிக முக்கியமானது. நடந்த ஏதோ ஒரு நிகழ்வையோ அல்லது நிகழ்வுகளையோ வைத்துக்கொண்டு, தான் சமூகத்திற்கு சொல்லவேண்டும் என்று நினைக்கும் கருத்தை கதை விரிப்பாக சொல்லுவது என்பது எல்லோராலும் இயலக்கூடிய காரியமாக இல்லை. சில்பேரின் கதைகள் வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாக நின்று போய்விடுகின்றது. சிலரின் கதைகளோ என்ன சொல்லவருகிறார்கள் என்பதை விட அவர்கள் சொல்லிச்செல்லும் மொழியே ஆக்கிரமித்துக்கொள்கிறது , திரைப்படப்பாடல்களில் பாடலை விட இசை ஓங்கி ஒலிப்பது  போல. ஆனால் நிகழ்வும், மொழியும் , சமூகத்திற்கு சொல்ல்வேண்டும் என்னும் மனத்தூண்டுதலின் கருத்து விளைவும் இணைந்த கதைகளாக ஆக்குவதற்கு சிலரால்தான் இயல்கிறது. அப்படிப்பட்ட ஒருவராக இந்தக் கதைத்தொகுப்பின் ஆசிரியர் பா.செயப்பிரகாசம் திகழ்கின்றார்.

             1972-ல் எழுதியது முதல் 2002-வரை எழுதியதுவரையிலான , தேர்ந்தெடுக்கப்பட்ட 14  சிறுகதைகளின் தொகுப்பாக ,ஏறத்தாழ ஒரு நூற்றாண்டின் மூன்றில் ஒரு பகுதி காலத்தில் எழுதப்பட்ட கதைகள் இவை. 1972-ல் வெளியான 'ஒரு ஜெருசலேம்' கதை அம்மாவை இழந்த ஒரு சிறுவனின் கதை. அம்மா இறக்க காரணமாக இருக்கும் அப்பா, தன் மூத்த மகளை சில நாட்களுக்கு முன் இழந்து விட்டு இரண்டாவது மகளையும் மரணப்படுக்கையில் பார்க்கும் அம்மா வழிப்பாட்டி எனச் சூழல் விவரிப்பும் பாத்திரங்களும் மிகக் கனமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு பையை எடுத்துக்கொண்டு போ என டீச்சரால் அனுப்பப்பட்டு அம்மாவின் மரணத்திற்கு வீட்டுக்கு போகும் குமாரசாமி, தாயின் இறுதிச்சடங்குகளில் குமாரசாமி, பின் பஞ்சத்திற்கு கோரப்புல்லைப்பிடிங்கி அதன் அடியில் உள்ள கிழங்கைப் பறித்து தின்னும் சிறுவர்களில் ஒருவனாக குமாரசாமி , தன் தாயின் சமாதியில் முளைத்த கோரப்புல்லைப் புடுங்கும் மந்தி ராமசாமியை அடித்து நொறுக்கும் குமாரசாமி என அம்மாவின் சாவினை வைத்தே நகரும் கதையாக இந்தக் கதை உள்ளது.

                                   முப்பது , நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சிறுகதைகள், அன்றைய எதார்த்த வாழ்வின் எச்ச சொச்சங்களை தொடர்ந்து வரும் தலைமுறை உணர்ந்து கொள்ளும் வகையில் படைக்கப்பட்ட கதைகளாக இருக்கின்றன. பேராய்ப் பிழைத்த அம்பலகாரர் வீட்டிற்கு உடுக்கையோடு வரும் சாமியாடி , வீட்டின் நிலமையைப் பார்த்து தான் சேகரித்த தானியத்தையும் , ரூபாயையும் தனது காணிக்கையென தேவியின் கையில் கொடுத்துச்செல்லும் 'அம்பலகாரர் வீடு ' , அரசாங்க சம்பளத்திற்காக ஆறு நாட்களும் மேலதிகாரியின் கொடுமையில் வாழும் நிலை சொல்லும் அரசாங்க வேலைக்காரன்- நாண்ம்மாவின் கணவன் பற்றிச்சொல்லும் 'ஆறு நரகங்கள் '  ரிக்கார்டு டான்ஸ் ஆடும் விஜயா, சாரு என அவர்களின் உணர்வுகளையும் ,சமரசங்களையும் சொல்லும் 'வேரில்லா உயிர்க்ள் ' போன்ற கதைகள் எல்லாம் 1972-முதல் 1974 வரை படைக்கப்பட்ட கதைகளாக இருக்கின்றன. வீரியமிக்க கதைகளாக இருக்கின்றன.

                                  தன் வீட்டுப்பெண்கள் அந்த ஊரின் பெரிய ஜாதிக்காரர்களால் சீரழிக்கப்பட்டபோது , நியாயம் கேட்டு வீடு வீடாகப் போய் " ஊர்க்கூட்டம் வச்சிருக்கு, வாங்க முதலாளி " என்று சொல்லி, ஒருவனும் வரவில்லை என்றவுடன், " ஊர்க்கூட்டம் வச்சிருக்கு, வரலையா முதலாளி " என்று கேட்டு கேட்டு பின்பு இரவில் மறைந்து போகும் மொட்டையாசானாரி பற்றிச்சொல்லும் 'காடு ' சிறுகதையின் முடிவு தனக்கே உறுத்தலாக இருந்திருக்குமோ அதனாலேயே வேறு ஒரு முடிவைக் காட்டும் ' அக்னி மூலை' சிறுகதையின் சாமியாடி , அக்னி மூலைக்கு காவு கொடுக்கப்போகும் சென்னையனை காவு கொடுப்பதாக முடித்தாரோ என எண்ண வைக்கின்றது. ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையானராக வாழும் ஜாதியினர் வீட்டுப்பெண்களிடம்  நாய்க்கர்,ரெட்டியார் ஜாதியின் ஆண்களின் பார்வையும் அத்துமீறலும் ,வசப்படுத்தலும் பல கதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.

                                        1977-ல் 'இருளுக்கு அழைப்பவர்கள் ' என்னும் சிறுகதையை எழுதியிருக்கின்றார். கற்பழிக்கப்பட்ட பழங்குடியினர் பெண்களிடம் எப்படிக் கற்பழித்தார்கள் என்று வக்கீல்கள் வினவுவதை , நீதிமன்றத்தின் போக்கை எழுதிச்செல்வது சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வாச்சாத்தி போன்ற சம்பவங்களை மனக்கண் முன் நிறுத்துகிறது. முடிவில் " எதிரே நின்றவர்களைப் பார்த்தபடி அக்கா 'தூ' என்று காரித்துப்பினாள்:. அது அந்த நீதிமன்றத்தின் மேலும் பட்டது " பக்கம் 117 . நேரடிச்சாட்சியங்கள் இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்காததை மிக அப்பட்டமாகக் காட்டும் கதை.

                                     இந்தத் தொகுதியின் முதல்கதையான 'வளரும் நிறங்கள் 'கதை ,பம்பையத் தாத்தா என்னும் கதாபாத்திரத்தின் மூலம் " சாகிறது சாகப்போறம். எதையாவது செய்திட்டு சாகவேண்டியதுதானே " என்னும் கருத்தை மிக அழுத்தமாக படிப்பவர் மனதில் விதைக்கிறது. ஒரு ஆலையின் 25 ஆண்டுகால வரலாறு, நடப்பு வரலாற்றைச்சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இரண்டு சாதிகளின் சண்டை எப்படி கிராமத்தில் உருவாக்கப்படுகிறது, வளர்கிறது, சாதாரண மக்களின் உயிரை மாய்க்கிறது என்பதனைச்சொல்லும் 'சாதி ' போன்ற கதைகள் மிக எளிமையான வார்த்தைகளால் மிக அழுத்தமாகச்சொல்லப்பட்டிருக்கிறது.

                    " சில்லு சில்லாய் ஓடிய சிதறு தேங்காயைப் போல் தாயம்மா வெடித்துக்கொண்டிருந்தாள். குவித்து வைத்த மண் குமிகள் போல் குழந்தைகள் மூலைக்கொன்றாய் பயத்தில் முடங்கிக் கிடந்தார்கள். ஒவ்வொரு நாளும் இந்தச்சத்தமும் , இந்தக் காட்சியும் இல்லாமல்; பொழுது புரண்டதில்லை. வீட்டிற்குள் தினமும் நடக்கிற இந்த பாரதத்துக்கு வெளியே ஒரு சின்னக்கூட்டம் கூட கூடியதில்லை. அது அவர்கள் மேல் திரும்பிப்பாயும் என்பது அவர்களுக்குத் தெரியும் " பக்கம் 132. 'கோபுரங்கள்' என்னும் சிறுகதையில் தாயம்மா என்னும் பாத்திரத்தைப்பற்றி விவரிக்கும் வரிகள் மேலே சுட்டிக்காட்டியவை. வார்த்தைகளால் ,நிகழும் சம்பவங்களை அப்படியே கண்முன்னால் காட்டும் வித்தை அறிந்தவராக பா.செயப்பிரகாசத்தை இந்தத் தொகுதியில் அறிய முடிகின்றது. முடிவாக் இருக்கும் 'எதையும் செய்வீர்' என்னும் கதை 2001-ல் வெளியானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 70-க்ளில் வந்த பா.செயப்பிரகாசம் அவர்களின் கதைக்கும் , 2001-ல் வந்தத்துக்குமான வேறுபாட்டை வாசகனே புரிந்துகொள்ளட்டும் என்று கொடுக்கப்பட்ட கதை போல உள்ளது. கதையின் உயிர்ப்பு, துடிப்பு, மொழி அனைத்துமே குறைந்து விட்டது என்பதைக் காட்டுவது போல 'எதையும் செய்வீர்' என்னும் கதை உள்ளது. வாசித்துப் பார்த்தால் , யோசிக்க வைக்கும் கதைத் தொகுப்பாக பா.செயப்பிரகாசம் அவர்களின் 'அக்னி மூலை ' கதைத் தொகுப்பு உள்ளது. வாசித்துப்பாருங்கள்.


4 comments:

Amudhavan said...

\\சில்பேரின் கதைகள் வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாக நின்று போய்விடுகின்றது\\
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். இப்போதைய பெரும்பாலானோரின் கதைகள் வெறும் நிகழ்வுகளின் தொகுப்புக்கள்தாம். பா. செயப்பிரகாசம் அத்தகைய கதாசிரியர் இல்லை. அவருடைய எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.
உங்கள் பதிவுகளை ஆங்கில வழி கணிணியச்சு செய்திருக்கிறீர்களோ? நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கின்றனவே.

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும். ஆம், பிழைகளைத் திருத்துகின்றேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

venu's pathivukal said...

அன்பின் நேரு அவர்களுக்கு

மூன்று அம்சங்கள் என்னைக் கவர்கின்றன: நூலகத்தின் பயன்பாட்டை உங்களது ஒவ்வொரு நூல் விமர்சனத்திலும் நூலகத்தின் பெயர், நூலின் வரிசை எண் இடம் பெறுவது அழகாக உணர்த்துகிறது. இரண்டாவது, உள்ளார்ந்த முறையில் நீங்கள் எந்தப் புத்தகத்தையும் அணுகும் விதம். மூன்றாவது, வாசித்ததைப் பகிர்ந்து கொள்வதை மிக இயல்பாக நீங்கள் நிகழ்த்துவது.

பா செயபிரகாசம் தமிழ் படைப்பாளிகளில் முக்கியமானவர். தொடர் செயல்பாட்டாளர். அவரது சிறுகதைகள் சிலவற்றை வசித்திருக்கிறேன்..அவரோடு அவை பற்றிப் பேசியும் இருக்கிறேன்.. அவரை நேரடியாக அறியவும் செய்வேன்...

அவரது சிறுகதை தொகுப்பு குறித்த உங்கள் பதிவு நிறைய செய்திகளைத் தருகிறது...மிக்க நன்றி..

எஸ் வி வேணுகோபாலன்

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா, தங்களின் வருகைக்கும் , பாராட்டிற்கும். பல படைப்பாளிகளை நேரடியாக அறிந்தவராகவும், அவர்களோடு தொடர்பு உடையவராகவும் இருக்கும் உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. நூலகத்தைப் பயன்படுத்தி வாசிக்கின்றேன், வலைத்தளத்தில் பதிகின்றேன்- எனவே அதனைப் பதியவேண்டும் என்னும் நன்றி உணர்ச்சிதான் நூலக எண்ணை இடுவதற்கான காரணம்.

நூலகப் பயன்பாடு என்பது வெகுவாக இளைஞர்கள் மத்தியில் குறைந்திருக்கின்றது. கல்லூரி நூலகங்களை, அரசு நூலகங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. மதுரை மத்திய நூலகத்தில் போட்டித்தேர்வுக்கென தனிப்பிரிவு உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். நூலக உறுப்பினராக இருக்கக்கூடிய மாணவ, மாணவிகள் சிறப்பாகப் பயன்படுத்தலாம். தனித்தனியாக வாங்கினால் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து வாங்கவேண்டும். குளிர்சாதன வசதி எல்லாம் செய்து வைத்திருக்கின்றார்கள்,மாணவ, மாணவிகளைத்தான் காணோம். மதிப்பெண் எடுப்பதற்கான புத்த்கத்தைத் தவிர வேறு புத்தகங்கள் எல்லாம் தீண்டப்படக்கூடாத் நூல்கள் என்னும் மனநிலை பெரும்பாலான ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும் உள்ளது. நூலகத்தைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு இயக்கங்களை நடத்த வேண்டிய நிலை உள்ளது. நூலகங்களும் கணிணியைப் பயன்படுத்தி , இருக்கும் நூல்களின் வரிசைப்பட்டியலை இணையத்தின் மூலமோ, நேரிடையாகவோ அறிய வாய்ப்பு அளிக்கலாம். எளிதாக எடுக்கும்வண்ணம் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் வைக்க பணியாளர்களை நியமிக்கலாம். எடுத்துச்சென்ற புத்தகங்கள் திருப்பிவரத்தாமதமானால் , மின்னஞ்சல் அனுப்பலாம். வாசகர்கள் நூலினை தேதி நீட்டிக்க வேண்டுமெனில் மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி செய்யலாம். இது குறித்து உங்களைப் போன்றோர் பத்திரிக்கைகளில் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். நூலகம் பற்றி எழுதி , எனது கருத்தையும் பதிய வழி வகுத்தீர்கள். நன்றி அய்யா.