Tuesday 25 November 2014

நிகழ்வும் நினைப்பும் : 26 - வாசிப்போர் களம்

நிகழ்வும் நினைப்பும் : 26 - வாசிப்போர் களம்

                                            மதுரை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை பார்க்கும் தோழர்கள் இணைந்து , தங்களின் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பொது மேடையாக வாசிப்போர் களம்(http://vasipporkalam.blogspot.in/) - மதுரை தொடங்கப்பட்டது. வாசிப்போர் களம் மதுரை தொடங்கப்பட்டதுமுதல் திரு.சு.கருப்பையா , AO ,BSNL, அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து மிகத் திறம்பட பணியாற்றி வருகின்றார்.

                                          மதுரை வாசிப்போர் களத்தில் 'தென்திசை' என்னும் வலைத்தளத்தில் பதிந்து வரும் பதிவர் திரு.வி.பாலகுமார் அவர்களை வாசிப்போர் களத்திற்கு முன் தெரியும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிகாரி எனத்தெரியும் , ஆனால் அவர் ஒரு இலக்கியவாதி எனத் தெரியாது, வாசிப்போர் களத்தின் மூலம் அறிமுகமாகி அவரின் வலைத்தளமான 'தென்திசை'சென்று படித்தபோது  வியந்து போனேன். அவ்வளவு பதிவுகள் , மிக ஆழமான கவிதைகள்,  சிறுகதைகள், சமூக அவலங்களை நக்கலடிக்கும் கட்டுரைகள், துறை சார்ந்த தொழில் நுட்ப விளக்கங்கள் எனப்  பதிவுகள். ,அவரோடு இலக்கியரீதியாக பழகும் வாய்ப்பு வாசிப்போர் களத்திற்குபின்னர்தான் கிடைத்தது .   ஓய்வு பெற்ற அதிகாரியும் தொழிற்சங்கத் தலைவருமான திரு மு.சங்கையா, தொழிற்சங்கத் தோழர் பி.செளந்தர், திரு G.சுந்தரராஜன், எழுத்தாளர் கவிஞ்ர் சமயவேல், திரு பாலசுப்பிரமணியன், திரு. தேவேந்திரன்  எனப்பலர் வாசிப்போர் களத்தில் உறுப்பினராக உள்ளனர். கவிஞர் சமயவேல் இதுவரை  ஐந்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் வாழும் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவராக உள்ளார். தினந்தோறும் அவரைச்சந்திப்பது வழக்கம் என்றாலும் கூட அவரது இலக்கிய ஆளுமை தெரியாமலேதான் இருந்திருக்கின்றேன்.  மாதம் ஒரு நாள் மாலை சந்திப்பது, இருவர் தங்களின் வாசிப்பு அனுபவங்களை, நூல் அறிமுகமாக பகிர்ந்து கொள்வது , அந்த அனுபங்களின் அடிப்படையில் கேள்விகள், விவாதங்கள் , தங்களின் கருத்துக்கள்  எனப் புத்தக அனுபவப்பகிர்வு என்பது மிக ஆரோக்கியமாகவும் , மன நிறைவாகவும் இருக்கின்றது.

                                                நூல் அறிமுகம் செய்தவர்களின் அறிமுகம் வாசிப்போர் களம் வலைத்தளத்தில் பதிவிடப்படுகின்றது. அங்கங்கே உள்ள நமது தோழர்கள், புத்தக விரும்பிகள் இதைப் போன்ற் அமைப்புகள், கூட்டமைப்புமூலம் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.ஏதோ ஒரு மூலையில் , நாம் தனியாக அமர்ந்து நாமே படித்து நாம் மட்டும் இன்புறுவதற்கு பதிலாக பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களும் இன்புறவும் பயன்பெறவும் வழிவகுக்கலாம். இன்னும் கேட்டால் வாசிப்பது என்பது அவரவர் சார்ந்த விருப்பத்தின்மேல்தான் அமைகின்றது. எனக்குத் தெரிந்த சிலர் மிக அதிக அளவில் விரும்பி புத்தகம் படிப்பவர்கள். கட்டுரை மட்டும்தான் படிப்பார்கள். சிறுகதை, நாவல் படிக்கமாட்டார்கள். அதனைப் போலச்சிலர் கவிதை மட்டும் படிப்பார்கள். சிலர் மொழி பெயர்ப்பு நாவல்கள், சிறுகதைகள் மட்டும் படிப்பார்கள். இப்படி ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை உள்ளவர்கள் (Everybody is unique) என்று சொல்வதைப்போல அவர்கள் விரும்பிப்படிக்கும் நூல்களும் தனித்தன்மை உள்ளவையாக இருக்கின்றன. அதனை பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கும்போது நூல் விமர்சனம் செய்பவர்களுக்கும் , கேட்பவர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது.

                       சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை காரல் மார்க்ஸ் நூலகத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.பிரபாகரன் அவர்கள் நூல் விமர்சனத்திற்க்காக அழைத்திருந்தார்.  நான்  பேரா. மாடசாமி அவர்கள் எழுதிய "' எனக்குரிய இடம் எங்கே ? " என்னும் நூல் பற்றிப் பேசினேன். எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று அந்தப்புத்தகம் .கல்லூரி மாணவ,மாணவிகள் பற்றிய புத்தகம். படிப்பவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் புத்தகம் .  ஏறத்தாழ 45 நிமிடங்கள் அந்தப்புத்தகத்தைப் பற்றி மட்டுமே பேசினேன். பேசி முடிக்கும்வரை, அந்தப்புத்தகத்தை எழுதிய பேரா.மாடசாமி அவர்கள் கேட்போர் கூட்டத்தில் இருக்கின்றார் என்று தெரியாது. அவர் எனக்கு அறிமுகமும் இல்லை. பேசி முடித்தபின்பு , இப்போது ஒருவரை பேச்சாளருக்கு அறிமுகப்படுத்துகின்றேன் என்று சொல்லிவிட்டு பேரா.மாடசாமியை திரு.பிரபாகரன் அவர்கள் அறிமுகப்படுத்தினார். பின்பு பேரா.மாடசாமி பேசினார். பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்த அவர் தான் எழுதிய நூலில் , பேச்சாளருக்கு பிடித்த பகுதிகள் என்பதனைக் குறிப்பிட்டு நான் எழுதும்போது இப்படியெல்லாம் யோசிக்கவில்லை, ஆனால் விமர்சனத்தின்மூலமாக இப்படியும் யோசிக்கலாம் என்று எனக்கு புலப்பட்டிருக்கிறது என்றார். மிகப்பெரிய பகிர்தலாக, புரிதலாக அந்த நிகழ்வு அமைந்தது.  

                                  நல்ல  புத்தகங்களை நேசிப்பவர்கள் இந்த சமூகத்தையும் நேசிக்கின்றார்கள்.     இந்தச்சமூகம் உய்வுபெற நல்ல புத்தகங்கள் தவிர வேறு வழியில்லை. நல்ல புத்தகங்களை அடையாளம் கண்டு கொண்டவர்கள், அதனால் பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் அதனை அடையாளம் காட்ட வேண்டிய தேவையும் கடமையும் இருக்கிறது. மதுரையில் உள்ள சில கல்லூரிகளில் வாசிப்போர் அமைப்பினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். புத்தக விமர்சனத்தை மாணவர்களே செய்கின்றார்கள் என்னும் செய்தி மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. இது பரவலாககப்படவேண்டும். ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் மன மகிழ்மன்றங்கள் இருக்கின்றன. அவற்றில் மாதம் ஒரு நாள் புத்தக விமர்சனங்கள் அந்த அலுவலகத்தைச்சார்ந்தவர்களால் நடத்தப்படவேண்டும். அதனைப்போல கல்லூரிகளில், பள்ளிக்கூடங்களில் நடத்தப்படவேண்டும். ஊடகங்கள் இந்த நூல் விமர்சனங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். .

                                                      

2 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அருமையான யோசனை தோழரே!
இதை எனது தளத்தின் பின்னூட்டத்தில் பகிர்கிறேன். நன்றி.

முனைவர். வா.நேரு said...

எப்போதும் நல்லவற்றிற்கு ஆதரவாக உற்சாகமாக ஒலிக்கும் உங்கள் குரல் இதற்கும். .நன்றி தோழரே