Sunday 21 December 2014

"நிம்மதியாக, மன நிறைவோடு, மகிழ்ச்சியோடு" இறக்கிறேன்....ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம்

பெரியாரியல் அடிப்படையில் வாழ்வது என்பது வாழும்போது மகிழ்ச்சியாகவும் மற்றவர்களுக்கு உதவியாகவும் தொண்டற வாழ்க்கை வாழ்வது என்பது மட்டுமல்ல, மரணம் அடைந்தவுடன் மற்றவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதனையும் இணைத்ததே ஆகும். சாவுக்கு பின் அடுத்த பிறவியோ, சொர்க்கமோ நரகமோ கிடையாது என்பதனைத் தனது வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்யும் தந்தை பெரியாரின் தொண்டர்கள் , மரணத்தையும் கூட தங்களின் கொள்கை அடிப்படையிலேயே அணுகுகின்றனர்,அதனை மரணத்திற்கு முன்பே மரண சாசனமாக எழுதி வைக்கின்றனர்  என்பது இந்தியாவில் இருக்கும் மற்ற எந்த இயக்கத்திற்கும் இல்லாத பெருமையாகும்.. திராவிடர் கழகத்தின் மூத்த வீராங்கனை அம்மா மனோரஞ்சிதம் அவர்களின் மறைவுக்கு
மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக வீரவணக்கம். வீரவணக்கம்



." அவரது கொள்கை உறுதி, சாவைக் கண்டு ஒருபோதும் கலங்காத துணிவு, மகளிரிடத்தில் சலிப்பில்லாது கொள்கைப் பிரச் சாரம், எவரிடத்திலும் எதையும் கேட்காத பெருந் தன்மை, இனிய சுபாவம் - எல்லாவற்றிற்கும் மேலாக அடக்க சுபாவம் - இவை நம்மால் என்றும் மறக்க இயலாத ஒன்று.
அவரது மரண சாசனத்தை அவர் முன் கூட்டியே தயாரித்து வைத்தார்.
அதில் திட்டவட்டமாக சில செய்திகளை அன்புக் கட்டளையாக வெளியிட்டுள்ளார்.
மருத்துவமனைக்குத் தனது உடல் கொடை யாக அளிக்கவேண்டும் என்றே ஆணையிட்டார்.
எனவே, அவரது பெருவிருப்பத்தை நிறை வேற்றி வைப்பது நமது கடமை.
மகளிரில் இப்படிப்பட்ட ஒரு மாணிக்கம் கிடைப்பது அரிது! அரிது!
அவருக்கு நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!! " திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இரங்கலுரையில் ஒரு பகுதி இது. அம்மா மனோரஞ்சிதம் அவர்கள் 2009-லேயே , 5 ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்து வைத்த மரண சாசனம் வாசகர்களின் பார்வைக்காக.

மனோரஞ்சிதம் அவர்களின் மரண சாசனம்

என் வயது 76 தான்! இந்தியக் குடிமக்கள் சராசரியாக 60 வயது வாழ்வதாகத் தகவல்கள் இருக்கின்றன. அதையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி தரக்கூடியதுதானே?

நல்ல பெற்றோர் தம் அன்பான அரவணைப்பில் மகிழ்ச்சியாக வளர்ந்தேன்! பகுத்தறிவு இரத்தத்தில் ஊறிப் பிறந்து சுயமரியாதைக் கருத்துகளைப் பாலோடு அருந்தி வளர்ந்தேன்!

எந்த நாட்டவருக்கும் கிடைக்காத பன்முகப் பகுத் தறிவுக் களஞ்சியம் தந்தை பெரியாரின் அன்பான தலை மையில் வளர்ந்தேன். நல்ல தலைவர்! நல்ல கொள்கைகள்! சமுதாயச் சீர்திருத்தப் பணிகளுக்குத் தந்தையால் இந்த இயக்கத்திற்குத் தரப்பட்டேன். தந்தை பெரியார் அவர்களே மணமகன் தேர்வு செய்து தம் செலவிலேயே திருமணம் செய்வித்த மிகப்பெரும் பேறு பெற்றேன்.

நல்ல இணையர். பண்பும், அன்பும் நிறைந்த மாற்றார் கருத்துகளையும் மதிக்கும் மனித நேயப் பண்பாளர் டார்ப்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் என் துணைவராகக் கிடைத்து காவிய வாழ்க்கை வாழ்ந்தோம்.

தந்தை பெரியார் மறைவுக்குப் பின், இந்த இயக்கத்தை தந்தையின் அடிச்சுவட்டிலிருந்து அணுவளவும் பிறழாத தனயனாய், திராவிடர் கழகக் குடும்பங்களுக்குத் தலை வராய், ஆசிரியராய், தந்தை பெரியார் அவர்களின் கருத்து களை உலகம் முழுவதும் பரப்பிடும் பணியை, கல்விக் கூடங்களைப் பெருக்கி, அரசியல் மாற்றங்களை ஏற் படுத்திடும் அரிய தலைவர் நமக்குக் கிடைத்திருப்பதை எண்ணி, எண்ணி இறும்பூதெய்துகிறேன்!

அவர் தலைமையில் இந்த மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டு, மக்களை அறிவியல் கருத்துகளை ஏற்க வைத்திடும், அறிவார்ந்த சமுதாயமாக மாற்றிடும் மாபெரும் பணியில் ஒரு சிறு அங்கமாக என்னாலான பணியைச் செய்து வருவதில் பெரும் மன மகிழ்வடைகிறேன்.

நல்ல தலைவர்! நல்ல கொள்கைகள்!

நல்ல பெற்றோர்! நல்ல கணவர்! நல்ல வாழ்க்கை!

துன்பங்கள் வரினும் அவற்றை எதிர்த்து வென்றிடும் துணிச்சல் தந்தை பெரியார் தந்தது. என்னாலியன்ற சமு தாயப் பணி செய்வதில் மன நிறைவு. அதனால் மரணத் தையும் மகிழ்வோடு வரவேற்கிறேன்.

என் இயக்கக் குடும்பத்தவருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

நாள் இறந்தபின் என் உடலுக்கு யாரும் மாலை போடவேண்டாம். 100 ரூபாய்க்குக் குறைந்து இன்று மாலை இல்லை. மலர்கள் உதிர்ந்து நாராக குப்பையில் போடுவதில் யாருக்கும் பயனில்லை. அதனால் (அந்த மாலைக்குண் டான காசை) என் உடல் அருகில் ஓர் உண்டியல் வைத்து அதில் சேரும் தொகையை அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தருவதற்கு ஏற்பாடு செய்வதற்கு உதவியாக இருக்க வேண்டும்.

என் உடலை மருத்துவமனைக்குத் தர நம் இயக்கத் தலைவர் ஏற்பாடு செய்து தர வேண்டும். ஒரு உடலை 100 மாணவர்கள் அறுவை செய்து பாடம் கற்றால் ஆயிரமாயி ரம் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் வாய்ப்பு கிடைத் திடும் அல்லவா? இந்த வகைப் பணியும் சமுதாயப் பணிதானே.

சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் வைத்துத்தான் என் உடல் இறுதியாக மருத்துவ மனைக்கு அனுப்பிடல் வேண்டும்.இது என் அன்பான வேண்டுகோள்!

உடல் எடுக்கப்படும் வரை யாரும் பசியோடோ, பட்டினி யோடோ இருக்கக்கூடாது என்பதால் ரூபாய் பத்தாயிரம் திராவிடன் நல நிதியில் வைத்துள்ளேன். அதை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும்.

மேலும் இந்த இயக்கம் விஞ்ஞான பூர்வ வளர்ச்சி யடைய, இளைஞர்களை ஈர்த்திட, விரைந்து செயல்படும் ஆற்றலுடைய இளைய செயல்வீரராக நம் அன்பிற்கினிய திரு. வீ.அன்புராஜ் அவர்கள் பொறுப்பு ஏற்றது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.

எனவே நிம்மதியாக, மன நிறைவோடு, மகிழ்ச்சியோடு அனைவரிடமும் விடைபெறும்....

அன்புள்ள
- ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம்

குறிப்பு: மறைந்த ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்கள் கடந்த 8.11.2009 அன்று விடுதலையில் எழுதிய மரண அறிக்கை இது
"நிம்மதியாக, மன நிறைவோடு, மகிழ்ச்சியோடு"  இறக்கிறேன் என்று அம்மா ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் கூறுயிருக்கின்றார் தனது மரண சாசனத்தில். எந்தத் துறவியும் கூட இறக்கும்போது  மகிழ்ச்சியோடு இறக்கிறேன் என்று கூறுவதில்லை. எனது தொண்டர்கள் துறவிகளுக்கும் மேலானவர்கள், துறவிகளுக்கு கூட சொர்க்க ஆசை உண்டு, எனது தொண்டர்களுக்கு அதுவும்கூடக்கிடையாது என்றார் தந்தை பெரியார். நிறைவான வாழ்க்கை வாழ்ந்து, தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்புவதற்கு வாழ்நாள் முழுவதும் உழைத்த அம்மா ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்களுக்கு வீரவணக்கம், வீரவணக்கம்.


Read more: http://www.viduthalai.in/page-8/93200.html#ixzz3MWN3OLhH

4 comments:

தமிழ் ஓவியா said...

அம்மா ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்களுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!

கரந்தை ஜெயக்குமார் said...

மனோரஞ்சிதம் அம்மா அவர்களுக்கு என் வீர வணக்கம்
அம்மா அவர்களைப் பற்றிப் படிக்கப் படிக்க மிகவும் பெருமையாக இருக்கின்றது.

முனைவர். வா.நேரு said...

வீரவணக்கம் செலுத்தி அவர்கள் விட்டுச்சென்ற பணி தொடர்வோம்.

முனைவர். வா.நேரு said...

ஆம் அய்யா, பெருமைக்குரியவர்தான், இளமை முதல் இறுதிவரை கொளகையின்படி வாழ்ந்ததாலும் வழிகாட்டியதாலும்.