Monday, 6 April 2015

நிகழ்வும் நினைப்பும் (36) : கவிஞர் முத்து நிலவனின் கலைஞர் தொலைக்காட்சிப்பேட்டி

நிகழ்வும் நினைப்பும் (36) : கவிஞர் முத்து நிலவனின் கலைஞர் தொலைக்காட்சிப்பேட்டி

தோழர் கவிஞர் முத்து நிலவனின் நேர்காணல் இன்று(6.4.2015)  காலை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தோழர் முத்து நிலவனைப்போலவே அவரது பேட்டியும் இயல்பாகவும், எதார்த்தமாகவும் இருந்தது. தமிழ் ஆசிரியர் என்பதாலோ என்னவோ மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட வார்த்தைகளாக அவரின் பதில்கள் வந்து விழுந்தன. நேர்காணல் காண்பவரின் தமிழ் உச்சரிப்பைப் பாராட்டிவிட்டு (உண்மையிலேயே அவரின் உச்சரிப்பு நன்றாக உள்ளது ) ஊடகத்தில் இருக்கும் பலர் தமிழ் உச்சரிப்பைக் கொலை செய்வதைக் குறிப்பிட்டார். கல்வி இன்று வியாபாரமாக இருப்பதையும் , கல்வி என்பது ஆசிரியர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல, அனைத்து தரப்பினரும் பங்கு கொள்ள வேண்டிய, பணியாற்ற வேண்டிய பணி என்பதனைக் குறிப்பிட்டார். " ஆசிரியர்கள் வகுப்பறையில் இருக்கும் பெற்றோர்கள், பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள் " என்று குறிப்பிட்டது அருமை. இணையத்தின் பயன்பாடுகளை, வலைத்தளப்பயன்பாடுகளைப் பற்றியெல்லாம் மிக நன்றாகக் குறிப்பிட்டார். எல்லாவற்றிலும் எதிர்மறை (நெகடிவ்) இருக்கிறது, அதற்காக அதனைப் பயன்படுத்த மாட்டேன், ஒளிந்து கொள்வேன் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகத்தான் இருக்கும். தான் வலைத்தளம் ஏற்படுத்தி பயன்படுத்துவது மட்டுமல்ல, வலைத்தளத்தில் எழுதும் பலருக்கு மிகப்பெரிய ஊட்டசக்தியாகத் திகழ்பவர் தோழர் முத்து நிலவன் அவர்கள். பேட்டியில் அதனைக் கூறியிருக்கலாம். தன்னடக்கத்தால் அதனைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார் என எண்ணுகின்றேன்.

                    தோழர் முத்து நிலவன் பேட்டியில் எனக்கு நெருடலான ஒரு செய்தியும் இருந்தது. கம்பனின் எழுத்துக்களைப் பற்றிக் கூறியது. கம்பன் கவிதை நன்றாக இருக்கலாம், படிக்க சுவையாக இருக்கலாம் , ஆனால் அதன் விளைவு. இன்றைக்கும் இராமனை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு பக்க துணை கம்பன்தானே, நமது சேது சமுத்திரத்திட்டம் நனவாகப்போனது தடுத்து நிறுத்தப்பட்டது அதனால்தானே, திருக்குறள் பேரவை என்று பெயர்வைத்துக்கொண்டு கம்பராயணத்தைப் பற்றி அந்த அவையில் பேசிக்கொண்டு இருக்கும் நிலைதான் பல இடங்களில் இன்றும் . இன்றைக்கும் திருக்குறளைப் பரப்புவதற்கு இடையூறாக இருக்கும் இலக்கியம் கம்பராமாயணம்.  கம்பரசம் எழுதினார் அறிஞர் அண்ணா - அவரே தீ பரவட்டும் என்றார், மலத்தில் அரிசி பொறுக்கும் வேலை என்றார் அய்யா பெரியார். வால்மீகி கொடுத்த புராணத்தை , முகமூடி போட்டுக் கொடுத்தவர் கம்பன். கணினித் தமிழுக்கு நேர் எதிரானது கம்பன் தமிழ். இதில் அவருடைய கருத்தோடு முற்றிலும் எதிரான கருத்து எனக்குண்டு.

மற்றபடி சமூக அக்கறையோடு பட்டிமன்றப்பேச்சாளராய், எழுத்தாளராய், வலைத்தளப்பதிவராய், தமிழ் ஆசிரியராய் வலம் வரும் தோழர் முத்துநிலவனின் பேட்டி மிக அருமையான பேட்டி.வாழ்த்துக்கள் தோழரே...
பேட்டி எடுக்கப்படுபவர் முழுமையாகத் தனது கருத்தை பதிவு செய்யும்வரை பொறுமையாகக் காத்திருந்து, கேட்டு பின்பு அடுத்த கேள்விக்குச்சென்று செழுமையான விவாத அரங்கமாக, பேட்டியாக அமைத்த ஊடகவியலாளர் , பேட்டி எடுத்த ஸ்ரீவித்யாவுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி ஐயா
பத்தாம் வகுப்பு தேர்வு இன்று நடைபெற்றமையால், பார்க்க இயலவில்லை. இணையத்தில் கிடைக்கும் என்று நினைக்கின்றேன்
அவசியம் பார்க்கிறேன் ஐயா

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா, பாருங்கள், மிக நல்ல பேட்டி.

வளரும்கவிதை / valarumkavithai said...

நன்றி தோழரே. நினைவாகப் பார்த்ததோடு, விரிவாக அதையே ஒரு பதிவாகவும் இட்ட தங்களின் அன்பிற்கு எப்படி நன்றி சொல்ல முடியும்? ஆங்.. அதுதான் சரி.. இதனை எனது வலைப்பக்கத்தில் -உங்களைக் கேட்காமலே- எடுத்துப் போட்டுக்கப் போறேன் போங்க..

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழரே, எனது வலைத்தளத்தில் இருந்து எடுத்து போடுவதற்கு உங்களுக்கு இல்லாத உரிமையா, எதை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துப்போடுங்கள்....

வளரும்கவிதை / valarumkavithai said...

தோழர்க்கு வணக்கம்.
எனது வலைத்தளத்தில் எடுத்துப் போடடிருக்கிறேன். பார்க்க -
http://valarumkavithai.blogspot.com/2015/04/blog-post_10.html

முனைவர். வா.நேரு said...

வணக்கம் தோழர், தங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டமைக்கு நன்றி. தங்களின் பதிலைப் படித்தேன். தங்கள் சுட்டியிருக்கும் சுட்டிகளைப் படித்துவிட்டு என் கருத்தை எழுதுகின்றேன்.