Monday, 13 April 2015

அண்மையில் படித்த புத்தகம் : அம்பேத்கர் வாழ்வும் பாடமும்....சு.அறிவுக்கரசு


அனைவருக்கும் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


அண்மையில் படித்த புத்தகம் : அம்பேத்கர் வாழ்வும் பாடமும்
ஆசிரியர்                   : சு.அறிவுக்கரசு 
வெளியீடு                  : விஜயா பதிப்பகம், கோவை, முதல் பதிப்பு 2010
விலை                     : ரூ 65

                                               இந்த நூலின் ஆசிரியர் திரு. சு.அறிவுக்கரசு அவர்கள் ஏற்கனவே பெரியார் பன்முகம், பெண், இந்து -ஆத்மா-நாம், தென்றல் அல்ல புயல் , புராணங்கள் 18+1 , அச்சம்+அறியாமை=கடவுள் என்னும் புத்தகங்களின் ஆசிரியராவார். 'அம்பேத்கர் வாழ்வும் பாடமும் ' என்னும் இந்த நூல் மொத்தம் 5 தலைப்புக்களை உள்ளடக்கியதாக உள்ளது. 'அடித்தளம், அமர்க்களம், அரசியல்தளம், சமூகத்தளம், பிழைபடப்புரிதல்' என்பவை அந்த 5 தலைப்புக்களாகும்.

                         அடித்தளம் என்னும் பகுதியில் " பிரிட்டிஷார் இந்தியாவை ஆளத்தொடங்குவதற்கு முன்பிருந்தே எம் மக்களின் நிலையோடு இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் , நாங்கள் கிஞ்சித்தும் முன்னேறவில்லை; மாறாக நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கிறோம் ... " என ஆரம்பித்து கேள்விகளை இங்கிலாந்து நாட்டின் பிரதமரை நோக்கி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில்  கேட்ட முதுகெலும்பிருந்த முதல் மனிதர் யார்? அவர் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் ! என்னும் அறிமுகத்தோடு இந்த நூல் தொடங்குகின்றது. தொடர்ந்து முதல் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் இங்கிலாந்து பிரதமர் ராம்சே மாக்டொனால்டையும் ,என்.எம்.ஜோசியையும் தவிர்த்து மற்ற பிரதிநிதிகள் அனைவரிலும் அதிகமான கல்வித்தகுதியைப் பெற்றிருந்தவர் டாக்டர் அம்பேத்கர்தான் என்னும் தகவலைக் குறிப்பிடுகின்றார்
.
                        நால்வருண அமைப்பிற்கும் அப்பால் , ஐந்தாம் வருணமாகப் பஞ்சமர் ,அவர்ணஸ்தர் என்று கூறித் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது, பழகக்கூடாது என்றெல்லாம் தடைவிதிக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட மக்கள் என்றாக்கப்பட்ட மனித குலத்தில் பிறந்தவர் பீம்ராவ் அம்பேத்கர் என அறிமுகப்படுத்துகின்றார் . ராம்ஜி சுக்பாலின் 14 குழந்தைகளில் கடைக்குட்டியாக 14.4.1891-ல் பிறந்தவர் அம்பேத்கர், இவரின் தாயார் பீமாபாய் என்று அவரின் பிறப்பினைப் பற்றிய தகவல்களைத் தருகின்றார். அம்பேத்கர் பிறந்த காலகட்டத்தில் இருந்த சமூக நிலையை சு.அறிவுக்கரசு சுட்டிக்காட்டுகின்றார்.  
1848-ல் மராட்டிய மாநிலம் புனே நகரில் ஜோதிபாபுலே தொடங்கிய பள்ளிதான் தாழ்த்தப்பட்டோருக்கான முதல் பள்ளியே ! .பிற்படுத்தப்பட்ட ஜாதியைச்சேர்ந்தவரான மகாத்மாபுலே அவர்கள்தான் பெண்கல்விக்காக முயற்சிகள் எடுத்துப் பெண்களுக்கான பள்ளியையும் முதலில் ஏற்படுத்தியவர்.இதற்காக ஆசிரியர் யாரும் முன்வராத காரணத்தினால் தம் வாழ்க்கைத் துணைவரான சரசுவதி புலேவுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து ஆசிரியை ஆக்கி நடத்திய செயல்வீரர் என அந்தக் கால கட்டத்தினை அறிமுகப்படுத்துகின்றார்.  

                   தொடக்கக் கல்வியைக் கற்றுக்கொண்ட பீமராவ் உயர்நிலைப்பள்ளியில்  சேர்க்கப்பட்டார். வீட்டிலிருந்தே கோணிச்சாக்கு எடுத்துக்கொண்டு பள்ளிக்கு போய் வகுப்பறையின் கடைக்கோடி மூலையில் அமர்ந்து பாடம் கேட்டார் . ஆசிரியர் எவரும் அவரிடம் பாடம் பற்றி கேள்வி கேட்பதே கிடையாது. அவரது நோட்டுப்புத்தகங்களை வாங்கிப் பார்ப்பதும் கிடையாது. தீட்டாகி விடுமே ,அதனால்!. கேள்வி ஞானம் கொண்டே படித்தார். ஒரு கதை சொல்லப்படுகிறது , அம்பேத்கர் அவர்களின் பெயருக்கு . அம்பேத்கர் பள்ளியில் படிக்கும்போது ' அம்பேத்கர் ' என்னும் பெயர் கொண்ட ஆசிரியர் மட்டுமே இவரிடம் கருணையாக நடந்து கொண்டார் என்றும் அதனால் அவரின் (இரண்டாம் ) பெயரை பீம்ராவின் (இரண்டாம் ) பெயராக மாற்றி எழுதினார் என்றும் அதனால்தான் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆனார் என்றும் கர்ணபரம்பரைக் கதை ஒன்று அவிழ்த்து விடப்பட்டுள்ளது.மராட்டியர்கள் தம் பெயருடன் தம் ஊர்ப்பெயரையும் சேர்த்தே அழைத்துக்கொள்வர். அம்பேத்கரின் அம்மா பெயர்கூட பீமாபாய் 'முர்பாத்' கர். அதேபோல அம்பேத்கரின் சொந்த ஊர் அம்பாவடேகர். அவரின் அப்பா பெயர் ராம்ஜி அம்பாவடேகர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம், அம்பேத்கரின் பெயரை எழுதும்போது பீம்ராவ் ராம்ஜி அம்பாவடேகர் என்று எழுதப்பட்டு பின்பு அது பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என மறுவியிருக்கலாம் என்னும் கருத்தை இந்த நூலாசிரியர் வைக்கின்றார்.

                  உயர் நிலைப்பள்ளியில் இரண்டாம் பாடமாக சமஸ்கிருதம் படிக்க பீம்ராவுக்கு அனுமதி தரப்படவில்லை. அதனால் பாரசீக மொழி படித்தார். பின்னாளில் அவர் தன் முயற்சியால் சமஸ்கிருதம் படித்து  அதில் பெரும் பாண்டித்யம் பெற்றார். 1903-ல் மெட்ரிகுலேசன் தேர்வில் வெற்றி பெற்றார். அவர் சார்ந்த 'மஹர் ' ஜாதியில் முதன்முதலில் மெட்ரிகுலேசன் தேறியவர் இவர்தான் என்பதால் பெரும் பாராட்டு விழாவே நடத்தப்பட்டது. பாராட்டிப்பேசிய கிருஷ்ணாஜி அர்ஜீன் கெலுஸ்கர் என்பார் தந்த ' புத்தரின் வாழ்க்கை வரலாறு ' என்னும் நூல் அம்பேத்கரின் வாழ்வில் இறுதிவரை செல்வாக்கு செலுத்தியதை வரலாறு புலப்படுத்துகிறது  என்பது போன்ற பல தகவல்களைக் குறிப்பிடுகின்றார் இந்த நூல் ஆசிரியர் சு.அறிவுக்கரசு.

                 பரோடா மகாராஜாவின் உதவியும் உபகாரச்சம்பளமும் பெற்று அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்காகச்சென்றார். பிரிட்டிஷ் இந்தியாவின் மாநில நிதி ஆதார வளர்ச்சி என்ற தலைப்பில் ஆய்வு செய்தமைக்காக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆனார். 

                    கல்வித்தாகம் அடங்காத நிலையில் அமெரிக்காவிலிருந்து லண்டன் போனார். 1916-ல் சட்டமும் பொருளாதாரமும் படிக்க தனித்தனிக்கல்லூரிகளில் சேர்ந்தார். 1921-ல் எம்.எஸ்.ஸி. பட்டம் பெற்றார். 1922-ல் ஜெர்மனியின் பான் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். லண்டனில் அவர் சமர்ப்பித்த "ரூபாய் பற்றிய பிரச்சனைகள் " என்னும் ஆய்வுக்காக டி.எஸ்.சி (D.Sc) டாக்டர் ஆப் சயின்ஸ் என்னும் அரிய , உயரிய பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. பாரிஸ்டர் பட்டமும் பெற்றார். சட்டம், சமூகவியல், பொருளாதாரம் என்று பல்துறை அறிஞராக பட்டங்கள் பலபெற்று அறிஞராக அங்கீகாரம் பெற்றார் அம்பேத்கர் என இந்த நூல் ஆசிரியர் விவரிக்கின்றார் .

                   " அரசியல் தளம் " என்னும் தலைப்பின் கீழ் இந்து மதச்சீர்திருத்த சட்ட வரைவில் (Hindu Reform Bill) கொண்டுவர அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தீவிரமாக முயற்சி எடுத்ததையும் , அந்தச்சட்ட முன்வரைவு பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போனதால் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்ததையும் விரிவாக எடுத்துக்கூறுகின்றார். " சமரசம் செய்து கொள்ள மறுத்த போர் வீரராகவே அவர் செயலாற்றினார் " என விளக்குகின்றார்.
தொழிலாளர் துறை அமைச்சராக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இருந்தபொழுது கொண்டு வந்த சில சட்டங்கள் :
1) அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த முறைதான் தொழிலாளரும் முதலாளியும் கூடிப்பேசும் முத்தரப்பு பேச்சுவார்த்தை முறை.
2) தொழில் தகராறு, தொழில் சட்டம், தொழிலாளர் நலன் ஆகிய மூன்றையும் கவனிக்கும் தொழிலாளர் நலத் தலைமைக் கமிஷனர் அலுவலகத்தை 1945-ல் ஏற்படுத்தியவரே அம்பேத்கர்தான்
3) தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள்கள் அளிக்கப்படவேண்டும் எனச்சட்டம் இயற்றினார் அம்பேத்கர். இந்த விடுமுறையை எடுக்காமல் சேர்த்து வைத்துக்கொள்ளும் உரிமையை அளித்தார்.(அது பணமாக ஓய்வுபெறும்போது தரப்படுகின்றது ).
4) " ஓவர் டைம் " பணிக்குக் கூடுதல் ஊதியம் வழங்கப்படவேண்டும் எனும் சட்டமும் அம்பேத்கரின் கொடையே 
5) குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்திட மண்டல குழுக்களை நியமித்து , ஊதியத்தை நிர்ணயிக்கச்செய்தார்.

                மினிமம் வேஜ், லிவிங் வேஜ்,  பேர் வேஜ் என்று நீட்டிப்பேசும் தோழர்கள், மேலே சொன்ன அனைத்தையும் அரசியலமைப்புச்சட்டத்தில் இடம் பெறச்செய்தவர் டாக்டர் அம்பேத்கர் என்பதை அறிந்திருப்பார்களா ? எனும் கேள்வியை இந்த நூலின் ஆசிரியர் சு.அறிவுக்கரசு கேட்கின்றார் . மேலும் வருங்கால வைப்பு நிதி, சேமிப்புத்திட்டங்கள், பங்களிப்பு காப்பீட்டுத்திட்டங்கள் போன்ற பல தொழிலாளர் நலத்திட்டங்களும் , தொழிலாளர் இழப்பீட்டுச்சட்டமும் , பிரசவ கால நலச்சட்டங்கள் போன்ற பலவும் அவரால் அளிக்கப்பட்டவை என்பதைத் தொழிலாளர் உலகம் அறிந்து கொள்ளவேண்டும் என இந்த நூலின் ஆசிரியர் பக்கம் 59ல் குறிபிடுகின்றார்.

              தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று என்கிற வர்க்க உணர்வு ஏற்பட்டு ஒரே வர்க்கம் என்ற நிலை உருவாவதற்கு ஜாதிகள் தடையாக இருக்கின்றன என்பதை உணர்ந்து  அதனை ஆழமாகச்சிந்தித்து  நிறைய எழுதினார். அதன் அடிப்படையிலேயே எந்தவிதத் தளைகளுமற்ற சுதந்திரமான அமைப்பாக இயங்கவேண்டும் என்னும் நோக்கத்தில் 1936-ல் சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கினார். 'முதலாளிகளும் தொழிலாளிகளும் சரிசமமாக நடத்தப்படக்கூடாது, தொழிலாளர்களுக்கு அதிக உரிமையும் முதலாளிகளுக்குக் குறைந்த உரிமையும் தரப்பட வேண்டும் ' என்பது அம்பேத்கரின் கருத்து எனக்கூறுகின்றார். " பொருளாதாரச்சுரண்டல்  என்பதைப்போன்றே முக்கியத்துவம் பெற்றது சமூக, சமய ஒடுக்குமுறைகளும் பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளும் ஆகும் : என  எடுத்துக்காட்டி  எல்லாவிதமான சுரண்டல்களையும் எதிர்த்துப்போராடவேண்டும் என்றவர் டாக்டர் அம்பேத்கர் என்று இந்த நூல் ஆசிரியர் சு.அறிவுக்கரசு குறிப்பிடுகின்றார். 

                           'சட்டச்சிற்பி அம்பேத்கர் ' என்னும் தலைப்பின் கீழ் இந்திய அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் இடம்பெற்றது, இந்தியாவுக்கான தேசியக்கொடியை வடிவமைக்கும் குழுவில் டாக்டர் அம்பேத்கர் ஓர் உறுப்பினராக இடம் பெற்றது குறித்த பல தகவல்களை ஆதாரங்களுடன் பக்கம் 63-ல் குறிப்பிடுகின்றார் . இந்திய அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்புச்சட்டம் எழுதும் வரைவுக்குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக டாக்டர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டதையும் , வரையறைக்குழுவில் 7 பேர் இருந்தாலும் , முழுப்பழுவையும் டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய தோள்களில் சுமக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதையும் விவரிக்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். 

                           தனி நபர் வழிபாடு மிகவும் ஆபத்தானது, பகுத்தறிவற்ற கண் மூடித்தனமான தலைவர் வழிபாடு கூடாது என எச்சரித்தவர் டாக்டர் அம்பேத்கர். 26.11.1949-ல்  395 கூறுகளையும் , 8 அட்டவணைகளையும் கொண்ட அரசமைப்புச்சட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்ததைக் குறிப்பிடுகின்றார். 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள் பாடுபட்டு எழுதப்பட்ட சட்டம், 7600 திருத்தங்கள் முன் ம்மொழியப்பட்டு, 2473 திருத்தங்கள் பரிசீலிக்கப்பட்டு எழுதப்பட்ட சட்டம், 26.1.1950 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் என விரிவாகவும் விளக்கமாகவும் அரசமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டதை இந்த நூல் ஆசிரியர் கூறுகின்றார்.

                          ' அவர் கண்ட குறைகள் ' என்னும் தலைப்பில் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட அரசியல் சட்டக்கூறு 340, சமூக ரீதியாகவும் , கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கான வழிவகைகளைத் தெரிந்து அவற்றை செயல்படுத்திடத் தேவையான பரிந்துரைகளைத் தெரிவித்திடக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் எனத் தெரிவிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டீற்கான புள்ளி விவரங்களை சேகரித்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கரின் கோரிக்கை பிரதமர் நேருவால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் அம்பேத்கர் பதவி விலகினார் எனப்பக்கம் 70-ல் இந்த நூல் ஆசிரியர் சு.அறிவுக்கரசு குறிப்பிடுகின்றார்.தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் உடலில் வலதுகை, இடதுகை போன்றவர்கள் என்ற கருத்தும் , இருவரும் இணைந்து போராடவேண்டும் என்கிற உறுதியான நிலையைக் கொண்டவராக அம்பேத்கர் விளங்கினார் என சு.அறிவுக்கரசு குறிப்பிடுகின்றார். 

                             சமூகத் தளம் என்னும் பொதுத்தலைப்பில் கல்விக்கு முகாமை, இந்துவை விட்டொழித்தார், இந்து மத ஆராய்ச்சியாளர் எனும் தலைப்புக்களில் விரிவாக பக்கம் 71 முதல் 108 வரை விளக்குகின்றார். பிழைபடப்புரிதல் என்னும் தலைப்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் தந்தை பெரியாருக்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் உள்ள ஒற்றுமைகளை இந்தப் பகுதியில் விளக்குகின்றார் .' கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் ' எனும் தாரக மந்திரத்தை தனது வழிகாட்டிகளுக்கு சுட்டிக் காட்டினார் டாக்டர் அம்பேத்கர்.   டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவு நனவாக, எண்ணம் ஈடேற, இலட்சியம் வெல்ல என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதனை இந்த நூல் ஆசிரியர் சு.அறிவுக்கரசு விரிவாக எடுத்துரைக்கின்றார். படித்துப்பாருங்கள் . டாக்டர் அம்பேத்கரை முழுமையாகப்புரிந்து கொள்ள ' அம்பேத்கர் வாழ்வும் பாடமும் ' என்னும் இந்தப்புத்தகத்தை. 
குறிப்பு : வானொலியில் புத்தக விமர்சனப் பகுதிக்காக எழுதியது. மதுரை அகில இந்திய வானொலியில்  சில மாற்றங்களோடு ஒலிபரப்பப்பட்டது. 

8 comments:

தமிழானவன் said...

உங்கள் நூல் அறிமுகம் படிக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது. அம்பேத்கர் பெயரிலேயே இத்தனை மாற்றுக் கருத்துக்களா ?

Yarlpavanan Kasirajalingam said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

கரந்தை ஜெயக்குமார் said...

அண்ணல் அம்பேத்கரின் நினைவினைப் போற்றுவோம்

முனைவர். வா.நேரு said...

நன்றி தமிழானவன் அவர்களே...

முனைவர். வா.நேரு said...

அய்யா யாழ்பாவாணன் அவர்களே, தை முதல் நாளே நாம் கொண்டாடும் தமிழ்ப்புத்தாண்டு. நன்றி.

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா, அண்ணல் அம்பேத்கரின் நினைவை அவரின் கொள்கையை உணர்ந்து நினைவு கூர்வோம்.

Karuppiah Subbiah said...

ஐயா அறிவுக்கரசு அவர்களின் குறிப்பு:
1. " அரசியல் தளம் " என்னும் தலைப்பின் கீழ் இந்து மதச்சீர்திருத்த சட்ட வரைவில் (Hindu Reform Bill) கொண்டுவர அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தீவிரமாக முயற்சி எடுத்ததையும் , அந்தச்சட்ட முன்வரைவு பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போனதால் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்ததையும் விரிவாக எடுத்துக்கூறுகின்றார்”
2. “பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டீற்கான புள்ளி விவரங்களை சேகரித்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கரின் கோரிக்கை பிரதமர் நேருவால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் அம்பேத்கர் பதவி விலகினார் எனப்பக்கம் 70-ல் இந்த நூல் ஆசிரியர் சு.அறிவுக்கரசு குறிப்பிடுகின்றார்.”
அண்ணல் . அம்பேத்கர் அவர்களின் பதவி விலகலுக்கு , பாரா ஒன்றில் எழுதப்பட்டிருப்பது தான் சரி.

முனைவர். வா.நேரு said...

அண்ணே, சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. நூலின் ஆசிரியரிடமும் சுட்டிக்காட்டுகிறேன்.