Sunday 10 July 2016

எடைமேடை : மாணவர்களும் 'அறிவியல் மனப்பான்மையும்...



திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் எழுத்துக்கள் எப் போதும் தான் புகழ்பெறவேண்டும் என்ப தற்காகவோ அல்லது தனது பெயர் பரவ வேண்டும் என்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்கள் அல்ல. எப்போதும் போர்க் களத்தில் நிற்கும் போர்வீரனுக்கு கையில் இருக்கும் கேடயம் போல கருத்துக்களத்தில், திராவிடர் இயக்கத்திற்கு எதிராய் பரப்பப் படும் அவதூறுகளுக்கு எதிராக இளை ஞர்கள் கருத்துக்களைத் தேடும் கருத்து அகராதிகள் அவை. கடந்த கால வரலாறு, நிகழ்கால அரசியல் போக்குகள், நிகழ் காலத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கு  இணை யான கடந்த கால நிகழ்வுகள், திராவிடர் இயக்க வரலாற்றில் தங்களின் போர்க் குணத்தால், இயக்க செயல்பாட்டால், தங் களின் அணுகுமுறையால், தலைமைக்கும் இயக்கத்திற்கும் காட்டிய விசுவாசத்தால் என்றும் அழியாமல் தங்கள் பெயரை நிலைக்கவைத்து  மறைந்துவிட்ட கருப்பு மெழுகுவர்த்திகளின் தியாகங்களை  தன் னுடைய நெடிய நீண்ட அனுபவத்தால் கண்ணுற்றதில் விளையும் எழுத்துக்கள் அவை. தந்தை பெரியார் என்னும் தத்துவ ஆசானிடம் கற்றுக்கொண்ட பாடங்களை மீண்டும் மீண்டும் எழுத்துக்களாய், பேச்சுக் களாய் இன்றைய நிலைக்குத் தக்கவாறு உலகெங்கும் எடுத்துச்செல்லும் இணை யற்ற தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.   என்றைக்கும் உயிர்ப்பான எழுத்துக்களாய் அவரின் எழுத்துக்களும், உயிர்ப்பான பேச்சாய் அவரின் பேச்சுக் களும் அமைவதற்குக் காரணம்  உண்மை யும், அதனை எதற்கும் அஞ்சாமல் எழுதும், சொல்லும் திறனும் அதற்கு ஆதாரமாய் அமையும் அவரது நீண்ட நெடிய திரா விடர் இயக்க களப்பணி அனுபவமுமாகும்  என்பது நாம் அறிந்ததே..

அண்மையில் 'மாணவர்களும் 'அறிவியல் மனப்பான்மையும்' என்னும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் புத்தகம் படித்தேன்.   அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக ஆள்வோரும், அவர்களைச் சார்ந்தோரும் மூட நம்பிக்கை நாட்டிய மாடும் இந்தக் கால கட்டத்தில் அறிவியல் மனப்பான்மை என்றால் என்பதற்கு இலக்கணமாக, இன்றைய காலகட்டத்தில் அதனுடைய தேவை இன்னும் கூடுதலாக ஏன் தேவை என்னும் அடிப்படையில் அமைந்த அருமையான புத்தகமாக அமைந்துள்ளது இந்தப் புத்தகம்.இரண்டு சொற்பொழிவுகளைக் கட்டுரைகளாக வடித்திருக்கும் இந்தப் புத்தகத்தின் அணுகு முறை வியப்பிற்குரியது.

இளைஞர்களே, யார் யாரின் வரலாறு எல்லாம் உங்களுக்குத் தெரியவேண்டும் எனப்பட்டியலிடுகின்றார் ஆசிரியர் அவர்கள். "பெரியாரைத் தெரியும் உங் களுக்கு, அதே நேரத்தில் சர்,பிட்டி தியாக ராயர் அவர்களைத் தெரியவேண்டும். டாக்டர் நடேசனார், டி.எம். நாயர் ஆகி யோரைத் தெரியவேண்டும்." (பக்கம் -6) .தொடர்ந்து சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், பட்டுக் கோட்டை அழகிரியைத் தெரியவேண்டும் எனக்கூறிவிட்டு 'இவர்களெல்லாம் நமக்கு வழிகாட்டக்கூடிய ஒளிவிளக்குகள், பகுத் தறிவு பகலவன் தந்தை பெரியார் என்ற அந்த பகலவனுடைய ஒளிக்கதிர்களாக பல இடங்களில் அவர்கள் திகழ்ந்தவர்கள்' எனக் குறிப்பிடுகின்றார்.

திராவிடர் மாணவர் கழகம் கும்ப கோணத்திலே தொடங்கிய வரலாற்றைக் குறிப்பிடுகின்றார். பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் களப்பணியை ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகின்றபோது  கணிப் பொறியும், இணையமும், ஒலிபெருக்கி களும் இல்லாத காலத்தில் கழுத்தில் தமுக்கை மாட்டிக்கொண்டு அவர்செய்த களப்பணி வியக்க வைக்கிறது.  எதிரிகள் 10 கழுதைகளை பிடித்து மாலைகளைப் போட்டு கூட்டத்திற்குள் அனுப்பிவிட, கழுதைகளை கட்டிப்போட்டு பட்டுக் கோட்டை அழகிரி அவர்கள் செய்த பிரச்சாரம் நமக்கு ஒரு புதிய யுக்தி முறையைக் கற்பிக்கிறது. கடலூரில் 'செருப்பு ஒன்று வீசினால் சிலை ஒன்று முளைக்கும் ' என்னும் பாடலுக்கு அடித்தள மாக அமைந்த நிகழ்வு, சிவகங்கையில் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் ஊர்வலமாக வர , பழைய செருப்புக்களைத் தோரணமாகக் கட்டிவைத்த எதிரிகளிடம் எங்களுக்காக நீங்கள் எவ்வளவு சிரமப் பட்டு பழைய செருப்புக்களைச் சேர்த்திருக் கிறீர்கள் என்று தந்தை பெரியார் பேசிய பேச்சு என பழைய இயக்க வரலாறுகள் பல , பாடமாக இன்றைய இளைஞர்களுக்கு ஆசிரியர் அவர்களால் எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது, படிப்பவர்கள் மனதைத் தொடுகின்ற வகையில்.

தபாலில் கருப்புமை தடவும் பழக்கம் நமது முன்னோர்கள் கை நாட்டாக இருந்த காலத்து வந்தது என்னும் வரலாறு, 'வாஸ்து' என்ற பெயரில் இன்று நடக்கும் மோசடி, காலாவதியான மருந்துகள் நாம் எடுக்கக் கூடாது , சரிதான் -அதேபோல காலாவதி யான கருத்துக்களால் நாம் நமது வாழ்க் கையை நடத்தலாமா எனும் கேள்வியைக் கேட்கின்றார். 'படிப்பறிவை யார் வேண்டு மானாலும் பெறலாம், ஆனால் நீங்கள் பகுத்தறிவு பெறுவதுதான் முக்கியமானது' என்னும் அறிவுரை படிக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியரின் காதுகளிலும் ஒலிக்கவேண்டும்.அதற்கு நாம் ஆவண செய்யல் வேண்டும்.

திராவிடர் கழகத்தின் நோக்கம் என்பது பதவி பெறுவதல்ல, மாறாக ' ஒரு பெரிய பண்பாட்டுப்புரட்சியை உருவாக்குவது தான் இந்த இயக்கத்தி னுடைய நோக்கம் ' (பக்கம் - 31) எனக் குறிப் பிடுகின்றார். மேலும் திராவிடர் கழகம் செய்வது ' சட்டப் படி, அரசியல் சட்டப்படி தேவையான பணியாகும். ஒவ்வொரு குடிமகனும் பின்பற்ற வேண்டியது என்னவென்றால் , அறிவியல் மனப்பான்மை. அறிவியல் மனப்பான்மை மட்டுமல்ல,அதைவிட மனித நேயம்; அதைவிட, எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல், ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்க வேண்டும். அதற்கும் மேலே சீர்திருத்தம் செய்ய வேண்டும். இது இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கின்ற அடிப் படை கடமையாகும் ' (பக்கம் - 33).
மூன்று காலத்திலும் (காட்டுமிராண்டிக் காலம்,பழைய காலம், நவீன காலம்) வாழ்ந்த, வாழும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறைகள், இடியைக் கண்டு , மழையைக் கண்டு பயந்த மனிதனின் கண்டுபிடிப்புகள், புவீயீர்ப்பு மய்யத்தைக் கண்டுபிடித்த அய்சக் நியூட்டனின் அணுகு முறையைக் குறிப்பிட்டு, ஆதாம் -ஏவாள் கதையில் வரும் பழமும், திரவுபதி கதையில் வரும் மாம்பழமும் மூட நம்பிக்கை பழங்கள், அய்சக் நியூட்டனுக்கு அமைந்த ஆப்பிள் பழம் விஞ்ஞானம் என ஆசிரியர் விவரித்துச்சொல்லும் பாணி தனித்தன்மையானது. பழைய வரலாற்றை சொல்லிக்கொண்டு வரும் ஆசிரியர் அண்மையில் வெளிவந்த'The Upright Thinkers' என்னும் நூலைப் பற்றியும், அதில் வரும் ஆங்கிலக் கருத்தையும் அதன் தமிழாக்கத்தையும் குறிப்பிடுகின் றார். செல்லும் இடமெல்லாம் கிடைக்கும் அரிய நூல்களை ஆசை ஆசையாய்ப் படித்து , அந்த நூல்களின் மேன்மையை, உண்மையை தமிழ்ச்சமூகத்திற்கு அளிக் கும் பணியைத் தொய்வின்றி தொடரும் ஆசிரியர் அவர்கள்  அறிவிய லுக்கும் மூட நம்பிக்கைக்கும் பல நூற்றாண் டுகளாய் நடைபெறும் போராட்டத்தை சாக்ரடீஸ், டார்வின் , அண்மையில் மலாலா வரைக் குறிப்பிடுகின்றார் . முடிவில் மகாமகக் கதையை தோலுரிக்கின்றார் தனது வாதங்களால்.

மருத்துவ ஆராய்ச்சியைக் குறிப்பிடு கின்றார் ஆசிரியர். " மருத்துவத் துறையில் ஒரு ஆராய்ச்சியை செய்திருக்கிறார்கள். அது என்னவென்றால், நாத்திகர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள். கடவுள் நம்பிக்கையா ளர்கள் குறைவான காலமே வாழ்வார்கள் என்று. ஏனென்றால், நாத்திகர்களுக்குத் தன்னம்பிக்கை உண்டு, தைரியம் உண்டு, எங்கே உங்களுக்குத் தைரியம் இருக் கிறதோ, அங்கே நோய் எதிர்ப்புச்சக்தி உண்டு. இதனை நான் அறிவியல்பூர்வமாக சொல்கிறேன். அந்தத் தன்னம்பிக்கை வரும். நான் நன்றாக இருக்கிறேன். நான் சீக்கிரம் குணமாகி விடுவேன் என்று பகுத்தறிவுவாதி நினைப்பான். ஆனால் கடவுள் நம்பிக்கையாளர்கள் நம் கையில் என்ன இருக்கிறது ? " என்று சொல்வார்கள். முப்பதாண்டுகளுக்கு முன்னால் அறுவை சிகிச்சை செய்து, 5 முறை பழுதுபட்ட இருதயத்தை சரியாக்கி, இன்றும் தந்தை பெரியார் வழியில் பீடு நடை போடும், தன்னம்பிக்கைக்கும், தைரியத்திற்கும், நோய் எதிர்ப்புச்சக்திக்கும் வாழும் எடுத் துக்காட்டாகத் திகழும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களே இதற்கு உதாரணமல்லவா. இதனைச்சொல்வதற்கு இவரை விட பொருத்தமானவர் வேறு யார் உள்ளார்?

இன்றைய இளைஞர்களுக்கு அறிவி யல் மனப்பான்மை இன்றியமையாதது. ஆனால் அவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை வரவிடக்கூடாது என்பதில் போட்டி போட்டிக்கொண்டு ஊடகங்களும், பத்திரிக்கைகளும், திரைப்படங்களும் அஞ்ஞானக் கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதனைத் தடைப்படுத்த வேண்டிய அரசு இயந் திரமோ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதோடு சில இடங்களில் அவர்களே மூட நம்பிக்கை பரப்பலுக்கு துணையாக வும், பங்காளிகளாகவும் இருந்து கொண்டி ருக்கின்றார்கள். ஊதிப் பருத்துக் கிடக்கும் மூட நம்பிக்கை பலூனை, அய்யா ஆசிரியர் அவர்களின் 'மாணவர்களும் அறிவியல் மனப்பான்மையும்' என்னும் இந்த நூல் ஊசியாய் குத்தி , மூட நம்பிக்கை பலூனை உடைக்கும் வல்லமை உடைய தாய் கருத்துக்களால், நடையால் செறிவாக உள்ளது. இந்தப் புத்தகத்தினை இளைஞர் களிடத்தில், மாணவர்களிடத்தில் கொண்டு செல்வோம். வெற்றி பெறுவோம்,

முனைவர். வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்.




நன்றி : விடுதலை 10.07.2016

No comments: