Sunday 3 July 2016

'அப்பா' பற்றி ஓர் அப்பா ......வா. நேரு

                                                          


திரைப்படம் என்பது பார்ப்போரை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் ஊடகம். உலகமெங்கும் கேளிக்கைக்கும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், சமூகத்தின் மேன்மைக்காக  எடுக்கப்படும் திரைப்படங்களே காலம் கடந்தும் நிற்கின்றன. அந்த வகையில் நம்மைச்சுற்றி நிகழும் அவலங்களை மையமாக வைத்து நேர்மறையான மனிதர்களைக் காட்டி மிக அருமையான திரைப்படமாக 'அப்பா' படத்தை எடுத்திருக்கும் நடிகர் , இயக்குநர் சமுத்திரக்கனி அவர்களுக்கு முதலிம் மனம் நிறைந்த பாராட்டுக்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். வெல்டன் சமுத்திரக்கனி, வெல்டன்.

கல்லூரிகளில் படிக்கும் எனது பிள்ளைகள் 'அப்பா' திரைப்படத்திற்கு போகவேண்டும் என்று சொன்னார்கள். திரையிடப்பட்ட 2-வது நாளே , மதுரை தியேட்டரில் கூட்டம் மிக அதிகம் இல்லை என்றபோதிலும் கூட்டம் இருந்தது. படம் முழுக்க அரங்கில் இருந்தவர்கள் வசனங்களுக்கு கை தட்டியதும் , உற்சாக குரல்கள் எழுப்பியதும் இப்படத்தின் வெற்றியைக் காட்டியது. தனது பிள்ளையின் தனித்திறமையை அறிந்து ஊக்குவிக்கும், வழிகாட்டலோடு நிப்பாட்டிக்கொள்கின்ற அப்பா சமுத்திரக்கனி, பிறப்பதற்கு முன்பே  மகனை மருத்துவராக்கவும், அவனுக்காக தனி மருத்துவமனை கட்டவும்  திட்டமிடுகின்ற அப்பா தம்பி ராமையா, 'இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டுப்போயிறனும் ' என்று எப்போதும் சொல்லிக்கொடுக்கின்ற அப்பா நமோ நாராயணன்  என்று 3 அப்பாக்களையும் அந்த அப்பாக்கள் வளர்க்கிற பிள்ளைகளைப் பற்றியும் மிக அழுத்தமாகச்சொல்லுகிற கதை.

           மாணவர்கள், மாணவிகள்,அவரது அப்பாக்கள், அவர்கள் படிக்கிற பள்ளிக்கூடங்கள் என விரிவாக பாடம் எடுக்கிற படம். நாட்டுக்கோழியையும் , பிராய்லர் கோழியையும் அரசாங்கப் பள்ளிகளுக்கும், சில தனியார் பள்ளிகளுக்கும் எடுத்துக்காட்டாக பல உரைகளில் கேட்டிருந்தாலும் அதனை தன்னுடைய மகனிடம் தயாளன் சொல்லுமிடம் மிக ஆழமாக பார்ப்பவர் மனதில் பதிகின்றது. அண்ணல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு எனும் புத்தகத்தை திரையில் காட்டுதல், 'புத்தகங்களே மாணவர்களைக் கிழித்து விடாதீர்கள் ' எனும் பொன்மொழியைக் காட்டுவது என பல இடங்களில் மிகக் கவனமாக செதுக்கப்பட்ட சித்திரமாக இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பருவ வயதில் ஏற்படும் அந்த எதிர்ப்பாலின ஈர்ப்பை எப்படிக் கையாளுவது என்பதனை மிக நல்லமுறையில் இந்தப்படத்தில் காட்டியுள்ளார்கள்.நல்ல படிப்பினை பெற்றோர்களுக்கு. 'பிள்ளைகளை நம்புங்கள்' என்பதும் மிக அழுத்தமாக பெற்றோர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னால் பேஸ்புக்கில் ஒரு போக்கிரி  மார்பிங்க் செய்ததலால் தற்கொலை செய்துகொண்ட அந்தச்சகோதரி எழுதிய கடிதத்தில் ' என்னை எனது அப்பா, அம்மாவே நம்பவில்லை ' என்பதுதான் தனது தற்கொலைக்குக்கு காரணமென எழுதியிருந்தார். 'பெற்றோர்களே',  யார், யாரையோ நம்பும் நீங்கள் 'பிள்ளைகளை நம்புங்களேன்'  என்பதும் இப்படத்தின் மெஸேஜ் எனலாம்.

இடைவேளைவரை கலகலப்பாக படம் செல்வதற்கு வசனம் கைகொடுத்துள்ளது. அதுவும் நேர்மறையாக சமுத்திரக்கனி ஒன்று சொல்ல அதுமுடியும்முன்பே அதற்கு எதிர்மறையாக தம்பி இராமையா சொல்லும் வசனம் அருமை. பெற்றோர்களின் பேராசையே , தனியார் பிராய்லர் கோழிப்பள்ளிக்கூடங்களின் அடக்குமுறைக்கும், அணுகுமுறைக்கும், மாணவர்களின் துன்பங்களுக்கும் காரணம் என்பதனை மாணவனின் தற்கொலை மூலம் காட்டியிருக்கிறார்கள். பிள்ளை சொல்வதைக் கேட்க மறுக்கும் அப்பா, பிள்ளைக்காக அட்டூழியம் செய்யும் பள்ளி நிர்வாகத்திடம் மன்னிப்புக் கேட்டும் அப்பா என திரைக்கதை மிக வலிமையாகவே சொல்லப்பட்டுள்ளது. கல்வி என்பது வியாபாரமாகவும், அந்த வியாபாரத்தில் குறைந்த செலவில் தன் பிள்ளையை மருத்துவத்தில் அல்லது பொறியியலில் சேர்க்க பிராய்லர் கோழிப்பள்ளிக்கூடங்கள்தான் உகந்தது என்று தமிழ் நாடு முழுவதும்  இருக்கும் பெற்றோர்களைப் பார்த்து சுழட்டப்பட்டிருக்கும் 'சாட்டை' இப்படம் எனலாம்.

                 குப்பைகளாக திரைப்படங்கள் வருவது உண்மையென்றாலும், அத்தி பூத்தாற்போல வருகின்ற 'அப்பா' போன்ற படங்களை நாம் அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்கவேண்டும். சமூகத்தை நோக்கி சமுத்திரக்கனி எழுப்பியிருக்கின்ற அந்தக் கேள்விகள் உண்மையென்று நாம் உணருகின்றபோது, அதற்கு நாம் தருகின்ற சரியான பரிசு, நாம் படத்தைப் பார்ப்பதும் இன்னும் பலரை அந்தப்படத்தை பார்க்கவைப்பதும்தான். பார்க்கின்ற அப்பா, அம்மாக்கள் மத்தியில் உறுதியாக ஒரு மனமாறுதலை ஏற்படுத்தக்கூடிய படம் 'அப்பா'. குடும்பத்தோடு போய் பாருங்கள். வயதான 'அப்பா' க்களுக்கு தான் இப்படி நடந்திருக்கலாமோ என யோசிக்கவைக்கும். நடுத்தர வயது 'அப்பா'களுக்கு இப்படி நடக்க வேண்டும் என வழிகாட்டும், எதிர்கால 'அப்பா'க்களுக்கு எதிர்மறையாக நடக்காமல் இருப்பதற்கு 'பாடம் ' நடத்தும் படம் 'அப்பா'. பாருங்கள், நீங்களும் போய் 'அப்பா' படத்தை.

வா. நேரு, 03.07.2016, மதியம் 2 மணி






  

2 comments:

K.Prasanna Raghavan said...

Nice

முனைவர். வா.நேரு said...

வருகைக்கும் , தளத்தில் கருத்திற்கும் நன்றி பிரசன்னா சார்....