Wednesday, 26 October 2016

"கீழடி நோக்கி ஓரடி" பயன்மிகு கால வெளிப்பயணம்


திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் ஏற்பாட்டில்
"கீழடி நோக்கி ஓரடி" பயன்மிகு கால வெளிப்பயணம்

திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் ஏற்பாட்டில் 23.10.2016 அன்று ஒரு நாள் 'கால வெளிப்பயணம்', பயன்தரும் வகையில் பல்வேறு தொன்மச் செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.



இந்திய அரசின் தொல்லியல்துறை இரண்டு ஆண்டு களுக்கும் மேலாக மதுரைக்கு அருகில் - சிவகங்கை மாவட்டப் பகுதியில் அமைந்துள்ள கீழடி எனும் சிற்றூரில் மேற்கொண்டு வந்த அகழாய்வுப் பணிகள் தமிழர்தம் தொன்மையான வாழ்வியல் சின்னங்களை வெளி உல கிற்கு தெரிவித்திடும் வகையில் அமைந்துள்ளது. அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தினை பார்வையிடுகின்ற வகையில் "கீழடி நோக்கி ஓரடி" எனும் கால வெளிப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதுமிருந்து 40 ஆர்வலர்கள் கால வெளிப்பயணத்தில் பங்கேற்றனர்.

முதற்கட்ட, இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்று மூன்றாம் கட்டத்தினை ஆய்வர்கள் எதிர் நோக்கியுள்ள நிலையில் பயணக்குழுவினர் கீழடி சிற்றூருக்குச் சென்றனர்.

அகழாய்வுப் பணியின் அதிகாரப் பூர்வ முடிவுகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்படாத நிலையில் ஆய்வுப் பணி நடைபெற்ற இடத்தினைப் பயணக்குழு பார்வையிட்டது. தமிழர் நாகரிகம் குறித்த பல்வேறு செய்திகளை, தொன்மச் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.

இது வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளில் வாழ்விடம் சார்ந்த தொன்மையான ஆய்வு கீழடியில் தான் அமைந்துள்ளது. இதுவரை நடைபெற்ற அகழாய்வு இடங்களான நதி முகத்துவாரம், கடல் சார் பகுதி, இடுகாட்டுப் பகுதி என்பதிலிருந்து நகர் சார்ந்த, கட்டட கட்டமைப்பு, சிறப்புமிக்க தொழிற்கூடங்கள் இருந்ததற்கான ஆதாரங்களை உள்ளடக்கியுள்ளது கீழடி அகழாய்வின் தனிச்சிறப்பாகும்.

கீழடி அகழ்வாய்வின் தனிச் சிறப்பான பெரிய அளவிலான செங்கல் கட்டடக் கலை கட்டமைப்புச் சின்னம்


கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் அங்கு வாழ்ந்த மக்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என கருதப்படுவதற்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சங்க காலப் பாடல்கள் மூலம் தமிழர் வாழ்ந்த நாகரீகம் பற்றிய குறிப்புகள் இலக்கியப் பதிவுகளாக இதுநாள் வரை இருந்த நிலையிலிருந்து, தொல்லியல் ஆய்வு மூலம் அறிவியல் அடிப்படையில் அகழாய்வுச் சின்னங்கள் வலு சேர்த்திடும் விதமாக கிடைத்துள்ளன.

அந்நாளில் தமிழர்கள் அயல்நாடுகளில் வணிகம் செய்ததை  உறுதிப்படுத்திடும் தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக ரோமாபுரியில் புகழ்பெற்ற ரவுலட்டி வடிவமைப்புடன் கூடிய சுட்ட மண்ணில் செய்யப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன.

வட புலத்தில் குறிப்பாக இன்றைய குஜராத் பகுதியுடன் அன்று நிலவி வந்த வர்த்தகத் தொடர்பு - அங்கு பயன்படுத்தப்பட்ட மகளிர் அணியும் அணிகலன்கள் கிடைத்துள்ளன. பாண்டிய நாட்டுக்கே உரிய முத்துக்களால் உருவாக்கப்பட்ட பாசி மணிகள், தந்தத்தால் ஆன அணி கலன்கள் கிடைத் துள்ளன.


வைகை நதிக்கரையில் அமையப்பெற்ற கீழடியில் நடைபெற்ற அகழாய்வில்தான் செங்கல்லை வைத்து  கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகப்பெரிய அளவில் கிடைத் துள்ளன. கீழடி அகழாய்வின் சிறப்புகளில் முதன்மையான தாகவும் இந்தக்கட்டிடக்கலைக் கட்டமைப்பு அமைந் துள்ளது. இந்த இரண்டு கட்ட அகழாய்வுகளின் மூலம் கிடைத்த பொருட்களே பெரும் செய்திகளை, நாகரீகப் பண்பாட்டுக் கூறுகளை, வர்த்தகத் தொடர்புகளை வெளிப் படுத்துவதாக இருக்கையில் முழுமையாக, அடுத்த கட்ட ஆய்வுகள் நடைபெறும்  பொழுது மேலும் பல செய்திகள், ஆதாரங்கள் கிடைக்கின்ற வாய்ப்பு உள்ளது. அந்த வகை யில் கீழடி ஆய்வு தொடரப்பட வேண்டிய அகழாராய்வு.

கீழடிப் பகுதியின் பல இடங்களில் அகலமான குழிகள் தோண்டப்பட்டு அதில் கிடைத்திட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆய்வுப்பணி முடிந்த நிலையில் தோண்டப்பட்ட குழிகள், பாதுகாப்புக் கருதியும், நில உரிமையாளர்கள் பயன்பாடு கருதியும் மூடப்பட்டு வருகின்றன. அகழாய்வுப் பணி பற்றிய செய்திகளை தொல்லியல் அறிஞர் முனைவர் மு.வேதாசலம் கால வெளிப்பயண குழுவினருக்கு  எடுத்துரைத்தார். அகழாய் வுப் பணிக்கு இடம் நல்கியயோர் பலர். அவர்களுள் பயண நாளன்று வருகை தந்த சந்திரன், பீர்முகமது ஆகியோருக்கு நன்றி தெரிவித்து திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பாக சிறப்பு செய்யப் பட்டது.

கால வெளிப்பயணத்தில் கலந்து கொண்டோர்: வீ.குமரேசன் (திராவிட வரலாற்று ஆய்வு மய்யம்), ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் (கால வெளிப்பயண ஒருங்கிணைப்பாளர்), முனைவர் வா.நேரு (பகுத்தறிவாளர் கழகம்), இறைவி (மகளிர் பாசறை), வி. உடுமலை (பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை) ஓவியா (புதியகுரல்), வழக்குரைஞர் இராஜசேகரன் (கரூர்), கி.தளபதிராஜ் (தி.க.மயிலாடுதுறை), பேராசிரியர் சாகுல்அமீது அஜீஸ் (திருநெல்வேலி), அனிதா பன்னீர்செல்வன் (சென்னை) மற்றும் இயக்கத்தோழர்கள், பொது ஆர்வலர்கள் பலர். ஆர்வம் பொங்கும் உணர்வுகளோடு சென்ற கால வெளிப் பயணக் குழுவினர், கீழடி கிராமத்திலிருந்து அறிவார்ந்த, தொன்மைச் சின்னங்கள் சார்ந்த செய்திகளை அறிந்த நிலையில் திரும்பினர்.

கீழடிப் பயணத்திற்குப் பின்னர், மாலையில் ஒத்தக் கடையானைமலையின் - நரசிங்கம் பகுதி அடி வாரத் திலுள்ள சமணர் வாழ்ந்த இடங்கள் (கல் படுக்கைகள்), சமணர் எழுச்சிக்கு எதிராக கிளம்பிய பக்தி இயக்கத்தினரின் தொல்லியல் சின்னங்கள், குடைவறை கோயில்கள், புடைப்புச் சிற்பங்கள் ஆகியவற்றையும் கால வெளிப்பயணக் குழுவினர் சென்று பார்த்தனர்.


Nantri:viduthalai 24.10.16

No comments: