அழுவதா....சிரிப்பதா.........
(சிறுகதை) ...... வா.நேரு
கலைக்கல்லூரியில் 'இடம்' வாங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை
. 'கல்வி' ஒன்றுதான் தன் பிள்ளைகளை வாழ்க்கையில் கரை சேர்க்கும் என ஒவ்வொரு ஆத்தா,
அப்பன் மனதிலும் ஆழமாகப் பதிந்த பிறகு, எப்படியாவது-காட்டை,வீட்டை
விற்றாவது பிள்ளைகளைப் படிக்கவைக்கவேண்டும் என்று நினைத்து அதற்காக மெனக்கெட்ட பிறகு
கல்லூரிகளில், பள்ளிக்கூடங்களில் இடம் வாங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை
.பிள்ளைகளைப் படிக்கவைக்கவேண்டும் என்ற பெற்றோர்களின் விருப்பம உண்மையிலேயே நல்ல செய்திதான் நாட்டிற்கு.
ஊரிலிருந்து தொலைபேசியில் அவனது அண்ணன் சொல்லும்போதே குணசேகரனுக்கு ஜோயலின்
அப்பா-சுப்பையாவின் நினைவு மனதிற்குள் ஓடியது.குணசேகரன்
பள்ளிக்கூடம் செல்லும் நாட்களில் சுப்பையா அந்தத் தெரிவிலிருக்கும் மாடுகள் அனைத்தையும்
ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு விடுவதற்காக போய்க்கொண்டிருப்பான். இருவருக்கும் ஒரே வயதுதான்
என்றாலும் சுப்பையா பள்ளிக்கூடத்திற்கு வந்ததாக நினைவு இல்லை குணசேகரனுக்கு. குணசேகரன்
அண்ணன் ஜோயலின் குடும்பத்தைப் பற்றியும் அந்த வீட்டின் வறுமையைப் பற்றியும் விவரித்தபோது
இவனுக்கும் அந்த வீட்டின் நினைவுகள் மனதிற்குள் ஓடியது. குணசேகரனுக்கும் தெரிந்த குடும்பம்தான் என்றாலும்
ஊரிலிருந்து வெளியேறி சில ஆண்டுகள் ஆகியிருந்ததால்
சட்டென்று அண்ணன் சொன்னவுடன் நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவர் விவரித்து சொல்லச்சொல்ல
, ஜோயல் குடும்பத்தின் வறுமையை, வசதியின்மையை எல்லாம் எடுத்துக்கூறியபோது . குணசேகரனுக்கும்
டக்கென்று நினைவில் வந்தது. டேய், ஜோயல்
+2 பாஸ் பண்ணியிருக்கிறான். மிகக் குறைந்த மார்க்குதான். அவனுக்கு மேல்படிப்புக்கு
மதுரையில ஏதாவது ஒரு கல்லூரியில் இடம் வாங்கணும். அப்ளிகேசன் வாங்குவதிலிருந்து எல்லாம்
நீ செய்யணும். அந்தப் பையனும் அவனது அம்மாவும் கையெழுத்து மட்டும் போடுவாங்க.அவனுக்கு
ஒரு சீட் வாங்கிக்கொடு ' என்றார். 'என்னை வந்து பார்க்கச்சொல், நான் அவனுக்கு கல்லூரியில்
இடம் வாங்கித்தந்து விடுகின்றேன்' என மந்திரி பதவியில் இருப்பது போல அவனது அண்ணனிடம்
சொல்லிவிட்டான் குணசேகரன்.
காலையில் ஜோயலும் அவனது அம்மாவும்
அலுவலுகத்திற்கே நேரிடையாக வந்துவிட்டார்கள். ஜோயலின் அம்மா அப்படியே செவக்காட்டில்
களை எடுத்துவிட்டு நேரிடையாக வந்த தோற்றத்தில் இருந்தார். குணசேகரனைப் பார்த்து 'என்னப்பா,
நல்லா இருக்கியா? ஊர்ப்பக்கமே வருவது இல்லையா- உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதே
' என்றபோது 'ஆமாம், அம்மா ஊரிலிருந்தால் அடிக்கடி வருவேன். அவர்கள் இப்போது என்னோடயே
இருப்பதால் ஊருக்கு ஏதேனும் நல்லது ,கெட்டது என்றால் மட்டும்தான் வருவது ' என்றான்.
. தன்னையும் தன் மகன் ஜோயலையும் விட்டுவிட்டு ஜோயலின் அப்பா சுப்பையா வேறு ஒரு திருமணம்
முடித்துக்கொண்டு ஊரை விட்டே போய்விட்டதைச்சொன்னார். உழைத்து உழைத்து காய்ந்துபோன கைகளும்,
எண்ணெய் காணாத தலையுமாய் ஜோயலின் அம்மாவின்
பரிதாபத் தோற்றத்தைப் பார்த்தவுடனே இந்தப்பையன் நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல கல்லூரியில்
இடம் கிடைக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான். அம்மாவை ஒட்டி வளர்த்தியாய் நெட்டைப்பனைமரம்
போல அந்தப்பையன் ஜோயல் நின்றான்.மிகச்சிறிய வயதில் அவனைப் பார்த்தது. நெடு நெடுவென
அவன் நின்றபோது இளம்வயதில் சுப்பையாவைப் பார்த்ததுபோலவே இருந்தது குணசேகரனுக்கு.
ஜோயலின் அம்மாவிடம் மதுரையில் உங்கள் மகனுக்கு ஏதேனும் ஒரு
கல்லூரியில் படிக்க இடம் வாங்கிகொடுப்பது எனது பொறுப்பு என்று வாக்குறுதி கொடுத்து
ஒரு வாரம் ஆகிவிட்டது. மதுரையில் இருந்த பெரும்பாலான கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஒருவரோ
,இருவரோ குணசேகரனுக்கு தெரிந்தவர்கள் இருந்தார்கள், அது வசதியாக இருந்தது குணசேகரனுக்கு.
ஒவ்வொரு கல்லூரியாக அவனை அழைத்துப்போய் விண்ணப்பத்தை வாங்கி, முழுமையாக விண்ணப்பத்தை
பூர்த்தி செய்து பின்பு தெரிந்த பேராசிரியரைப் பார்த்து சொல்லி, அந்த வாரம் முழுவதும்
'கல்லூரி சேர்க்க முயலும் வாரமாக, குணசேகரனுக்கு அமைந்தது. ஆனால் விளக்கெண்ணெய் செலவழிந்ததுதான்
மிச்சம், பிள்ளை பிழைக்க வழியில்லை என்பதைப்போல ஒரு கல்லூரியிலிருந்தும் ஜோயலுக்கு
அழைப்பு வரவில்லை.
கடைசியாய் நன்றாக அறிமுகமான கல்லூரிப் பேராசிரியரின் வீட்டில்போய் ஒரு
பாதி நாள் உட்கார்ந்தான். மிகவும் இரசனையும், நகைச்சுவை உணர்வும் உள்ள பேராசிரியர்
அவர். தமிழ்த்துறை தலைவர் என்றாலும் ஆங்கிலத்திலும் புகுந்து விளையாடுவார். அவரிடம் பழியோ பழி என்று உட்கார்ந்தான் . 'இந்தப்
பையனுக்கு எப்படியும் உங்கள் கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுக்கவேண்டும் ' என்றான்.
'எப்பொழுதும் இப்படி முரண்டு பிடிக்கமாட்டேயே, ஏன் இப்படி ' என்றார். குணசேகரன், ஜோயலின்
குடும்ப நிலைமையை , வறுமை பிடுங்கித்தின்னும் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் தன்மையை
எடுத்துச்சொன்னான். 'நீ கவலையை விடு தம்பி,
இன்னும் சற்று அதிக நேரம் நான் முதல்வரோடு பேசவேண்டும், பேசி வாங்கிவிடுகின்றேன் '
என்ற பேராசிரியர் அடுத்த வாரம் ஜோயலுக்கு கல்லூரியில் படிக்க இடமும் வாங்கிக்கொடுத்துவிட்டார்.
கல்லூரியில் சேரும் நாளன்று அம்மாவோடும் , ஊரிலிருந்து கொண்டு வந்த தகரப்பெட்டியோடும்
வந்த ஜோயலைப் பார்க்க பரிதாபமாக இருந்தது குணசேகரனுக்கு. அவன் எடுத்த மதிப்பெண்ணுக்கு
பி.ஏ.சரித்திரப் பாடம் கிடைத்தது.வெகு நேரம் அவனோடு உட்கார்ந்து கல்லூரி வளாகத்தினுள்
பேசிக்கொண்டிருந்தான். படித்ததனால் மட்டுமே தான் உயர்வு பெற்றதையும் இன்னும் ஊர்க்காரர்கள்
சிலர் உயர்ந்த நிலை பெற்றதற்கெல்லாம் படிப்பே காரணம் என்பதனையும் சொன்னான். இன்னும் பல செய்திகளைச்சொல்லி குணசேகரன் அவனுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில்
பேசினான். படிக்கும்போதே போட்டித்தேர்வுகளுக்கும் சேர்த்து கல்லூரியில் படிக்கவேண்டும்.
ஆத்துத் தண்ணி ,திடீர்ன்னு நம்மளை அடிச்சுக்கிட்டு போகும்போது ,கையில கிடைக்கிற கட்டையைப்
பிடிச்சுக்கிட்டு தாக்குப்பிடிச்சு கரையில ஏறுவதுமாதிரி, படிப்பு ஒண்ணுதான் உன் சூழலிலிருந்து
உன்னைக் காப்பாத்தும், கஷ்டப்பட்டு உன்னை வளர்க்கும் அம்மாவுக்கு நீ செய்யிற உதவி நல்லா
படிச்சு அவங்களுக்கு கடைசிக் காலத்தில கஞ்சி ஊத்துறதுதான் என்பது போன்ற பல படிப்பினைகளை
அவனுக்குச்சொன்னான் குணசேகரன். மிக ஆர்வமாக கேட்பதுபோல ஜோயல் கேட்டுக்கொண்டிருந்தான்.கல்லூரி
விடுதியில் இடம் கிடைப்பது வேறு குதிரைக் கொம்பாக இருந்தது. இரண்டு மூன்று நாட்கள்
வெளியே தங்கவைத்துவிட்டு, மீண்டும் தனக்கு தெரிந்த பேராசிரியரைப் பார்த்து சொல்லி
, விடுதியில் இடமும் வாங்கி கொடுத்தபின்புதான் நிம்மதி கிடைத்தது குணசேகரனுக்கு. படிப்பு
உதவித்தொகை வந்த பின்பு விடுதிக்குப் பணம் கட்டினால்போதும் என்ற சலுகையை தெரிந்த பேராசிரியரோடு
போய் அந்தக் கல்லூரியின் முதல்வரைப் பார்த்து பேசி வாங்கினான். உண்மையிலேயே மிகவும்
துயரப்படும் ஒரு குடும்பத்தைச்சார்ந்த பையனுக்கு கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்தது
மிகவும் மன நிறைவு அளிப்பதாக இருந்தது குணசேகரனுக்கு.
கல்லூரியில் சேர்த்துவிட்டு அலுவலகத்திற்கு
வந்தபின்பு ஜோயலை முழுமையாக மறந்து போனான் குணசேகரன். மிகவும் பின் தங்கிய பகுதியில்
இருந்து , மிகக் கடுமையான வறுமைச்சூழலிருந்து வந்திருக்கும் பையன் , தனது ஆற்றல், நேரம்
முழுவதையும் படிப்பின்பக்கம் திருப்பி படித்துக்கொண்டிருப்பான் என குணசேகரன் நினைத்துக்கொண்டிருந்தான்.
குடும்பம், அலுவலகம், இயக்கம், இலக்கியம் எனப் பல வேலைகளை இழுத்து வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த
குணசேகரன் சிறிது காலம் ஜோயலை மறந்தே போனான்.
சில மாதங்கள் கழித்து இயக்கக்கூட்டத்தில்
குணசேகரனைப் பார்த்த ஜோயல் படிக்கும் கல்லூரிப்பேராசிரியர் ' என்ன தம்பி , நம்ம கல்லூரியில் நீ சேர்த்துவிட்ட
பையன் நன்றாகப் படிக்கிறானா ? ' என்றார். அந்தப் பேராசிரியர் தமிழ்த்துறை. ஜோயல் படிப்பதோ
வரலாற்றுத்துறை. சில வகுப்புகள் பொதுவாக இருக்கலாம். அந்த வகுப்புகளுக்கு இவர் போகின்றாரா
அல்லது சீனியர் என்பதால் முதுகலை வகுப்புகளுக்கு மட்டும் போகிறாரா என்பது குணசேகரனுக்குத்
தெரியவில்லை. ஜோயல் எப்படி படித்துக்கொண்டிருக்கிறான் என்ற முழு விவரம் குணசேகரனுக்குத்
தெரியவில்லை. இருந்தாலும் பேராசிரியரிடம் சமாளித்தான். ' அய்யா, நன்றாகப் படிக்கிறான்
. கிராமப்புறத்திலிருந்து வரும் பசங்களுக்கு எப்போதுமே மனதிற்குள் ஒரு வெறி இருந்துகொண்டேயிருக்கும்.எப்படியாவது
முன்னேறனும், வாழ்க்கையில் வெற்றி பெறனும் என்ற நோக்கம் இருக்க்கும் ' என்றான். அவரோ
'அப்படி இருந்தால், மகிழ்ச்சி, மகிழ்ச்சிதான் ' என்றார். அவரிடம் ' அய்யா, வருடம்,வருடம்
நான் உங்களிடம் இப்படி கல்லூரியில் இடம் ஒன்றிரண்டு வேண்டும் என்று வருவேன். கிராமப்புறத்திலிருக்கும்
மக்கள் கடுமையான உழைப்பாளிகள். உழைத்து உழைத்து சாவது தவிர அவர்களுக்கு வேறு வாழ்க்கை
இல்லை. அவர்களுக்கு பணமோ, பொருளோ நம்மால் கொடுக்க முடியாது. ஆனால் அவர்களின் பிள்ளைகளுக்கு
கல்லூரியில் இடம் கிடைத்து, நன்றாக படித்து ஒரு வேலைக்கு போய்விட்டால் அந்தக் குடும்பமே
முன்னேறி விடுகிறது. எனக்குத் தெரிந்தவர்களைப் பயன்படுத்தி எவ்வளவு கெஞ்ச வேண்டுமோ
கெஞ்சி இந்த அட்மிசன் போன்ற உதவிகளைச்செய்ய இயலும், அதனைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்
' என்ற போது
'செய் தம்பி, செய், என்னிடமெல்லாம்
கெஞ்சவேண்டாம். நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.வா, வா, வருடந்தோறும் வா.' அடுத்தவனுக்கு உதவி செய்பவன் தான் பெரியாரிஸ்ட்.
இல்லறம்,துறவறம் என்பதையெல்லாம் விட தொண்டறம்
முக்கியம் ' எனச் சிரித்த படியே சொல்லிவிட்டு முதுகில் தட்டிக்கொடுத்து சென்று விட்டார்.முதல்
வருடத்தின் கடைசிக்கட்டத்தில் ஜோயல் படிக்கும்
கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஜோயலை மெனக்கட்டுப்போய் பார்த்தபோது முகம்
மலர வரவேற்றான். ஆள் முழுக்க மாறிப்போயிருந்தான். நவ நாகரீக உடையோடு கம்பீரமாக இருந்த
ஜோயலைப் பார்க்க பெருமையாக இருந்தது குணசேகரனுக்கு. 'எப்படிப் படிக்கிற தம்பி' என்ற
போது மிக வேகமாக ' மிக நன்றாகப் படிக்கிறேன் ' என்றான். அவனின் பக்கத்திலிருந்த அவனது
நண்பன் சிரித்துக்கொண்டிருந்தான் நக்கலாக. நன்றாகப் படிக்கிறேன் என்று ஜோயல் சொன்னதைக்
கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது குணசேகரனுக்கு.
இரண்டாம் ஆண்டு படிப்பு
முடியப்போகும் நேரத்தில் திடீரென்று ஒரு நாள் அலுவலகத்திற்கு முன்னால் வந்து நின்றான்
ஜோயல். என்னவென்று கேட்டபோது ஓவென்று அழுதான்.
கல்லூரியில் தன்னை கல்லூரியை விட்டு நீக்க முடிவு செய்திருப்பதாகவும் , அதனைத் தடுக்க
வேண்டுமென்றால் குடும்பத்தினரை அழைத்து வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றான்.
தனது அம்மா படிக்காதவர், அவருக்கு இது எதுவும் தெரியாதென்றும், ஏதேனும் பிரச்சனை என்றால்
தன்னை விளக்குமாற்றை வைத்து அடித்தே கொண்டு விடுவார்கள் என்றும் என்னை எப்படியாவது
கல்லூரிக்கு வந்து காப்பாற்றுங்கள் என்றும் சொன்னபோது 'இரத்தம் சம்பந்தம் உள்ள குடும்பத்தினர்
யாரையாவது அழைத்துவரச்சொல்லியிருக்கிறார்கள் என்றால் அப்படி அழைத்துச்செல்வதுதானே சரியாக
இருக்கும். அப்படி உனது குடும்பத்தினர் யாரையாவது அழைத்துச்செல்' என்று சொன்ன குணசேகரனிடம்
மீண்டும் மீண்டும் கெஞ்சி ஜோயல் அழுதபோது 'சரி, போ, நாளை நான் வருகிறேன் 'என்று சொல்லி
அனுப்பிவிட்டு மறு நாள் அந்தக் கல்லூரிக்குச்சென்றான் குணசேகரன்.
இந்த ஒரு வருடத்தில் மிகப்பிரமாண்டமாய்
இரண்டு கட்டிடங்கள் கல்லூரியில் புதிதாக முளைத்திருந்தன. எவ்வளவு பெரிய பெரிய கட்டிடங்கள்.
விடுதிகள். 50 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் ஒரு சில கலை அறிவியல் கல்லூரிகள் இருந்ததையும்
இன்று எத்தனை கல்லூரிகள் இருக்கின்றன, எவ்வளவு மாணவ, மாணவிகள் படிக்கின்றார்கள். படிப்பினால்
எவ்வளவு பெரிய மாற்றம் வந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டே கல்லூரிக்குள் நுழைந்த
குணசேகரன் தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராசரும் எண்ணிய எண்ணங்கள் இன்றைக்கு காயாய்,
கனியாய் கல்லூரிகளாய்ப் பூத்துக்குலுங்குகின்றன என நினைத்துக்கொண்டான்.
ஜோயலோடு கல்லூரி முதல்வரின்
அறைக்குள் நுழைந்தான் குணசேகரன். விசாரணைக்குழு போல முதல்வர் மற்றும் நான்கு பேராசிரியர்கள்
என மொத்தம் ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். சென்றவுடன் குணசேகரனை முதல்வர் உட்காரச்சொல்ல
அமர்ந்தான். 'ஜோயல்' உங்களுக்கு என்ன உறவு என்று முதல்வர் கேட்க, குணசேகரன் பதில் சொல்வதற்குள்
' எங்க அண்ணன் சார்' என்றான் ஜோயல்.மறுக்க
இயலாத நிலையில் ஆமாம் எனத் தலையாட்டினான் குணசேகரன்.
'சார், உங்களை எதற்காக
அழைத்திருக்கிறோம் என்று தெரியுமா உங்களுக்கு ? ' என்றார் ஒரு பேராசிரியர். தெரியாது
எனத்தலையாட்டினான் குணசேகரன். 'உங்கள் தம்பி ஜோயலை, விடுதியை விட்டும் , கல்லூரியை
விட்டும் நீக்குவது என்று எங்கள் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முடிவெடுத்திருக்கிறது.
அதை உங்களுக்குத் தெரிவித்துவிட்டு, டி.சி. வாங்கிக்கொண்டு இவனை அழைத்துக்கொண்டு வீட்டுற்குப்
போங்கள் என்று சொல்வதற்குத்தான் உங்களை அழைத்திருக்கிறோம் ' என்றார் இன்னொரு பேராசிரியர்.
' சார், கல்லூரியை விட்டும் , விடுதியை விட்டும் நீக்குமளவிற்கு ஜோயல்
என்ன குற்றம் செய்தான் ' என்ற குணசேகரனிடம் 'ஒண்ணா,இரண்டா -எத்தனையைச்சொல்ல, தாங்க
முடியலை சார் இவன் தொந்தரவு, 3 செமஸ்டர் தேர்வு இது வரைக்கும் முடிந்சிருக்கு, மொத்தம்
18 பாடம், இவன் 3 பாடம்தான் பாஸ் பண்ணியிருக்கான். ' என்றார் ஒரு பேராசிரியர்.
; படிக்க வந்தோம் என்ற நினைப்பே இல்லாமல் ஜோயல் இருக்கான் சார். கல்லூரிக்கு
முன்னால் இருக்கிற பஸ் ஸ்டாப்பிலும் பக்கத்தில் இருக்கிற மகளிர் கல்லூரி பஸ் ஸ்டாப்பிலும்
ஒரு கோஷ்டியாய் எப்பவும் நிக்கிறான் சார். பக்கத்து மகளிர் கல்லூரி பிரின்ஸ்பால் பலமுறை
இவனை புகார் பண்ணிட்டாங்க சார் , சொன்னா கேட்கிற மாதிரி இல்ல' என்றார் இன்னொருவர்.
'கல்லூரியில் எவ்வளவு வசதிகள் செய்து கொடுத்து இவனுகளைப் படிக்கச்சொல்கிறோம்.
படிக்க மாட்டாறாங்கே சார். களை எடுக்காம, பயிரை வளர்க்க முடியாது சார். உங்க தம்பி
களை மாதிரி இந்தக் கல்லூரியில் இருக்கான் .தயவுசெய்து இவன் டி.சி.யைத் தருகிறோம் ,
வாங்கிக் கொண்டு போங்கள் ' என்றார் கல்லூரி முதல்வர்.
ஒன்றுமே புரியவில்லை
குணசேகரனுக்கு. ஒவ்வொரு பேராசிரியரும் ஜோயலைப் பற்றிச்சொல்லச்சொல்ல கோபம் கோபமாக வந்தது
குணசேகரனுக்கு. அவனுக்கு கல்லூரியில் சீட் வாங்குவதற்காக அழைந்த அலைச்சல் ஞாபகம் வந்தது.
களை எடுத்து, விறகு சுமந்து அவனைப் படிக்கவைத்துக்கொண்டிருக்கும் ஜோயலின் அம்மாவின்
ஞாபகம் வந்தது ஜோயலுக்கு. கிடைத்ததற்கு அரிய இந்த வாய்ப்பை இப்படி அநியாயமாக பாழ்படுத்தியிருக்கிறானே
என்று கோபம் வந்தது வந்தது குணசேகரனுக்கு.
ஒருகட்டத்தில் பேராசிரியர்
சொல்லச்சொல்ல கேட்டுக்கொண்டிருந்த குணசேகரன்
ஜோயலிடம் ' என்ன ஜோயல், பேராசிரியர்கள் சொல்வது எல்லாம் உண்மைதான? ' என்றான்
. எதுவும் சொல்லாமல் நின்ற ஜோயலைப் பார்க்க ஆத்திரமாக வந்தது குணசேகரனுக்கு.எவ்வளவு
பெரிய வாய்ப்பு ஜோயலுக்கு . அனைத்தையும் பாழ்படுத்தி நமக்கும் சேர்த்து கெட்ட பெயரை
வாங்கிக் கொடுத்திருக்கிறானே என்று எண்ணினான் குணசேகரன்.
கல்லூரி முதல்வர்'
சார், இப்படிப் பையனை எல்லாம் வைத்துக்கொண்டு நாங்க கல்லூரி நடத்தமுடியாது சார். தயவுசெய்து
வேறு கல்லூரியில் சேர்த்துவிடுங்கள்.அல்லது டி,சி. வாங்கிக்கொண்டு போய் அஞ்சல் வழியில்
படிக்கச்சொல்லுங்கள். இந்தக் கல்லூரியில் இவன் இனிப்படிக்க முடியாது ' என்று தீர்மானமாகச்சொன்னதும்,
ஆத்திரம் கொப்பளிக்க தன்னிலை மறந்து நாற்காலியில் இருந்து எழுந்தான் குணசேகரன்.
'ஏண்டா, உன்னை படிடான்னு அனுப்பிவைச்சா, இப்படி வேண்டாத வேலையெல்லாம்
பாத்துக்கிட்டு , படிக்காமத் திரியிறியா? ' என்று சொல்லிக்கொண்டே ஜோயலின் கன்னத்தில்
ஓங்கி ஓர் அறை அறைந்தான் குணசேகரன். அப்படி அடித்திருக்ககூடாதுதான். தனது பிள்ளைகளையே
அடிப்பதற்கு உரிமை இல்லாத உலகில் ஊரா வீட்டுப்பிள்ளையை அப்படி அடித்திருக்கக்கூடாதுதான்.
குணசேகரனின் கை ஏற்கனவே கிராமத்தில் இளம்வயதில் உழைப்பாளியாக இருந்த கை.உரமான கை. கூடப்பழகும்
நண்பர்கள் சாதாரணமாக அடித்தாலே,'டேய், தீப்பிடிச்சதுபோல வலிக்கிறது ' எனக் கோபிப்பது
உண்டு. உண்மையிலேயே பயங்கர கோபத்தோடு ஜோயலை குணசேகரன் அறைந்தபோது மிகப்பலமாகவே விழுந்துவிட்டது.
குணசேகரன் அறைந்த அறையில்,ஒரே அடியில் அப்படியே மூர்ச்சையாகி ஜோயல் கீழே விழுந்துவிட்டான்.
மீண்டும் மிதிக்கப்பாய்ந்த குணசேகரனை அந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் தடுத்தார்கள்.
சோடாவைக் கொண்டுவரச்சொல்லி, முகத்தில் ஜோயலின் முகத்தில் அடித்தார்கள். கல்லூரிப்பேராசிரியர்கள்
உண்மையிலேயே பயந்து போனார்கள். 'சார், இதுக்கு மேலே இவனை அடிக்க வேணாம் சார்.நாங்க
பார்த்துக்கிறோம். தனியாக ஒரு கல்லூரிப்பேராசிரியரை இவனுக்கு மட்டும் அட்வைசராகப் போட்டு
பார்த்துக்கொள்கிறோம். கல்லூரியில் படிக்கட்டும். நீங்கள் மட்டும் மாதம் மாதம் வந்து
பார்த்துக்கொள்ளுங்கள். ' என்றார்கள். கீழே விழுந்து கிடந்த ஜோயல் இப்போது கொஞ்சம்
மூர்ச்சை தெளிந்து உட்கார்ந்திருந்தான்.
'ஒழுங்கா கல்லூரியில் படி. இல்லையென்றால் உங்கள் அண்ணன் உன்னை இங்கேயே
அடிச்சுக் கொண்ணு போட்டிருவார் போலிருக்கு , போ, போய் ஒழுங்காப் படி ' என்று சொன்ன
கல்லூரி முதல்வரிடம் சரி எனத் தலையாட்டிவிட்டு வந்த ஜோயலோடு கல்லூரியை விட்டு வெளியே
வந்தான் குணசேகரன்..
வெளியே வந்த குணசேகரனுக்கு மனது குறுகுறுத்தது. ஒரு நிமிடம் அப்படி உணர்ச்சி
வசப்பட்டு 'ஜோயலை ' அடித்துவிட்டோமே, எத்தனை என்றாலும் கூடப்பிறந்த தம்பியையோ அல்லது
பிள்ளைகளையோ கூட இப்படி அடிக்கமுடிவதில்லை, ஒரு நிமிடம் இப்படி காட்டுமிராண்டியாக மாறி
இவனை அடித்துவிட்டோமே எனும் உறுத்தலோடு ஜோயலிடம்'சாரி,ஜோயல். ஓங்கி அடிச்சிட்டேன்.
நீ நல்லாப்படிச்சுக்கிட்டு இருப்ப என்னும் நம்பிக்கையில் நான் இருந்தேன். நீ சரியாப்
படிக்கலைன்னு விவரமாக் கேட்டதும் தாங்க முடியலே, அப்படி அடிச்சிட்டேன் ,சாரி ' என்ற
குணசேகரனிடம்
'போங்கண்ணே , நீங்க இப்படி அடிக்கலைன்னா, நான் கீழே மூர்ச்சையாகி விழுகலைன்னா,
இந்த ஜென்மத்திற்கும் என்னைக் கல்லூரியிலே சேர்த்திருக்க மாட்டாங்க. அவ்வளவு தீவிரமா
இருந்தாங்க. படிக்க மறுபடியும் அனுமதி கிடைச்சதக்கு நீங்க அடிச்சதுதான் காரணம் ' என்று
கன்னத்தைத் தடவிக்கொண்டே ஜோயல் சொன்னபோது அழுவதா, சிரிப்பதா எனத்தெரியாமல் கல்லூரிப்
பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான் குணசேகரன்.
- எழுதியவர் : வா.நேரு
- Nantri: Eluthu.com.
No comments:
Post a Comment