Saturday 28 October 2017

அடுத்தவர்கள் சொன்னதை வைத்தே.....

கடந்து போன காலங்கள்(15)

அறியா வயதில்
அப்பாவை இழந்ததால்
அப்பாவை பற்றிய
நினைவுகள் அனைத்தும்
அடுத்தவர்கள்
சொன்னதை வைத்தே.....

பள்ளிக்குச் சென்று வந்தபின்பு
மார்பில் வலி
எனச்சொல்ல
தனது தாய்மாமாவை
டவுசர் போட்டுக்கொண்டு
ஒற்றை ஆளாய்
திருமங்கலத்திற்குப் பேருந்தில்
அழைத்துச்சென்று
தனது தாய்மாமாவை
தன் அக்காவின் கணவரைப்
பிணமாய்த் திருப்பிக்கொணர்ந்த
கதையை எனது தாய்மாமா
இராதா வாத்தியார்
எப்போது சொன்னாலும்
அவரின் கண்கள் பனிக்கும்...
குரல் உடையும்.....

கைப்பந்து விளையாட்டில்
அளவு கடந்த ஆர்வம்
உள்ளவரடா உனது அப்பா !
அப்பாவின்  தலைமையில்
விளையாடியவர்கள்
அவ்வளவு பிரியமாகப்
பகிர்ந்து கொள்வார்கள் அவரது நினைவை....

உறவுகளிடத்தில் எப்போதும்
நேசமும் பாசமும்
கொண்டவரடா உனது அப்பா....
உடன் பிறந்தவர்கள்
வஞ்சித்த போதும்
பெருந்தன்மையாய்
விட்டுக்கொடுத்து வாழ்வைக்
கடந்து போனவரடா உனது அப்பா.....

டேய் ! உனது அப்பாவிடம்
படித்தவனடா நான் !
உள்ளம் உருகி
இனிமையாய்
பக்தி ரசம் கொட்டப்பாடும்
உனது அப்பாவின் குரல்
அவ்வளவு இனிமையடா .......

எனது அப்பாவை
எல்லோரும் பாராட்டியபோது
பலதடவை அவரைப்
பாராட்டிய எனது தாயார்
சில நேரம் சலித்துக்கொண்டதும்
நினைவில் வருகின்றது.....

நல்லவர்தாண்டா
உனது அப்பா !
ஆனால் உலக இயலில்
வாழ்க்கை முறையில்
அவர் வல்லவர் இல்லை....

இருபத்து எட்டு வயதில்
ஐந்து குழந்தைகளுக்குத்
தாயாய்
நாற்பத்தி இரண்டு
வயதுக் கணவரை 
இழந்து நின்ற
எனது தாயார்
ஆற்றாமையாய்
'எனது தாய்மாமன் அவர்...
என்னை விட இரண்டு
மடங்கு வயது மூத்தவர்...
பனிரெண்டு வயதில்
அவரோடு எனக்கு
நடந்த  குழந்தைத் திருமணத்தை
உரக்கச்சொல்லி
தடுத்து இருக்கலாம்.....

தவிர்த்திருக்கலாம்....
தடுத்திருக்கலாம்....
அப்பாவை எவ்வளவோ
புகழ்ந்து சொல்லும்
அம்மாவின் ஆற்றாமை
சொற்கள் எப்போதும்
செவிகளில்......

அறியா வயதில்
அப்பாவை இழந்ததால்
அப்பாவைப் பற்றிய
நினைவுகள் அனைத்தும்
அடுத்தவர்கள்
சொன்னதை வைத்தே.....

                                                         வா.நேரு.....28.10.2017

எனது அப்பா சாப்டூர் க.வாலகுரு ஆசிரியர் அவர்களின் 47-வது நினைவு நாள் (28.10.2017) இன்று.







6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உடன் பிறந்தவர்கள்
வஞ்சித்த போதும்
பெருந்தன்மையாய்
விட்டுக்கொடுத்து வாழ்வைக்
கடந்து போனவரடா உனது அப்பா.....

இந்தப் பெருந்தன்மை இன்று
யாரிடம் இருக்கிறது

தங்களின் தந்தை
போற்றுதலுக்கு உரியவர்

முனைவர். வா.நேரு said...

அய்யா,வணக்கம். அப்படி இருந்ததால்தான் ஊரில் இன்றும் அவர் நல்லவராக நினைவு கூறப்படுகின்றார். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

vimalanperali said...

நல்லவரது நினைவு போற்றுவோம்@

முனைவர். வா.நேரு said...

நன்றி...

கருப்பையா.சு said...

நீங்களும் நல்ல அப்பா என்பது எனக்கு தெரியும். உங்களுக்கு கிடைக்காத அன்பையும் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.

முனைவர். வா.நேரு said...

ஆம், அதனைச்செய்கின்றேன்.அதுதான் எனக்குக் கிடைத்த வாய்ப்பு.