Thursday, 22 February 2018

அண்மையில் படித்த புத்தகம் : பதிவு செய்யப்படாத மனிதர்கள்....வி.எஸ்.முஹம்மது அமீன்

அண்மையில் படித்த புத்தகம் : பதிவு செய்யப்படாத மனிதர்கள்
நூல் ஆசிரியர்              : வி.எஸ்.முஹம்மது அமீன்
வெளியீடு                  : மனக்குகை,சென்னை-33 அலைபேசி : 9841436889
முதல்பதிப்பு                : மே,2007. மொத்த பக்கங்கள் 95 ,விலை ரூ 30/-
மதுரை மைய நூலகம் எண்  : 177829

                              'பதிவு செய்யப்படாத மனிதர்கள்' என்னும் இந்த நூல் ஒரு சிறுகதைத்தொகுப்பு. 9 சிறுகதைகள் இந்த நூலில் உள்ளன. 'ஒரு நெசவாளியும் பட்டறையும் ' என்னும் தலைப்பில் தாழை மதியவன், 'துணிச்சல் மிக்க பதிவு ' எனும் தலைப்பில் எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான், 'இன்ஷா அல்லாஹ் ' என்னும் பெயரில் கலாப்ரியா ஆகியோர் நூலின் உள்ளே புகுவதற்குமுன் இந்த நூலைப் பற்றியும், நூலின் ஆசிரியர் பற்றியும் ஒரு நல்ல அறிமுகத்தையும் பாராட்டையும் கொடுத்திருக்கின்றார்கள். 


                            9 சிறுகதைகளும் ஒவ்வொரு உட்பொருளில் உள்ளன. ஆனால் அனைத்திலும் வாழ்தலுக்கான உழைக்கும் மக்களின் துயரமும் சுற்றியுள்ள சமூகத்தில் ஏற்படும் துன்பங்களும் சுட்டப்பட்டுள்ளன. 'நெய்தல் ' என்னும் முதல்கதை சிக்கந்தர் என்னும் நெசவாளியை , அவரின் நெய்தல் நேர்த்தியை அப்படியே படம் பிடித்துக்காட்டுகிறது. உழைப்பதில் கிடைக்கும் சுகம் மட்டுமே அவருக்கு சுகமாகத்தெரிவதையும் மகன் நல்ல வேலைக்கு வெளி நாட்டில் போனதால் மனைவி உழைக்க வேண்டாம் ஓய்வு எடுக்கலாம் என்று சொல்வதைக் கேட்காமல் உழைப்பதையும் மகன் வந்து தறியை விற்றபின்பு என்னதான் சுகமான சாப்பாடாக இருந்தாலும் உழைக்காமல் சாப்பிடப்பிடிக்காமல் அவர் மனம் படும் பாட்டையும் மிக நேர்த்தியாகவே வி.எஸ்.முஹம்மது அமீன் சொல்லிச்செல்கின்றார். பக்கத்து தெருவில் இருக்கும் கரீம் வீட்டிற்குச்சென்று வீட்டிற்குத் தெரியாமல் அவர் நெய்ய ஆரம்பிப்பதையும் 'கொத்து ரூபா முக்கியமில்லப்பா...உழைச்சுத் திண்ண உடம்புக்கு ...உறங்கித் திண்ண முடியல... தினசரி காலையில் உன் வீட்டிற்கு வந்து நெய்றேன் ' என்று சொல்வதை மிக அருமையாக கதையைச்சொல்கின்றார் ஆசிரியர். எனது உறவினர் ஒருவரின் மகன் சாப்டூவேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவர் 70 வயதுகளைக் கடந்து உழைத்து உழைத்து ஓடானாவர். உட்கார்ந்து சாப்பிடுங்கள் என்று பிள்ளை வருந்தி அழைத்தாலும் அங்கு அவர் சென்றாலும் அவருக்கு நிம்மதி கிராமத்திற்கு வந்து காட்டு வேலையைப் பார்ப்பதில்தான் இருக்கிறது என்பது ஞாபகம் வந்தது. உண்மைதான் இன்றைய இளைய தலைமுறை ,போன தலைமுறையின் உழைப்பையும் ,அவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் உழைப்பிற்கான ஈர்ப்பையும் புரிந்து கொள்வதில்லை, இந்தக் கதை அதற்கு உதவும்.

'வெளிச்சம் இல்லாத உலகு ' - தம்பிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது, அண்ணனுக்கு நடக்காமலேயே , கதையின் இறுதியில்தான் அண்ணன் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடப்படுகின்றது. அவர்களுக்கு உலகமும் உறவுகளுமே வெளிச்சம் இல்லாமல்தான் இருக்கின்றார்கள் என்பதனை சுட்டுகின்றார்.நட்புக்கு முன்னால் மதங்கள் எல்லாம் காணாமல் போகும் மனித நேயம் பற்றிப் பேசும் கதை 'திசம்பர் 6' . என்னுடன் பணியாற்றிய நண்பர் பசீர் அகமதுவும்,சின்னாளபட்டி காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஆறுமுகமும் அப்படி ஒரு நண்பர்கள். உயிருக்குயிரான நண்பர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டான நண்பர்கள். அவர்களை எல்லாம் இந்த மதம் பிடித்த மனிதர்கள் மத அடிப்படையில் பிரிக்க இயலாது. அப்படி இரு வேறு நம்பிக்கை உள்ள இரண்டு நண்பர்கள், அவர்களது நம்பிக்கை, உடைந்த ஒரு சிலை பற்றிய கதை திசம்பர் 6. நடப்பு கொடுமைகளையும் சுட்டிக்காட்டி எழுதியிருக்கின்றார். 

"பாத்திமா +2" பணம் இல்லாத காரணத்தால் ஆசிரியர் பயிற்சி சேர இயலாத ஒரு மாணவியின் கதையைச்சொல்கின்றது.வாப்பா,படிக்காத அண்ணன்மார்கள், அதில் சாதிக் என்பரால் வாப்பா அடையும் துன்பம், 'நீயாவது ஒழுங்கா படிப்பிளா ? ' என்னும் கதையின் முதல் வாக்கியத்தில் துவங்கும் இயலாமை கலந்த எதிர்பார்ப்பு கதை முழுக்க பரவி, முடியாமையில் முடிகின்றது. ஆனால் இஸ்லாம் என்பதால் சீட்டு கிடைக்கவில்லை என்பதாக கதை முடிவதில் மாறுபட்ட கருத்து உண்டு. பணம் உள்ளவர் கொடுத்தால் வாங்கிக்கொள்ளும் பயிற்சிக்கல்லூரி முதலாளிக்கு பணம்தான் முக்கியமாகத் தெரியும் என்பது எதார்த்தம்.

'பொய்த்துப்போகும் சாபங்கள்' ,'29 A' என்னும் தலைப்பில் அடுத்தடுத்த கதைகள்.ஒரு மின்சார ஊழியருக்கு நேர்ந்த இறப்பையும் அதற்கு பின்னால் அவர் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளையும் சேகர் என்னும் பாத்திரப்படைப்பால் நேர்த்தியாக 'பொய்த்துப்போகும் சாபங்கள் கதையில் சொல்கின்றார்.  அவரின் அனுபவத்தையும் பார்த்த அனுபவத்தையும் சொல்லும் கதை'29A'. 'பதிவு செய்யப்படாத மனிதர்கள் ' என்னும் தலைப்பில் ஆன கதை அடுத்த கதை." சுபாஷ் சந்திர போஸூடன் நெருக்கமாக இருந்த போராட்ட தியாகியின் சுதந்திரப்போராட்ட வரலாறு பதிவு செய்யப்படாமல் போவதைப்பற்றிய ஆசிரியரின் மனக்கவலையை வெளிப்படுத்தும் கதைதான் பதிவு செய்யப்படாத மனிதர்கள். ....ஒரு நல்ல கதை வாசித்த அனுபவத்தை இந்தக் கதை தருகிறது " என்னும் தோப்பில் முகம்மது மீரான் அவர்களின் கருத்து உண்மைதான். இஸ்லாம் மதத்திற்குள் நிலவும் மூட நம்பிக்கை பற்றி 'செய்யதலி பாத்திமா ' என்னும் கதை பேசுகிறது. இரயில் பயணத்தில் உடன் பயணிப்பவர்களைப் பற்றிய கதையாக 'யாவரும் கேளிர் ' என்னும் கதை அமைந்திருக்கிறது. தனது மன எதிர்ப்பை கதையாகக் கொடுத்திருக்கிறார் எனலாம்.

                        மொத்தத்தில் 9 கதைகள்தான் என்றாலும் கதைகளின் நடை மிக ஈர்ப்பாக இருக்கின்றது.தோப்பில் முகம்மது மீரான் கதைகளைப் போல வட்டார மொழியில் அமைந்திருக்கும் கதைகள், ஆனால் வாசிப்பதும் ,சொற்களைப் புரிந்துகொள்வதும் அவ்வளவு கடினமாக இல்லை. கதைகளை வாசிக்கும்போது ,தனது மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் எனத்தெரிகிறது, ஆனால் கதைகளின் ஊடாக மனித நேயம்தான் வெளிப்படுகின்றது,பக்தி வேண்டும் என்னும் பறைசாற்றல் இல்லை. 

                           " அமீனுக்கு கரு,களங்கள் மட்டுமல்ல,கனிவான மொழி நடையும் கைகூடி வந்திருக்கிறது.;கை கொடுக்கிறது.இனிமையும் எளிமையும் கைகோர்த்து கதையோட்டத்தையே நீரோட்டமாக்குகிறது.அந்நீரோட்டத்தின் அலைகளாய் நுரைகளாய் உரையாடல் உயிர்த்தெழும் அழகை கதைகள் தோறும் காணலாம் " என்று சொல்கின்றார் தாழை மதியவன் தனது முன்னுரையில். 
படித்துப்பார்க்கலாம். நம்மைச்சுற்றி வாழும் நமது இஸ்லாமிய சகோதரர்களின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ள இதனைப் போன்ற சிறுகதைகள் உதவும். தெரிந்து கொள்ளலும்,புரிந்து கொண்டு உதவுவதும்தானே மனித நேயத்தின் அடிப்படை,அதற்கு இக்கதைகள் உறுதியாக உதவும். படித்துப்பாருங்கள்.

குறிப்பு : இணையத்தில் இந்தப்புத்தகத்தினை தேடியபொழுது இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது தெரிந்தது. இரண்டாம் பதிப்பின் அட்டையை இணையத்திலிருந்து எடுத்துப்போட்டிருக்கின்றேன்.

23.02.2018 காலை 7 மணி

No comments: