'உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம் " 29,30.03.2018 தேதிகளில் தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் ' தந்தை பெரியாரும் கோராவும் ' என்னும் தலைப்பில் 30.03.2018 அன்று காலை உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. ஆந்திர நாத்திக அறிஞர் கோரா அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவரின் போராட்டம், அவரின் வாழ்வியல் போன்ற பலவற்றை வாசிக்கும் வாய்ப்பு இந்தக் கருத்தரங்கத்திற்கு தயாரித்ததன் வாயிலாகக் கிட்டியது. பிறப்பால் பார்ப்பனராக பிறந்த கோரா அவர்கள் 22 வயதில் பூணூலைக் கழட்டிப்போட்டுவிட்டு மறுபடியும் பூணூலை போட மறுத்தவர். வாழ் நாளெல்லாம் பூணூல் நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர். வாதாடியவர். பூணூல் போடாவிட்டால் வீட்டில் இருக்காதே,வீட்டை விட்டு வெளியில் போ என்று சொன்னவுடன் தனது மனைவி சரஸ்வதி கோரா அவர்களோடும் தனது மூத்த மகன் 3 மாதப்பிள்ளையான இலவணத்தோடு வீட்டை விட்டு வெளியேறியவர். அக்கிரகாரத்திலிருந்து வெளியேறி, சேரியில் போய் குடியேறியவர். மிகுந்த கடவுள் நம்பிக்கையுடைய்வராக இருந்த அவர் எப்படி நாத்திகவாதியாக மாறினார். நாத்தியவாதியாக மாறியதால் தனக்கு கிடைத்த தன்னம்பிக்கை,துணிச்சல் மற்றவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக நாத்திகத்தை தனது வாழ் நாள் முழுவதும் பரப்பியவர் போன்ற பல செய்திகளை அரங்கத்தில் பகிர்ந்துகொள்ள முடிந்தது.(விரிவான கட்டுரை புத்தகத்தில் வருகின்றது.) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் பேராசிரியர்கள் முனைவர்.க.அன்பழகன், முனைவர்.த.ஜெயக்குமார் மற்றும் துறை சார்ந்தோர் மிகச்சிறப்பான ஏற்பாடுகளைச்செய்திருந்தனர். ஒவ்வொரு கருத்தாளரும் மிக நுட்பமாக நன்றாக தயாரித்து வந்திருந்த கட்டுரைகளை அரங்கத்தில் வாசித்தனர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புதிய கோணத்தில் தந்தை பெரியாரின் தத்துவத்தை உழைப்பை மற்ற தலைவர்களோடு,அறிஞர்களோடு ஒப்பிட்டு கருத்துரைத்த விதம் மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. நிறைவாக திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றி, சான்றிதழ்களை வழங்கி,இந்த நிகழ்வுக்கு உழைத்தோர்க்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்கள். அய்யா ஆசிரியரின் அவர்களின் உரை, தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் தண்டித்த நீதிபதியே சட்டக்கல்லூரி முதல்வராக இருந்த நேரத்தில், பெரியாரின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நேரத்தில், தண்டித்த நீதிபதியே தலைமை ஏற்று அய்யா அவர்களை வரவேற்று, மேல் நாட்டு அறிஞர்களோடு ஒப்பிட்டு தந்தை பெரியார் அவர்களை பாராட்டியதை நினைவு கூர்ந்து உரையாற்றினார். உணவு,இருப்பிடம், விருந்தோம்பல்,நல்ல நிறைவான கருத்துப் பரிமாற்றம், புதிய நோக்கில் அறிஞர்கள் கருத்துக்களை எடுத்துவைத்த விதம் என ஒவ்வொன்றும் மிகவும் ஈர்ப்பாக அமைந்த கருத்தரங்கமாக அமைந்தது. எனது அறையில் உடன் தங்கிய தோழர்கள் எழுத்தாளர் உடுமலை வடிவேல், எழுத்தாளர், பேச்சாளர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களோடு இயக்க நிகழ்வுகள் பரிமாற்றம் என குறிப்பிடத்தக்க நாளாக 30.03.2018 அமைந்தது உண்மையிலேயே மகிழ்ச்சியும் பெருமையும் தந்த நிகழ்வு,பங்கேற்பு.
'உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம்' என்னும் தலைப்பில் விடுதலை நாளிதழ் தீட்டிய 30.03.2018 தலையங்கம்
"வல்லம் - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகம் - அதன் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் பல்கலைக் கழக அய்ன்ஸ்டின் மன்றத்தில் மார்ச்சு 29,30 ஆகிய இரு நாட்களில் "உலகப் பெரியாரும் பன்னாட்டுச் சிந்தனையாளர்களும் - ஓர் ஒப்பிடு" என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் அளிக்கும் கருத்தரங்கம் நேர்த்தியாக நடைபெறுவது - அறிவியல் துறையில் ஓர் அத்தியாயம் என்றே கூற வேண்டும்.
மனித குல வரலாற்றில் சமுதாய வளர்ச்சி என்பது - மனிதனின் அறிவு வளர்ச்சியைச் சார்ந்ததே. காட்டு விலங் காண்டிக் காலந் தொடங்கி அறிவியல் வளர்ச்சியால் மானுடம் அடைந்திருக்கும் எல்லா வகையிலுமான வசதிகளும், வாய்ப்புகளும், மனிதனின் அறிவு வளர்ச்சி விளைச்சலைச் சார்ந்ததேயாகும்.
கடவுள், மதம் தொடர்பான நம்பிக்கைகள் மானுட வளர்ச்சியின் கால்களை ஒரு பக்கம் கீழே இழுத்தாலும் அவற்றை யெல்லாம் கடந்து மானுட சமுதாயம், வளர்ச்சி நோக்கித் தன் பயணத்தை மேற்கொண்டுதான் வருகிறது.
"கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படியே அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பி இருந்தவர்கள்கூட, இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக் கொண்டு விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்" என்கிறார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் ('குடிஅரசு' 11.8.1929).
அஞ்ஞான குப்பைகளுக்கு விஞ்ஞான முலாம் பூசும் போக்கிரித்தனத்தைத்தான் தந்தை பெரியார் இப்படிக் குறிப்பிடுகிறார்.
மத்திய அமைச்சராக - அதுவும் கல்வித் துறையின் (மனிதவள மேம்பாட்டுத் துறையின்) இணை அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவரே 'டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கூற்றுத் தவறானது' என்று கூறியதோடு நிற்கவில்லை. "விஞ்ஞானம் என்றும் பொய்யானது, மெய்ஞ்ஞானமே உண்மை" என்று கூறியிருப்பது - நம் நாட்டின் வெறும் படிப்பறிவு விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவில்லையோ என்ற கேள்வியை எழுப்புவதைவிட ஒரு மனிதனின் மத நம்பிக்கை மனிதனுக்குள் இருக்கும் பகுத்தறிவின் வேர்களை அழிக்கும் வேர்ப் புழுக்களாக இருப்பதையே உறுதிப்படுத்துகிறது.
இவ்வளவுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களி டத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலி யுறுத்துகிறது. (51கி-லீ)
ஏட்டுச் சர்க்கரையாக இருந்து பயன் என்ன? மத்திய அமைச்சராக இருக்கக் கூடியவரே அஞ்ஞானத்தை உயர்த்திப் பிடிக்கும் நிலையில் உள்ளார். பிரதமராக இருக்கக் கூடியவரே "சிவபெருமான் யானை தலையை வெட்டி ஒரு முண்டத்தின் கழுத்தில் பொருந்துமாறு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்" என்று கூறுகிறார் என்றால், இந்த நிலையை என்னவென்று சொல்லி பரிகசிப்பது!
இந்த நிலையில் சிந்தனையாளர்களின் அரிய வழிகாட்டும் பகுத்தறிவுச் சிந்தனைகள், உயர் எண்ணங்கள் மானுட வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை அளித்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக - சிறப்பாக தந்தை பெரியார் அவர் களின் சுய சிந்தனைகள் மானுட வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருகின்றன. சோதனைக் குழாய்க் குழந்தையைப் பற்றி விஞ்ஞானிகள்கூட நினைத்துப் பார்க் காத ஒரு கால கட்டத்தில் தந்தை பெரியார் (1938இல்) சொல்லி யிருப்பது சாதாரணமானதா?
அதனால்தான் அய்.நா.வின் "யுனெஸ்கோ" அமைப்பு தந்தை பெரியார் அவர்களுக்கு அளித்த விருதில் புதிய "உலகின் தொலைநோக்காளர் (Prophet of the New age)"
என்று குறிப்பிட்டுள்ளது. (27.6.1970).
தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையும், தொண்டும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நடந்திருந்தாலும், அவர்கள் வெளிப்படுத்திய தனித்தன்மை மிக்க சிந்தனைகள், உலக மானுடத்திற்கே தேவையானவையே! அவர் அளித்த கொள்கைகள் வெற்றிகரமான வாழ்க்கைக்கான ஒரு நெறி முறையாகும். (A way of Life).
கடவுள், மதம், மத நூல்கள், ஜாதி போன்றவைகளால் மனிதன் அறிவையும், தன்னம்பிக்கைகளையும், பொரு ளையும், காலத்தையும் விரயமாக்குவது பற்றி கவலை கொண்ட தந்தை பெரியார் அவர்கள், இந்தக் கொடூரமான சிறையிலிருந்து அவனின் பகுத்தறிவை விடுதலை செய்வ தற்குக் கடைசி மூச்சு அடங்கும் வரை பாடுபட்டார். அதன் விளைச்சலைத்தான் இன்றைக்குத் தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.
"இந்தியாவில் இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப் புரட் சியைச் செய்தார் என்பது அமெரிக்காவிலுள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்தாகும்"
- பேராசிரியர் ஜான்ரைலி ('ஆனந்தவிகடன்' 16.7.1972)
இத்தகு தலைவரின் கருத்துக்கள் உலகெங்கும் பரவச் செய்வதற்கு வல்லத்தில் நடைபெற்ற கருத்தரங்கும் பெரிதும் பயன்படும் என்பதில் அய்யமில்லை.
பன்னாட்டுச் சிந்தனையாளர்களை, இந்திய அள விலான சிந்தனையாளர்களை தந்தை பெரியாரோடு ஒப் பிட்டுக் கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் ஆய்வுக் கட்டுரைகளை வல்லம் கருத்தரங்கில் வழங்கியுள்ளனர்; அது சிறப்பான நூலாக வெளிவரவிருக்கிறது என்பது அறிவு விருந்துக்கான ஏற்பாடாகும்.
பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் ஒரு துறையான பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் பெரியார் சிந்தனைப்பற்றி 'டிப்ளோமா' வகுப்புகளை நடத்தி வருகிறது. அஞ்சல் வழியாக நடத்தப்படும் இந்தக் கல்வித் திட்டத்தில் பங்கேற்பது பெரும் பயன் தரக் கூடியதாகும். வாழ்வை வளப் படுத்திக் கொள்ள வளமான சிந்தனைகளை வாரி வழங்கக் கூடிய தத்துவத்திற்குச் சொந்தமானவர் தந்தை பெரியார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வீர்களாக!"
No comments:
Post a Comment